Sunday, May 2, 2010

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி திருவினையாக்கும்! - என்ற
பயிற்சி உறுதுணையாக்கும்!!

வானம் புதிதுதான்! - இந்த
வையமும் புதிதுதான்! - நம்
வாழ்க்கையும் புதிதுதான்!! - வீணாய்
வருந்தாதே நண்பா!!

கடந்த காலத்தில் நிகழ்ந்த
தோல்விகளை நினைத்து - வீட்டில்
முடங்குவதை நிறுத்து!!

இடிவிழுந்து
இமயமலை சாய்வதில்லை!
காகம் பறந்து
கடலலை ஓய்வதில்லை!!
இமயமலை போல்
நீ நிமிர்ந்துநில்!!

சின்னச்சின்ன தோல்வி கண்டு
ஒய்ந்துபோகாமல்
கடலலைபோல் தொடர்ந்து
ஓயாமல் போராடு!!

தன்னம்பிக்கை இருந்தால்
தடைக்கற்கள் தானே
படிக்கற்களாய் மாறும்!
உன்னால்
முடியுமென நம்பு!
உன்னால்
முடியும்வரை நம்பு!
இதுவே
உனக்கு புதுத்தெம்பு!!

காலத்தின் அருமைகண்டு
சற்றே பொறுமையுடன் போராடு!!

வீட்டில் படுத்து
உறங்குவதை தடுத்து
வாய்மையை எடுத்து
தூய்மையாய் உடுத்து!!

காலக்குதிரையின் கடிவாளத்தை
நீ கொஞ்சம் இழுத்து
வெற்றிக்காவியங்கள் பல நடத்து!!

முயற்சி திருவினையாக்கும்! - என்ற
பயிற்சி உறுதுணையாக்கும்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 10-07-2006

2. இலங்கை வானொலி – 03-09-2006

3. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 09-04-2007

4. முத்தாரம் – 19-04-2007

5. பாவையர் மலர் - 01-08-2012

யார் சொன்னது?

'புயலுக்குப் பின்
அமைதியாம் இம்மண்ணில்'!

யார் சொன்னது?

அமைதியாய்
நீ வந்தபின்தான்
புயல் வீசுகிறது
என்னில்!!

Saturday, May 1, 2010

அவள் நினைவால்...

ஓசையின்றி வளர்ந்த
மீசையையும் நறுக்கமுடியவில்லை!
பாஷையின்றி வளர்ந்த - காதல்
ஆசையையும் வெறுக்கமுடியவில்லை!!

உண்மைக்காதல்!

வேரில்லாக் காதல்
வேறுவழி நுழையாமல்
விழிவழி நுழைந்து
வேருள்ள இதயத்தை
வேரோடு சாய்ப்பது உண்மை! - பின்னர்
வேரூன்றி நிற்பதும் உண்மை! - இதனை
வேறாக நினைப்பது மடமை!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 11-02-2006

மூதாட்டி!

அன்பெனும் உணர்வில்
உறைந்து கிடக்கிறேன்
நான்!

ஓர்நாள்
அன்பெனும் உணர்வின்வழியே
அமைதியாய் நடந்தேன்!
அன்பின் எல்லையை
அடைந்தேன்!

அங்கொரு மூதாட்டி
அமைதியாய் அமர்ந்திருந்தாள்!

அவள் பெயரைக் கேட்டேன்!

'தெரசா' என்றாள்!!

என்னைவிட...

என்னைவிட உன்மேல்
அன்பாய் இருக்கும்
ஆணொருவன் உனக்கு
கணவனாய்க் கிடைத்துவிட்டால்
யார் அதிகமாய் மகிழ்வார்கள்
என்னைவிட...

இறைவன்!

உலகில் உள்ள
உயிர்களையெல்லாம்
உன்னதமாய் படைத்தவன்
இறைவன்!

ஏழைக்காக
இரங்கும் குணத்தை
இயற்கையாய் படைத்தவன்
இறைவன்!

மண்ணிலுள்ள
மக்களையெல்லாம்
மகனாய்ப் பார்ப்பவன்
இறைவன்!

