Showing posts with label கவிதைகள் (பாகம் - 2.3). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 2.3). Show all posts

Wednesday, September 29, 2010

பலாப்பழம்!

என்னவளே...
நீ ஒரு
பலாப்பழம் தான்!
உன் இதழ்கள்
பலாச்சுவைபோல்
சுவைக்கின்றன!
உன் இதயமோ
என்னை முட்களால்
தைப்பதால்...

அழுகிறேன்!

சித்திரப்பூ செந்தமிழே
சிரிப்பழகே என்மகளே!
நித்திரையில் உன்நாமம்
நிதம்பாடித் துதிக்கிறேன்!
கத்திரிவெயில் வேளையிலும்
கவிபாடித் தொழுகிறேன்!
யுத்தமில்லா உலகுகாண
யுகந்தோறும் அழுகிறேன்!!

யுத்தமடி!

காதலைச் சொல்லவே - உன்பெயரில்
கவிதைகளும் எழுதினேன்!
கவிதைகளும் அழுததடி! - உன்
காலடி தொழுததடி!! - என்
கண்ணீரைப் போக்கிடவே
தண்ணீரில் குளித்திட்டேன்!
தண்ணீரில் இரத்தமடி!
உன்னால் என்னுள் யுத்தமடி!!

Tuesday, September 28, 2010

மலரட்டும் புத்தாண்டு!

சாதியுள்ள சமுதாயம் சரியட்டும்!
நீதியுள்ள சமுதாயம் நிலவட்டும்!
வீதிகளில் தீவிரவாதம் பொசுங்கட்டும்!
போதிமர ஞானம் பிறக்கட்டும்!!
மண்ணுலகில் மனிதம் வாழட்டும்!
மதங்கொண்ட மனிதன் வீழட்டும்!
பெண்ணுலகம் சமமாய் வளரட்டும்!
பாரதிகண்ட கனவு நனவாகட்டும்!!
நன்மைகள் நலமாய் வாழட்டும்!
தீமைகள் தீக்கிரையாய் பொசுங்கட்டும்!
உண்மைகள் உயர்வாய் உலவட்டும்!
பொய்மையும் அச்சமும் சாகட்டும்!!
எத்திக்கும் தமிழ்மணம் கமழட்டும்!
ஏழைகளின் அகங்குளிரட்டும்!
தித்திக்கும் தை பிறக்கட்டும்!
தேன்சுவைப் பொங்கல் பொங்கட்டும்!!
எழில்கொஞ்சும் இந்தியா
இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டை
இனிமையாய் வரவேற்கிறது!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 08-11-2007

2. பதிவுகள் (இணைய இதழ்) – 31-12-2011

3. வார்ப்பு (இணைய இதழ்) – 21-12-2011

வெற்றிப்பண்!

நாடும் வளம்பெற
நாமும் நலம்பெற
தேடும் திரவியம்
தெவிட்டாமல் பெறலாம்!
கூடும் இடங்களில்
குண்டுமழை வேண்டாம்!
நாட்டம் வேண்டும்
நாளை நீயும் உயரலாம்!!

Wednesday, September 22, 2010

பிரபஞ்ச அழகி!

2005 ம் ஆண்டு மே மாதம் 7 ம் தேதி சனிக்கிழமை அவள் வீட்டிற்கு போயிருந்தேன். மதிய உணவு உண்டேன். அதன்பிறகு அவளிடம் 'கண்ணாடி எதற்கு அணிகிறாய்?' என்று கேட்டேன். 'எனக்கு சிறுவயதிலிருந்தே தலைவலி' என்றாள். கண்ணாடி அணிந்த அவள் எவ்வளவு அழகாய் இருப்பாள் தெரியுமா? என் குட்டிப்பாப்பா தேவதையை, என் செல்லக்குழந்தையை அப்டியே என் மடியில் தூக்கி வைத்து செல்லங்கொஞ்ச வேண்டும் போல் இருக்கு. 




 உலகத்தை ஆள்பவன் இறைவன்! - காதல் 
கலகத்தை உண்டாக்கி - எனை கவிஞனாய் மாற்றியவள் நீதான்! 

 என் பக்கத்தில் நின்று 
என்னால் வெட்கத்தில் சிவப்பவளே... நீ சொர்க்கத்தில் பிறந்தவளா...?!! - இல்லை நீ ஆண்வர்க்கத்தைக் கொல்பவளா...?!!!! அமைதியாய் வந்து - 
என்னுள் புயலை வீசவைத்து - காதல் தயவில் வாழவைத்த தமிழச்சி நீதான்!! இலக்கின்றி வாழ்ந்த என்னை - தமிழ் இலக்கியத்தில் மூழ்கவைத்த இலக்கியமானவளே...!!! 

 என்தலைவியான உனக்கு சிறுவயதிலிருந்தே தலைவலி! உன்னால்தான் எனக்கு இதயவலி!! 

