Sunday, December 23, 2012

சேவல்

அதிகாலையில் கூவும் சேவலை
கொன்று தின்று
தூங்கும் மனிதனின்
வயிற்றுக்குள் இருந்தபடியே
சேவல்
சத்தமின்றி எழுப்புகிறது
உயிரியல் கடிகாரமாய் மாறி...

Monday, December 17, 2012

பாரதியே மீண்டும் வா!

ஒரு வாரத்திற்கு முன்பு என்னுடைய வீட்டு முகவரிக்கு இலக்கியச்சோலை மாத இதழிலிருந்து அஞ்சலட்டையில் அழைப்பு வந்திருந்ததாக என் தந்தை தெரியப்படுத்தினார். அந்த அழைப்புக் கடிதத்தில் இலக்கியச்சோலை ஹைக்கூ இதழில் என்னுடைய ஹைக்கூ பிரசுரமாகியிருப்பதாகவும் 16-12-2012 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் கலைநிகழ்ச்சியில் பரிசு வழங்கப்படுவதாகவும் தெரியப்படுத்தியிருந்தது.

அதன் அடிப்படையில் 16-12-2012 ஞாயிறு அன்று மாலை 4.15 மணிக்கு சென்றேன். கவியரங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கிருந்த நண்பர் ஒருவரிடம் அவருடைய கையில் இருந்த அழைப்பிதழைப் பார்த்தவுடன்தான் நிகழ்ச்சிநிரல் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

நானும் கவிதை எழுதி வாசிக்கலாம் என்ற ஆவல் எழுந்தது. வெள்ளைத்தாள் இல்லை. அப்போது ஒரு அன்பர் துண்டுப்பிரசுரம் செய்தபடி ஒரு தாளைக் கொடுத்தபடி சென்றார். அந்தத் தாளின் பின்புறம் முழுவதும் இடமிருந்தது. இரண்டாக மடித்துக் கொண்டு அவர்கள் கவிபாடச் சொல்லியிருந்த 'பாரதியே மீண்டும் வா' என்ற தலைப்பில் இரண்டு முறை எழுதினேன். கவியரங்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு நாட்டிய நிகழ்ச்சி, நூல்கள் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அங்கிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் நான் எழுதிய கவிதையின் ஒரு பிரதியைக் கொடுத்தேன். கவிபாட அழைப்பதாக உறுதியளித்தனர். கடைசிக் கவிஞனாக  நான் அந்த மேடையில் வாசித்தக் கவிதை இதுதான்.


பாரதியே வா பாரினிலிங்கு – உன்
பாட்டினிலுண்டு அக்னிக்கங்கு – இந்தப்
பாரதம் மூழ்குது மதுவினிலிங்கு – இந்தப்
பூமியை மாற்றிடப் பாட்டெழுதிங்கு

ஆசையினாலே அழியுது பூமி – நீ
ஆயுதமேந்தாக் கவிதைச்சாமி – இந்தக்
காசையே உள்ளம் விரும்புது பூமி – நீ
காசுக்கு எழுதலக் கலியுகச்சாமி

கவிதையினாலே வளருது மொழியே – உன்
கவிதைகள் முழுதும் வாழ்விற்கொளியே – இந்தப்
புவிதனில் பாரதம் ஊழலின் ஊற்று – உன்
புலமையினாலே அறிவினை ஊட்டு

மாண்டா போனாய் பாரதிநீயே – தமிழ்
ஆண்ட புலவன் பாரதிநீயே – என்
வேண்டுதல் கேட்டே வருவாய் நீயே – நீ
வெடிப்பாய்ப் பிறப்பாய்க் கவிதைகளூடே

Monday, November 26, 2012

இந்த வருட தீபாவளி

எத்தனையோ சோகங்கள்
மறந்து திரியும்
இனிப்பான தருணத்தில்
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

பலப்பல பட்டாசுகள் வெடித்தும்
விதவிதமாய் பலகாரங்கள் உண்டும்
ஜொலிஜொலிப்பாய் பட்டாடைகள் அணிந்தும்
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

உறவுகள் கூடி மகிழ்ந்தபோதும்
பிறந்த மண்ணை முத்தமிட்ட போதும்
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

