Sunday, August 18, 2013

இந்தியர்களின் சுயரூபம்

இந்தியாவை நேசிக்கக் கூடிய தமிழர்கள் இந்தியாவிலும் அதற்குப் பக்கத்து நாடான தமிழ்நாட்டிலும்இலங்கைக்குப் பக்கத்து நாடான தமிழீழத்திலும் ஏனைய பிற நாடுகளிலும் வாழ்கிறார்கள்.

ஆனால், இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் அந்த நாட்டை ஆளுகின்ற காங்கிரஸ்காரர்களுக்கும் தமிழர்கள் இந்தியாவின் மீது (தம் இன அழிப்பிற்குத் துணைபோன பிறகும்) வைத்திருக்கும் மதிப்பையும் மரியாதையையும் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமல் ஈனத் தனமான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவே தெரிகிறது. அதற்கு உதாரணமாக ஒரு புதிய திரைப்படம் தமிழர்களை தவறாக சித்தரித்து தவறான செய்திகளைப் பரப்ப தயாராக உள்ளதாக கேள்விப் படுகிறேன். 

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ௨௦௦௭ 2007 ல் (இந்தியாவின் சுயரூபம் எனக்குத் தெரிவதற்கு முன்னால்) நான் எழுதிய ஓர் கவிதையின் சில வரிகள் 

என் இந்தியத்தாய்
நாகரீகத்தை இழந்து...
பண்பாட்டை இழந்து...
பழம்பெருமையை இழந்து...
நவநாகரிகம் என்ற பெயரில்
அம்மணமாய் நிற்கிறாள் பார்!!


தமிழர்கள் சிந்திக்கத் துவங்கி விட்டார்கள், அவர்களின் ஒற்றுமையைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கில் இப்படிப்பட்ட ஒரு சில சதித் திட்டங்களை இந்திய அரசும் காங்கிரஸ் அரசும் தீட்டியுள்ளன. 

தமிழனக் கென்று தாய்நா டிரண்டு 
தரணியில் வேண்டும் தோழா வாடா 

 "தமிழா... (இந்தியாவைவிட்டுவிடுதலைகாண் (http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2012/08/blog-post_2673.html)"

மேலே உள்ள இந்தக் கவிதையை நான் எழுதிய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பிருந்து இதுவரை பலமுறை மீள்பதிவு செய்து விட்டேன். ஏனெனில் இந்தக் கவிதை யைப்  பகிர்ந்து கொள்ளக் கூடிய தேவை இன்னமும் இருந்துகொண்டே இருக்கிறது. 

மனிதநேயமில்லாத, குடிமக்களின் மேல் அக்கறை இல்லாத இந்திய அரசாங்கத்தை இன்னமும் தமிழன் தாய்நாடாக நினைத்துக் கொண்டிருந்தால் அது அவனுடைய அறியாமை.

விருப்பமுள்ளவர்கள் ஒருமுறை இந்தப் பதிவை படித்துப் பாருங்கள். 


Wednesday, August 14, 2013

அந்தக் காகத்தின் மரணம்

துருப்பிடித்த
இரயில் தண்டவாளமது

அதன்மீது இரயில் சென்றே
பலமாதங்கள் ஆகியிருக்கலாம்

அதன் மிகஅருகில்
காகமொன்று இறந்துகிடக்கிறது

மரணம் நிகழ்ந்து
சிலநாட்கள் ஆகியிருக்கலாம்

இரத்தமில்லை
உடலில் காயங்கள் இல்லை

மின்சாரக் கம்பிகள் உரசியதால்
மின்சாரம் பாய்ந்து
இறந்து கீழே விழுந்திருக்கலாம்

இன்னபிற காகங்கள்
இன்னமும் அதே இடத்தைச் சுற்றிச்சுற்றி
கரைந்து கொண்டிருக்கின்றன
வருத்தத்தைப் பதிவு செய்யவும்...
மரணத்தைத் தெரிவிக்கவும்...

தம் முன்னோர்கள்
காகங்கள் என்பதால்
கைகள் கூப்பி வணங்குகிறான்
அந்த வழிப்போக்கன்
மரணித்த அந்தக் காகத்தை...

Monday, August 12, 2013

அன்னைத் தமிழே

அன்னைத் தமிழினை அன்பு அமிழ்தினை
எண்ணிய பொழுதினில் என்னுள்ளே உற்சாகம்
கண்ணாடி அணிவதுபோல் கதைக்கலாம் பிறமொழியில்
கண்ணுடைக் கருமணியே என்னுடைத் தமிழ்மொழியே

பணம்காசு தேடித்தான் பிறதேசம் போனாலும்
மனமுன்னை நாடுதடி மகளேயென் தமிழ்மொழியே
தினமொரு விலைவாசி திண்டாடும் விசுவாசி
கணமொரு கொலைகொள்ளை காப்பாற்ற வருவாயோ

அன்னையின் மடியிலே அனுதினமும் தவழத்தான்
எண்ணிடும் குழவிபோல் எண்ணமது உருண்டோடும்
கண்ணிலே நீர்சொட்டும் கவிதையிலும் அதுசொட்டும்
என்னுடைத் தமிழரைவிட எவரிங்கு என்சுற்றம்?