 உன் கண்ணுக்கழகு கண்ணாடியா?!!! அழகுக்கே நீ முன்னோடியா?!! 

 மழையால் சிரபுஞ்சி அழகு! 
உன்னால் இந்த பிரபஞ்சமே அழகு!!

காதல் மரம்!

விழிகள் வழி
விதையின்றி நுழைந்த
காதல்மரம்
என்னிதய பூமியில்
ஆணிவேராய் முளைத்துவிட்டது!

இன்று
அந்த காதல்மரம்
விழுதுகளுடன் விருச்சகமாய்
வளர்ந்திருப்பதை
நீ அறிவாயா கண்மணி?

சொல்வாயா?

என் சிறுவயது முதலே நான் கறுப்பாக இருப்பதால் என்னை அனைவரும் 'காக்கா, காக்கா' என்றே அழைத்தனர்.


கண்ணீரில் கரையும் காகமடி!
தண்ணீரில் உறையும் மேகமடி!!
கண்களின் மோதலால் காதலடி!
பெண்களில் நீயொரு புதுக்கவிதையடி!
வெட்கத்தில் நீஉலக அழகியடி! - என்
பக்கத்தில் நீசிறு குழந்தையடி!!
என்னுள் தமிழ்மங்கையாய் வந்தாயடி!
எனக்கு கவிதைகங்கையை தந்தாயடி!!
வாழ்க்கையை புரிய வைத்தாயடி! - ஒரு
வார்த்தையைக் கூற மறந்தாயடி!!
அளவாய்த்தான் சிரித்தாயடி! - என்
உலகைத்தான் அழவைத்தாயடி!!
கவிஞனென்று சொன்னாயடி! - என்னையுன்
கணவனென்று சொல்வாயா நீ?

நட்பு!

பேசித்திரிவதல்ல
நட்பு! - உயிரை
வாசிக்கச் சொல்வதுதானே
நட்பு!!

அம்மா!

என்னுயிரின் அகரமே!
பொறுமையின் சிகரமே!!

என்னை
பத்துமாதம் சுமந்தாலும்
உனக்கென
சொத்துசுகம் தேடவில்லையே நீ?!!

உடலில்லா உயிருக்கும்
உயிரில்லா உடலுக்கும்
மதிப்பில்லை இவ்வுலகில்!
என்னுடலில் என்னுயிராய்
என்னுயிரின் என்னுயிராய்
இருப்பவளே...!!

அம்மா என்ற சொல்லுக்கிணையாய்
அகிலத்தில் வேறு சொல்லில்லையே
அம்மா!!

அம்மா!
அந்தப் பெயரிலேயே
அன்பு தெரிகிறது பார்!!

தாலாட்டுப் பாட்டில்கூட
பூபாளங்கள் இசைக்கிறாயே
தாயே!!

இன்னும்பல ஜென்மங்களில்
உன்மகனாகவே பிறக்க
வரம்கொடு தாயே!
உன் காலடிபட்ட மண்ணில்
ஆலயங்கள் பல எழுப்ப...

இயற்கை!

அந்திப் பொழுதில் 
வானம் உடுத்தும் 
நாணத்துகிலோ முகில்! 

 கதிரவன் உடுத்தும் 
நாணத்துகிலோ 
அந்திச்சிவப்பு! 

 மேகங்கள் இசைக்கும் 
இராகங்களோ 
இல்லை 
மேகக்காதலர்களின் ஊடல்தானோ 
இடி! 

 மழையரசி வந்துபோனதன் 
அடையாளம்தானோ 
வானவில்! 

 முகில்சிந்தும் தண்ணீரும் 
மனிதன் சிந்தும் கண்ணீரும் 
இயற்கையின் நியதி! 

 மனிதனை 
இன்பத்தையும் துன்பத்தையும் 
சமமாய்ப் பார்க்கச்சொல்லி 
அமைதியாய் வாழ்கிறது 
இயற்கை!!

Monday, September 20, 2010

உன்னிடம்தான் பேசுகிறேன்!

neural networks external exam க்கு படித்துக் கொண்டிருந்த போது எழுதிய கவிதை. நான் விடுதியில் அமர்ந்தபோது அவளை நினைத்து அழ ஆரம்பித்தேன். என் அழுகையைப் பார்த்து இயற்கையும் அழுதது. அதாவது மழை பெய்தது.


கவிதைவழி உன்பெயரெழுதி
காற்றுவழி என்னுயிரனுப்பி
புவிதனிலே அன்பைத்தேடி
புலம்பித்தள்ளும் புலவன்நான்!
செவியிரண்டால் சுவாசம்செய்து
சேர்த்துவைத்த ஆசைக்காதல்
புவிதனிலே மாண்டபின்னே
பூலோகம் அழுததென்ன!!

