Saturday, June 28, 2014

தாய்ப்பாசம்

கடந்த 15-12-2012 வாரத்திற்கான கல்கி வார இதழில் ஒரு பெண் ஒரு பச்சிளங்குழந்தையைத் தன் காலில் வைத்துக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த படத்திற்கு ஒரு குட்டிக் கதை எழுதி அனுப்பச் சொல்லியிருந்தனர். அதற்கு நான் எழுதிய கதை.


அவள் படித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்டவள். ஏழ்மையோடு வாழ்க்கையில் அதிகமாகப் போராடினாள். அவளுடைய கணவன் ஊதாரியாகத் திரிந்தான். இவள் குடும்ப பாரம் சுமந்தாள். பெற்ற தாயையும் தந்தையையும் மாமா அத்தையையும் அன்பாகக் கவனித்துக் கொண்டாள்.
நல்லபடியாய்த் தேர்வு எழுதினாள். படிப்பையும் முடித்தாள். நல்ல மதிப்பெண்கள் பெற்றாள். ஆசிரியர்த் தேர்வாணையம் சார்பில் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக நியமனம் ஆகியும் விட்டால். பெண்ணின் மனவலிமையையும் நிரூபித்து விட்டாள்.
அதற்கிடையில் தாய்மையடையும் வலியையும் பொறுத்துக் கொண்டு அவளின் வலிமையையும் தியாகமும் அளப்பரியது.
இன்றும் அவள் தன் குழந்தையைத் தன் அம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு பள்ளிக்குக் கிளம்பினாள்.
அக்குழந்தையின் அம்மம்மா குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறாள். மாலையில் பேருந்தில் பயணித்து வீடுவந்து சேரும் அவளின் தாய்மை தன் குழந்தையைக் கொஞ்ச அப்பேருந்தைவிட வேகமாய் விரைந்து கொண்டிருந்தது. 

ஜோடிக்கிளிகள்

அழகிய பூங்கா அது. மரக்கிளைகளில் பற்பல ஜோடிக்கிளிகள் கிரீச் கிரீச் சத்தத்தோடு பேசிச் சிரித்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன. மரநிழலில் ஒரு ஜோடிக்கிளி ஒருவரையொருவர் கொஞ்சிக் கொண்டிருந்தது. அந்த ஜோடிக்கிளியின் பெயர் அறிவழகன் – நிலா. கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வரும் ஜோடிகள். தங்கள் காதலை வளர்த்தது இந்தப் பூங்காவில் தான். இரண்டு பேரும் வேறு வேறு சாதியில் பிறந்தவர்கள்.

இன்றும் வழக்கம்போல் அதே இடத்தில் அதே மரத்தின் நிழலில் ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்தபடி ஒருவர் நகத்தை ஒருவர் கடித்தபடி ஒருவரை ஒருவர் கொஞ்சியபடி காதலில் மூழ்கிக் கிடந்தனர்.
‘இன்னும் எத்தன நாளைக்குத்தான் நாம ரெண்டு பேரும் இப்டியே இருக்கிறது?’ என்றான்.

‘என்னடா பண்றது? கூடிய சீக்கிரம் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். அப்றம் இப்ப இருக்கிறது மாதிரியே எப்பவுமே பிரியாம வாழலாம்’ என்றபடி தன்மடியில் படுத்துக் கிடந்த அறிவழகனின் தலையைக் கோதிவிட்டபடியே சொன்னாள்.

அந்த மென்மையான ஸ்பரிச உணர்வும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலும் நேரம் மறந்து காலம் மறந்து இருக்கும் இடம் மறந்து இலயித்துக் கிடக்கச் சொன்னது.
நிமிர்ந்து பார்த்தாள் நிலா. மெல்ல மெல்ல வானில் மேலெழும்பிக் கொண்டிருந்த வான்நிலா பூமியில் உள்ள நிலாவைப் பார்த்து வியந்தது. வெட்கத்தில் மேகக் கூட்டங்களுக்கிடையே ஓடி ஒளிந்தது.

நிலா திடுக்கிட்டு எழுந்தாள். தன் மடியில் கிடந்த அவனை தட்டி எழுப்பினாள். ‘டே அறிவு, எழுந்திருடா, இருட்டிருச்சு’ என்றபடியே பதறினாள். ‘ஆம் நிலா’ என்றபடியே அவளின் தலைகோதிவிட்டு நெற்றியில் ஒரு முத்தமிட்டான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு ‘நான் கேளம்புறேண்டா’ என்றபடி அவனிடம் விடைபெற்றுக் கொண்டு வேகமாக வீடு நோக்கி நடந்தாள். அவனும் தன் வீடு நோக்கி நடந்தான்.
வீட்டிற்குள் நுழைந்தாள் நிலா. அவளின் அப்பா கேட்டார்

‘நிலா, எங்க போய்ட்டு வர்ற?’.

‘தோழி வீட்டுக்கு போய்ட்டு வர்றேன் ப்பா’.

‘தோழி வீட்டுக்கா? இல்ல காதலனோடு கொஞ்சிக் குலவீட்டு வர்றியா?’

நிலாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘அப்பாவுக்கு எப்படித் தெரியும்?’ மனதிற்குள்ளேயே தீவிரமாக யோசித்தாள்.
‘எனக்கு எப்டித் தெரியும் னு யோசிக்கிறியா?’ என்றபடியே ‘அந்த வழியே போனபோது நானும் உன்னையும் ஒரு பையனையும் பார்த்தேனே’ என்று உண்மையை ஆவேசமாகக் கத்தினார் அவர்.

‘அப்பா, அது... அதுவந்துப்பா...’ என்று இழுத்தபடியே நிறுத்தினாள்.

‘நானே எப்படியும் அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும்’ என நினைத்தவள் அவரே கேட்டவுடன் சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்தாள்.

‘அப்பா, நான் அந்த அறிவழகனைத் தான் காதலிக்கிறேன் ப்பா. அவன் ரொம்ப நல்லவன் ப்பா. என் மேல் ரொம்ப பாசம் வச்சிருக்கான் ப்பா’ என்றபடி பக்கத்தில் வந்து அவரின் நாடிபிடித்து ‘என் செல்ல அப்பால்ல’ என்றபடியே கொஞ்சினாள்.

அவர் அமைதியாக இருந்தார். நிமிர்ந்து அவள் முகம் பார்த்தார். சிரித்தபடி கண்ணீர் விட்டார். ‘உன் விருப்பப்படியே நடக்கட்டும் ம்மா. என் மகளைப் பற்றி எனக்குத்தான் நன்றாகத் தெரியுமே’. என்றபடி கர்வப்பட்டார். அவளின் உச்சி முகர்ந்தார்.

அவள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.


அறிவழகன் ஒரு நல்ல எழுத்தாளன். அவனின் எழுத்தையும் அவனின் சிந்தனைகளையும் நல்ல குணத்தையும் பார்த்துப் பழகிக் காதலிக்கத் தொடங்கினாள் நிலா. அவனும் காதலால் ஜாதிகள் அடியோடு அற்றுப்போகும் சமுதாய மலர்ச்சி பெறும் என உறுதியாக நம்பினான்.

அறிவழனும் அம்மாவிடம் பேசத் துவங்கினான். ‘அம்மா, அம்மா, அது... அதுவந்து...’ என்றபடி நிறுத்தினான்.
‘என்னடா மென்னு முழுங்குற? ம்... சொல்லு’ என்றபடி அவன் முகம் பார்த்து நின்றாள்.

‘நான் நிலா ன்னு ஒரு பொண்ணை விரும்புறே ம்மா. அவளையே கல்யாணம் செஞ்சுக்கிறேன் ம்மா’ என்றபடி அவள் அருகில் வந்தான்.

‘நானே உனக்கு ஒரு நல்ல பொண்ணாப் பார்க்கணும் னு நெனச்சேன். எனக்கு வேல வைக்காம நீயே பார்த்துட்ட போல. சந்தோசம் ப்பா’ என்றாள்.

அறிவழகன் எதிர்பார்த்த பதிலைத்தான் அவள் சொன்னாள்.

மகிழ்ச்சியில் திளைத்தான் அவன்.

