Sunday, August 28, 2011

இறந்த நாள்!

என்
ஒவ்வொரு பிறந்தநாளும்
எனக்கு
ஒவ்வொரு இறந்தநாள்தான்!!

என் சிறுவயது முதலே
அன்பு கிடைக்காத காரணத்தினால்...

உன் அம்மாவுக்கு...

என்னுள்
தேக்கிவைத்திருந்த
காதல்
உன்னுள்ளும்
பாக்கியில்லாமல் வரும்!
அதுவரை
காத்திருப்பேன்!
பாக்கியத்தைக்
கேட்டதாகச் சொல்
கண்மணி!!

உன் அப்பாவுக்கு...

என் மதியையும்
மயங்கவைத்த
மகளைப் பெற்றெடுத்த
மதியழகனை
என்மதியில்
வைத்துக்கொண்டேன்
என்று சொல்லிவிடு
கண்மணி!!

அன்பிற்கு நான் அடிமை!

MCA நான்காம் பருவத்தில் அந்த மரத்தடி நிழலில் விசாலம் அக்கா, கல்பனா, இன்னும் சிலர் கலகலவென்று பேசிக்கொண்டிருப்பர். எனக்கு மிதிவண்டி எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் விசாலம் அக்காவும் கல்பனாவும் முகம் சுளிக்காமல் கொடுத்து உதவுவார்கள். ஐந்தாம் பருவத்தில் அவர்களை காணவில்லை. அப்போது தோன்றிய கவிதை இது.


அன்பிற்கு நான் அடிமை! – உங்கள்
அன்பிற்கு நான் அடிமை!!

எப்போதும் சிரித்தீர்கள்! – நட்பால்
என்மனம் பறித்தீர்கள்!!

அடிக்கடி விளையாடினாலும்
நொடிக்கொருமுறை நலம் விசாரிப்பீர்கள்!!

மரத்தடி நிழலில் – உங்கள்
சிரிப்பொலி கேட்கும்! – இனி
சிரிப்பொலி கேட்குமா? – என்
உயிர் மெல்ல சாகுமா??!!

கல்பனா!

கார்த்திகேயன் அண்ணன் கல்பனாவைப் பற்றி சொன்ன அடுத்த நாளே அவளைப் பார்த்து அவளிடம் சரவணராஜ் அண்ணனை பார்த்ததாக சொன்னதுதான் தாமதம். கன்னாபின்னாவென்று திட்டிவிட்டாள். அருகில் விசாலம் அக்கா இருந்தாள். மறுநாள் விசாலம் அக்காவிடம் விளக்கிச் சொன்னேன். அவளும் கல்பனாவிடம் சொல்லியிருந்திருப்பாள் போல. சிலநாள் கழித்து நான் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தேன். ‘sorry suresh’ என்று கத்தினாள். நான் ‘எதற்குப்பா?’ என்றேன். ‘உன்னை திட்டியதற்கு sorry’ என்றாள். நானும் ‘பரவாயில்லைப்பா’ என்றபடி நகர்ந்தேன். அவளைப் பார்க்கும்போதெல்லாம்
சரவணராஜ் அண்ணனும் அவள் அக்காவும் கை கோர்த்து வருவது போலவே தோன்றும்.
2006, ஏப்ரல் 17 திங்கட்கிழமை c# exam முடித்துவிட்டு மதியம் 1.25 க்கு வெளியே வந்தேன். என் மகேஸ்வரி அக்காவுக்கு பேசுவதற்காக STD போய்விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன். என் எதிரே பாண்டிலக்ஷ்மி ம்மா, மகாலக்ஷ்மி கன்னுக்குட்டி, தெய்வானை மூன்றுபேரும் எதிரே வந்து ‘xerox எடுக்கப் போகிறோம் சுரேஷ்’ என்று சொல்லிவிட்டு என்னைக் கடந்து போனார்கள். அதன்பிறகு கல்பனா வந்தாள். அவள் சேலை கட்டியிருந்தாள் ‘என்னப்பா விசேசம்?’ என்றேன். ‘இன்று என் பிறந்த நாள் சுரேஷ்’ என்றாள். சாக்லேட் நீட்டினாள். நான் வாங்கிக்கொண்டேன். ‘எனக்கு படிப்பு முடிந்துவிட்டது சுரேஷ். இனிமேல் நாமிருவரும் பார்க்க முடியாது.’ என்று சொன்னாள். ‘உன் சோபனா அக்காவை ஒருநபர் (நான்) நலம் விசாரித்ததாக சொல்லுப்பா.’ என்றேன். என் குரல் தளுதளுத்தது. கண்ணீர் வந்தது. தலையைக் குனிந்துகொண்டு அவள் முகத்தை பார்க்காமலேயே விடுதி நோக்கி நடந்தேன். அவளும் என்னை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.


