Saturday, December 7, 2013

விஷ்ணு பாப்பாவும் சிறப்பு ழகரமும்


சில நாட்களுக்குமுன் என் தங்கச்சி பாப்பாவிடம் அலைபேசியில் பேசும்போது ‘விஷ்ணு என்ன செய்கிறான்?’ என்று கேட்டபோது ‘உன் மருமகன் amenna சாப்பிடுகிறான்.’ என்றாள். ‘அதென்ன amenna?’ என்றேன். ‘ஒண்ணுமில்ல ண்ணே, வாழைப்பழம் வாங்கி வந்தேன். விஷ்ணுவுக்கு கொடுத்தேன். Banana என்று சொல்லிக்கொடுத்தேன். அதைத்தான் amenna என்கின்றான் விஷ்ணு.’ என்றாள்.

நான் பரமக்குடிக்கு சென்றிருந்த போதெல்லாம் அவன் அழுதால், வீட்டிற்குள் பிராண வாயு (oxygen) கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் அவனை, வேப்பமரக் காற்று நல்ல மருந்து என்பதால் பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தடியில் அமர்ந்து மடியில் வைத்து பேசிக் கொண்டிருப்பேன். சாலையில் போகின்ற நாயை ஆச்சர்யமாக பார்ப்பான். அவனிடம் ‘நாய், dog’ என்று சொல்லிக்கொடுப்பேன். மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் காகத்தை குறுகுறுவென்று பார்ப்பான். அவனிடம் ‘காகம், காக்கா, crow’என்று சொல்லிக்கொடுப்பதுண்டு.

சிலநாட்களுக்குப் பிறகு அந்த மரத்தடிக்கு மறுபடியும் அழைத்து வரும்போது நாய் அந்த வழியே வந்தால், என்னை கையால் தொட்டு அழைத்து நாயை சுட்டி நாய் என்று சொல்லத்தெரியாமல் ‘நா, நா’ என்று சொல்வான். உச்சியில் காக்கையை தேடுவான். பிறகு காகத்தைப் பார்த்துவிட்டு என்னை அழைத்து காக்கா என்று சொல்லத்தெரியாமல் ‘கா, கா’ என்று சொல்வான்.

அவனை ‘எங்க விஷ்ணு பாப்பால்ல, நல்ல பாப்பால்ல’ என்று சொல்லி செல்லங்கொஞ்சுவதுண்டு. அதனால் அவனை அவனே விஷ்ணு பாப்பா என்று சொல்லத்தெரியாமல் ‘விஷ்ஷப்பா’ என்றும் நல்ல பாப்பா என்று சொல்லத்தெரியாமல் ‘ல்லப்பா, ழ்ழப்பா’ என்றும் சொல்வான்.

இன்றைய நடைமுறை உலகில் தமிழர்கள் யாரும் சோம்பேறித்தனம் காரணமாக சிறப்பு ழகரத்தை அதற்குரிய அழுத்தத்தோடு சரியாக உச்சரித்து பேசாமல் சிறப்பு ழகரத்தின் சிறப்பு அழியத் தொடங்கியுள்ள நிலையில் ஒரு மலையாளி என்னுடைய உறவினர் மகனுக்கு ‘மலையாளத்தில் மழை என்ற வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் சிறப்பு ழகரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்’ என்றும் சொல்லித்தந்திருக்கிறான். என்னுடைய உறவினர் மகன் என்னிடம் வந்து தமிழில் சிறப்பு ழகரம் உள்ளதா? என்று கேட்டான். அதிர்ந்து விட்டேன். ‘தமிழை கடன்வாங்கி ஆங்கிலம், ஜப்பானிய மொழி உட்பட பல மொழிகளும் தத்தமது வாழும் தகவமைக்கேற்ப (region) தமிழை திரித்தும் வார்த்தைகளை சேர்த்தும் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, கன்னடம்,......’ என்று பலவாறு பேசிக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு மலையாளி தன்னுடைய மொழியில் உள்ளனவற்றை மறவாமல் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் நிலையில் ஒரு தமிழன் இப்படி சிறப்பு ழகரத்தை மறந்து விட்டானே? என்று அதிர்ந்தேன். அவனிடம் ‘நம்முடைய தாய்மொழியை நீ மறக்கலாமா டா?’ என்று கேட்டேன். அவன் சொன்னான். ‘பள்ளியில் என்னுடைய ஆசான்கள் இப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லித்தரவில்லை. அதன்பிறகும் யாரும் சொல்லித்தரவில்லை. அதனாலேயே மழை என்பதை மலை என்றே இத்தனை நாளாய் உச்சரித்து வந்தேன். மலையாளத்தில் மழா என்று மழையை அழைப்பார்களாம்’ என்றும் மனவருத்தத்தோடு சொன்னான்.

