Monday, September 19, 2011

பூனையாரே!

பூனையாரே எங்கள் பூனையாரே!
பூனையாரே எங்கள் பூனையாரே!!

ஓசையின்றி நடந்துவரும் பூனையாரே! – நீ
ஓடிவா என்னோடு பூனையாரே!!

பானைகளை உருட்டுகின்ற பூனையாரே! – நீ
பால்குடித்து ஏப்பம்விடும் பூனையாரே!!

புலிக்குட்டி தோற்றங்கொண்ட பூனையாரே! – நீ
எலிபிடித்து உண்ணுகிற பூனையாரே!!

மீசைகொண்ட மியாவ்மியாவ் பூனையாரே! – உனை
ஆசையுடன் பார்ப்போமே பூனையாரே!!

வால்நிமிர்த்தி நடக்கின்ற பூனையாரே! – நீ
வந்தாலே ஆனந்தம் பூனையாரே!!

பூனையாரே எங்கள் பூனையாரே!
பூனையாரே எங்கள் பூனையாரே!!

பூகம்பம்!

எம்
தாய் பெற்ற மக்களை – இந்தியத்
தாய் பெற்ற மக்களை
வாய்பிளந்தே வாங்கிக்கொண்டாய்!
உயிரை வாங்கிக்கொண்டாய்!!

தாயையும் காணவில்லை! – என்
தங்கையையும் காணவில்லை!!
அப்பாவையும் காணவில்லை! – என்
அக்காவையும் காணவில்லை!! – அவள்முகம்
அன்றும் பார்க்கவில்லை! – என்னிதயம்
இன்றும் துடிக்கவில்லை!! – என்னுடலில்
செந்நீரும் ஓடவில்லை! – என்கண்ணில்
கண்ணீரும் வரவில்லை!!

கோடிஉயிர் வாங்கியும்
கோபம் குறையவில்லை! – உன்
கோபம் குறையவில்லை!!
சாபம் மறையவில்லை! – இயற்கையின்
சாபம் மறையவில்லை!!

மதமும் பார்ப்பதில்லை நீ! – மனித
மனமும் பார்ப்பதில்லை நீ!!
பணமும் பார்ப்பதில்லை நீ! – மனித
குணமும் பார்ப்பதில்லை நீ!!

நாடுகளும் பார்ப்பதில்லை நீ! – மரக்
காடுகளும் பார்ப்பதில்லை நீ!! – மாடி
வீடுகளும் பார்ப்பதில்லை நீ!!

பயிர்களையும் விடுவதில்லை நீ! – ஐந்தறிவு
உயிர்களையும் விடுவதில்லை நீ!!

கண்மூடித்தனமாய் அழிக்கிறாய் நீ! – மானுடத்தைக்
கண்மூடத்தான் வைக்கிறாய் நீ!!

ஆழிக்குள் பேரலையாய்
பொங்கிப் பொங்கித்தான் அழித்தாய் நீ! – பூமியே...
பொங்கிப் பொங்கித்தான் அழித்தாய் நீ!!
ஏங்கி ஏங்கியே தாங்கிக்கொண்டோம் நாம்!
உன்கொடுமை தாங்கிக்கொண்டோம் நாம்!
விழிதூங்காமல் வாங்கிக்கொண்டோம் நாம்!!

மன்னராட்சியில்
தோண்டத் தோண்ட
வந்ததே
பணப்புதையல்!
உன் சேட்டையால்
தோண்டத் தோண்ட
வருகிறதே
பிணக்குவியல்...!!

உன்னை நடுங்க வைத்தது இயற்கை!
எம்மைக் காக்க வந்ததா இறைக்கை??????
யானையின் பலமே தும்பிக்கை!
நம்மனதில் இருக்கவேண்டுமே நம்பிக்கை!!!!

காதல் வெண்பா!

நீநின்ற இடமெலாம் நினைவுகள் சுழலும்!
ஏனென்று கேட்கத்தான் நீயில்லை! - வெண்ணிலா
போலவேதான் உன்முகமும் பேதைநீ மெழுகுச்சிலை
வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்க்கை!!

என்னவள்!

தினம் தினம்
அதிகாலை வேளையில்
வாசலில் கோலமிட்டுக்
கொண்டிருக்கும்
ஒரு ஓவியம்!!

காவியம் படைக்கலாம் வா!

வாழப் பிறந்தவனே! – புவிதனை
ஆளப் பிறந்தவனே!!

புன்னகைக்கும் பூக்களிருக்க
புதைகுழியை ஏன் தேடுகிறாய்?

அருந்திமகிழ அமுதமிருக்க
அமிலத்தை ஏன் தேடுகிறாய்?

உன்னைச் சுற்றி இன்பமிருக்க
இருவிழிகளில் கண்ணீர் ஏன் தோழா?

கண்ணீரைத் துடைத்து எழுந்துவா! – புதுக்
காவியம் படைக்கலாம் வா!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 25-12-2006

2. தினத்தந்தி (சென்னை பதிப்பகம்) – 23-04-2007

முடியுமென்று சொல்!

