Tuesday, July 15, 2014

என் சமீபத்திய புகைப்படங்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு பரமக்குடி திரௌபதி அம்மன் கோயில் வாசலில் என் அலைபேசியில் உள்ள புகைப்படக் கருவி மூலம் என் தங்கச்சி பாப்பா சோபனாவால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.




Sunday, July 13, 2014

அழகு ராட்சசி கவிதைநூலிற்கு சமீபத்தில் எனக்கு கிடைத்த குறுஞ்செய்தி விமர்சனம்

"கவிஞரே, தாங்கள் எழுதிய அழகு ராட்சசி நூலை மறு வாசிப்பு செய்தேன். காதல் சொட்டச்சொட்ட இருந்தது. அருமை."

- கவித்துளி குமார். ௯௭௯௧௫௬௫௯௨௮ (9791565928)

என்னுடைய கவிதைநூலை இவர் எப்போது வாங்கினார்?, எங்கே வாங்கினார்? என்ற விவரங்கள் எனக்கு தெரியவில்லை.

இந்த கவிதைநூலிற்கு ஏற்கனவே கிடைத்த விமர்சனங்களில் மிகமிக முக்கியமான விமர்சனத்திலிருந்து

- (சிவகங்கை) மீரா, தபுசங்கர் வரிசையில் சுரேஷ்குமாருக்கு ஓரிடம் உண்டு.

- (முத்தம் தொடர்பான ஒரு கவிதை தொடர்பாக) திருவள்ளுவரின் கொள்ளுப்பேரனாக இருப்பார் என நினைத்துக் கொண்டேன்.

- இவரது கவிதைகள் இளைஞர்களை கவரும். சாதாரண இளைஞர்களை கவிதை எழுதத் தூண்டும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் கடிதம் எழுத மிகவும் உதவியாக இருக்கும்.


அழகு ராட்சசி கவிதை நூலிற்காக திரு. ஸ்ரீரங்கம் செளரிராஜன் அவர்கள் எழுதிய நூல் விமர்சனத்திலிருந்து...

Saturday, July 12, 2014

௨௦௦௬ புதிய சிற்பி மாத இதழில் பொறுப்பாசிரியராக...

௨௦௦௬ புதிய சிற்பி மாத இதழில் பொறுப்பாசிரியராக அங்கம் வகித்தபோது முதுநிலை கணினி பயன்பாட்டியல் (M.C.A.,) படித்துக் கொண்டிருந்தேன்.

இந்த பட்டியலில் என்னைத்தவிர ஏனைய பலபேர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் முதுகலை, இளங்கலை தமிழ் படித்துக் கொண்டிருந்தவர்கள்.

ஒருநாள் நான்கு மணிக்கு முடியவேண்டிய என் கணினித்துறை வகுப்புகள் மாலை மூன்று மணிக்கே முடிந்துவிட்டது. அதனால் பக்கத்திலிருந்த தமிழ்த்துறைக்கு ஒரு கவிதை நண்பரை பார்க்க அவர் வகுப்பறைக்குள் நுழைந்தேன். சில நிமிடங்களில் தமிழம்மா உள்ளே நுழைந்துவிட்டாள். நான் ஏற்கனவே கவிதைப்போட்டியில் கலந்துகொண்டது குறித்து அந்த தமிழம்மாவுக்கு தெரியும் என்பதாலும் என்னுடைய துறை தேர்வுகளுக்கு அவள் தேர்வு மேற்பார்வை அதிகாரியாக (Exam Supervisor) வந்ததை வைத்து என்னை அவளுக்கு தெரியும் என்பதாலும் தமிழ் அல்லாத வேறுதுறை மாணவனாகிய நான் அவள் நடத்தும் வகுப்பில் அமர்ந்திருந்ததை கண்டும் எதுவும் சொல்லாமல் பாடம் நடத்திவிட்டு வகுப்பு முடிந்தவுடன் கிளம்பினாள். அதன்பிறகு என் கவிதை நண்பர்களோடு பேசி, பகிர்ந்து கடந்த நினைவுகள் பசுமையானவை.

அப்போதெல்லாம் எனக்கு என் துறையில் என் விடுதியில் என் அறையில் உள்ளவர்களோடு இருந்ததைவிட இப்படி கவிதைகளோடு வாழும் தமிழ்த்துறை நண்பர்களோடு கவிஞனான நானும் அதிக ஈடுபாடோடு கடந்த பசுமையான கால நினைவுகள்.


Wednesday, July 9, 2014

நேசிக்காதே (காதல் கவிதை)

௨௦௧௨ இராணிமுத்து மாதமிருமுறை இதழில் வெளிவந்த கவிதை.


Tuesday, July 8, 2014

பரமக்குடி பூங்காவில் விஷ்ணு பாப்பா

கடந்த சனிக்கிழமையன்று பரமக்குடி உழவர்சந்தை பூங்காவில் எங்க வீட்டு விஷ்ணு பாப்பா விளையாடினான். அப்போது எடுத்த புகைப்படங்கள்.

என் மருமகன் விஷ்ணு பாப்பாவின் அழகைக்காண கோடி கண்கள் வேண்டும்.



சஞ்சிகை மாத இதழில் வெளியான என் ஹைக்கூ



ஜூன் சஞ்சிகை மாத இதழில் வெளியான என் ஹைக்கூ இது. முகநூலில் பலரால் வரவேற்கப்பட்ட ஹைக்கூ இது. ஆனால், என்னுடைய கவிதை எப்போதுமே ஊடகங்களால் அவ்வளவு எளிதில் வரவேற்கப்படுவதே இல்லை. இதனாலேயே இணையத்தில் இந்த பிரபஞ்சம் முழுக்க அனுப்பி வைப்பதுண்டு. அப்படி அனுப்புவதையும் விளம்பரப்படுத்துவதாக என்னை குறை சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்த கவிதையை வெளியிட்டு எனக்கு ஆறுதல் அளித்த சஞ்சிகை மாத இதழுக்கு என் நன்றி.

என்னுடைய ஊரில் மணலாக ஓடும் வைகை ஆறரை நினைவில் வைத்தே எழுதப்பட்ட ஹைக்கூ இது. நான் பிறப்பதற்கு முன்புவரை வைகை ஆற்றில் நீர் பாலத்தை உடைக்குமளவிற்கு வந்ததாக சொல்வார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்படி நீர் வந்ததில்லை. நான் என் ஊருக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் ஆற்றில் மணல்தான் ஓடுகிறது.

வைகை ஆற்றின் முகப்பில் இருப்பதால் தான் இராமநாதபுரம் என்ற ஊருக்கு முகவை (முக+வை - முக - முகப்பில், வை - வைகை, வைகையின் முகப்பில் உள்ள ஊர்) என்று பெயர் வந்தது. அதனாலேயே பலரும் முகவை மாவட்டம் என்றே எழுதுவர்.

மற்ற மொழிகளில் இடுகுறிப் பெயர்கள் அதிகம். காரணப் பெயர்கள் குறைவு. ஆனால் தமிழ்மொழியில் மட்டுந்தான் காரணப் பெயர்கள் அதிகம். இடுகுறிப் பெயர்கள் மிகமிகக் குறைவு. அதனால் தான் "தேங்காயை உடைத்துப் பார். தமிழ் வார்த்தைகளை பிரித்துப் பார்" என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். தேங்காயை உடைத்தால் அது நல்ல தேங்காயா இல்லையா என்று தெரியும். தமிழ் வார்த்தைகளை பிரித்துப் பார்த்தால் பொருள் புரியும்.

Saturday, June 28, 2014

தாய்ப்பாசம்

கடந்த 15-12-2012 வாரத்திற்கான கல்கி வார இதழில் ஒரு பெண் ஒரு பச்சிளங்குழந்தையைத் தன் காலில் வைத்துக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த படத்திற்கு ஒரு குட்டிக் கதை எழுதி அனுப்பச் சொல்லியிருந்தனர். அதற்கு நான் எழுதிய கதை.


அவள் படித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்டவள். ஏழ்மையோடு வாழ்க்கையில் அதிகமாகப் போராடினாள். அவளுடைய கணவன் ஊதாரியாகத் திரிந்தான். இவள் குடும்ப பாரம் சுமந்தாள். பெற்ற தாயையும் தந்தையையும் மாமா அத்தையையும் அன்பாகக் கவனித்துக் கொண்டாள்.
நல்லபடியாய்த் தேர்வு எழுதினாள். படிப்பையும் முடித்தாள். நல்ல மதிப்பெண்கள் பெற்றாள். ஆசிரியர்த் தேர்வாணையம் சார்பில் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக நியமனம் ஆகியும் விட்டால். பெண்ணின் மனவலிமையையும் நிரூபித்து விட்டாள்.
அதற்கிடையில் தாய்மையடையும் வலியையும் பொறுத்துக் கொண்டு அவளின் வலிமையையும் தியாகமும் அளப்பரியது.
இன்றும் அவள் தன் குழந்தையைத் தன் அம்மாவின் பொறுப்பில் விட்டுவிட்டு பள்ளிக்குக் கிளம்பினாள்.
அக்குழந்தையின் அம்மம்மா குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறாள். மாலையில் பேருந்தில் பயணித்து வீடுவந்து சேரும் அவளின் தாய்மை தன் குழந்தையைக் கொஞ்ச அப்பேருந்தைவிட வேகமாய் விரைந்து கொண்டிருந்தது. 

ஜோடிக்கிளிகள்

அழகிய பூங்கா அது. மரக்கிளைகளில் பற்பல ஜோடிக்கிளிகள் கிரீச் கிரீச் சத்தத்தோடு பேசிச் சிரித்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தன. மரநிழலில் ஒரு ஜோடிக்கிளி ஒருவரையொருவர் கொஞ்சிக் கொண்டிருந்தது. அந்த ஜோடிக்கிளியின் பெயர் அறிவழகன் – நிலா. கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வரும் ஜோடிகள். தங்கள் காதலை வளர்த்தது இந்தப் பூங்காவில் தான். இரண்டு பேரும் வேறு வேறு சாதியில் பிறந்தவர்கள்.

இன்றும் வழக்கம்போல் அதே இடத்தில் அதே மரத்தின் நிழலில் ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்தபடி ஒருவர் நகத்தை ஒருவர் கடித்தபடி ஒருவரை ஒருவர் கொஞ்சியபடி காதலில் மூழ்கிக் கிடந்தனர்.
‘இன்னும் எத்தன நாளைக்குத்தான் நாம ரெண்டு பேரும் இப்டியே இருக்கிறது?’ என்றான்.

‘என்னடா பண்றது? கூடிய சீக்கிரம் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். அப்றம் இப்ப இருக்கிறது மாதிரியே எப்பவுமே பிரியாம வாழலாம்’ என்றபடி தன்மடியில் படுத்துக் கிடந்த அறிவழகனின் தலையைக் கோதிவிட்டபடியே சொன்னாள்.

அந்த மென்மையான ஸ்பரிச உணர்வும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலும் நேரம் மறந்து காலம் மறந்து இருக்கும் இடம் மறந்து இலயித்துக் கிடக்கச் சொன்னது.
நிமிர்ந்து பார்த்தாள் நிலா. மெல்ல மெல்ல வானில் மேலெழும்பிக் கொண்டிருந்த வான்நிலா பூமியில் உள்ள நிலாவைப் பார்த்து வியந்தது. வெட்கத்தில் மேகக் கூட்டங்களுக்கிடையே ஓடி ஒளிந்தது.