உண்மையில் ஆங்கிலேயன் தன்னுடைய மொழியை பல்வேறு பதிப்புகளாக, உட்பிரிவுகளாக அந்தந்த நாட்டிற்கு தகுந்தாற்போல்British English, US English, Indian English என்று தன்னுடைய மொழி திரிவடைவதை அனுமதிக்கிறான். அதன்மூலம் தன்னுடைய தாய்மொழி உலகம் முழுவதும் பரவுகிறது என்பதை அவன் உணர்கிறான். ஏனெனில் அவன் ஒவ்வொரு நாட்டு மொழியின் பின்னும் englsih என்ற தன்னுடைய மொழியின் பெயரைச் சேர்த்து Indian English என்றே அழைக்கிறான். நாளை எவனாவது இந்த மொழி தன்னுடையது என்று சொன்னால் ஆங்கிலேயன் சொல்வான் இது எங்கள் மொழி. உன்னுடைய மொழி என்று நீ சொல்லும் மொழியின் கடைசியில் என்னுடைய தாய்மொழியான English என்ற வார்த்தை உள்ளது. எனவே நீ பேசும் US English, Indian English எல்லாமே என்னுடைய தாய்மொழியான English ன் உட்பிரிவுகள் தான் என்று மிக எளிமையாக தெளிவாக உறுதியாக ஆதாரத்தை முன் வைப்பான். ஆனால் தமிழன் தன்னுடைய மொழியிலிருந்து தோன்றிய மலையாளத்தை மலையாளத் தமிழ் என்றும் கன்னடத்தை கன்னடத் தமிழ் என்றும் தெலுங்கை தெலுங்குத் தமிழ் என்றும் மராட்டியை மராட்டித் தமிழ் என்றும் (பெரும்பாலான மொழிகளை இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும். இதற்கு ஆதாரமும் இருக்கிறது. கூகிள் குழுமத்தில் ஒருவர் ஒருமுறை ஆதாரத்துடன் தமிழிழிலிருந்து உகரத்தை, இகரத்தை இழந்து எப்படி இன்னொரு மொழியாக மாறியிருக்கிறது என்பதை விளக்கியிருக்கிறார்.) தான் நாம் அழைக்க வேண்டும். ஏனெனில் தமிழின் உட்பிரிவுகள் தான் ஏனைய பெரும்பாலான மொழிகள்.

உலகின் பெரும்பாலான மொழிகள் தமிழிலிருந்து தான் தோன்றின, பெரும்பாலான மொழிகளுக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, ஒருசில ஆங்கில வார்த்தைகளின் 
வேர்ச்சொற்கள் தமிழில் இருக்கின்றன என்பதற்கு மொழியியல் ஆய்வாளர்களும், தொல்லியல் ஆய்வாளர்களும் சான்றுகளுடன் விளக்குகின்றனர்.

இருந்தபோதும் இன்று நாம் மலையாளத் தமிழ் என்று அழைக்கவேண்டிய மலையாளத்தை, மலையாளத் தமிழ் என்று அழைத்தால் மலையாளி நம்மோடு சண்டைக்கு வருவான். ஏனெனில், தமிழன் தனக்கு போகத்தான் தானதர்மம் என்று வாழாமல் அனைவருக்கும் தன்னுடைய பெருந்தன்மையான குணத்தால் மொழி, நிலப்பரப்பு என அள்ளியள்ளிக் கொடுத்தான். இன்று எல்லா இடங்களிலும் அடிவாங்கி சாவது தமிழன் தான். தமிழன் தன்னுடைய பெருந்தன்மையான குணத்தால் தான் வீழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஆங்கிலேயன் தன்னுடைய ஆங்கிலத்தை US English, Indian English, British English என்று உட்பிரிவுகளாக பிரித்து உலகம் முழுவதும் பரப்புவதைப் போல தமிழன் செய்ய இயலாமல் மொழி திரிந்து விடும் என்று பயப்படுகிறான். ஏனெனில் தமிழன் தன்னுடைய மொழியின் மேல் இனத்தின் மேல் அக்கறை இல்லாமல் வாழ்கிறான் என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அதன்பிறகு சிறப்பு ழகரத்தைப் பற்றி ஒரு அன்பர் எழுதிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. அதில் ‘தமிழின் சிறப்புகளில் சிறப்பு ழகரமும் ஒன்று. அதனை உச்சரிக்க சோம்பேறித்தனப்பட்டால் அந்த சிறப்பு ழகரம் எதற்கு?’ என்று மன வேதனையோடு கேள்வி எழுப்பினார்.