மழலையாய் வாழ்ந்துவிட்டு
மங்கையுன்னைக் கண்டபின்னே
உலகைப் புரிந்துகொள்ள
உன்னால்வழி பிறந்ததடி!
வில்லெடுத்து வீரத்தில்
விளைந்தவன் ஏகலைவன்! - தமிழ்ச்
சொல்லெடுத்து கவிஎழுதிச்
செல்கிறான் உன்தலைவன்!!

இளைஞனே போராடு!

இளைஞனே...
பகலில் உன்நிழலும்
உனக்கு உறுதுணையாய்
உன்னுடனேயே
இருப்பதாய்த் தோன்றும்!

பகல் இரவாவதுபோல்
வெற்றி மாறி தோல்வி வந்துவிடடால்
உன் நிழல்கூட
உன்னைவிட்டு விலகிவிடும்!

பிறரின் விமர்சனங்கள்
உன்னை சித்ரவதை செய்யும்!
உற்ற நண்பர்கள்கூட
உன்னைப்பற்றி தவறாய்
விமர்சிப்பார்கள்!
காலனின் பாசக்கயிறுகூட
உன்தோளில் ஏற
முயற்சிக்கும்!

என்றுமே உனக்கு
உறுதுணையாய் நிற்பது
உன்னில் இருக்கும்
மனஉறுதியும்
தன்னம்பிக்கையுந்தான்!

இதைப்புரிந்துகொண்டு போராடு!
வெற்றிக்கடலில் நீ நீராடு!!

வெற்றி உன்வசம்!

கடந்துவந்த பாதை
காவியமாகலாம்!
நட்பில்
களங்கம் இல்லாதவரை...

உதடுகள் பேசாக்
காதல்கூட
உயிரை உருக்கலாம்!
காதலில்
கண்ணியம் குறையாதவரை...

கண்ணீரில் வாழ்ந்த
வாழ்க்கைகூட
கானல்நீராய்ப் போகலாம்! - நாளை
உன்னத நிலையை அடையலாம்!!
காலங்கள் மாறிக்கொண்டிருக்கும்வரை...

உன் கண்ணீர்த்துளிகள் கூட
நாளை வைரங்களாய் மாறலாம்!
உன்னில்
தன்னம்பிக்கைத்தீ
கொழுந்துவிட்டு எரியும்வரை...

உன் கைகள் அசைந்தால்கூட
வெற்றி உன்வசமாகலாம்!
உன்னில் முயற்சிவேள்வி
அணையாதவரை...

தொடர்கதை!

உன்னை விரும்பினார்கள்
அனைவரும்!
அவர்களில்
நானும் ஒருவன்!

என்னை வெறுத்தார்கள்
அனைவரும்!
அவர்களில்
நீயும் ஒருத்தியாய் இருந்துவிடாதே!

இந்த சமுதாயமே
எனக்குப் பிடிக்காதபோதும்
உன்னை மட்டும்
எனக்குப் பிடித்ததற்கான
காரணம் என்னம்மா?

உன் சிரிப்பால்
சிதறிவிட்டது என்னிதயம்!
உன் நாவில் சுரக்கும்
உமிழ்நீர் போதும்!
சிதறிய துகள்களை
ஒட்டவைக்க...

எப்போதுமே
மண்ணைப் பார்த்துதானே
நடப்பாய்!
பிறகெப்படிடி
என்னைப் பார்க்கவைத்தாய்?

அதிகாலையில்
கூவும் சேவலுக்குமுன்
கண்விழித்தெழுகிறேன்!

அகிலம் ஆளும்
ஆதவன் எழுமுன்
எனை ஆளும்
அரசியுனைக் காண
தினம் தினம்
மரித்து உயிர்க்கிறேன்!

உன் நினைவுகளோடு
என் நினைவின்றி
நடக்கிறேன்!

வகுப்புகள் ஆரம்பிக்குமுன்னே
வகுப்பறைக்குள் நுழைந்துவிடுவேன்!
நீ என்னை
கடந்துபோகும்போது
ஓரக்கண்ணால் பார்ப்பதற்காகவே...

நாணம் உனைக்கண்டு
நாணப்படுமா?
நீ நாணத்தைக்கண்டு
நாணப்படுவாயா?
தெரியவில்லை எனக்கு!

நீ மெதுவாய்த் தான்
நடக்கிறாய்!
என் இதயத்துடிப்பை மட்டும்
ஏனடி வேகமாய்
துடிக்க வைக்கிறாய்?

நீ வரும்வரையில்
உச்சிவெயிலில்
வியர்வை மழையில்
நனைந்துகொண்டிருந்தேன்!

நீ
என்னை காதலிப்பது
மெய்யானாலும்
பொய்யானாலும்
என் காதல் என்றுமே
தொடர்கதைதான்!!