அன்னையவள் வேறல்ல அன்னைத்தமிழ் வேறல்ல
என்னைப் பொறுத்தவரை எல்லாமே தாய்த்தமிழே
தண்டமிழே தனித்தமிழே தொன்மொழியே தாய்மொழியே
வண்டமிழே வளர்தமிழே வருவாயே வாய்வழியே

Wednesday, August 7, 2013

என்னுள்ளே இருக்கிறாய்

யாரும் புரட்டாத
கவிதைநூலெனக் கிடக்கிறேன்
காற்றைப் போலவே
பக்கங்களைப் புரட்டி வாசிக்கிறாய்
தலைதிருப்பி ஏதோ யோசிக்கிறாய்

உயிரற்ற பிணமாய்
கிடக்கிறேன்
உன் கொலுசொலிகேட்டு
ஓயாமல் உயிர்த்தெழுகிறேன்
உன்நினைவால் நான்அழுகிறேன்

யாருமற்ற தண்டவாளமாய்
தனியாய்த்தான் தவிக்கிறேன்
இரயிலாய் வந்தெனை
படபடக்க வைக்கிறாய்
தடதடக்க வைக்கிறாய்

தொட்டியில் மீனாய்
கண்ணீர் விடுகிறேன்
ஆக்சிஜன் தந்தெனை
ஆசையாய்த்தான் கொல்கிறாய்
ஆறுதல் நீ சொல்கிறாய்

சாலை நடுவில்
நெரிசலால் நான் தவிக்கிறேன்
என்னொரு கரம்பற்றி
என்னுடன் நடக்கிறாய்
சாலையை கடக்கிறாய்

பெரும் புயல்மழையில்
தொப்பலாய் நனைகிறேன்
எங்கிருந்தோ வந்தொரு
குடையினைத் தருகிறாய்
வீடுவரை வருகிறாய்

அயல்நாட்டுத் தெருவினிலே
வழிமறந்து திரிகிறேன்
அந்நாட்டுப் பெண்ணாக
என்னைத்தான் அழைக்கிறாய்
பார்வையால் நீ துளைக்கிறாய்

நள்ளிரவு தாண்டியும் நான்
தூக்கமின்றித் தவிக்கிறேன்
மெல்ல வரும் தென்றலாய்த்தான்
தலைகோதி விடுகிறாய்
உயிர்வரை தொடுகிறாய்

எப்போதும் உன்நினைவால்
என்னைத்தான் மறக்கிறேன்
என்னுடைத் தமிழ்மொழிபோல்
என்னுள்ளே இருக்கிறாய்
கவிதைவழி நீ பிறக்கிறாய்

Monday, August 5, 2013

காதல்நினைவுகளில்...

காதலைப் பற்றி எழுதாதவன் கவிஞனல்ல. அதற்காக, காதலைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருப்பவனும் கவிஞனல்ல.

இது என்னுடைய கருத்து.

எனக்குத் தெரிந்தவரை மகாகவி பாரதி (ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மலரும்) காதலைப் பற்றியும் ஓரிரு கவிதைகளில் சொல்லியிருக்கிறான்.

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம்.


காதலைப் பற்றி எழுதி ஐந்து மாதங்கள் ஆகின்றன. சற்றுமுன் தோன்றிய ஒரு கவிதை.

நிரந்தரமாய்
தொலைந்துவிட வேண்டுமென்றுதான்
மூழ்குகிறேன்
நம் காதல்நினைவுகளில்...

எப்படியும் என்னை
நிஜ உலகிற்கு அழைத்து வந்துவிடுகிறது....

கடைசியாய் உன் முகம்பார்த்து
உன்னையும் உன் அம்மாவையும்
நான் வழியனுப்ப
நீ பயணித்த
அந்த இரயிலின் சத்தம்

Thursday, August 1, 2013

அவனையறியாமலேயே...

நீண்ட வீதியது 

பார்வையின் எல்லை 
முடியும் தூரத்தில் 
மங்கலாய்த் தெரிகிறது 
ஒரு உருவம்

இருபுறமும் வானுயர்ந்த 
கட்டிடங்கள் 

காற்றில் அசைந்தாடும் 
விளம்பரப் பதாகைகள் 
ஒய்யாரமாய்ப் புன்னகைக்கும் 
விளம்பர நடிகர் நடிகைகள் 

மெல்ல நெருங்குகிறது 
அந்த உருவம் 

சாமி சிலையை 
தலையில் சுமந்தபடி...

எதிர்த் திசையில் 
மெல்ல நெருங்குகிறது 
அந்த உருவம் 

மேல்சட்டை அணியவில்லை 
இடுப்புக்குக் கீழே 
தொடைவரை கட்டிய வேட்டி
நல்ல பூ வேலைப்பாடுகள் 
அமைந்த ஜரிகை

மெல்ல சத்தமின்றி 
கைநீட்டி யாசிக்கின்றான்

களைப்படையவே இல்லை 
அவன்

அமைதி தழுவ 
நடக்கின்றான்

வியந்து பார்க்கின்றேன் 
திரும்பி நின்று...

அவனையறியாமலேயே நானும் 
என்னையறியாமலேயே அவனும் 
எதிரெதிர் நடைபாதையில் 
மெல்லக் கடக்கின்றோம் 
அந்த வீதியை...