இன்னொரு நண்பர் “திரைப்பட நடிகர்கள் வசனம் பேசும்போதும், அவர்களுக்காக குரல் கொடுக்கும் திரைமறைவு குரலொலி (dubbing artists) கலைஞர்களும், இப்போது தமிழ் திரைப்படப் பாடல்களை பாடுகிற வேற்றுமொழி பாடகர்களும் சிறப்பு ழகரத்தை லகரமாகவோ ளகரமாகவோ தான் உச்சரிக்கிறார்கள். உதாரணத்திற்கு அழகு என்பதற்கு பதிலாக அலகு என்றோ அளகு என்றோ தான் உச்சரிக்கின்றனர்.” என்று வருத்தப்பட்டார்.

தமிழர்கள் அல்லாத பிற மொழியினத்தினர் தமிழ்மேல் காதல்கொண்டு தமிழ்பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வெகுஜன ஊடகமான திரைப்படங்களையே உதாரணமாக வைத்து தமிழ் கற்கின்றனர். என்னுடைய அறையில் வசிக்கும் தெலுங்கின அன்பர், கன்னட அன்பர் தமிழ் கற்க ஆசைப்பட்டு தமிழ் திரைப்படங்களைப் பார்த்தே, தமிழை கற்றுக்கொண்டதாகவே தெரிவித்தனர். திரைப்பட இயக்குனர்கள் தயைகூர்ந்து திரைப்படக் கலைஞர்களின் தமிழ் உச்சரிப்பை ஆழமாக கவனித்து உச்சரிப்பு பிழைகளை நீக்கி வெளியிட வேண்டுமாய் இந்தக் கட்டுரை ஊடாக, கேட்டுக்கொள்கிறேன்.

சென்னையில் குழந்தை என்பதற்கு பதிலாக குயந்தை என்று ழகரத்தை யகரமாக உச்சரிப்பதை கவனிக்கலாம்.

சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகர் பதிப்பகம் சார்பில் ஒரு விழாவில் கூடுகள் சிதைந்தபோது சிறுகதை நூலிற்காக அகில் அண்ணாவுக்கு விருது வழங்கினார்கள். அந்த விழாவில் நானும் பார்வையாளனாக கலந்துகொண்டேன். ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளை சேர்ந்த கொடுமுடி என்ற ஊரைச் சேர்ந்த புலவர் ஒருவர் பேசும்போது, ‘தற்கால புதிய பொருட்களை அழைக்கும்பொருட்டு, பயன்படுத்தும்பொருட்டு ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் புதிய வார்த்தைகளை சேர்த்து அதை உடனடியாக பரப்புகின்றனர். ஆனால் தமிழில் அதைப் போன்ற காலத்திற்கேற்ப மாற்றங்கள் (Updates) செய்யவும் ஆளில்லை. செய்தாலும் தமிழர்களிடம் மொழி பற்றிய அக்கறையின்மையாலும், அவர்களின் முழு ஒத்துழைப்பின்மையாலும், வரவேற்பின்மையாலும் புதிய வார்த்தைகள் வழக்கொழிந்து போகின்றன. அதனாலேயே தமிழ் பழையமொழி தற்காலத்திற்கு உதவாத மொழி என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறது.’ என்று வருத்தப்பட்டார்.

௨௦௦௪ ல் (2004) நான் அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது விடுதியின் என்னுடைய அறையின் பக்கத்து அறை நண்பர் (தமிழில் முனைவர் பட்டம் பெற படித்துக் கொண்டிருந்தவர்) என்னிடம் ஒருமுறை பேசும்போது ‘அடுத்த தலைமுறையில் தமிழும் சமஸ்கிருதம் போல் பேச்சுவழக்கிலிருந்து அழிந்துவிடும்.’ என்று வருத்தத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

என் மருமகனுக்கு யாருமே சிறப்பு ழகரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லித்தராமலேயே அவன் சுயம்புவாக கற்றுக்கொண்டு என்னிடம் ‘ழ்ழப்பா, ழ்ழப்பா’ என்று சொன்ன கணத்தில் சிறப்பு ழகரத்தைப் பற்றி மேலே சொன்ன அனைத்தும் ஒரு கணத்தில் என்னுள்ளே தோன்றி மறைந்தன. என் மருமகன் விஷ்ணு பாப்பாவை ஆரத்தழுவி நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அவன் கன்னத்தில் மாறிமாறி முத்தமழை பொழிய ஆரம்பித்தேன் நான்.

No comments: