Wednesday, June 16, 2010

காதல்வெடி!

என் இதயமென்ற வெடியை
உன் கண்களென்ற திரியால்
பற்ற வைத்துவிட்டாய்!

அதனால்தானோ
துண்டுதுண்டாய் சிதறுகிறது
என்னிதயம்!!


இக்கவிதைகள்  வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012

என் உயிர்!

உன்னை
மனித உயிர்களில்
ஜாதிமங்கையென்று நினைத்திருந்தேன்!
நீ
என்னுள்ளத்தில்
ஜாதிமல்லியாய் மணம்வீசுகிறாய்!

உன்னை
என்தங்கைக்கு
அண்ணியென்று நினைத்திருந்தேன்!
நீ
என் குடும்பத்திற்கே அன்னையாய்
மலர்ந்துவிட்டாய்!!

உன்னை
என்னிடம் அன்புகாட்டும்
மனைவியென்று நினைத்திருந்தேன்!
நீ
என் உயிரணுக்களில்
காதலியாகவே வாழப்பார்க்கிறாய்!!

உன்னை
என்னை கண்முன் நலமுடன் வாழும்
நங்கையென்று நினைத்திருந்தேன்!
நீ
என் உயிரெனவே வாழ்கிறாய்!!

தீபாவளி!

சொந்தங்கள் நிலைக்க...
பந்தங்கள் சிறக்க...
இன்பத்தை நினைக்க...
துன்பத்தை மறக்க...
புத்தாடை மிளிர...
புன்னகை தவழ...
பொன்னகை ஒளிர...
வந்ததே தீபாவளி! - வாழ்வில்
தந்ததே தீப ஒளி!!

ஒளிந்திருக்கும் மானுடத்திற்கு
ஒளி கொடுக்கவந்தது
தீபாவளி!

மறைந்திருக்கும் மக்களுக்கு
புதுமறையாய் வந்தது
தீபாவளி!

காலையில் முகம்மலர...
மாலையில் அகம்குளிர...
வந்ததே தீபாவளி!
இதுகாட்டுமே நல்லவழி!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. வெற்றிநடை - 01-11-2012

2. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012

அன்பான அறிவுரை!

மழைபோலே நீரூற்று! - கடல்
அலைமேலே ஈரக்காற்று!
சிறிதளவு விளையாட்டு! - நம்
சுவாசத்தில் பாசக்காற்று!
இவையெல்லாம் நீ கேட்டு
உன் எதிர்கால படகோட்டு!!

நீதான்!

அன்புக்கு என் அன்னை!
பண்புக்கு என் தந்தை!
அறிவுக்கு என் ஆசான்!
பரிவுகாட்ட என் தோழன்!
கனிவுக்கு என் தங்கை!
தனிமைக்கு என் கவிதை!
பொறுமைக்கு என் அக்கா!
அமைதிக்கு என் அண்ணன்!
இத்தனை உருவங்களும்
மொத்தமாய் நீதான்!
என்னவளே...
நீதான்!!

தமிழ்நாடு!

அள்ளிக்கொடுத்தால் சிவக்குமே
உள்ளங்கை!
அகிலத்தில் சிறந்த ஊர்
சிவகங்கை!!

பட்டுக்கோட்டை, தேவகோட்டை
புதுக்கோட்டை, நாட்டரசன்கோட்டை
இப்படி இருக்கலாம் பலகோட்டை! - நம்
தேசக்கொடியை பறக்கவிடுவது செங்கோட்டை!
தமிழன் என்றும் கட்டமாட்டான் மனக்கோட்டை!
இப்படித்தான் சொல்வேன் என் உள்ளப்பாட்டை!!

கைவைத்தவுடன் வந்ததே வைகை! -இன்றுநாம்
சைகை காட்டியும் வரவில்லையே வைகை! - இனிநாம்
செய்கையினால் வருமே வைகை!!

அங்குலம் அங்குலமாய்
பிரிகிறதே மனிதகுலம்! - நம்குலம்
தமிழ்க்குலமென்று சொல்லவேண்டுமே
மனிதகுலம்!

ஜாதி ஜாதியென்று
கூவவேண்டாமே! - புனித
ஜோதியில் உலகை ஆள்வோமே!!

ஜாதிமதந்தானே தமிழனக்கு முட்டுக்கட்டை!
இனியாவது வளர்ப்போமே நாட்டுப்பற்றை!!

நம் உயிர்புரட்டும் அமுத ஏடு! - அது
நம் உயிரில் கலந்த நம் தமிழ்நாடு!!

நட்பு!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
சரிசமமாய் கற்பு! - அந்த
கற்பின் உன்னதங்காப்பது
நட்பு!!

உள்ளத்தை உரசுவது
காதல்!
உயிரை உருக்குவது
நட்பு!!

அன்பிற்கும் உண்டோ
அடைக்குந்தாழ்?! - புனித
நட்பிற்கும் உண்டோ
ஆண்பால் பெண்பால்?!!

தோல்வியில்
தோள்கொடுப்பான்!
நான் கண்ணீர் சிந்தினால்
அவன் செந்நீர் சிந்துவான்!!

சிரம் தாழும்போது
கரம் கொடுத்து - மனதில்
உரமேற்றுவான்!

கடலில் பூக்கும் பூ
உப்பு! - நம்
புன்னகையில் பூக்கும் பூ
நட்பு!!

வெளிச்சம் கொடுப்பவன் பகலவன்!
வீரத்தில் விளைந்தவன் நண்பன்!
நம் கண்முன் நிற்கும் நண்பன்
இவன் தான் உண்மையான இறைவன்!!

கற்சிலையை வணங்குவதை
நிறுத்திவிட்டு
கண்கண்ட கடவுளை
வணங்கேன் மானிடா!!

ஆடிக்காதல்!

ஆடிக்காற்றில்
அம்மியும் பறக்குமாம்! - உன்
மூச்சுக்காற்றில்
என்னிதயமே பறக்கிறதடி!!

Tuesday, June 15, 2010

வாருங்கள்!

இந்தியாவில்
சதிகளை சாய்க்க...
மதங்களை மாய்க்க...
தீவிரவாதத்தை தீர்க்க...
பெண்ணடிமை போக்க...
வரதட்சிணையை வேரறுக்க...
ஊழலை ஊதித்தள்ள...
கையூடலை கைகழுவ...
மனிதர்களே வாருங்கள்!
மனிதர்களாய் வாருங்கள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 13-03-2006

2. முத்தாரம் – 16-07-2006

3. முத்தாரம் – 17-09-2006

4. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

Monday, June 14, 2010

என் காதலி!

தை பிறந்தால்
புதிய வழி பிறந்ததாம்! - என்
(அத்)தைமகள் நீபிறந்ததால்
இதயவளிதான் பிறந்தது
எனக்கு!!