நிலா திடுக்கிட்டு எழுந்தாள். தன் மடியில் கிடந்த அவனை தட்டி எழுப்பினாள். ‘டே அறிவு, எழுந்திருடா, இருட்டிருச்சு’ என்றபடியே பதறினாள். ‘ஆம் நிலா’ என்றபடியே அவளின் தலைகோதிவிட்டு நெற்றியில் ஒரு முத்தமிட்டான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு ‘நான் கேளம்புறேண்டா’ என்றபடி அவனிடம் விடைபெற்றுக் கொண்டு வேகமாக வீடு நோக்கி நடந்தாள். அவனும் தன் வீடு நோக்கி நடந்தான்.
வீட்டிற்குள் நுழைந்தாள் நிலா. அவளின் அப்பா கேட்டார்

‘நிலா, எங்க போய்ட்டு வர்ற?’.

‘தோழி வீட்டுக்கு போய்ட்டு வர்றேன் ப்பா’.

‘தோழி வீட்டுக்கா? இல்ல காதலனோடு கொஞ்சிக் குலவீட்டு வர்றியா?’

நிலாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘அப்பாவுக்கு எப்படித் தெரியும்?’ மனதிற்குள்ளேயே தீவிரமாக யோசித்தாள்.
‘எனக்கு எப்டித் தெரியும் னு யோசிக்கிறியா?’ என்றபடியே ‘அந்த வழியே போனபோது நானும் உன்னையும் ஒரு பையனையும் பார்த்தேனே’ என்று உண்மையை ஆவேசமாகக் கத்தினார் அவர்.

‘அப்பா, அது... அதுவந்துப்பா...’ என்று இழுத்தபடியே நிறுத்தினாள்.

‘நானே எப்படியும் அப்பாவிடம் சொல்லிவிட வேண்டும்’ என நினைத்தவள் அவரே கேட்டவுடன் சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்தாள்.

‘அப்பா, நான் அந்த அறிவழகனைத் தான் காதலிக்கிறேன் ப்பா. அவன் ரொம்ப நல்லவன் ப்பா. என் மேல் ரொம்ப பாசம் வச்சிருக்கான் ப்பா’ என்றபடி பக்கத்தில் வந்து அவரின் நாடிபிடித்து ‘என் செல்ல அப்பால்ல’ என்றபடியே கொஞ்சினாள்.

அவர் அமைதியாக இருந்தார். நிமிர்ந்து அவள் முகம் பார்த்தார். சிரித்தபடி கண்ணீர் விட்டார். ‘உன் விருப்பப்படியே நடக்கட்டும் ம்மா. என் மகளைப் பற்றி எனக்குத்தான் நன்றாகத் தெரியுமே’. என்றபடி கர்வப்பட்டார். அவளின் உச்சி முகர்ந்தார்.

அவள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.


அறிவழகன் ஒரு நல்ல எழுத்தாளன். அவனின் எழுத்தையும் அவனின் சிந்தனைகளையும் நல்ல குணத்தையும் பார்த்துப் பழகிக் காதலிக்கத் தொடங்கினாள் நிலா. அவனும் காதலால் ஜாதிகள் அடியோடு அற்றுப்போகும் சமுதாய மலர்ச்சி பெறும் என உறுதியாக நம்பினான்.

அறிவழனும் அம்மாவிடம் பேசத் துவங்கினான். ‘அம்மா, அம்மா, அது... அதுவந்து...’ என்றபடி நிறுத்தினான்.
‘என்னடா மென்னு முழுங்குற? ம்... சொல்லு’ என்றபடி அவன் முகம் பார்த்து நின்றாள்.

‘நான் நிலா ன்னு ஒரு பொண்ணை விரும்புறே ம்மா. அவளையே கல்யாணம் செஞ்சுக்கிறேன் ம்மா’ என்றபடி அவள் அருகில் வந்தான்.