வெடித்த பாட்டாசுகளின்
கரிநாற்றம் மூக்கைத் துளைத்து
வெடித்துச் சிதறிய
பிஞ்சுகளின் நினைவுகள்
மூளையைக் கீறி
கன்னம்வழி கண்ணீர் வழிய...
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

நம்தமிழ் உறவுகள்தேடி
கடல்கடந்து ஈழம்தொட்டு
கதறியழும் நினைவுகளாய்...
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

பால்ய நண்பர்கள்
பலரும் சந்தித்து விளையாடி
ஒருகோடி ஆனந்தம் கிடைத்தும்
இனிக்கவில்லை
இந்த வருட தீபாவளி

என் முகம்பார்த்து
பொக்கைவாய் காட்டிச் சிரிக்கும்
எங்கள் வீட்டு மழலையின்
மலர்ந்த முகம்பார்த்து
இனிக்கத்தான் செய்தது
இந்த வருட தீபாவளி

Friday, November 9, 2012

அழகு ராட்சசி கவிதைநூலுக்கு கவிஞர் வாலிதாசன் எழுதிய நூல் விமர்சனம்.

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.

ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

விமர்சனம் எழுதியவர்: முகவை வாலிதாசன்

னக்கு 4.11.12 அன்று நடைபெற்ற ஹைக்கூத்திருவிழாவில் முனைவென்றி நா.சுரேஷ்குமார் என்ற தோழர் அழகுராட்சசி என்கிற காதல் கவிதை நூலை என்கையில் திணித்தார் மறுபதிலிக்கு நானும் என் நூலைத்திணித்தேன். இன்று (08-11-2012) காலையில் சுமார் 3மணிநேரத்தில் படித்து முடித்தேன், கவிதைகள் அனைத்தும் காதல் மாளிகையை வார்த்தை கற்களால் கட்டி எழுப்பி இருக்கிறார் கவிஞர். பேச்சு வழக்குச் சொல்லை பயன்படுத்திருப்பது எனக்கு நெருக்கமாக்கியது. நூல்
பற்றி அவர் எழுதியிருக்கிற உவமம் அசைக்கிறது இதயத்தை.

"அவள் எங்களை அணிந்து கொள்ள மறுக்கிறாள் என உன் மேல் புகார் செய்தன உன் சிறுவயதாடைகள், அவள் பெரிய குழந்தை ஆகிவிட்டாள் அவளால் உங்களை அணிந்து கொள்ள முடியாது என்றேன் அவ்வளவுதான் கன்னத்தில் கைவைத்தபடி கதறி அழ ஆரம்பித்துவிட்டன உன் சிறு வயது ஆடைகள் அனைத்தும்." என்று கவிஞரின் கவித்துவம் பார்வை அழகியலாய் பேசிக்கொண்டு நீள்கிறது கவிதை நூல் எங்கும், "தங்களின் உடல் அங்கங்களை உடைநாகரீகம் என்கிற பெயரில் கடைவிரித்துக்காட்டும் பெண்கள் வாழும் நாட்டில் உன் அழகையெல்லாம் மறைப்பதற்காகவே சேலை சுடிதார் அணிந்து வருகிறாய் நீ" கவிதையில் சமூக அக்கறை மெலிதாய் தெரிகிறது. இப்படிச்செய்த கவிஞர் "அனைத்து வண்ணங்களாலும் குழைத்து செய்யப்பட்ட வர்ணஜாலம் நீ "என்கிறார். வண்ணங்கள் கூட்டுக்கலவை கருப்பல்லவா? அறியாமல் செய்கிறாரோ என்னவோ. படைப்புகளில் பாசத்த கொட்டிருக்கார், வரும்காலங்களில் நூல்களின் சாரம் சமூகச்சிந்தனைகுறித்திருக்க அடியேனின் வாழ்த்துகள்

Wednesday, November 7, 2012

பிள்ளையார் சதூர்த்தி

பல்லக்கிலும் தேரிலும்
மாட்டு வண்டிகளிலும்
ஊர்வலம் போகின்றன
சிறிதும் பெரிதுமாய்
பிள்ளையார் சிலைகள்

கோஷங்கள்
முழக்கங்கள் இட்டபடி
பக்தர்கள்

கோடிகளில் கடன்வாங்கிவிட்டு
கட்டமுடியவில்லையென
பல்லிளிக்கும் புறம்போக்கிற்கு
பல்லக்குத் தூக்குகின்றன
ஊழலில் திளைத்த எலிகள்

விலையேற்றி விலையேற்றி
வாழ்வுரிமையை
கேள்விக்குறியாக்கும்
பெருச்சாளிகளுக்கு
விருப்பமில்லை
ஏழைகளைப் பற்றி சிந்திக்க...