நல்லபடியாய்த் திருமணம் நடந்தேறியது. இன்பமான இல்லறம். மகிழ்ச்சியான வாழ்க்கை. அன்பான துறுதுறுவென ஆண் குழந்தையும் பிறந்தது.

குழந்தையையும் நல்லபடியாக அன்புடன் வளர்த்தார்கள் நிலாவும் அறிவழகனும்.

குழந்தையை பள்ளியில் சேர்க்க முதல்முறையாக அக்குழந்தைக்கு சாதிச்சான்றிதழ் வாங்க வேண்டியிருந்தது.

தன்னுடைய ஜாதியே தன் குழந்தையின் ஜாதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. திடுக்கிட்டான். ‘ஜாதியால் ஜாதி ஒழியும்’ என்ற அவனுடைய முழுமையான நம்பிக்கை உடைந்தது. ‘காதலால் ஒரு ஜாதி இன்னொரு ஜாதியைத்தான் அழிக்கும்.’ ஆக மொத்தத்தில் மனித மனங்கள் ஒன்றிணைந்து மனித நேயத்தைப் போற்றாத வரை ஜாதிகள் புரையோடிப் போய் மனித மனங்களில் கொலுவீற்றிருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கிப் போனான்.

அவன் யோசனை தொடர்ந்தது.

ஊர் நூலகம்

வழக்கம்போல் சோம்பல் முறித்து தூக்கத்திலிருந்து எழுந்தான் சுப்பையா. அவனுடைய அப்பா கருப்பன், அம்மா இராக்கு. இவர்கள் இருவருக்கும் ஒரே மகன் சுப்பையா. வீடென்று எதுவுமே இல்லை. குடிசையில் தான் வாழ்க்கை. விவசாயம் தான் இவர்களுக்கு ஒரு வேளையாவது சோறு போடுகிறது. மணியை பார்த்தான். மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

கருப்பன் வெளியிலிருந்து கத்திக்கொண்டிருப்பது அப்போது தான் இவனுக்குக் கேட்டது. ‘பெரிய்ய்ய பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. இவ்ளோ நேரமா காட்டுக்கத்தாக் கத்திக்கிட்டு இருக்கேன். துரை இப்பதான் எழுந்திருக்கிகளோ” என்றபடி...
“இதோ கெளம்பிட்டேன் ப்பா” என்றபடி பல்லைத் துலக்கியும் துலக்காமலும் தலை வாரியும் வாராமலும் சட்டையையும் கால்சட்டையையும் மாட்டியும் மாட்டாமலும் விழுந்தடித்துக் கொண்டு குடிசையை விட்டு வெளியே வந்து மிதிவண்டியை மிதிக்க எத்தனித்தான்.

“சாப்டாமப் போனா வயித்துக்கு என்னத்துக்கு ஆகுறது ராசா” என்றபடி பழைய சாதத்தைக் கட்டியெடுத்து கையிலேந்தியபடி வெளியே வந்தாள் இராக்கு. மகனின் தலையைக் கோதியபடி நெற்றியில் வாஞ்சையோடு முத்தமிட்டாள். சாதத்தைத் தந்துவிட்டு “பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்கா நேரத்துக்கு கெளம்பணும் ராசா. ஒழுங்காப் படிக்கணும் ராசா” என்றாள்.

“சரிம்மா” என்றபடி தன்தாய்க்கு ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு மிதிவண்டியை அழுத்தியபடி சிட்டாய்ப் பறந்தான்.

மனைவியைப் பார்த்து “இப்டியே உன் மவனைக் கொஞ்சிக்கிட்டே இருந்தன்னா பிள்ளை சோம்பேறியா மாறிருவாண்டி புள்ள” என்றான் கருப்பன்.

“கண்ணுக்கு இலட்சணமா ஒரே ஒரு புள்ளைய பெத்து வளர்க்குறோம். புள்ள அம்பூட்டுத் தூரத்துல உள்ள பள்ளிக்கூடத்துல போய் படிக்கப் போவுது. சாயுங்காலம் வரும்வரை புள்ளையப் பிரிஞ்சு நான் எப்டி இருக்கப் போறேனோ?” என்றபடி குடிசைக்குள் போனாள் இராக்கு.

“நல்ல ஆத்தா, நல்ல புள்ள” என்று மனதிற்குள் மகிழ்ந்தவாறு முனகியபடி வயக்காட்டுக்குச் சென்றான்.

சுப்பையா சற்று காலதாமதமாகவே கல்லூரிக்குள் நுழைந்தான். மிதிவண்டியை நிறுத்திவிட்டு வேகமாக வகுப்பறையை நோக்கி ஓடினான். நல்லவேளை வகுப்பிற்கு ஆசிரியர் இன்னும் வரவில்லை. அவன் இருக்கையில் அமர்ந்தான்.

சுப்பையா பொதுவாகவே அமைதியான குணம் கொண்டவன். தன் குடும்பச் சூழலையும் தன் தாய்தந்தையர் படும் இன்னல்களையும் அவர்கள் தன்மீது வைத்திருக்கும் பாசத்தையும் நன்கு உணர்ந்தவன். படிப்பில் நல்ல மாணவனாகவும் ஒழுக்கத்தில் சிறந்தவனாகவும் விளங்கினான்.

பேராசிரியர் உள்ளே நுழைந்தார். அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பாடம் நடத்தத் துவங்கினார்.

அவனும் பாடத்தைக் கவனிக்கத் துவங்கினான்.

இவனுடைய அமைதியான சுவாபமும் படிப்பில் காட்டும் அக்கறையும் அந்த வகுப்பில் படிக்கும் வசந்தி என்ற பெண்ணுக்கு இவனோடு நட்போடு பழக வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது.

தனக்கு வேண்டிய சந்தேகங்களையெல்லாம் சுப்பையாவிடமே கேட்டுத் தெளிந்தாள் வசந்தி.

அவனுடைய மென்மையான குணம் அவளுக்கு காதல் உணர்வைத் தூண்டியது. தன்னுடைய காதலைக் காலங்கடத்தாமல் உடனே அவனிடம் தெரியப்படுத்தினாள்.

சுப்பையா அவளின் காதலைப் புரிந்துகொண்டாலும் தன் குடும்பச்சூழல் கருதி அவளிடம் எதுவும் சொல்லாமல் நகர்ந்தான்.

கல்லூரி ஓய்வுநேரம் முழுவதையும் அவன் நூலகத்திலேயே செலவழித்தான். பல நல்ல நூல்களையும் எடுத்துப் படித்தான். நூல்கள் படிக்கும் ஆர்வம இவனைத் தொற்றிக் கொண்டது.

அவன் வசிப்பது ஒரு சிற்றூரில். நூலகம், மருத்துவம் தொடங்கி அனைத்திற்குமே பல மைல் கடந்து நடந்தே வரவேண்டிய சூழல். பேருந்தும் எப்போதாவதுதான்.

வசந்தி இவனைச் சுற்றிச் சுற்றி வருவதையும் இவன் கவனித்து மிகுந்த வேதனையடைந்தான். அவளை அழைத்துத் தன்னுடைய நிலையை உணர்த்தினான். “உன் காதலை ஏற்றுக்கொண்டேன். ஆனால் காதலிக்கும் சூழலில் நான் இல்லை” என்று சொல்லிவிட்டு அவள் முகம்பார்த்தான். அவளின் முகம் மெல்ல மலரத் துவங்கியது.

மேலும் அவனே தொடர்ந்தான் “இங்க பாரு வசந்தி. எனக்குன்னு சில முக்கியமான கடமைகள் இருக்கு. நம்ம கல்லூரி நூலகத்துல இருக்கும் பல நூல்கள படிச்சபிறகு தான் என்னுடைய ஊரைப் பத்தியும் ஊர் மக்களைப் பத்தியும் கவனம் செலுத்தத் துவங்கியுருக்கேன். எங்க ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரணும். அதுக்கு முன்னாடி அறிவை வளர்க்கும் ஒரு நூலகத்தை என் ஊரில் நான் கட்டவேண்டும்.” என்று தன் பேச்சை நிறுத்தியபடி அவள் முகம் பார்த்தான். “உன்னைப் போன்றவனைக் காதலித்தது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குடா” என்றபடி அவன் தோள்மீது சாய்ந்தாள். “எங்கே வசந்தி தன்னைப் புரிந்துகொள்ளாமல்ப் போய்விடுவாளோ” என்று மனதிற்குள் பதறியபடி இருந்தவனை அவளின் வார்த்தைகள் அவனுக்குள் குதூகலிப்பை ஏற்படுத்தியது. அவனும் அவளை தன்மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தனர் சுப்பையாவும் வசந்தியும். இருந்தாலும் தன்னுடைய ஊரில் ஒரு நூலகம் கட்டவேண்டும் இன்னும் மருத்துவமனை, பேருந்துகள் என ஊரின், மக்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைப் பற்றிய சிந்தனை அவனை ஆட்டிப்படைத்தது.

தன்னுடைய மனநிலையை உடனே மனைவி வசந்தியிடம் பக்குவமாய் எடுத்துச் சொன்னான். அவளும் “உடனே ஊருக்குக் கிளம்புவோம்” என்றபடி இருவரும் அவனின் சிற்றூருக்குப் பயணமானர்.

நூலகம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசாங்கத்தின் மூலமாகவும் தன்னுடைய சொந்தச் செலவின்மூலமாகவும் நூலகம் கட்டி முடிக்கப்பட்டது.

அன்று திறப்பு விழா...

மாவட்ட ஆட்சியர் உட்பட மற்ற ஊர்ப்பெரியவர்கள் அனைவரின் வேண்டுகோளை ஏற்று சுப்பையாவும் வசந்தியும் நூலகத்தைத் திறந்து வைத்தனர்.

நூலகம் கம்பீரமாய் அவர்கள் அனைவரையும் வரவேற்றது.

அந்தக் கூட்டத்தினர் முன்னிலையில் பேச ஆரம்பித்தான் சுப்பையா “நம்முடைய ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அரசாங்க உதவியோடு முழுவீச்சோடும் செய்யவேண்டும். அதற்காக நான் என் வேலையை விட்டு விட்டு இங்கே வந்து விவசாயம் பார்த்துக் கொண்டு நம்மூர் மக்களுக்கான உதவிகளைச் செய்யப் போகிறேன்” என்றபோது கருப்பனும் இராக்கும் ஊர் மக்களும் ஊரின் மேல் இவ்வளவு மரியாதையையும் பற்றியும் வைத்திருக்கும் அவனை ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் பார்த்தது.

அவனும் அவனுடைய மனைவி வசந்தியும் வேலையை இராஜினாமா செய்யக் கிளம்பினர்.

இவர்கள் நால்வரையும் எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தது அவனின் குடிசை.

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

முகுந்தன் அன்று வழக்கம்போல் அலுவலகம் முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்தான். அவனின் நினைவுகளில் எப்போதும் குடிகொண்டிருப்பவள் கயல்விழி. இப்போதும் அவளை நினைத்துக்கொண்டே பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறான். சாலையோரம் ஏதோ கூட்டம். பேருந்தை விட்டு இறங்கி ஓடுகிறான். கூட்டத்தை விலக்கிக் கொண்டு என்னவெனப் பார்க்க முனைகிறான். விபத்தொன்று நடந்திருக்கிறது. அங்கு ஒரு இளம்பெண் இரத்தமொழுக மயங்கிக் கிடக்கிறாள். அருகில் சென்று உற்றுப்பார்க்கிறான். அந்தப் பெண் வேறுயாருமல்ல கயல்விழி தான்.

அதிர்ச்சியடைந்தான் முகுந்தன். உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறான் ‘இத்தனை வருடங்கழித்து உன்னை நான் இந்தக் கோலத்திலா பார்ப்பது?’ என மனம் வெதும்பியபடி.

அவளுக்கு இரத்தம் தேவைப்படவே தன்னுடைய இரத்தத்தைக் கொடுத்தான். பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டான். கயல்விழி உடல்தேறினாள். மெல்லக் கண்விழித்துப் பார்த்தாள். எதிரே முகுந்தன். அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது. பழைய நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தாள்.

கல்லூரி நாட்களில் முகுந்தனும் கயல்விழியும் அறிமுகம் ஆனார்கள். ஆண்பெண் வித்தியாசம் பார்க்காமல் பழகிய நட்பு நாளாக நாளாக மிகவும் நெருக்கமானது.

முகுந்தனின் மனதில் அவளைத் தற்காலிகமாய்க் கூட பிரியமுடியா வருத்தம் ஏக்கம். தவித்தான் அவன். காதலை உணர்ந்தான். அவளிடம் தெரியப்படுத்தினான்.

அவளோ எப்போதும்போல இயல்பாய் பதிலுரைத்தாள் ‘எனக்கு அப்படியொரு எண்ணமில்லை’ என்று. அன்று அவன் மௌனமாய் வீடு திரும்பினான். புழுவாய்த் துடித்தான்.

ஆனாலும் கயல்விழி அவனிடம் எப்போதும்போலவே நட்போடு பழகி வந்தாள். அவளின் அருகாமை முகுந்தனுக்கு சற்று ஆறுதலைத் தந்தது.

கல்லூரியின் கடைசிநாள். அனைவரும் விடைபெற்றபடி பிரிந்து சென்றனர். முகுந்தன் அமைதியாய் அமர்ந்திருந்தான். கயல்விழி மிகவும் இயல்பாய் முகுந்தனிடம் விடைபெற்றுச் சென்றாள். அவனின் முகத்தில் படர்ந்திருந்த சோகத்தை அவள் கவனிக்கத் தவறவில்லை.

நான்காண்டுகள் ஓடிவிட்டன. இன்று, கயல்விழி விபத்தில் அடிபட்டு இரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்தாள்.

நினைவுகள் அவளின் உடலுக்குள் புகுந்தது. மருத்துவமனையில் படுக்கையில் கிடந்ததை உணர்ந்தாள். படுக்கையை விட்டு எழ முயற்சித்தாள். வலியை உணர்ந்தாள். முகுந்தன் ஓடிவந்து பார்த்தான். கண்ணீர் வந்தது அவன் கண்களில் இருந்து ஆனந்தத்தில்.

கயல்விழி அப்போதுதான் உணர ஆரம்பித்தாள் ‘படிக்கும்போதே காதலிப்பது தவறு. ஒழுக்கக்கேடானது.’ என்ற இந்த சமுதாயத்தின் போலியான ஒழுக்கமதிப்பிட்டால்தான் தன்மனதின்முன் ஒரு சுவரை எழுப்பிக்கொண்டு நான்காண்டுகளுக்குமுன் முகுந்தனின் காதலை ஏற்கமறுத்ததை.

கயல்விழி வலியையும் பொறுத்துக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தாள். முகுந்தன் அவளைத் தாங்கிப்பிடிக்க ஓடிவந்தான். கயல்விழி அவனை காதலோடு இரசிக்கத் துவங்கினாள். அவளின் தலைகோதி விட்டபடி நெற்றியில் முத்தமொன்று கொடுத்தான் முகுந்தன்.

கயல்விழியின் நினைவுகளில் ஒலித்தது மகாகவியின் பாடல்.

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

இச்சிறுகதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. மகாகவி - 01-10-2012

2. விதை2விருட்சம் (இணைய இதழ்) - 11-09-2012

யாழ்ப்பாணத்து தேவதை


“என்னடா எப்டி டா இருக்க?” என்றபடி அவளிடம் பேச ஆரம்பித்தான் சரவணன்.

“நான் டா இல்ல. டி. நான் ஆண் இல்ல. பெண்.” என்று சிணுங்கியபடி அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் அகிலா.

“எனக்கு தெரியும். தெரிந்துதான் அழைத்தேன். உன்னை செல்லமாக அழைத்தேன்.” என்று தன் மனதில் உள்ளவற்றை அப்படியே ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படுத்தினான்.

தான் வெட்கத்தில் நாணிச் சிவப்பதை குறிப்பால் அவனுக்கு உணர்த்தினாள்.

சரவணன் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கணினி மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிபவன். அவன் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி. அகிலா இளங்கலை தமிழிலக்கியம் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் உள்ள பூநகரி.

