Tuesday, May 25, 2010

என் பெயர்!

என் தாய்வயிற்றில் பிறந்தேன்!
தடுமாறித் தவழ்ந்தேன்!
நிலைபிடித்து நின்றேன்! - என்
நினைவின்றி நடக்கிறேன்!!

என் அம்மா
தங்கமென்று
கொஞ்சினாள் என்னை!
தகரமாய்த்தான் இருக்கிறேன்!!

செல்லமென்று
கொஞ்சினாள் என்னை!
செல்லாக் காசாய்த்தான்
இருக்கிறேன்!

அனைவரிடமும்
அன்புடன் வாழச்சொன்னாள்!
நான்
வமபுடன்தான் வாழ்கிறேன்!!

என் வாழ்க்கைமுறையை
மாற்றச் சொன்னாள்!
வாழ்க்கை எனை
ஏமாற்றித்தான் கொண்டிருக்கிறது!!

இன்று எனை ஏசும் வையம்
நாளை என்பெயர் பேசும்!!

எது காதல்?

யாசித்துப் பெறுவதா காதல்? - நீ
யோசித்துப் பெறுவதுதானே காதல்!!
நிந்திக்கத் தூண்டுவதா காதல்? - உன்னை
சிந்திக்கத் தூண்டுவதுதானே காதல்!!
முகஅழகால் வருவதா காதல்? - உன்
அகஅழகால் வருவதுதானே காதல்!!
உறையவைப்பதா காதல்? - உயிரை
உருகவைப்பதுதானே காதல்!!
சோதித்துப் பார்க்கவா காதல்? - உனை
சாதிக்கத் தூண்டுவதுதானே காதல்!!
அமிலத்தைக் கொடுப்பதா காதல்? - உனக்கு
அமுதத்தைக் கொடுப்பதுதானே காதல்!!
மதம்பார்த்து வருவதா காதல்? - உன்
மனம்பார்த்து வருவதுதானே காதல்!!
வசதியைக் கொடுப்பதா காதல்? - உனக்கு
வரமாய்க் கிடைப்பதுதானே காதல்!!
கண்ணீரைக் கொடுப்பதா காதல்? - தாகத்திற்கு
தண்ணீரைக் கொடுப்பதுதானே காதல்!!
குருதியைக் கெடுப்பதா காதல்? - மன
உறுதியைக் கொடுப்பதுதானே காதல்!!
உன்நிலை மறக்கச் செய்வதா காதல்? - உனை
முன்னிலை பெறச் செய்வதுதானே காதல்!!

தை சொல்லும் பாடம்!

அம்மா கருவில் சுமந்ததை
அப்பா கொஞ்சம் அதட்டியதை
ஆசான் சொல்லிக் கொடுப்பதை
நண்பன் கைகொடுத்து உயிர்காத்ததை
உழவன் உழக்கொடுத்ததை
ஐந்தறிவின்மேல் அன்புகாட்டுவதை
இயற்கை இரசிக்கக் கொடுத்ததை
வெற்றி தரும் சந்தோசத்தை
தோல்வி தரும் மனப்போராட்டத்தை
தியாகிகள் சிந்திய உதிரத்தை
தேசியக்கொடி தந்த தேசத்தை
பிரிவில் தெரியும் உண்மைப்பாசத்தை
இளமை தந்த வேகத்தை
அனுபவம் தந்த பாடத்தை
என்தாய்த்தமிழ் தந்த வீரத்தை
மரணம் கொடுக்கும் அச்சத்தை
மன்னிப்பு கொடுக்கும் மனிதத்தை
புதுக்கவிதை தந்த புளகாங்கிதத்தை
சுனாமி தந்த சீற்றத்தை
காலங்கள் தரும் மாற்றத்தை
மொத்தத்தில்...
வாழ்க்கை தரும் பூடகத்தை
என்றும் நெஞ்சில் வைத்துத் தை!
இத்தனை பாடங்கள் சொல்வதும் தை!
இனிப்புப் பொங்கல் தருவதும் தை!
இதுதான் என் தமிழ்மாதம் தை!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. புதிய சிற்பி – 01-02-2006

2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

3. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 31-12-2011

Monday, May 24, 2010

கா(தல்)ல மாற்றங்கள்!

உன்
அக அழகு கண்டு
என்
முக அழகு கூடியது!

உன்
பேச்சுக்காற்று பட்டு
என்
மூச்சுக்காற்று குளிர்ந்து!

உன்
'செவ்'வாயின் சிரிப்புகண்டு
என்னுயிர்
செவ்வாய்க்கே சென்று திரும்பியது!

உன்
இடை கண்டு
என்
இதயம் தொலைந்து போனது!

உன்
கார்மேகக் கூந்தல் கண்டு
என்
வான்மேகம் சிலிர்த்தது!

உன்
ஆன்மீக நெற்றி கண்டு
என்
தார்மீகம் உயிர்பெற்றது!

உன்
குயில்க்குரல் கேட்டு
என்
துயில் வரம் கெட்டது!

உன்
பிஞ்சுவிரல் கண்டு
என்
நெஞ்சு படபடத்தது!

உன்
காலடிபட்ட மண்ணில் மட்டும்
என்
கால் அடிவைக்கத் துடிக்கிறது!

உன்
உடல் தடுமாற்றம் கண்டு
என்
உயிர் தடுமாறத்தான் செய்தது!