ஊழல் செய்த
பெருச்சாளிகள் அனைத்துமே
சிறையில் சுகபோகமாய்
இருந்துவிட்டு
வெளியே வருகின்றன
தியாகிகள் போல்...

பெருச்சாளிகள் செய்த
கோடிகோடி ஊழல்களை
அடிக்கடி கரைத்துவிடுகின்றன
ஆட்டுமந்தைகள்
நினைவாற்றல் குறைபாடுள்ள
மனக்கடல்களில்...
ஆண்டுக்கொருமுறை
பிள்ளையாரை
கடலில் கரைப்பதுபோல...

சுயநினைவிற்கு வந்தவனாய்
பிள்ளையாரையும் பல்லக்கையும்
வெறித்த கண்களால் பார்த்தபடி
நிற்கிறான்
அந்த நடைபாதைவாசி

இன்னுமா இருக்கிறது காதல்?

பழங்காலந்தொட்டே நம் தமிழ்ச் சமூக இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் மற்ற மொழி இலக்கியங்களிலும் காதலின் பூரணத்துவத்தை பார்த்துப் படித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக கவிதைகளில் காதலைப் பாடாத கவிஞர்கள் இருந்ததில்லை. தன்னுடைய காதலியைப் பற்றி கவிதைகள் எழுதத் துவங்கி மாபெரும் கவிஞர்கள் ஆனவர்களையும் நாம் அறிந்திருக்கிறோம்.



இல்லற வாழ்க்கையை இனிமையாக்குவதே காதல் தான். பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொள்பவர்கள்  காதலை தனியே செய்ய வேண்டும் என்று இல்லாமல் தன்னுடைய வாழ்க்கைத் துணையை நேசிக்கின்றனர். இல்லற வாழ்க்கையோடு காதலை இணைத்துக்கொண்டு போகின்றனர்.



இன்றைய சூழலில் காதல் எந்த விதமான நிலையில் உள்ளது என்று தேடிப்பார்த்தோமானால் வருத்தப்பட வேண்டியிருக்கிறது.



காதலின் மேன்மையைப் போற்ற, காதலின் பூரணத்துவத்தை அடைய அதன் மேன்மையைப் பற்றிய இன்றைய இளைய சமுதாயத்தினரின் புரிந்துணர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது.



உண்மையான அன்பிற்கு இந்தப் பிரபஞ்சத்தையே கட்டிப்போடும் ஆற்றல் இருக்கிறது. மனித உணர்வுகள் அனைத்துமே அன்பின் வெவ்வேறு பரிமாணங்கள் தான். காதலும் அன்பின் ஒருவகைப் பரிணாமமே.



நட்புடன் பழகும் ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையே கூட காதல் வரலாம். காதல் தன்னிடம் உள்ள மென்மையான மனதினை தானே உண்மையாக உணர வைக்கிறது. காதல் செய்பவர்களைப் பொறுத்து காதலின் மேன்மை, உன்னதம் வேறுபடுகிறது.



வயதான தாத்தா பாட்டி கூட உண்மையாக காதலிப்பதைப் பார்க்கலாம்.



“கடைக்கண் பார்வைதனை கன்னியர்தம் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்”



என்றான் பாரதிதாசன்.



“காதலினால் மானுடர்க்கு கவிதை யுண்டாம்.

கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்”



என்றான் பாரதி.



நின்று கதைப்பதற்கு நேரமற்ற இன்றைய நவீன யுகத்தில் காதல் அரிதான ஒன்றாகிவிட்டது. அடிப்படையில் ஒரு மனிதனிடம் அழகியல் சிந்தனைகளையும், கற்பனைகளையும் உருவாக்கி அவனைக் கவிஞனாக்குவது காதல் தான். காதல் வந்த பின் உலகமே அழகாகிவிடுகிறது.



காதல் சாதிமதம் பார்க்காது. இன்றைய நடைமுறை உலகில் காதலர்கள் ஜாதி, மதம், இனம், மொழி கடந்து காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் நம்முடைய வருங்காலச் சந்ததிகள் சாதி, மத பேதமின்றி மனிதநேயம் போற்றும் மனிதர்களாக வாழ்வார்கள்.