முடியுமென்ற சொல்லுக்குள்ளே
வெற்றி ஒளிந்திருப்பதை
நீ கண்டுகொள் தோழா!

அடக்கமாய் வாழ்வதை – வெற்றியின்
தொடக்கமாக்கிக் கொள் தோழா!!

கடந்த தோல்விகள் எல்லாம்
கனவுகள் தான் தோழா! – இனி
நடப்பவை எல்லாம்
நல்லவைதான் தோழா!!

காதலிப்பதை ஒதுக்கு தோழா! – வெற்றிக்
காவியத்தை ஒதுக்கு தோழா!!

முடியுமென்ற சொல்லுக்குள்ளே
வெற்றி ஒளிந்திருப்பதை
நீ கண்டுகொள் தோழா!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 23-07-2007

சாதனைகள் நம்வசம்!

தோல்வியென்பது
தொடர்கதையல்ல...
சிறுகதைதான்!
முயற்சி வேள்வியால்
தோல்விக்கு வைக்கலாம்
முற்றுப்புள்ளி!!

உள்ளத்தில் நாளும்
நல்லெண்ணத்தை விதைத்து
நம்பிக்கைஉரம் போட்டு
விடாமுயற்சியை வேர்வையாக்கி
பொறுமையோடு போராடு!

சோம்பலால் தேம்பி அழாதே!
உன் விடாமுயற்சிக்கு
வெறிபிடிக்கட்டும்!

கைகள் நீட்டாதவரைதான்
வானமென்பது தூரம்!
போராடத் துவங்கிவிட்டால்
சாதனைகள் நம்வசம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 07-04-2008

நம்வாழ்க்கை நம்கைகளில்...

வாழ்க்கையென்பது
நீரோட்டமல்ல...
விதியின் வழியே நாமும் செல்ல...!
வாழ்க்கையொரு போராட்டம்!!

சாகத்துணிந்த கோழைகளல்ல
நம் தமிழனம்!
வாழத்தெரிந்த வீரர்களல்லவா
தோழா...!!

ஒதுங்கிநின்று
கூச்சல் போடுபவர்களை
ஒதுக்கிவிட்டு – எதிர்
நீச்சல் போடப்பழகு!!

அஞ்சும் நெஞ்சத்திற்குள் – வெற்றி
தஞ்சம் புகுவதில்லை!
கொஞ்சமாய்
கோபத்தைக் குறைத்து
நெஞ்சத்தில்
நம்பிக்கையை நிறுத்து!!

நம்வாழ்க்கை நம்கைகளில்...!!



இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (சென்னை பதிப்பகம்) – 29-01-2007

பூமித்தாயின் கதறல்!

கதிரவனும் சந்திரனும்
இருகண்கள் பூமித்தாய்க்கு!
கதறுகிறாள் பூமித்தாய்...!
‘மதத்தையா படைத்தேன்? – மனித
மனத்தைத்தானே படைத்தேன்! – பூவுலக
மணத்தைத்தானே படைத்தேன்!!
ஜாதியையா படைத்தேன்? – மனிதனை
ஜதிதானே பாடவைத்தேன்!!’
கதறுகிறாளே பூமித்தாய்...!

இப்படிக்கேட்டால் மரணஓலம்...
எப்படிச்சிறக்கும் எம்மனிதகுலம்?
இங்ஙனம் இருந்தால் மனிதகுலம்...
எங்ஙனம் பிழைக்கும் எம்தமிழ்க்குலம்??

யானைக்குப் பிடிக்கிறது
மதம்!
மனிதா...
உனக்குமா பிடிக்கிறது
மதம்??


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பூவரசி (இணைய இதழ்) – 18-10-2007

கறைபடியாக் கைகள்!

தன் சொந்த செலவிற்காக
ஒரு குண்டூசியைக் கூட
உபயோகிப்பது தவறு
என எண்ணிய
மகாத்மா காந்தி
என்றொரு மாபெரும்
தலைவன் வாழ்ந்தான்
என் இந்தியத் திருநாட்டில்...!!

வெளியே நடந்து சென்று
குடிநீர் பிடிக்க சிரமமென்று
வீட்டுக்குள்ளேயே
குடிநீர் குழாய் வைக்கச்சொன்ன
தன் வயதான தாயாரிடம்
பொதுச்சொத்தை
சொந்தமாக உபயோகிப்பது தவறு
என்றானே
படிக்காத மேதை
காமராஜன்!!!!!
படித்தும் பேதையாக
வாழ்கிறோம் நாம்!
இவன் படிக்காமல்
மேதையாக வாழ்ந்தவன்!!

மகாத்மா காந்தி...
கர்ம வீரர் காமராஜர்...
இப்படி பல தலைவர்களின்
வாழ்க்கை வரலாற்றை
நினைக்கும்போது
இவர்களின் கைகள் சுத்தம்!
ஆனால்...
இன்றைய அரசிய தலைவர்கள்
ஜாதிசாங்கத் தலைவர்கள்
பலரின் வாழ்க்கையோ
சாக்கடை நாற்றம்!!