சரவணன் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுடையவன். தமிழில், ஆங்கிலத்தில் கவிதைகள், கட்டுரைகள் எழுதக் கூடியவன். இணையத்தில், குறிப்பாக முகநூலில் தான் எழுதும் கவிதைகளை பதிவு செய்பவன். அந்த தருணங்களில் அவன் அதிகமாக தன்னுடைய கவிதைகளை முகநூலில் பதிவு செய்த காலம், ஒரு பெண் தொடர்ந்து அவனுடைய கவிதைகளுக்கு விருப்பம் தெரிவித்துக் கொண்டே வந்தாள். சில வாரங்களில் சரவணனின் கணக்கின் நண்பர்கள் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து வேண்டுகோள் விடுத்திருந்தாள். அவள் பெயர் அகிலா.

இப்படி முகநூலில் தான் சரவணனும் அகிலாவும் பேசி, பழகிக் கொண்டிருந்தனர். பேசியதும் பழகியதும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதும் இருவர் மனங்களையும் மெல்ல மெல்ல இணைய வைத்தன. நெருக்கமான நண்பர்களாக மாறினார்கள். அவளுக்காக இவனும் இவனுக்காக அவளும் முகநூலிலேயே தவம் கிடக்க ஆரம்பித்தனர்.

ஒருநாள் அவன் வழக்கத்திற்கு மாறாக தாமதமாக வந்தான். கோபப்பட்டு பேசாமல் போனாள் அவள். இருவருக்கும் ஊடல் ஆரம்பமானது. இவன் அவளை திட்டுவது அவள் இவனை திட்டுவதுமாக மெல்ல மெல்ல அவர்களுக்கிடையே இருந்த நட்பு காதலாக மாறி அந்த காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.

அவன் தன் காதலை அவளிடம் எப்போது சொல்லலாம் என்று சரியான தருணத்திற்காக காத்திருந்தான். அதற்குமுன் அவளும் தன்னை காதலிக்கிறாளா என்று தெரிந்துகொள்ள ஓரிரு சோதனைகள் செய்து அவற்றின்மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தான். அதன்படி “நீ என்னிடம் பேசவில்லை. ஏன் பேசவில்லை? நீ இனிமேல் என்னிடம் பேசாதே. என் முகநூல் கணக்கிலிருந்து உன்னை நீக்கிவிட்டேன்.” என்றபடி ஒரு செய்தி அனுப்பிவிட்டு அவளை தன்னுடைய முகநூல் கணக்கிலிருந்து நீக்கினான்.

சரவணன் அனுப்பிய செய்தியை படித்துவிட்டு “டேய் லூசா நீ? ஏன் என்னை உன் கணக்கிலிருந்து நீக்கினாய்? எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருந்துச்சுடா. அதான், பேச முடியல. மறுபடியும் இப்படி செய்யாதே. எனக்கு பிடிக்காது. என்னை பழையபடி உன் முகநூலில் சேர்த்துக்கொள். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் டா.” என்று விளக்கினாள்.

சரவணனும் புரிந்துகொண்டான் அவளுக்கும் தன்மேல் காதல் இருக்கிறதென்று. இதனை அவன் உணர்ந்த அந்த சுகமான தருணத்தில் தான் எழுதிய ஒரு சந்தப்பாவகை கவிதையை அவளுக்கு அனுப்பி வைத்தான்.
அகிலா அதனை படித்துவிட்டு

கார்மேகக் கூந்தலோடு வார்த்தமுகப் பொலிவோடு
சேர்த்தெடுத்த அகிலாக மங்கை – அவளை
பார்த்தவுடன் என்னுள்ளே வார்த்தைவழிக் கவிதையாக
பூத்துவிட்டாள் எழிலான மங்கை

என்பதில் “அகிலாக மங்கை” என்பதன் பொருள் என்ன? வெனக் கேட்டாள்.

“அடிப்பாவி. இதுகூட தெரியாமல் தான் இளங்கலை தமிழிலக்கியம் படிக்கிறாயா?” என்று கேட்டான்.

“உன் அளவிற்கெல்லாம் எனக்கு தெரியாது டா. சொல்லு.” என்றாள்.

“அகில் என்றால் சந்தனம். அகிலாக மங்கை என்றால் சந்தனத்தை போன்ற குளிர்ச்சி பொருந்தியவள் என்று பொருள். உன்னை நினைத்து எழுதிய கவிதைதான்.” என்று தன் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்துகொண்டான்.

அவன் சொன்னவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டே தன் காதலை எண்ணி உளப்பூரிப்படைந்தாள். இந்த தாங்கமுடியாத மன மகிழ்வில் தன் மனங்கவர்ந்த கள்வனான அவனை பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டாள்.

“என் புகைப்படத்தை அனுப்பியிருக்கிறேன். உன் புகைப்படத்தையும் நீ அனுப்பு டா.” என்று சொன்னாள்.

தன்னுடைய புகைப்படத்தை அவளுக்கு அனுப்பி வைத்துவிட்டு “நான் அழகா இருக்கேனா டா?” என்றான்.

“இல்ல” என்று சொல்ல்விட்டு தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.

“பின்ன, நான் அழகா இல்லையா?” கேட்டான்.

“அப்படியெல்லாம் இல்ல.” என்று சொல்லிவிட்டு குதூகலமடைந்தாள். அவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருந்தாள்.

“போ. நான் அழுறேன். நான் அழகா இல்லை ன்னு நீ சொல்லிட்ட.” என்றான்.

பதட்டமடைந்தவளாய் “என்ன ஆச்சுடா பாப்பா? ஏன் அழறே? நீ அழகா இல்லை ன்னு நான் எப்போ சொன்னேன். நான் உன்னை காதலிக்கிறேன் டா.” அழுதாள்.

தன்னுடைய காதலை அவனை நேரில் சந்தித்து வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்திருந்தாள். ஆனால், இப்படி அழுதபடி தன்னுடைய காதலை அவனிடம் வெளிப்படுத்தும் வகையில் சூழல் அமையுமென அவள் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.

மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியவளாய், “இன்னும் என்மேல் கோபமா டா?” என்றாள்.

“அதெல்லாம் இல்ல ப்பா. எனக்கும் உன்மேல் காதல் உண்டு.” என்று சொல்லிவிட்டான்.

தன் மனதில் உள்ள சோகமெல்லாம் கணப்பொழுதில் மறைந்ததை உணர்ந்தாள்.

“என் புகைப்படத்தை நீ பார்த்தாயா? நான் அழகா இருக்கேனா?”

“பார்த்தேன்.”

“நான் அழகா இருக்கேனா?”

“இதற்காகத்தானே காத்திருந்தேன். என்னையே நீ பகடி செய்கிறாயா? அழ வைக்கிறாயா? இப்போது பார். உன்னை அழ வைக்கிறேன். உன்னிடம் விளையாடப் போகிறேன்.” என்றபடி “இப்படியெல்லாம் சிரிக்காதே ப்பா. யாராவது மோகினிப் பிசாசென்றே நினைத்து பயந்துவிடப் போகிறார்கள். ஹி ஹி ஹி” என்று அவளை கோபமூட்டினான்.

அவள் உடனே சட்டென்று “உன்னை எனக்கு பிடிக்கவில்லை.” என்றபடி போய்விட்டாள்.

பல நாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள் என இரண்டாண்டுகள் ஓடிப்போயின. அவள் நினைவிலேயே வாழ்ந்த சரவணன் அவளுக்கு ஒரு கவிதையெழுதி அனுப்பி வைத்தான்.

"இப்படி நீ
சிரிக்காதே.
ஐயோ...
மோகினிப்பிசாசென்றே
யாரேனும் பயந்துபோய்
மயங்கி விழுந்துவிடுவார்கள்"
என்றேன்.

"எனக்குன்னை பிடிக்கவில்லை"
என்றபடி
முகத்தை ஒரு வெட்டுவெட்டி
முறைத்தபடியே தூரம்போனாய்.

போடீ போ...
இப்படி கதைத்துக் களிக்க
உன்னைவிட்டால் எனக்கு
வேறு யாருண்டு இவ்வுலகில்...

ஆனால், அகிலாவின் வாழ்க்கை அந்த இரண்டாண்டுகளில் திசைமாறிப் போனதை அவள் வேறு யாருக்கும் சரவணக்கும் கூட சொல்லவில்லை. அவளும் அவன் அனுப்பிய கவிதையை படிக்கத் தவறவில்லை.

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக புலம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களில் அகிலாவும் ஒருத்தி. யாழ்ப்பாணம், அதனைச் சுற்றிய பகுதிகள், ஆனையிறவு, முல்லைத்தீவு, வன்னி, அதனைச் சுற்றிய காடுகள் என போரின் தாக்கத்தில் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள சரவணனை மனதில் சுமந்தபடி புலம்பெயர்ந்து கடந்த இரண்டாண்டுகளாய் தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்கிறாள்.

சரவணன் அனுப்பிய கவிதையை படித்தவுடன் தன்னுடைய சோகம் மறந்து அவனும் தன்னை நினைவில் வைத்திருப்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள். பேசலாம் என்று முடிவெடுத்தாள். ஆனால், “என்னை அன்று பகடி செய்து அழ வைத்தாயே டா. உன்னிடம் கொஞ்ச நாளைக்கு பேச மாட்டேன். நீ என்ன செய்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்” என்று தனக்குள்ளேயே அவனை செல்லமாக திட்டினாள்.

இங்கு சரவணன் அவளின் நிலை அறியாதவனாய் நியூசிலாந்தில் வாழும் தன் அண்ணன் வெங்கடேஷ்வரனிடம் தொடர்பு கொண்டு அவள் குறித்து எல்லாவற்றையும் சொல்லி அவள் எங்கிருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? என்ற விவரங்களை சேகரித்து தருமாறு வேண்டினான்.

அண்ணன் வெங்கடேஷ்வரனும் தனக்கு மிகவும் நெருக்கமான தன் உறவினர்களிடம் “நட்புறவுகள் யாரேனும் யாழ்ப்பாணம் அருகில் இருப்பின் செல்ல இருப்பின் அந்தப் பெண் பற்றி விசாரிக்க இருப்பின் உடனே விசாரியுங்கள். ஒரு சமுதாய அக்கறை உள்ள இளைஞன், எழுத்து மேலும் தமிழின் மேலும் மொத்தத்தில் இன அக்கறையும் மண் சார்ந்தப் பற்றுதலும் உள்ள ஒரு கவிஞன் உடைந்துவிடக் கூடாது என்று எதிர்ப்பார்க்கிறேன்.” என்று தன்னுடைய தம்பியை பற்றியும் அகிலாவை பற்றியும் சொல்லி உதவி கேட்டான்.

சரவணனும் அகிலா தன்னிடம் பேசுவாள் என்றே காத்திருந்து காத்திருந்து கவலைப்படத் துவங்கினான். தன் அண்ணன் வெங்கடேஷ்வரனிடம் அகிலாவின் முகநூல் முகவரியை கொடுத்து “அவளிடம் நீ பேசிபார் அண்ணா. அவள் என்மீது கோபமாக இருக்கிறாள் போல. அதனால் தான் என்னிடம் பேசவில்லை. உன்னிடம் நிச்சயம் அவள் பேசுவாள்.” என்று சொன்னதன் பேரில் வெங்கடேஷ்வரனும் அகிலாவிடம் “என்னடா எப்டி டா இருக்க?” என்று ஆரம்பித்திருக்கிறான்.

அகிலாவும் “என்னடா சரவணன் நம்மிடம் முதன்முதலில் கேட்டது போலவே இவரும் நம்மிடம் கேட்கிறாரே” என்றபடி “நான் ஆண் இல்லை. பெண்.” என்று சரவணனிடம் சொன்ன அதே வார்த்தைகளை சொன்னாள்.

வெங்கடேஷ்வரன் அவளிடம் நடந்த எல்லாவற்றையும் விளக்கி “சரவணன் என் தம்பி தான். அவனை நீ உண்மையாகவே நேசிக்கிறாயா? அவன் உன்னை நினைத்து மிகவும் கவலையாக உள்ளான்.” என்று கேட்டான்.

அகிலாவும் “சரவணன் என்னை மறக்க மாட்டான் என எனக்கு தெரியும். அவனை என் கணவனாக நான் அன்றே தேர்வு செய்தது தவறில்லை என நான் உணர்கிறேன். நான் அவன் மனதை மிகவும் காயப்படுத்தி விட்டேன். அவனிடம் சொல்லுங்கள். அடுத்த வாரம் அவனை சந்திப்பதற்காக நான் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வருவேன். அங்கு வந்தபின் அவன் முகம் பார்த்து அவனிடம் என் காதலை சொல்லுவேன். என்னை அவன் ஏற்கனவே பகடி செய்து என்னை அழ வைத்தான். அதற்கான தண்டனையாக நான் சென்னைக்கு வரும்வரை அவனிடம் பேச மாட்டேன்.” என்று பகிர்ந்து கொண்டாள்.

உண்மையை தன் அண்ணன் மூலம் தெரிந்துகொண்ட சரவணன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

கிண்டி தாண்டி மீனம்பாக்கம் விமானநிலையம் செல்ல மின்சார இரயிலில் இன்று சரவணன் குதூகலமாய் கற்பனையில் மிதந்தபடி சென்றுகொண்டிருக்கிறான்.

அவளை ஆரத்தழுவியபடி ஆனந்தக் கண்ணீரில் மிதந்துகொண்டிருந்தான்.

சரவணனின் மனநிலை உணர்ந்ததுபோல் அந்த மின்சார இரயிலில் அவன் அருகில் நின்று கொண்டிருந்தவரின் அலைபேசி ஒலித்தது.

யாழ்ப்பாண பொண்ணு
யாழ் மீட்டும் கண்ணு

என்ற திரைப்படப் பாடலை...

Friday, June 27, 2014

மழையுதிர்காலம்

தலைமுடி உதிர்வதுபோல்
இலைகளை உதிர்த்துவிட்டு
மொட்டையாய் நின்ற மரம்
துளிர்த்துச் சிரிக்கிறது
மழைவரவால்...

குடையில்லா மனிதர்கள்
தொப்பலாய் நனைந்தபடி
ஓடுகின்றனர்
நிற்க இடந்தேடி...

வெயிலிலும் ஏழைகளுக்குக்
குடைகளாய்
மழையிலும் ஏழைகளுக்குக்
குடைகளாய்
மரங்கள்

பிரிவுத்துயர் தாங்காமல்
கண்களில் மழைவரும்போது
குளிர்காற்றால் கன்னம்வருடி
கைகுலுக்கிவிட்டுப் போகிறது
குளிர்தென்றல்

ஊரில் பலவருடங்களாய்
நின்ற பஞ்சாயத்து ஆலமரம்
ஏதோவொரு காரணத்தால்
தலையில்லா முண்டமாக்கப்பட
அதன் நம்பிக்கைக்குப் பரிசாய்
பெய்த மழையில்
பட்டமரம்
துளிர்த்துச்சிரிக்கிறது

ஒட்டிய வயிறுடன்
வானம்பார்த்து விதைத்த
விவசாயியின்
வயிற்றில் பால்வார்த்து
தலைகவிழ்த்துப்
பூமியைப் பார்த்து
ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறது
அந்த வானம்!!

இதழ்களில் தேன்வைத்து
வண்டுகளின் வரவுக்காக
காத்திருக்கின்றன
பூக்கள்

உடலெங்கும்
மழைத்துளி முத்துகளை
அணிந்தபடி
மணக்கோலம் பூண்டு நிற்கின்றன
மரங்கள்

சோகத்தின்சின்னமான
இலையுதிர்காலத்தை மாற்றி
துவங்கிவிட்டது
மழையுதிர்காலம்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1.  மகாகவி - 01-10-2012

தமிழர் எழுச்சி மாத இதழ்கள் தற்போது மின்னூல்களாக... (E Books)



தமிழர் எழுச்சி மாத இதழ்கள் தற்போது மின்னூல்களாகவும் (E Books) வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

தமிழர் எழுச்சி ஜூன் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_2960.html

தமிழர் எழுச்சி மே ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_4170.html

தமிழர் எழுச்சி ஏப்ரல் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_1222.html

தமிழர் எழுச்சி மார்ச் ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_27.html

தமிழர் எழுச்சி பிப்ரவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_26.html

தமிழர் எழுச்சி ஜனவரி ௨௦௧௪ (2014) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_708.html

தமிழர் எழுச்சி டிசம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014_25.html

தமிழர் எழுச்சி நவம்பர் ௨௦௧௩ (2013) மாத இதழ் - http://thamizharezhuchchi.blogspot.com/2014/06/2014.html

தமிழர் எழுச்சி மாத இதழுக்கான இணையதளம் - http://thamizharezhuchchi.blogspot.in/

Monday, June 16, 2014

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

நன்றி: முகநூல் (Facebook)





இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.

நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன" என்று ஆரம்பித்தார் அவர்.

குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக...

‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.

அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்.

Thursday, June 12, 2014

மின்னஞ்சலை (E-mail) கண்டுபிடித்த விஞ்ஞானி சிவா அய்யாதுரை சொல்கிறார் "தனித்தமிழ்நாடு இயலும்"



இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பிருந்து தனித்தமிழ்நாடு குறித்து எழுதி வருகிறேன். என்னுடைய தமிழின்மீது கொண்ட வலிமையான எண்ணத்திற்கு எனக்கு கிடைத்த பரிசு கீழே.

கடந்த ௨௦௧௩, என் பிறந்த நாளிற்காய் வாழ்த்து தெரிவித்திருந்தார் கூகிள் குழுமத்திலிருந்து ஒரு அன்பர்.

On Tuesday, August 20, 2013 11:45:57 AM UTC-7, உதயன் மு wrote:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் முனைவென்றி நா. சுரேஷ்குமார்

பெரிய கவிஞராக முனைவென்றியார் வளர வாழ்த்துக்கள்.
அவரது ஈழம் பற்றிய கவிதைகள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அன்புடன்,
நா. கணேசன்

http://nganesan.blogspot.com/

https://groups.google.com/forum/#!topic/vallamai/2sh4Hq4uKKw

இதனைப் பார்த்தவுடன் வித்யாசாகர் அண்ணா குவைத்திலிருந்து உடனே அலைபேசி ஊடாக எனக்கு அழைத்து, பெரிய வாழ்த்து மடலொன்றை வாசித்தார்.

தமிழ் தேசியம் குறித்தும் இந்திய தேசிய எதிர்ப்பு குறித்தும் நான் எழுதியபோது பலரால் நான் பரிகாசிக்கப் பட்டேன். பலர் என்னை பார்த்து சிரித்தனர். சிலர் பாராட்டினர். பலர் இதெல்லாம் வேலைக்காத கற்பனை என்றனர். இப்போது மின்னஞ்சலை (E-mail) கண்டுபிடித்த விஞ்ஞானி சிவா அய்யாதுரை அவர்களே சொல்கிறார். இப்போது என்னை பரிகசித்தவர்கள் எல்லாம் இன்று அவர்கள் முகத்தை எங்கு வைத்துக் கொள்ளப் போகின்றனர்?

தற்போதைய கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நிலப்பரப்புகள்:

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு

தற்போதைய ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு

தற்போதைய கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய நிலப்பரப்புகள்:

பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி (குடகு உட்பட), கோலார் தங்கவயல்.

இவற்றையே ஐயா சிவா அய்யாதுரை வலியுறுத்துகிறார். தோழர்களே தங்களால் எத்தனை பேருக்கு இந்த மின்னஞ்சலை கொண்டு செல்ல முடியுமோ செல்லுங்கள். பிரபஞ்சத் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்றே இரண்டாம் முறையாக பதிவிடுகிறேன்.

ஐயா சிவா அய்யாதுரை அவர்களின் நேர்காணலை முழுமையாக படியுங்கள். http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/06/blog-post_11.html மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். நம்முடைய உரிமைகளை காக்க நாம் தான் இணையத்தின் வழி எழுத்தின் மூலமோ, பேச்சின் மூலமோ, ஆயுததமேந்தியோ போராட வேண்டும். நமக்காக யாரும் வரமாட்டார்கள். நாம் தான் நமக்காக போராடியாக வேண்டும்.

"தமிழர்களின் மீதும் தமிழினத்தின்மீதும் உண்மையான, ஆத்மார்த்தமான அக்கறையும் அன்பும் உள்ளவர்கள் இந்நேரம் தனித்தமிழ்நாடு குறித்து சிந்திக்கத் துவங்கியிருந்திருப்பார்கள்." என்று ஏற்கனவே ஒரு பதிவில் நான் சொல்லியதை இங்கே நினைவுபடுத்துகிறேன்.

http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/06/blog-post_11.html

Wednesday, June 11, 2014

தமிழ்நாட்டின் தேசிய மலர் 'செங்காந்தள்' அல்லது 'கார்த்திகைப்பூ'


தனித்தமிழ்நாடு இயலும் – சிவா அய்யாதுரை நேரலை உரை

கடந்த நவம்பர் ௪, ௨௦௧௩ (04-11-2013) அன்று மாலை மூன்று பத்து மணியளவில் என் அலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

'ஆனந்தமழை' திரைப்பட இயக்குநர் திரு. சுப. தமிழ்வாணன் பேசினார். என்னுடைய http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2013/10/blog-post_7126.html என்ற பதிவு அவருடைய பார்வைக்குக் கிடைத்ததாகவும், 'தனித்தமிழ்நாடு - விரைவில்' என்ற என்னுடைய பதிவைக் குறித்தும் பேசினார்.

"என்னுடைய எண்ணமான தனித்தமிழ்நாடு நிறைவேறும். தாமதமாகும்" என்றார்.
------------------

எனக்கு நண்பராக இருந்து சில வாரங்களுக்கு முன்பு என் துரோகியாகி என் முதுகில் குத்த நினைத்த  ஒருவர் என்னை இப்படித்தான் மிரட்டினார்.

"தேசத்துக்கு எதிராக உன் பதிவுகள் உன்னை படு பாதாளத்துக்கு கொண்டு  சென்று விடும்."

அவருக்கு நான் பதிலளித்தேன்.

"என்னுடைய நலனில், எம்மினத்திற்கெதிரான நலனில் அக்கறை கொள்ளாத, மக்கள் நலனில் அக்கறையில்லாத சட்ட திட்டங்களை கொண்டு என் உழைப்பை வரிப்பணம் என்ற பெயரில் சுரண்டும் நாடு என் தாய்நாடல்ல. ஒன்று தெரியுமா? என்னுடைய தமிழர் தேசியம் மற்றும் இந்திய தேசிய எதிர்ப்பு குறித்த படைப்புகள் cmcell, மனித உரிமைகள் ஆணையம் உட்பட எல்லாவற்றிற்கும் சென்று கொண்டுதான் இருக்கின்றன. எனக்கு பயமில்லை. இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம். என் முதுகில் குத்தும் உங்களை போன்றவர்கள் என் தலைமயிரைக் கூட பிடுங்க முடியாது." என்று.

(சபை நாகரீகம் கருதி அந்த நபரின் பெயரை இங்கு குறிப்பிட எனக்கு விருப்பமில்லை.)
------------------

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் தருணம் என் அறையில் இருந்த தெலுங்கர்கள் (நான் இங்கு தங்கியிருக்கும் இடத்தில் நான் மட்டுந்தான் தமிழன்) அந்த முடிவுகளை  தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர். என்னிடம் ஆங்கிலத்தில் இது குறித்துக் கேட்டனர். நான் ஆங்கிலத்தில் சொன்னேன் "என்னுடைய தாய்நாடு தமிழ்நாடு. இந்தியாவைப் பற்றி எனக்கு கவலையில்லை." என்று.
------------------
ஒரு பொது இடத்தில் ஹிந்தி பேசுபவர்கள் இந்தியாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். என்னிடம் "உனக்கு இந்தியாவை பற்றி பேச விருப்பமில்லையா?" என்றனர். நான் சொன்னேன் "நான் இந்தியனில்லை. பிறகெதற்கு நான் இந்தியாவைப் பற்றி பேசவேண்டும்." என்று. "அப்போது நீ இலங்கைத் தமிழனா? உன் பூர்வீகம் எது?" என்று கேட்டனர். நான் சொன்னேன் "என்னுடைய தேசிய இனம் தமிழன். என்னுடைய தாய்நாடு தமிழ்நாடு." என்று. சிரிக்க ஆரம்பித்தனர். இலெமூரியா அல்லது குமரிக் கண்டத்தைப் பற்றி சொல்ல முயற்சித்தேன். அதற்குள் அவர்கள் களைந்து சென்று விட்டனர்.
மறுநாள் அதே இடத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கு ஒரு பெண் (அவளின் தாய்மொழி கன்னடம். அவளுக்கு தமிழும் தெரியும்.) நான் வருவதை பார்த்து பக்கத்தில் நின்றிருந்த தமிழச்சியை பார்த்து சொன்னாள் "காமெடி பீஸ் வந்துருச்சு." என்று.
------------------





நன்றி: கூகிள் குழுமம்.

தமிழ்நாட்டு நேரப்படி 05-சூன்-2014 இரவு 9.30 மணிக்கு  அவரது நேரலைஉரை தொடங்கியது. இந்த நேரலையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர் முழுதும் ஆங்கிலத்திலேயே அவரது உரையை தொடர்ந்தார். அதனால் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நாம் இதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவிட்டுள்ளோம். அவரது இந்த நேரலை நிகழ்ச்சியானது இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பாதி அவரது தமிழ்நாடு தனிநாடு என்பதற்கான  தேவையையும் அதன் காரணங்களையும் எடுத்துரைத்தார். அதில் சில பின்வருமாறு.



“உலகத்தில் எல்லாமும் ஒரு கூட்டாக இயக்கமாகத்தான் செயல்படுகிறது . அதன் கூறுகளாவன 1.இடமாற்றம் (Transport) 2.உருமாற்றம் / திரிபு (Conversion) 3.நிலையானவை (Memory). இந்தக் கூறுகளனைத்தும் மேற்குலகத்தால் தோற்றுவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டுவருபவை. இந்தக் கூறுகள்தான் மனித வாழ்விற்கும் பொருந்தும் என்பது கவனிக்கவேண்டியது. இந்தக் கூறுகளையே நமது சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என்று வகுத்தனர். இந்தக்கூறுகளை நாம் மனித வாழ்வியலோடு ஒப்பிடுகையில் இடமாற்றம் (TRANSPORT) என்பது மனிதனுடைய  விடுதலையை அதாவது மனிதனும் மனிதனின் எண்ணங்களும் எங்கும் செல்லவும் தகுந்த எதையும் செய்யவும் அதற்குத் தேவையான இயக்கத்தினையுமே குறிப்பிடுகின்றன.

இதேபோல் உருமாற்றம்/திரிபு (CONVERSION) என்ற கூற்றை நாம் மனிதனின் எந்தவிதமான தகுந்த மாற்றத்திற்கான  அறிந்தேற்பாகக் கொள்ளலாம். நிலையானவை (MEMORY) என்ற கூற்று நிலையான மனித சமுதாயத்தின் வரலாற்றைக் கொண்டது. இந்த மூன்று கூறுகளையும் நாம் தமிழர்களோடு ஒப்பிடுகையில் இவையனைத்திற்கும் தகுதியானவர்களாகவும் இவற்றைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்” என்று தனது உரையைத்தொடர்ந்த சிவா சில தமிழ்நாட்டுத் தமிழர்களின் தலையாயச்சிக்கல்களையும் பட்டியலிட்டார்.



இந்தியா விடுதலை பெற்றதாகச் சொல்லப்படுகின்ற காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியா என்ற நாட்டிற்கு விடுதலை வழங்குவதாகச் சொல்லவில்லை என்பது மவுண்ட்பேடண் பிரபு கொடுத்த வரைவில் இருப்பதாகவும் அவர் எடுத்துக்காட்டினார். அஃதாவது அந்த வரைவில் இங்கு ஆட்சியில் இருக்கின்ற ஆங்கிலேயர்களுக்கு மாற்றாக வேறு ஒரு ஆட்சி அமையும் என்பதையே குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த வேறு ஆட்சியாளர்கள் ஏற்கெனவே  ஆயத்தமாக இருந்ததாகவும் அவர்கள் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட  சார்பாளர்களல்லர் என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும் தமிழகத்தமிழர்கள் மீதான இந்தித் திணிப்பும் அதன் விளைவாக இந்தி எதிர்ப்புப்போராட்டங்களும் இந்தியத்தின் அடக்குமுறைப்போக்கும்  ஓர் இனத்தை மதிக்காத ஒரு போக்கும் தமிழ் மொழியின் மீதான அலட்சியத்தையுமே காட்டியுள்ளதெனவும் கூறினார். முக்கியமாக குடகு (தலைக்காவிரி) பகுதியைத் திட்டம்போட்டே தமிழர்களுக்கு கிடைக்கவிடாமல் அதை மைசூர் மாகாணத்தோடு இணைத்ததையும் அதன்மூலம் தமிழர்களின் உயிரான காவிரியை இழக்கச்செய்ததையும் மேலாக இதை ஆட்சியாளர்களே மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப இல்லாமல் தன்னிச்சையாக தமிழருக்கு எதிராக முடிவெடுத்ததையும் சுட்டிக்காட்டினார்.  அண்மைக்காலமாக நடக்கும் முல்லைப்பெரியாறு அணையின்  சிக்கலையும் கூடங்குள எதிர்ப்புப் போராட்டத்தையும் மேற்கோள் காட்டி அவையனைத்தும்  மக்களாட்சிக்கு எதிரான போக்காக உள்ளன என்றும் விளக்கினார். இறுதியாக,  தமிழ்நாடு தனிநாடக வேண்டுமென்றால் அதற்கு, தமிழ்நாட்டிற்கான தன்னுரிமைச் சாற்றுரையை(DECLARATION OF INDEPENDENCE) நாம் அமைக்கவேண்டும் என்பதும் மிக முதன்மையான ஒன்று என அவர் கூறினார்.



இந்தப் பகுதி நிறைவுற்று இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த தமிழர்கள் கேட்ட மிக இன்றியமையாத கேள்விகளுக்கும் தெளிவான விடைகளுமளித்தார். அவை வருமாறு

கேள்வி: தமிழ்நாடு தனிநாடு ஆகுமென்றால் இப்போது இருக்கும் நீராதரத்திற்கான  சிக்கல்?

அய்யாதுரை:  இன்றியமையானதாகக் கருதப்படும் காவிரி  ஆறானது தமிழர்களுக்கானது. முழு உரிமையும் கொண்ட தமிழர்களுடன்தான் இதை மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் போது இணைத்திருக்கவேண்டும். ஆனால் மக்களின் விருப்பத்திற்கு மாற்றாக அந்த நிலங்களை கருநாடகத்தோடு இணைத்தது தவறு. ஆக ஏழு கோடி தமிழர்களும் ஒருமித்த கருத்தோடு இதை எதிர்நோக்கினால் அனைத்தும் நம்வசப்படும். ஏனென்றால் வரலாற்றின்படி நமது நதி நமது நிலம். சாத்தியம்.



கேள்வி: தமிழ்நாட்டிற்கான பாதுகாப்பிற்கு என்ன செய்வது? எந்தப்படை நம்மைக் காப்பாற்றும்?



அய்யாதுரை: அமெரிக்க  விடுதலையின் போது சொல்லப்பட்ட  உரையே இதற்கும் பொருந்தும். நாம் அனைவரும் சேர்ந்துதான் நம் நிலத்தை, நாட்டைப் பாதுகாக்கவேண்டும். இதற்குச்சான்றாக இன்னமும் ஒரு சில நாடுகளில் இன்னமும் அனைத்து குடிமக்களும் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது இராணுவத்தில் இருக்கவேண்டும் என்பது. ஆக நமக்கான பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

கேள்வி: தமிழ்நாடு தனிநாடாக ஆயுதம் தாங்கிய கூட்டம் ஏதாவது வேண்டுமா? அவசியமா?



