Showing posts with label கவிதைகள் (பாகம் - 14). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 14). Show all posts

Sunday, October 30, 2011

லூசுமழை!

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையைக்
கடக்க எத்தனித்தேன்

சுட்டெரிக்கும் வெயிலோடு
சடசடவென மழையும்
சேர்ந்து கொண்டது

சாலையோரம் நின்றிருந்த
சிறுமியொருத்தி
செல்லமாய்த் திட்டினாள்
வெயில்மழையை!
‘லூசுமழை’ என்று...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

காதல் கீதை!

எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது!
நான் அவளைப்
பார்த்தது...

எது நடக்கிறதோ
அதுவும் நன்றாகவே
நடக்கிறது!
நான் அவளைக்
காதலிப்பது...

எது நடக்குமோ
அதுவும் நன்றாகவே
நடக்கும்!
நான் அவளை
மணம்முடிக்கப் போவது...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) – 03-11-2011

2. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

ஆசிரியர்கள்!

வாழ்க்கைப் பயணத்தில்
திசைகள் தெரியாமல்
தத்தளிக்கும் குழந்தைகட்கு
கலங்கரைவிளக்கமாய்
உங்கள் போதனைகளே!

பள்ளிக்குச் செல்கின்ற
பிள்ளைகள் மனதை
பண்படுத்துபவை
உங்கள் போதனைகளே!

அன்னையும் தந்தையும்
முதலிரண்டு கடவுள்களென்றால்
மூன்றாவது கடவுள்
நீங்கள் தானென்று
சொல்லி வைத்தார்கள்
எம்முன்னோர்கள்!

இன்னும் சொல்லப்போனால்
மாதா பிதா
குரு தெய்வம் என
உங்களுக்குப் பிறகுதான்
தெய்வம்!

களிமண்ணுங்கூட
பிடிப்பவர் பிடித்தால்தான்
பிள்ளையார் ஆகுமாம்!
உங்களின்
அன்பான அரவணைப்பே
பிஞ்சு உள்ளங்களை
நெஞ்சில் உரமிக்க
நேதாஜியாய்...
நேர்மைத் திறங்கொண்ட
காந்தியாய்...
பாட்டுத்திறமிக்க
பாரதியாய்...
அன்புக்கே அன்னையான
தெரசாவாய்...
தொண்டுகள் செய்யும்
தேசத்தலைவனாய்...
மாற்றுகிறது!!

மாற்றங்களை நிகழ்த்துவது
நீங்கள்!
உங்களை
வணங்கி மகிழ்வதில்
பெருமை கொள்கிறோம்
நாங்கள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. வார்ப்பு (இணைய இதழ்) – 12-12-2011

பசி...

விளைநிலங்களெல்லாம்
விலைநிலங்களாகிப் போனதால்
சுவரொட்டிகளைக்
கிழித்துத் தின்று
பசியாறிக் கொள்கின்றன
எங்கள்ஊர்ப் பசுக்கள்...!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. வார்ப்பு (இணைய இதழ்) – 10-11-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

Thursday, October 27, 2011

உனக்கொப்பார் யார்!

பெற்றெடுத்த அன்னையுனை பேணுகிறேன் நலமாக
ஈரைந்து திங்களாய்த் தவமிருந்தாய் – வரம்பெற்ற
முனிவனாக எனைக்கண்டு மகிழ்ந்தாயே நீயிங்கு
அன்பே உனக்கொப்பார் யார்!!

அழகான தேவதையே அன்பான காதலியே
பழகுவதில் பாசம்தந்த பாரிஜாதம்! – தலைவியே
உன்னுடை நினைவோடு உயிரோடு வாழ்கிறேன்
அன்பே உனக்கொப்பார் யார்!!

புரியாத மொழியினிலே பலகதைகள் பேசுகின்ற
சிறுகுழவி வாய்மொழியே அமுதம் – பெற்றெடுத்த
அன்னையிங்கு பேர்சூட்ட அழைக்கிறேன் உனைத்தானே
அன்பே உனக்கொப்பார் யார்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

காந்தி

அரையாடைக் கிழவனாக அகிம்சையோடு வாழ்ந்தானே
திறைகேட்ட வெள்ளையனை தலைவணங்க வைத்தானே
சத்தியத்தின் மறுவடிவாய் சாந்தமான காந்தியடா
இதயத்தில் அகிம்சைதனை ஏற்றிவைத்து வாழ்வோமடா

வெள்ளையர் செருக்கடக்கி வாங்கினான் சுதந்திரம்
விலைவாசி ஏற்றந்தான் இந்தியாவில் நிரந்தரம்
கொள்ளையர் வாழ்கின்ற கற்பிழந்த நாட்டினிலே
வலைவீசித் தேடுகிறேன் வரலாற்றுக் காந்தியை


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் – 06-11-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) – 14-11-2011