‘நானே உனக்கு ஒரு நல்ல பொண்ணாப் பார்க்கணும் னு நெனச்சேன். எனக்கு வேல வைக்காம நீயே பார்த்துட்ட போல. சந்தோசம் ப்பா’ என்றாள்.

அறிவழகன் எதிர்பார்த்த பதிலைத்தான் அவள் சொன்னாள்.

மகிழ்ச்சியில் திளைத்தான் அவன்.

நல்லபடியாய்த் திருமணம் நடந்தேறியது. இன்பமான இல்லறம். மகிழ்ச்சியான வாழ்க்கை. அன்பான துறுதுறுவென ஆண் குழந்தையும் பிறந்தது.

குழந்தையையும் நல்லபடியாக அன்புடன் வளர்த்தார்கள் நிலாவும் அறிவழகனும்.

குழந்தையை பள்ளியில் சேர்க்க முதல்முறையாக அக்குழந்தைக்கு சாதிச்சான்றிதழ் வாங்க வேண்டியிருந்தது.

தன்னுடைய ஜாதியே தன் குழந்தையின் ஜாதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. திடுக்கிட்டான். ‘ஜாதியால் ஜாதி ஒழியும்’ என்ற அவனுடைய முழுமையான நம்பிக்கை உடைந்தது. ‘காதலால் ஒரு ஜாதி இன்னொரு ஜாதியைத்தான் அழிக்கும்.’ ஆக மொத்தத்தில் மனித மனங்கள் ஒன்றிணைந்து மனித நேயத்தைப் போற்றாத வரை ஜாதிகள் புரையோடிப் போய் மனித மனங்களில் கொலுவீற்றிருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கிப் போனான்.

அவன் யோசனை தொடர்ந்தது.

ஊர் நூலகம்

வழக்கம்போல் சோம்பல் முறித்து தூக்கத்திலிருந்து எழுந்தான் சுப்பையா. அவனுடைய அப்பா கருப்பன், அம்மா இராக்கு. இவர்கள் இருவருக்கும் ஒரே மகன் சுப்பையா. வீடென்று எதுவுமே இல்லை. குடிசையில் தான் வாழ்க்கை. விவசாயம் தான் இவர்களுக்கு ஒரு வேளையாவது சோறு போடுகிறது. மணியை பார்த்தான். மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

கருப்பன் வெளியிலிருந்து கத்திக்கொண்டிருப்பது அப்போது தான் இவனுக்குக் கேட்டது. ‘பெரிய்ய்ய பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. இவ்ளோ நேரமா காட்டுக்கத்தாக் கத்திக்கிட்டு இருக்கேன். துரை இப்பதான் எழுந்திருக்கிகளோ” என்றபடி...
“இதோ கெளம்பிட்டேன் ப்பா” என்றபடி பல்லைத் துலக்கியும் துலக்காமலும் தலை வாரியும் வாராமலும் சட்டையையும் கால்சட்டையையும் மாட்டியும் மாட்டாமலும் விழுந்தடித்துக் கொண்டு குடிசையை விட்டு வெளியே வந்து மிதிவண்டியை மிதிக்க எத்தனித்தான்.

“சாப்டாமப் போனா வயித்துக்கு என்னத்துக்கு ஆகுறது ராசா” என்றபடி பழைய சாதத்தைக் கட்டியெடுத்து கையிலேந்தியபடி வெளியே வந்தாள் இராக்கு. மகனின் தலையைக் கோதியபடி நெற்றியில் வாஞ்சையோடு முத்தமிட்டாள். சாதத்தைத் தந்துவிட்டு “பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்கா நேரத்துக்கு கெளம்பணும் ராசா. ஒழுங்காப் படிக்கணும் ராசா” என்றாள்.

“சரிம்மா” என்றபடி தன்தாய்க்கு ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு மிதிவண்டியை அழுத்தியபடி சிட்டாய்ப் பறந்தான்.