அய்யாதுரை : நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். அறுபது எழுபதுகளில் இருந்த நிலையிலில்லை நாம். இணையம் செழிக்கும் இந்தக்காலகட்டத்தில் நாம் நம்முடைய தேவையிலும் கருத்திலும் முழுமையாக ஒன்றாக நிற்போமேயானால் இஃது  இயலக்கூடியதே. ஆயுதம் இல்லாத ஒரு புரட்சியை நம்மால் ஆற்ற முடியும். அவை நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. புரட்சியென்றால் ஆயுதம் வேண்டும் என்றில்லை.



கேள்வி: இதற்கான பரப்புரைகளை எப்படி மேற்கொள்வது? எல்லோரையும் எப்படி சென்றடையச் செய்வது?



அய்யாதுரை: இப்படித்தான். என்னைப்போல்தான். நான் இராசபட்ச இந்தியா வந்தபோது போட்ட முகநூல் பதிவு இன்றுவரை இரண்டுபேராயிரம்(மில்லியன்) மக்களைச் சென்றடைந்துள்ளது. ஏன் இராசபட்சேவைக்கூட சென்றடைந்திருக்கும். இதேபோல் நாம் நமக்கான தேவைகளையும் தெளிவான கோரிக்கைகளையும் எங்கிருந்தும் எப்படியேனும் எல்லோரையும் சென்றடைய இணையத்தை ஒரு  முதன்மை ஊடகமாகப் பயன்படுத்துங்கள். இணையம் மிகச்சிறந்த ஆயுதமுங்கூட.



கேள்வி: தமிழ்நாட்டின் சாதியையும் மதங்களையும் எப்படி ஒழிப்பது?



அய்யாதுரை: இந்த சாதியும் மதமும் தமிழர்களின் மீது திணிக்கப்பட்ட ஒன்று, ஆனால் தமிழர்களுக்கென ஒன்றுமே இல்லை. ”காக்கை குருவி எங்கள் சாதி” என்றவன் தமிழன் ஒருவனே. ஏற்றத்தாழ்வு இல்லாத தமிழர்கள் இப்படி இருப்பது வருத்தமே. ஆனால் தனிநாடு அடைந்தால் நமக்கான அரசு இதைத் தூக்கி வீச வழிவகைசெய்ய நாம் முனைவோம்.



கேள்வி: நாம் நமக்கான தீர்வைப்பெற உலக நீதிமன்றத்தை அணுக முடியுமா?



அய்யாதுரை: உலகில் தற்போதுள்ள மனிதர்கள் பரந்த அறிவைக்கொண்டுள்ளனர். நாம் எங்கோபோய் யாருடைய இடத்தையோ நமக்கான நாடாகக் கேட்கவில்லை. நாம் ஐந்தாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த இந்த நிலத்தையே கேட்கிறோம். இது நம்மைத்தவிர வேறு எவருக்கும் சொந்தமல்ல. அதுமட்டுமல்லாத எல்லோருக்கும் சொந்தமான கடல்வெளியில் நாம் தீவுகட்டி சொந்தம் கொண்டாடப்போவதில்லை. ஆக நமக்கான உரிமைகளை நாம்தான் கேட்கப்போகிறோம். வெல்வது நாம்தான்.



கேள்வி: நாம் இதன்மூலம் மேற்குலக நாடுகளின் பக்கம் சாயப்போகிறோமா? அல்லது கிழக்குலக நாடுகளின் பக்கமா?



அய்யாதுரை: நாம் யாரிடமும் சாயப்போவதில்லை. எல்லாமே நம்மிடமேயுள்ளது. நாம் பன்மொழி அறிவை வளர்த்துக்கொண்டு மேற்கு கிழக்கு நாடுகளுக்கு இணையாக இருக்கலாம். நாம் என்றுமே தனிப்பட்டவர்கள்தான்.



கேள்வி: மற்ற நாடுகள் இதை ஏற்றுக்கொள்வார்களா?



அய்யாதுரை: நமது முடிவில் நாம் தீர்க்கமாய் இருப்போமேயானால் நமக்கு ஆதரவு கண்டிப்பாக உண்டு. நம்மால் வெல்ல முடியும்.



கேள்வி: தமிழ்நாட்டின் கல்விமுறையை மாற்ற முடியுமா?



அய்யாதுரை: இந்தக்கல்விமுறை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. நான் தமிழ்நாட்டில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்வழி கண்டது எல்லாம் செயல்பாட்டுமுறையல்லாத ஒன்றாக உள்ளது. இதை நாம் கண்டிப்பாக மாற்றியாக வேண்டும். நாடுபெற்றுவிட்டால் நாமே நம்மைத் தீர்மானித்துக்கொள்ளும் உரிமையில் இவையனத்தையும் தீர்க்கமுடியும்.



கேள்வி: நீங்கள் ஏதாவது தமிழ்நாட்டுக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து இதற்காகப் போராடப்போகிறீர்களா?



அய்யாதுரை: திக திமுக எல்லாம் அன்றே தனித்தமிழ்நாட்டிற்கான கோரிக்கையை வைத்துவிட்டனர். ஆனால் இப்போது இருக்கும் கட்சிகள் இந்தியதிற்கு உட்பட்டுதான் எல்லாம் செய்கின்றன. நான் எவருடனும் சேர்ந்து அரசியலில் நிற்கப்போவதில்லை ஆனால் எவராவது என்னோடு சேர்ந்து இதற்காகப் போராடுவார்களேயானால் அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்,

கேள்வி: நமக்கான தலைமைக்கூடம்? தலைவன்?

அய்யாதுரை: நமக்கு நாமே தலைவர்கள்தான். ஒரு நல்ல தலைவன் என்பவன் இன்னும் ஆயிரம் தலைவர்களை உண்டாக்குபவனாக இருத்தல் வேண்டும் ஆக, தலைமை என்பது ஒரு கரம் சார்ந்ததல்ல. காலத்தோடு நாமே தலைமை அமைத்து நம்மை நாமே வழிநடத்தவேண்டுமென்பதுதான் பொருந்தும்.

நிகழ்ச்சியின் இறுதியில் அய்யாதுரை சில உதவிகளை நம்முன் வைத்தார். அவை

1.  தன்னுரிமைச் சாற்றுரையை உருவாக்க உதவுவது

2. அவரது இணையதளமான tamilnadu.com என்ற இணையதளத்தை நாம் நமக்காகப் பயன்படுத்தி நம்மை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டுவது.

3. தனிநாட்டிற்கான தனிவாக்கெடுப்பு நடத்துவதற்காக உதவுவது.



இதற்கான பங்களிப்பை இணையதளம் மூலம் செய்வது.

http://vashiva.com/

என்னால் முடிந்த கேள்விகளை உரிய விடைகளுடன் போட்டுவிட்டேன் ஏதேனும் விடுபட்டிருந்தால் நண்பர்கள் தெரிவிக்கவேண்டுகிறேன்.



இப்படிக்கு

குட்டிமணி செங்குட்டுவன்



https://www.facebook…94976424&type=1

 நன்றிக்குரியோர்:  யாழ் இணையம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=141116&utm_source=yarl_front&utm_medium=yarl_rss&utm_campaign=yarl_eelam_news

https://www.youtube.com/watch?v=JBJbM-amqpg

Sunday, June 1, 2014

அலைக்கழிப்பு



எப்படியேனும்
உள்ளே நுழைந்துவிடத் துடிக்கிறது
மனம்

உள்ளே வரச்சொல்வதுமாய்
வெளியே போகச்சொல்வதுமாய்
போராட்டத்திலேயே கழிகிறது
வாழ்க்கை

நெருங்கி வரச்சொல்வதும்
தூரவிலகிப் போகச்சொல்வதுமாய்
அலைக்கழிக்கப்படுகிறேன்
நான்

நெருங்கிவந்து சிரிப்பதும்
தூரநின்று அழுவதுமாய்
இரணப்படுகிறது மனம்

நினைவுகள் அலைமோதுவதும்
மறக்க முயற்சிப்பதும்
முயற்சித்து தோற்பதுமாய்
தொடர்ந்து காயப்பட்டுக் கிடக்கிறது
மனம்

வலிநிறைந்த வாழ்க்கையும்
வாழ்க்கைமுழுக்க வலியுமாய்
கிடந்து தவிக்கும்போதும்
இன்னமும்
வாழவே விரும்புகிறது
மனம்