Thursday, November 10, 2011

செல்லமடி நீ எனக்கு!

குடையை மறந்துவிட்டு
வெளியூர்போன நான்
மழையில் தொப்பலாக நனைந்தபடி
வீட்டிற்குள் நுழைகிறேன்!

மழையில் நனைந்த
தன் கன்றுக்குட்டியை
வாஞ்சையோடு தன்நாவால் நக்கி
ஈரத்தை நீக்கும்
பாசமிக்க தாய்ப்பசுபோலவே
என் செல்லமனைவியான நீ
உன் முந்தானையால்
என் தலைதுவட்டிவிடுகிறாய்
'சளி பிளிக்கும்டா செல்லம்'
என்று செல்லங்கொஞ்சியபடி!

நீ பொழிந்த அன்பாலும்
அரவணைப்பாலும்
உன் கைக்குழந்தையாகவே
மாறிப்போனேன் நான்!

உன் முந்தானையால்
ஒரு தூளிகட்டி
அதில் எனை தூங்கவைத்து
தாலாட்டு பாடுடா என்செல்லம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

2. இராணிமுத்து - 01-02-2012

Sunday, October 30, 2011

Getup Guys!

Getup guys getup guys
Getup getup getup guys

Open your eyes sunlight says
Getup guys getup guys

Success says surprise says
Getup guys getup guys

Lot of ways are before your eyes
Getup guys getup guys

Come on boys come on girls
Getup guys getup guys

Getup guys getup guys
Getup getup getup guys

பே(தா)ய்நாடு!!!!!!!

பணக்காரர்கள் பயன்படுத்தத்
தேவையே இல்லாத
பேருந்துகளை
அன்றாடம் பயன்படுத்துபவர்கள்
ஏழைஎளியவர்களும்
வசதி குறைந்த
நடுத்தர வர்க்கத்தினரும்
மட்டுமே..!!

இருக்கைகள் கிடைக்காவிட்டாலும்
இருகைகளின் உதவியோடு
நின்றபடியே பயணித்து
சேருமிடம் செல்லநினைக்கும்
அன்றாடங்காய்ச்சி எவனும்
சொகுசுப்பேருந்துகளையோ
குளிர்சாதனப்பேருந்துகளையோ
எதிர்பார்க்காத சூழலிலும்
உலக வரலாற்றிலேயே
பயணச்சீட்டுகளின் மூலம்
பகல்கொள்ளையடிக்கும்
வணிக(நிர்வாக)த்திறமை கொண்ட
போக்குவரத்துக்கழகம் அமைந்த
பெருமைமிக்க(?????????????)
எங்கள் பே(தா)ய்நாடு
தமிழ்நாடு தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. வார்ப்பு (இணைய இதழ்) – 10-11-2011

பகல்கொள்ளை!!!

ப்ளாக்கில்
டிக்கெட் விற்பது
சினிமாதியேட்டர் வாசலில்
மட்டுமல்ல...
எங்கள் மாநகரப்
பேருந்துகளிலும் தான்!!!!!

இரண்டு காதலிகள்!

எனக்கு
இரண்டு காதலிகள்!

உன்னோடு
என் தாய்த்தமிழையும்
சேர்த்து

எனக்கு
இரண்டு காதலிகள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

என்ன செய்யப் போகிறாய்?

என்ன செய்யப் போகிறாய்?
தமிழா...
என்ன செய்யப் போகிறாய்?

கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே...
முன்தோன்றிய மூத்ததமிழ்
என்றாயே...
காலங்காலமாய்
வாழக் கதியற்றுநிற்கும்
ஈழத்தமிழருக்காய்
நீ என்ன செய்யப் போகிறாய்?

வறுமையை ஒழிப்பேன்
வாக்களியுங்கள்
என்றாயே...
பொறுமையாய்த்தான்
காத்திருக்கிறோம்
வறுமையை ஒழிக்க
நீ என்ன செய்யப் போகிறாய்?

ஜாதிகள் இல்லா
சமத்துவ சமுதாயம் அமைப்போம்
என்றாயே...
ஜாதிச் சான்றிதழுக்காய்
சாதிகள் கேட்கும்
பிள்ளைகளை
என்ன செய்யப் போகிறாய்?

என்ன செய்யப் போகிறாய்?
தமிழா...
என்ன செய்யப் போகிறாய்?


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

மணல்வீடு

காற்றடித்தால் கூட
இடிந்துவிழும் எனத்தெரியாமல்
மணல்வீடு கட்டும்
குழந்தைகள் போல்
நான் உன்னோடுசேர்ந்து
காதலெனும் மாளிகை
கட்டினேன்

ஆசையோடு வளர்த்த
காதல்
ஆதரவின்றி நிற்கிறது
இன்று

வாழ்வெனும்
நெடுந்தூரப் பயணத்தில்
நீயின்றி நான்மட்டும்
தனியே நடக்கிறேன்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 14-11-2011

லூசுமழை!

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையைக்
கடக்க எத்தனித்தேன்

சுட்டெரிக்கும் வெயிலோடு
சடசடவென மழையும்
சேர்ந்து கொண்டது

சாலையோரம் நின்றிருந்த
சிறுமியொருத்தி
செல்லமாய்த் திட்டினாள்
வெயில்மழையை!
‘லூசுமழை’ என்று...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

காதல் கீதை!

எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது!
நான் அவளைப்
பார்த்தது...

எது நடக்கிறதோ
அதுவும் நன்றாகவே
நடக்கிறது!
நான் அவளைக்
காதலிப்பது...

எது நடக்குமோ
அதுவும் நன்றாகவே
நடக்கும்!
நான் அவளை
மணம்முடிக்கப் போவது...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) – 03-11-2011

2. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

ஆசிரியர்கள்!

வாழ்க்கைப் பயணத்தில்
திசைகள் தெரியாமல்
தத்தளிக்கும் குழந்தைகட்கு
கலங்கரைவிளக்கமாய்
உங்கள் போதனைகளே!

பள்ளிக்குச் செல்கின்ற
பிள்ளைகள் மனதை
பண்படுத்துபவை
உங்கள் போதனைகளே!

அன்னையும் தந்தையும்
முதலிரண்டு கடவுள்களென்றால்
மூன்றாவது கடவுள்
நீங்கள் தானென்று
சொல்லி வைத்தார்கள்
எம்முன்னோர்கள்!

இன்னும் சொல்லப்போனால்
மாதா பிதா
குரு தெய்வம் என
உங்களுக்குப் பிறகுதான்
தெய்வம்!

களிமண்ணுங்கூட
பிடிப்பவர் பிடித்தால்தான்
பிள்ளையார் ஆகுமாம்!
உங்களின்
அன்பான அரவணைப்பே
பிஞ்சு உள்ளங்களை
நெஞ்சில் உரமிக்க
நேதாஜியாய்...
நேர்மைத் திறங்கொண்ட
காந்தியாய்...
பாட்டுத்திறமிக்க
பாரதியாய்...
அன்புக்கே அன்னையான
தெரசாவாய்...
தொண்டுகள் செய்யும்
தேசத்தலைவனாய்...
மாற்றுகிறது!!

மாற்றங்களை நிகழ்த்துவது
நீங்கள்!
உங்களை
வணங்கி மகிழ்வதில்
பெருமை கொள்கிறோம்
நாங்கள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. வார்ப்பு (இணைய இதழ்) – 12-12-2011