சோபனா உன் அக்கா!
சோபனா என் தங்கை!
இவள்தானே நம் அன்பிற்குப் பாலம்!
என்றும் குன்றாது நம்நட்பின் ஆழம்!!

நான் முகவையில் படித்தவன்!
உன்னைவிட அகவையில் சிறியவன்!
கள்ளங்கபடமற்றது உன்னுருவம்!
மழலை மாறாதது என்பருவம்!!
உன்னுள் ஆண்மை கலந்த பெண்மை!
என்னுள் மென்மை கலந்த ஆண்மை!!

உன் பிறந்தநாளை
இனி நீ மறக்கமாட்டாய்!!

நான் உன்னைப் பிரியும்போது
கண்ணீர் என்கண்ணில்! – என்னுயிர்
இம்மண்ணைவிட்டுப் பிரியும்போது
என்ன நேரும் உன்னில்?!!

கவிவள்ளல்!

சரவணராஜ் அண்ணனுக்கு நான் எழுதிக் கொடுத்த மூன்றாவது கவிதை இது.


காதலியை நினைத்து...
காற்றினில் பறந்து – காதல்
கவிதையால் சிறந்து – வெறுமைக்
கனவுகளில் மிதந்து – புதுக்
காவியந்தனைப் படைத்து...
அகிலமெங்கும் பெயர்போற்ற...
சகலரும் பாராட்ட...
பகலவன் பார்வைகொண்டு
பரிவுடன் வாழ்கிறான்
கவிதைவள்ளல்! – இவனை
பாடிவாழ்த்தினாலே என்மனதில்
ஒருவகைத் துள்ளல்!!

சாதனைக்கவி!

இன்னொருமுறை சரவணராஜ் அண்ணனைப் பார்க்க கானாடுகாத்தான் சென்றிந்தபோது இவரிடம் ‘அனைவரும் என்னை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக கிண்டலடிக்கின்றனர்.’ என்றேன். ‘நீ உன் கவிதைகளை பத்திரிகளுக்கு அனுப்பு. கவிதைகளை இரசிக்கத் தெரியாதவர்களிடம் உன் கவிதைகளை கான்பிக்காதே’ என்று சொன்னார். அவர் சொன்னதையே அவருக்கு திரும்ப இந்த கவிதை வடிவில் சொல்லியிருக்கிறேன்.


கவித்தேனில்
நனைக்கவைத்தான் நம்செவியை!
புவிதனில்
நினைக்கவைத்தான் காதல்கவிதை!!

அண்ணா...
உன் தம்பி சொல்கிறேன்
அண்ணா...
சாகும்வரை சோபனாவா?
நிறுத்திவிடு அவள்நினைவை! – புதிதாய்
நினைத்துவிடு வாழ்க்கைத்துணிவை! – உன்னால்
சகலமும் கற்றுக்கொள்ளும் கனிவை! – இதனால்
அகிலமும் புரிந்துகொள்ளும் பணிவை!!

கண்ணுள்ளவர்களுக்கு
உன் க(வி)தை தேன்! – செவியின்கண்
புண்உள்ளவர்களுக்கு
உன் கவிதை ஏன்?

நான் சொன்னேன்
உன்னை
காதல்கவி என்று!
நாளை உன்பெயர் மாறுமே
சாதனைக்கவி என்று!!

