Wednesday, May 15, 2024

பிரகதிக்குப் பிறந்தநாள் (16-05-2024) - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/Up1QEBTW--A




மலரே மகளே மறுமகளே
மனதில் நிறைந்த திருமகளே
அழகே நிலவே திருப்புகழே
இரவில் ஒளிரும் சிறு அகலே

தரையில் தவழும் அலைகடலே
தாவிக் குதிக்கும் சிறுமுயலே
குறைகள் இல்லா கோமகளே
கொஞ்சிப் பேசும் புதுமடலே

மயிலே மழையே மரகதமே
மாமன் தோளில் பூரதமே
குயிலே குறும்பே கொண்டாட்டமே 
குதிப்பாய் பறப்பாய் வண்டாட்டமே

வானம் தாண்டி வளர்வாயே
வாழ்க்கை முழுதும் மகிழ்வாயே 
தேனினும் இனிதாய் வாழ்வாயே 
தேவதை நீயும் சிரிப்பாயே

பிறந்தநாளில் வாழ்த்துகிறோம்
இறைவன் அருளும் கிடைக்கட்டும்
சிறப்பாய் வாழ்வில் உயர்வாயே 
சித்தர்கள் அனைவரின் அருளுடனே... 

Wednesday, May 8, 2024

இசையமைப்பாளர்/தானியங்கி (auto) ஓட்டுநர் மெட்டில், இசையில், குரலில் நேற்று நான் மெட்டமைத்து, எழுதி, பாடி வெளியிட்ட என் மகள் ரிதன்யா குட்டிக்கான பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்

 பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/M83tOYbXVcc


பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன் 

இசை: திரு. கோபி 

பாடியவர்: திரு. கோபி 


சில மாதங்களுக்கு முன்பு தானியங்கியில் (auto) செல்ல முயற்சித்து ஒரு ஓட்டுநரின் வண்டியில் பயணித்தோம். மூத்த மகள் ரிதன்யா விடம் keyboard ற்கான இசைப்பயிற்சி செல்வதற்கான நேரம் குறித்து பேசிக் கொண்டே சென்றோம். உடனே ஓட்டுநர் என் மகளிடம் இசைப்பயிற்சி குறித்து விரிவாகப் பேசினார். நான் குறுக்கிட்டு "இசையில் ஆர்வம் உண்டா?" என்று கேட்டேன். அவரும் "நான் ஒரு இசையமைப்பாளர். என் மகனுக்கு பயிற்சி அளித்து அவன் தற்போது keyboard நன்றாக வாசிப்பான்" என்றபடியே அவரின் youtube channel ன் சிலவற்றை அனுப்பி பார்க்கச் சொன்னார். 


அதன்பிறகு நான் வெளியிடும் youtube விழியங்களை அவருக்கு அனுப்புவேன். அவர் எனக்கு அனுப்பினார். நேற்று நான் மெட்டமைத்து எழுதி பாடிய பாடலின் இணைப்பை அனுப்பிய உடனே பாடல் வரிகளை அனுப்புங்கள், ரிதன்யாவின் புகைப்படங்களை அனுப்பச் சொல்லி நேற்று மாலை எனக்கு என் பாடல் வரிகளில் அவரின் வேறு ஒரு மெட்டில் அவரின் குரலில் இசை சேர்த்து இந்த விழியத்தை அனுப்பினார்.


குரலும் இசையும் அருமை. ஒரு மணி நேரத்தில் வேறு ஒரு மெட்டில் பாடலை உருவாக்கி விட்டார். இசையமைப்பாளர் கோபி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Tuesday, May 7, 2024

ரிதன்யா குட்டிக்கு பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/poHO6q12aaw


09-05-2024 அன்று என் மூத்த மகள் ரிதன்யா வுக்கு பிறந்தநாள். 

இசையைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், இந்தப் பாடலில் பல இடங்களில் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் இரண்டாக உடைத்து (chopping) பாடும்போது நான் உருவாக்கிய மெட்டில் இரண்டாக உடைத்த வார்த்தைகள் பிசிறு தட்டாமல் சரியாக பொருந்துகிறது. உதாரணத்திற்கு உள்ளம் என்ற வார்த்தையை உள்+ளம் என உள் ளம் எனப் பிரித்து பாடியிருக்கிறேன். 

ஒரு இசையமைப்பாளருக்கான அடிப்படைத் தகுதியே மெட்டமைப்பது. புதுப்புது மெட்டுகளில் தான் பாடல் வரிகள் வழியே பாடல்கள் மக்கள் மனதைக் கவர்கின்றன. எனக்கு புதுப்புது மெட்டுகள் இறை சக்தியிடமிருந்து கிடைப்பதாக உணர்கிறேன். ஒரு இசையமைப்பாளருக்கான அடிப்படைத் தகுதியே மெட்டமைப்பது என்பதால் நானும் ஒரு இசையமைப்பாளரே.

2005 ம் ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது என்னோடு அண்ணன் அ. சரவணராஜ், யா. சாம்ராஜ் போன்ற இன்ன பிற கவிஞர்களும் பொறுப்பாசிரியர்களாக பணியாற்றிய போது மாத இதழின் ஆசிரியர் முதல் இதழின் முதல் பக்கத்தில் முன்னுரையில் என்னுடைய ஒரு கவிதையைப் படித்த தாக்கத்தில் "ஒரு சங்கீதக் கலாநிதி போல் தொடையில் தட்டிப் பாடச் சொல்லும் கவிதைகளை தருபவர்" என்று என்னை அறிமுகம் செய்திருந்தார். இன்றும் நான் 
ஒரு சங்கீதக் கலாநிதி போல் தொடையில் தட்டிப் பாடச் சொல்லும் பாடல்களை மெட்டமைத்து, எழுதி, பாடிக் கொண்டிருக்கிறேன்.

நீங்களும் பாடலை என்னோடு சேர்ந்து பாடி என் மகள் ரிதன்யா வுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரியப் படுத்துங்கள். 

நன்றி.




வா நீ என அழைத்தால் 
நீ வருவாய் கண்ணே - என் 
வாழ்வே நீ என்றேன் 
நீ வந்தாய் முன்னே

கண்கள் முன்னே பேரழகே 
கால் முளைத்த நூறழகே
உன்னை விட்டு எங்கே போவேன் 
உன் முன்னே மழலை ஆவேன் 
---


அன்பே என் அன்பே 
என் மகளே நீ வா 
கண்ணே என் முன்னே 
என் மலரே நீ வா 

கண்ணிமைக்கும் நேரத்திலே 
கண் சிமிட்டி நின்றுவிட்டு 
கன்னத்திலே முத்தமிட்டு 
காணாமல் போனதென்ன
---


முத்தே என் மணியே
என் உடலின் உயிர் நீ
சொத்தே என் சுகமே
என் உலகம் இங்கு நீ

வண்ண வண்ண பூக்களெல்லாம் 
உன்னழகைக் கேட்பதென்ன
வானவில்லும் கீழிறங்கி 
உன்னழகைப் பார்ப்பதென்ன
---


கள்ளம் இல்லா உள்ளம்
என் செல்லம் நீ வா
துள்ளும் அன்பு வெள்ளம் 
என் வெல்லம் நீ வா

வெண்ணிலவும் பூமி வந்து 
உன்னைத் தொட்டுப் பார்ப்பதென்ன
மீன்கள் எல்லாம் பக்கம் வந்து 
முத்தமிட்டுப் போனதென்ன
--