கடற்கரை, திரையரங்குகள் போன்றவற்றிற்கு சென்றால்தான் காதலை வாழ வைக்க முடியும் என்றில்லை. எத்தனை வருடங்கள் ஆனாலும் தன்னுடைய துணையையே நினைத்துக் கொண்டு வாழும் உன்னத உயிர்கள் இம்மண்ணில் வாழும்வரை காதலின் மகோன்னதம் குறையாது.



மனிதர்கள் மட்டுந்தான் என்றில்லாமல் விலங்குகள், பறவைகள் என எல்லா உயிரினங்களும் காதலிக்கின்றன. காதலின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன.



உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹால் காதலின் அடையாளமாக இன்றளவும் விளங்குகிறது. தேவதாஸ் – பார்வதி, அம்பிகாவதி – அமராவதி, ரோமியோ – ஜூலியட் என வரற்றுப் புகழ்பெற்ற காதலர்கள் எண்ணிலடங்காதவர்கள்.



இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அன்பு நிறைந்து வழிய வேண்டுமெனில் காதல் செய்யுங்கள். காதலர்களைப் போற்றுங்கள்.



இன்றைய நடைமுறை உலகில் எத்தனையோ கொடுமைகள் காதலின்பெயரில் நடந்தாலும், இன்னும் உண்மையாய் வாழத்தான் செய்கிறது காதல்.


இக்கட்டுரை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. பண்புடன் (இணைய இதழ்) - 01-10-2012
    (இரண்டாம் பரிசு)

Wednesday, October 24, 2012

தமிழீழம்

இடிவிழுந்த தேசம் – எங்கள்
ஈழர்வாழும் தேசம்
விடியல்தேடும் தேசம் – எங்கள்
வீரத்தமிழர் தேசம்
கடலுஞ்சூழ்ந்த தேசம் – நற்
கவிதைகூறும் தேசம்
மிடிமைகொன்ற தேசம் – எங்கள்
மேன்மைபோற்றும் தேசம்

பண்பும் போற்றுந்தேசம் – தமிழ்ப்
பழமை வாழுந்தேசம்
அண்மை தூரந்தேசம் – நல்
அழகு வாழுந்தேசம்
அன்னைத் தமிழர்தேசம் – நல்
அறமும் வாழுந்தேசம்
அன்பு போற்றுந்தேசம் – தமிழ்
அருமை தெரிந்ததேசம்

Sunday, August 19, 2012

மல்லிகைப்பூ

காலையில் சூடிய
மல்லிகைப்பூ வாடியதென்று
மாலைப்பொழுதில்
குப்பைத்தொட்டியில் எறிகிறாய்

உன் கூந்தலைவிட்டு
பிரியமனமின்றி
வாடிவதங்கிப்போனது
வாடாத மல்லிகைப்பூ!!

Sunday, August 12, 2012

காமராசர்

ஏட்டுக்கறி சுவைக்காத
நாடுபோற்றும் நல்லவர்
காமராசர்
-------------------------------------------------------

சுதந்திர தினம்

அகிம்சையெனும் ஆயுதமேந்த
அடிபணிந்தனர் ஆங்கிலேயர்
கிடைத்தது சுதந்திரம்
-------------------------------------------------------

சுதந்திரம் கொடுத்த சுதந்திரத்தில்
சுதந்திரமாய்ச் சுற்றித்திரிகிறது
ஜாதி
-------------------------------------------------------

விடுதலை கிடைத்தும்
விழலுக் கிறைத்த நீரானது
ஊழல் அரசியலால்
-------------------------------------------------------

நாம் விடுதலையடைந்ததை
ஆண்டுக்கொருமுறை நினைவுபடுத்துகிறது
சுதந்திரதினம்
-------------------------------------------------------

பள்ளிகளில் மிட்டாய் கொடுக்கப்பட்டது
குழந்தைகள் நன்றி சொன்னனர்
சுதந்திர தினத்திற்கு
-------------------------------------------------------


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 15-08-2012

2. தமிழ்முரசு - 02-09-2012

3. இராணி - 09-09-2012

4. தமிழ்த்தோட்டம் (இணைய இதழ்) - 16-10-2012

5. அருவி - 10-11-2012