காற்றில் அசைந்து
ஆடிக்கொண்டிருந்தது
அந்த சாய்வு நாற்காலி.
பால்ய வயதில்
அதில் நான் அமர்ந்த போதெல்லாம்
அடிக்க வருவதாய் பயமுறுத்தி
அன்பாய் அணைக்கும்
இரு கைகள்
தேநீர் குவளையை
அவள் வைக்கும்போதெல்லாம்
மரணிக்கும் நிசப்தம்
அவள் திட்டும்போதெல்லாம்
‘இவளுக்கு வேறு வேலையில்லை’
என்றே நமட்டுச்சிரிப்போடு
செய்தித்தாளின் பக்கங்களோடு
ஒன்றிப்போகும் அவரின் கண்கள்
சிறுநீர் கழிக்கப்போவதாய்
பொய் சொல்லிவிட்டு
பஞ்சு எடுப்பதிலிருந்து
கொல்லைவழியே தப்பித்தோடி
மாடிவீட்டு ஜன்னலின்வழியே
நான் கால்கடுக்க நின்று
ஒளியும் ஒலியும்
பார்த்த பரவசம்
பேருந்து ஓட்டுவதாய்
நினைத்தபடி பயம்போக்க
சத்தமிட்டுக்கொண்டே
ஓடிவந்த என்னுடைய கால்கள்
பூனைபோல் கொல்லைவழி
நான் உள்ளே நுழைந்தாலும்
எங்கிருந்தோ வரும்
காற்றை கிழித்துக்கொண்டு...
அவளின் குரல்.
‘எங்கடா போன கழுத?’
என்று தன் மனைவியான அவளுக்கு கேட்கவே
உரக்க என்னை அதட்டிவிட்டு
என் பக்கம் வந்தபின்
உச்சிமுகர வருவதாய்
மெல்ல வருடும்
அந்த வேல்கத்திமீசை
அதிகாலை
பனிப்போர்வையை விலக்கிக்கொண்டு
காளைகளை கூட்டிக்கொண்டு
கலப்பையை தோளில் சுமந்துகொண்டு
ஏரோட்ட போய்...
பள்ளிக்கு நான் புறப்படும்போது
நீராத்தண்ணி குடிக்க
வயிற்றுப்பசியோடு
உழைத்துக் களைத்து
ஓடிவந்த அவரின் கால்கள்...
வானம்பார்த்து
குடையை எடுக்கும் அவரது கணிப்பு
எப்போதும் தவறானதே இல்லை
அதிர்ந்து பேசாத அவர் உதடுகள்
அவளை சமாதானப்படுத்தும்
நேரம்போக...
காளைகளையும் பசுக்களையும்
தன் பேச்சால் தலையாட்ட வைக்கும்
மெ(மே)ன்மை..
காற்றில் அசைந்து
ஆடிக்கொண்டிருந்தது
தாத்தாவின் அந்த சாய்வுநாற்காலி.
No comments:
Post a Comment