காக்கைக்கூட்டில்
குயில்க்குஞ்சு வாழும்
கருணையைக் கூறியவன்
இறைவன்!

உருவத்தை மறந்து
உள்ளத்தை நினைக்க - உன்னை
உருவாக்கி விட்டவன்
இறைவன்!

அன்பின் எல்லையில்
அமைதியாய் அமர்ந்து
உண்மையாய் வாழ்பவன்
இறைவன்!

கண்ணீரில் வாழ்ந்து
கவலையை மறந்து - எனைக்
கண்போல்காத்த
என் அம்மா தானே
இறைவன்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 06-11-2006

இதற்குப்பெயர்தான்...

உன்னைக்கடந்து போகையிலே
எனக்குள் நேர்கிறது சுனாமி!

இதற்குப் பெயர்தான்
காதலோ...

சொல்லமுடியாக் காதல்!

(அன்று 2005, ஜனவரி 13 (வியாழன்) அல்லது 14 (வெள்ளி). அடுத்த சில நாட்களில் தமிழர் திருநாள். அதற்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மாட்டுப் பொங்கல் அன்றுதான் அவள் பிறந்தாள். அந்த புகைவண்டி நிலையத்தில் அவளும் அவள் தோழியும் நின்று கொண்டிருந்தனர். அவளுடைய தோழி எனக்கும் தோழிதான். என் காதலியிடம் நான் ஏற்கனவே எழுதிய 'தமிழர் திருநாள்' என்ற சிறு கவிதையை சொன்னேன். உடனே அவள் 'சுரேஷ், நீ பெரிய கவிஞனாயிட்ட' என்று வெட்கம் கலந்த புன்னகையில் சொன்னாள். 'உன்னை காதலித்த பிறகுதான் நான் கவிஞனானேன்' என்று அவளிடம் சொல்ல வாயெடுத்தேன். சொல்ல முடியாமல் போனது. அந்த நிமிடத்தில் தோன்றிய கவிதை தான் இது. என் தேவதையின் முகத்தைப் பார்த்தேன். அந்த அழகிய முகத்தில் இடது கன்னத்தில் ஒரு பரு இருந்தது. 'இது என்ன?' என்ற படி அந்த பருவை தொடுவதற்காக கை விரலை நீட்டினேன். அவள் வெட்கப்பட்டு பின்னால் நகர்ந்து கொண்டிருந்தாள். 'எதிரில் நிற்பது என் மனைவி' என்ற நினைவிலேயே அவ்வாறு செய்தேன். அவளும் 'என்ன சுரேஷ் இது?' என்றபடி வெட்கப்பட்டாள். அப்போது தான் நாங்கள் நிற்பது புகைவண்டி நிலையத்திற்கு செல்லும் சாலையோரம்' என்ற நினைவு வந்து கைவிரலை சுருக்கிக் கொண்டேன். அருகில் நின்று கொண்டிருந்த எங்களின் தோழி சிரித்துக் கொண்டிருந்தாள்.)

கள்ளங்கபடமற்ற
கள்ளியொருத்தி நிற்பதைப் பார்த்து - நான்
மெல்லச் சிரித்துவிட்டு - காதலைச்
சொல்ல வாயெடுத்ததும்
நில்லாமல் வந்த வார்த்தை
வஞ்சியவள் வதனம் பார்த்ததும்
வரமாட்டேன் என்றது!!

ஏழைகளின்எதிர்காலம்?

எண்ணெய் பார்த்திராத கேசத்துடன்
எண்ணிலடங்கா சோகத்துடன்
உதிரம் உதிர உழைத்தும்...
வியர்வை வழிய உழைத்தும்...
கேள்விக்குறியாய் முதுகு வளைந்தும்...
இன்னமும் ஒருவேளை உணவின்றி
தண்ணீரின்றி கண்ணீருடன்...
நித்தமும் வாழும் ஏழைகளின்
விழிகள்வழி தெரியும்
எதிர்காலம் கேள்விக்குறிதானோ?

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 05-06-2006

2. வெற்றிநடை - 01-01-2013

3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2012