காதல் கவி!

ஒருமுறை அண்ணன் அ. சரவணராஜை பற்றி அண்ணன் சு. கார்த்திகேயன் சொல்லக்கேட்டு சரவணராஜை பார்க்க கானாடுகாத்தான் சென்றேன். அவரிடம் நான் எழுதிய கவிதைகளை காண்பித்தேன். அவர் படித்துப் பார்த்து விட்டு ‘உன் கவிதைகளை பத்திரிகளுக்கு அனுப்பு’ என்று சொன்னார். அவருடைய கவிதைகள் பலவற்றை நானும் படித்து பார்த்தேன். காதல் பிடிக்காதவர்கள் கூட அவருடைய கவிதைகளை படித்த பின் காதலிக்க துவங்கிவிடுவர். மாநில அளவில் பரிசுகள் பல வாங்கியிருக்கிறார். அவர் தன் காதலியான சோபனாவின் புகைப்படத்தை என்னிடம் காண்பித்தார். அவளை நான் எங்கேயோ பார்த்ததுபோல் இருந்தது. அதன்பின் கார்த்திகேயன் அண்ணனிடம் இந்நிகழ்ச்சியைப் பற்றி சொன்னபோதுதான் M. Sc., ல் படிக்கும் கல்பனாவின் அக்கா தான் சோபனா என எனக்கு தெரியவந்தது. சரவணராஜ் அண்ணனின் பக்கத்திலேயே இருக்கவேண்டும் எனத் தோன்றியது அன்று. அவர் நினைவில் கானாடுகாத்தானுக்கு அடிக்கடி போயிருக்கிறேன். அ. புதூரில் எடுத்த புகைப்படத்தில் என் காதல் தேவதையின் தலைக்குமேல் கொம்பு முளைத்திருப்பது போலவே இரண்டு தோழிகள் விரல்களை நீட்டியிருந்தனர். அவள் மாட்டு பொங்கலன்று பிறந்ததால் அவள் தலையில் கொம்பு முளைத்திருப்பதாக நினைத்து சிரித்தேன். அவளின் புகைப்படத்தை நான் அன்று அண்ணனிடம் காண்பித்தேன். 2007 ம் ஆண்டு அவளை மறக்க வேண்டும் என நினைத்து புகைப்படத்தை தீயிலிட்டு கொளுத்தினேன்.
எனக்கு உண்மையாக காதலிப்பவர்களை மிகவும் பிடிக்கும். இவர்மீது எனக்கு பாசம் அதிகம். சிவகங்கை பிரபுவின் அண்ணன் திருமணத்திற்கு சிவகங்கைக்கு சென்றபோது தோன்றிய கவிதை இது. நான் இவருக்காக எழுதிய மூன்று கவிதைகளையும் இவரும் கல்பனாவும் படித்தார்கள்.


இலக்கியக் காதலின்
இலக்கணம்
இந்தக் காதல்கவி!

உண்மைக்காதலின்
உருவம்
இந்த காதல்கவி!

உள்ளம பார்த்தும் – அவள்
குள்ளம் பார்த்தும்
வந்த காதல்
இந்த காதல்! – இவன்
சொந்தக் காதல்!!

தமிழ் வேங்கை நோக்க...
தமிழ் மங்கையும் நோக்க...
கண்களின் மோதல்! – இதுவே
இவனின் காதல்!!

எதிர்பார்ப்புகளால் வராமல்
எதிரெதிர் பார்வைகளால் வந்தது
இவன் காதல்!

பாடலை
காற்றில் ஒலிபரப்பினால்
கேட்கும் வானொலி! – உண்மைக்
காதலை
கண்களில் ஒளிபரப்பினாள்
இவனுயிர்க் காதலி!!

வேரில்லாக் காதல்
வேறுவழி நுழையாமல்
விழிவழி நுழைந்து
வேருள்ள இதயத்தை
வேரோடு சாய்ப்பது உண்மை! - பின்னர்
வேரூன்றி நிற்பதும் உண்மை! - இதனை
வேறாக நினைப்பது மடமை!!