மனைவியைப் பார்த்து “இப்டியே உன் மவனைக் கொஞ்சிக்கிட்டே இருந்தன்னா பிள்ளை சோம்பேறியா மாறிருவாண்டி புள்ள” என்றான் கருப்பன்.

“கண்ணுக்கு இலட்சணமா ஒரே ஒரு புள்ளைய பெத்து வளர்க்குறோம். புள்ள அம்பூட்டுத் தூரத்துல உள்ள பள்ளிக்கூடத்துல போய் படிக்கப் போவுது. சாயுங்காலம் வரும்வரை புள்ளையப் பிரிஞ்சு நான் எப்டி இருக்கப் போறேனோ?” என்றபடி குடிசைக்குள் போனாள் இராக்கு.

“நல்ல ஆத்தா, நல்ல புள்ள” என்று மனதிற்குள் மகிழ்ந்தவாறு முனகியபடி வயக்காட்டுக்குச் சென்றான்.

சுப்பையா சற்று காலதாமதமாகவே கல்லூரிக்குள் நுழைந்தான். மிதிவண்டியை நிறுத்திவிட்டு வேகமாக வகுப்பறையை நோக்கி ஓடினான். நல்லவேளை வகுப்பிற்கு ஆசிரியர் இன்னும் வரவில்லை. அவன் இருக்கையில் அமர்ந்தான்.

சுப்பையா பொதுவாகவே அமைதியான குணம் கொண்டவன். தன் குடும்பச் சூழலையும் தன் தாய்தந்தையர் படும் இன்னல்களையும் அவர்கள் தன்மீது வைத்திருக்கும் பாசத்தையும் நன்கு உணர்ந்தவன். படிப்பில் நல்ல மாணவனாகவும் ஒழுக்கத்தில் சிறந்தவனாகவும் விளங்கினான்.

பேராசிரியர் உள்ளே நுழைந்தார். அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். பாடம் நடத்தத் துவங்கினார்.

அவனும் பாடத்தைக் கவனிக்கத் துவங்கினான்.

இவனுடைய அமைதியான சுவாபமும் படிப்பில் காட்டும் அக்கறையும் அந்த வகுப்பில் படிக்கும் வசந்தி என்ற பெண்ணுக்கு இவனோடு நட்போடு பழக வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது.

தனக்கு வேண்டிய சந்தேகங்களையெல்லாம் சுப்பையாவிடமே கேட்டுத் தெளிந்தாள் வசந்தி.

அவனுடைய மென்மையான குணம் அவளுக்கு காதல் உணர்வைத் தூண்டியது. தன்னுடைய காதலைக் காலங்கடத்தாமல் உடனே அவனிடம் தெரியப்படுத்தினாள்.

சுப்பையா அவளின் காதலைப் புரிந்துகொண்டாலும் தன் குடும்பச்சூழல் கருதி அவளிடம் எதுவும் சொல்லாமல் நகர்ந்தான்.

கல்லூரி ஓய்வுநேரம் முழுவதையும் அவன் நூலகத்திலேயே செலவழித்தான். பல நல்ல நூல்களையும் எடுத்துப் படித்தான். நூல்கள் படிக்கும் ஆர்வம இவனைத் தொற்றிக் கொண்டது.

அவன் வசிப்பது ஒரு சிற்றூரில். நூலகம், மருத்துவம் தொடங்கி அனைத்திற்குமே பல மைல் கடந்து நடந்தே வரவேண்டிய சூழல். பேருந்தும் எப்போதாவதுதான்.

வசந்தி இவனைச் சுற்றிச் சுற்றி வருவதையும் இவன் கவனித்து மிகுந்த வேதனையடைந்தான். அவளை அழைத்துத் தன்னுடைய நிலையை உணர்த்தினான். “உன் காதலை ஏற்றுக்கொண்டேன். ஆனால் காதலிக்கும் சூழலில் நான் இல்லை” என்று சொல்லிவிட்டு அவள் முகம்பார்த்தான். அவளின் முகம் மெல்ல மலரத் துவங்கியது.

