Wednesday, December 21, 2011

புத்தாண்டு கொண்டாட்டம்(?????)

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!

இலவசங்கள் தந்தவுடன் வாய்பிளக்கிறோம்!
இன்னொருவன் வாழ்வையிங்கு கதையளக்கிறோம்!
பழரசம்போல் மதுகுடித்தே நினைவிழக்கிறோம்!
பரவசமாய் மாறியிங்கு பண்பிழக்கிறோம்!!

உரிமைகளை எங்கேயும் விட்டுக்கொடுக்கிறோம்
உணவிற்கு பிச்சையிங்கு நாம்எடுக்கிறோம்
அரசியலில் நேர்மைதனை நாம்தடுக்கிறோம்
அவரவர்க்கு கஷ்டமென்றால் போர்தொடுக்கிறோம்

கொஞ்சநஞ்ச ஆண்மையிங்கு இறந்துபோனதே
கோடிகளில் ஊழலைமனம் மறந்துபோனதே
நெஞ்சத்தில் தைரியமும் பறந்துபோனதே
நேர்மையில்லா அரசியலே சிறந்துபோனதே

இறந்தகால துன்பங்களை மறக்கவேண்டுமே
இளைஞர்களே வாழ்வினிலே சிறக்கவேண்டுமே
இறந்துபோன மனிதமிங்கு பிறக்கவேண்டுமே
இலவசத்தை விரும்பும்மனம் இறக்கவேண்டுமே

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!
வீதிகளில் புத்தாடைப் பூந்தோட்டந்தான்!
விலைவாசி உயர்வாலே திண்டாட்டந்தான்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 31-12-2011

2. நம் உரத்தசிந்தனை - 01-01-2013

3. வெற்றிநடை - 01-01-2013

4. தமிழ்முரசு - 27-12-2012

5. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2012

2 comments:

Anonymous said...

''...புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டந்தான்!
பறந்திடுமே நம்மனமும் வண்டாட்டந்தான்!...''
இப்போதே புத்தாண்டுக்கு தயாராகிட்டீங்க போல. நிறைய சங்கதிகள் இணைத்துள்ளீர்கள் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை said...

நன்றி.