சூதும் வாதும் போய்
அன்பெனும்
புதுவேதம் ஓதவைத்தது
இவனுண்மைக் காதல்!

காதலெனும் கோயிலில்
இருவரும் அர்ச்சகர்கள்தாம்!
அவள்பெயரை இவனும்
இவள்பெயரை அவனும்
உச்சரித்துக்கொண்டே இருப்பதால்...

வகுப்பறைக்குள்
வஞ்சியின் விளையாட்டு!
இவன்
நெஞ்சினில் பதிந்தது பாட்டு!!
அதுதான்
கொஞ்சுதமிழின் புதுக்கவிதைபாட்டு!!

பிஞ்சிலே பழுத்ததல்ல
இவன் காதல்!
நஞ்சையே அமுதாக்கியது
இவன் காதல்!!

உடல்களின் முகவரி வேறுதான்!
ஆனால்
உயிர்களின் முகவரி ஒன்றுதான்!!

நான்கு கண்களின்
தவிப்புகளில் தொடங்கிய
இவன் காதல் சாதனை
இரு உள்ளங்களின்
தவிப்புகளிலேயே முடிந்தது
இவன் வாழ்வில் வேதனை! – இதுவே
இவனுக்குச் சோதனை! – நாளை
இவன் செய்வான் புதுச்சாதனை!!

உடல்களின் கூடல் இல்லாமல்
உள்ளங்களின் ஊடல்!
இவன் காதல்!!

இவன் மனதிற்குள் சத்தம்!
அது இரத்தத்தின் யுத்தம்!
இவன் வாழ்வின் மொத்தம்!
இனி அவளைச் சுற்றும்!!

கதை ஏடுகளைப் பார்த்தேன்!
அவனின்
கவிதை ஏடுகளைப் பார்த்தேன்!
ஒவ்வொரு கவிதைக்கும்
என்னிதய ஏட்டில்
இறுமாப்புடன் இறங்கியது
ஈட்டி!

என் விழி சிந்திய கண்ணீர்! – அதுவே
நான் சிந்திய செந்நீர்!!

காலம் செய்த காயம்! – அந்தக்
காயம் செய்த மாயம்!
இவன் காதல்!!

உள்ளன்போடு ஒரு கடிதம்!

ஒருமுறை பாண்டிலக்ஷ்மிம்மாவும் என் காதல் தேவதையும் காரைக்குடி புகைவண்டி நிலையம் வந்திருந்தனர். பட்டுக்கோட்டையில் உள்ள என் மகேஸ்வரி அக்காவை பார்க்கவேண்டுமென்று நானும் புகைவண்டி நிலையம் வந்திருந்தேன். என் குட்டிப்பாப்பா தேவதை என்னைப் பார்த்ததும் ஓடிப்போய் ladies carriage ல் அமர்ந்து கொண்டாள். எனக்கு வருத்தமாக இருந்தது. ‘நானும் ladies carriage ல் போகிறேன் சுரேஷ்’ என்று பாண்டிலஷ்மி ம்மா சொன்னாள். எனக்கு மேலும் வருத்தமாக இருந்தது. என் முகம் வாடியதை பார்த்ததும் பாண்டிலக்ஷ்மி ம்மா தன் முடிவை மாற்றிக்கொண்டாள். எனக்கு எதிரே அமர்ந்தபடி வந்தாள். அடுத்த இரண்டுநாளில் தீபாவளி (2005 m ஆண்டு). என்னை மகிழ்விக்க வேண்டுமென்று நினைத்து என் பாண்டிலக்ஷ்மிம்மா ஒரு தாய் தன் குழந்தையிடம் விளையாடுவது போல் ‘சுரேஷ், உனக்கு விசிலடிக்கத் தெரியுமா? பாட்டுப்பாடத் தெரியுமா?’ என சிறுகுழந்தை போல் என்னிடம் விளையாடிக் கொண்டிருந்தாள். எனக்கு ஒருபக்கம் ‘என் பாண்டிலக்ஷ்மி ம்மா என்னிடம் என்னை அவள் மகனாகவே நினைத்து விளையாடுகிறாள்’ என மனதிற்குள் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் ‘நான் என் காதல் தேவதையை நினைத்து ஏமார்ந்துவிடக் கூடாது என நினைத்து அவளை பாண்டிலக்ஷ்மி ம்மா ladies carriage ல் போகச் சொல்லியிருப்பாளோ?’ என்ற சந்தேகமும் என்னுள் எழுந்தது. ‘எனக்கு நல்லது செய்வதற்காக அக்கா நாரதர் வேலையெல்லாம் செய்கிறாள் போல. நாரதர் கலகம் நன்மையில் முடியும்.’ என்று நினைத்தபடி அக்காவிடமே ‘நாரதர் வேலையெல்லாம் செய்கிறாய் போல’ என்று சொன்னது தான் தாமதம். பாண்டிலக்ஷ்மி ம்மா என்னிடம் கோபப்பட்டு கொட்டித்தீர்த்து விட்டாள். அதன்பிறகு என்ன நினைத்தாளோ தெரியவில்லை. ‘வீட்டில் எல்லோரையும் கேட்டதாக சொல்லுப்பா’ என்று சொல்லிவிட்டு அம்மா அறந்தாங்கி வந்ததும் இறங்கி நடந்து போனாள். அன்று பட்டுக்கோட்டைக்கு போனபிறகு தூக்கம் வராமல் மொட்டைமாடியில் உலவிக்கொண்டிருந்தேன். அப்போது தோன்றிய கவிதையிது.