உன்
மௌனம் கண்டு
என்
மரணம் உயிர்பெறத் துடிக்கிறது!!

ஏற்றுக்கொள்வாயா?

தற்செயலாய் நான் கண்டேன் ஒருமயிலை! - அவள்
குரல் நினைவுபடுத்தியது ஒருகுயிலை! - அவள்
அடிக்கடி கெடுத்தாள் என்துயிலை! - அவள்
எழுதி வைத்தாளாம் எனக்கு ஒருஉயிலை! - அதனால்
எடுக்கப் பார்க்கிறாளாம் என்னுயிரை! - அவளுக்காய்
காத்திருந்து இரசித்தேன் வெயிலை!
விதி சதிசெய்தால் என்னுயிர் செல்லும் கயிலை!!

காதல் அகதி!

ஒரு அகதிபோலவே
என் உயிர்
தன் தாய்நாடான
என் உடலைவிட்டு
உன் உடலில்
அடைக்கலம் புகக் கேட்கிறது!

ஏற்பாயா?
இல்லை
மறுப்பாயா?

Saturday, May 22, 2010

உன் பார்வை!

என்காதலி உன்
கடைக்கண் பார்வை
பட்டுவிட்டால்
காற்றில் செல்வது
கால்கள் மட்டுமல்ல...
காலமும்தான்!!

மண்வாசம்!

பகலவன் பார்வைபட்டதும்
பனித்துளிகூட
பணியத்தான் செய்கிறது!
ஆழ்கடல் நீரெல்லாம்
ஆவியாய்தான் போகிறது!
குளத்து நீரெல்லாம்
குன்றத்தான் செய்கிறது!
வாய்க்கால் நீரெல்லாம்
வற்றத்தான் செய்கிறது!
கண்மாய் நீரெல்லாம்
காணமல்தான் போகிறது!

இவையெல்லாம்
இமயந்தொட்ட சிகரமாய்... - பிறர்
இதயந்தொட்ட மனிதனாய்...
வான்தொட்ட முகிலாய்த்தான்
இருக்கிறது!

மேகத்தை மழையாய்
கண்ணீர் வடிக்கச்செய்வது
இயற்கையான காற்று!
மனிதனை மழையாய்
கண்ணீர் சிந்தச்செய்வது
இயற்கையான காலம்! - அதுவே
இயற்கையின் கோலம்!!

மழை
முகில்சிந்தும் கண்ணீராய்
பூமிதொட்டதும்
அகில்சிந்திய தண்ணீராய்
வீசத்தான் செய்கிறது
மண்வாசம்!

இந்த மண்வாசம்!
இதுதானே
ஒவ்வொரு உயிரின் சுவாசம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 03-10-2005

2. முத்தாரம் – 12-11-2006

3. பதிவுகள் (இணைய இதழ்) - 07-09-2012

4. கவிதை உறவு - 01-11-2012

5. சிகரம் - 15-11-2012

காதல் விளையாட்டு!

தோழிகளுடன் தான் உன்பேச்சு!
உன்னுடன்தான் என்மூச்சு!!
புன்னகைத்தாலோ நீ பேரழகு! - உன்னைப்
பார்த்தபின்தான் நான் சிற்றழகு!!
பூக்கள்மீதுதான் உன்பார்வை!
உன்மீதுதான் என்பார்வை!!
உன்னை சுட்டத்தான் என்விரல்!
என்னைத் தொடத்தான் உன்விரல்!!
மெல்லத்தான் உன்நடை! - எனைக்
கொல்லத்தான் உன்இடை!!
உன்னில் நான் கோமாளி!
உன்னால் ஆவேன் நான் ஏமாளி!!
உன்னுடன் என் விளையாட்டு!
என்னுடன் உன் விளையாட்டு!!
விதியுடனா நம்காதல் விளையாட்டு?

மனிதன்!

என்னுடன் பழகிய என் தோழி பிரியதர்ஷினி பாப்பாவுக்காக நான் எழுதிக் கொடுத்த இரண்டாவது கவிதை.

கொட்டிக்கொடுப்பவன் வள்ளல்! - மடியில்
கட்டிக்கொள்பவன் கஞ்சன்!!
சொல்லிக்கொடுப்பவன் ஆசான்! - சொன்னதை
செய்துமுடிப்பவன் மாணவன்!!
பணம்படைத்தவன் செல்வன்! - நல்ல
மனம்படைத்தவன் ஏழை!!
உரமுள்ளவன் வீரன்! - மனதில்
ஜுரமுள்ளவன் கோழை!!
சிந்திக்கத் தெரிந்தவன் அறிவாளி! - அடிக்கடிக்
கோபப்படுபவன் முட்டாள்!!
காட்டிக்கொடுப்பவன் துரோகி! - உன்
கண்முன் எதிர்ப்பவன் எதிரி!!
தட்டிப்பறிப்பவன் திருடன்! - கொடுமையைத்
தட்டிக்கேட்பவன் தமிழன்!!
கட்டியணைப்பவன் கணவன்! - பெண்ணை
காதலித்து மணப்பவன் கவிஞன்!!
உயிரெடுப்பவன் அரக்கன்! - உன்
உயிர்காப்பவன் நண்பன்!!
மனதைக்கடந்தவன் இறைவன்! - தவறை
மன்னிக்கத்தெரிந்தவன்தான் மனிதன்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 18-09-2006