என்
இளைய சொந்தத்திற்கு
உள்ளன்போடு ஒரு கடிதம்!
நல்ல பண்போடு ஒரு கடிதம்!!

‘நீ
நாரதர் பணிசெய்கிறாய்! – எனக்கு
நல்லது செய்கிறாய்!!’
என்றேன்! – உன் அமைதியை
நானா கொன்றேன்?!!

உடனே
சினந்துவிட்டாய் நீ!
சினத்தில் உன்நிலை
மறந்துவிட்டாய் நீ!
அறந்தாங்கி வந்ததும்
இறங்கிவிட்டாய் நீ! - என்னை
உறங்க விட்டாயா நீ?!!

அக்கணத்தில் கரைந்தது ஒருகாகம்!
உன்சினத்தால் உறைந்தது என்தேகம்!
என்மனத்தில் என்றுமே வெறும்சோகம்!
உன்மனத்தில் குளிர்கிறதே வெண்மேகம்!!

உன்பிரிவால் பொங்கியது என்னுள்ளம்!
என்னுள்ளத்தில் தேங்கியது அன்புவெள்ளம்!!

இனிவேண்டாமே நமக்குள் சண்டை!
நீதான் என்அக்காவுக்கு தங்கை!!

உன் கோபத்தால்
என்னுள்ளத்தில் பெரும்காயம்!
அவள் காதலால்
என்னுயிரில் ஈட்டி பாயும்!
என்று என்னுடல்
மண்ணில் மாயும்?!!

வருந்தாதே அக்கா!

பாண்டிலக்ஷ்மி அக்காவைப் பற்றி மேற்சொன்ன அதே தாக்கத்தில் தோன்றிய கவிதை தான் இதுவும்.


வருந்தாதே அக்கா!
வருங்காலம் நமக்குத்தான்!! – உன்
பொருந்தாத இதயத்தோடு
போராடு கவலையேன்?

பிஞ்சிலே பழுத்ததேன்று
பிதற்றுவது மானுடம்! – நம்பாசம்
நஞ்சையே அமுதாகும்
நான்சொல்லும் ஆருடம்!!

உள்ளத்தில் என்னவளை
ஊற்றிவிட்டேன் நாளும்! – அன்பு
வெள்ளத்தில் உன்னால்
வியக்கிறேன் போதும்!!

எனக்காக வருந்திய
உன்பாசம் புரியுதம்மா எனக்கு!
உனக்காக அழுகிறேனே
என்நேசம் புரியாதாம்மா உனக்கு?