மேலும் அவனே தொடர்ந்தான் “இங்க பாரு வசந்தி. எனக்குன்னு சில முக்கியமான கடமைகள் இருக்கு. நம்ம கல்லூரி நூலகத்துல இருக்கும் பல நூல்கள படிச்சபிறகு தான் என்னுடைய ஊரைப் பத்தியும் ஊர் மக்களைப் பத்தியும் கவனம் செலுத்தத் துவங்கியுருக்கேன். எங்க ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரணும். அதுக்கு முன்னாடி அறிவை வளர்க்கும் ஒரு நூலகத்தை என் ஊரில் நான் கட்டவேண்டும்.” என்று தன் பேச்சை நிறுத்தியபடி அவள் முகம் பார்த்தான். “உன்னைப் போன்றவனைக் காதலித்தது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குடா” என்றபடி அவன் தோள்மீது சாய்ந்தாள். “எங்கே வசந்தி தன்னைப் புரிந்துகொள்ளாமல்ப் போய்விடுவாளோ” என்று மனதிற்குள் பதறியபடி இருந்தவனை அவளின் வார்த்தைகள் அவனுக்குள் குதூகலிப்பை ஏற்படுத்தியது. அவனும் அவளை தன்மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தனர் சுப்பையாவும் வசந்தியும். இருந்தாலும் தன்னுடைய ஊரில் ஒரு நூலகம் கட்டவேண்டும் இன்னும் மருத்துவமனை, பேருந்துகள் என ஊரின், மக்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைப் பற்றிய சிந்தனை அவனை ஆட்டிப்படைத்தது.

தன்னுடைய மனநிலையை உடனே மனைவி வசந்தியிடம் பக்குவமாய் எடுத்துச் சொன்னான். அவளும் “உடனே ஊருக்குக் கிளம்புவோம்” என்றபடி இருவரும் அவனின் சிற்றூருக்குப் பயணமானர்.

நூலகம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசாங்கத்தின் மூலமாகவும் தன்னுடைய சொந்தச் செலவின்மூலமாகவும் நூலகம் கட்டி முடிக்கப்பட்டது.

அன்று திறப்பு விழா...

மாவட்ட ஆட்சியர் உட்பட மற்ற ஊர்ப்பெரியவர்கள் அனைவரின் வேண்டுகோளை ஏற்று சுப்பையாவும் வசந்தியும் நூலகத்தைத் திறந்து வைத்தனர்.

நூலகம் கம்பீரமாய் அவர்கள் அனைவரையும் வரவேற்றது.

அந்தக் கூட்டத்தினர் முன்னிலையில் பேச ஆரம்பித்தான் சுப்பையா “நம்முடைய ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அரசாங்க உதவியோடு முழுவீச்சோடும் செய்யவேண்டும். அதற்காக நான் என் வேலையை விட்டு விட்டு இங்கே வந்து விவசாயம் பார்த்துக் கொண்டு நம்மூர் மக்களுக்கான உதவிகளைச் செய்யப் போகிறேன்” என்றபோது கருப்பனும் இராக்கும் ஊர் மக்களும் ஊரின் மேல் இவ்வளவு மரியாதையையும் பற்றியும் வைத்திருக்கும் அவனை ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் பார்த்தது.

அவனும் அவனுடைய மனைவி வசந்தியும் வேலையை இராஜினாமா செய்யக் கிளம்பினர்.

இவர்கள் நால்வரையும் எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தது அவனின் குடிசை.

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

முகுந்தன் அன்று வழக்கம்போல் அலுவலகம் முடிந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்தான். அவனின் நினைவுகளில் எப்போதும் குடிகொண்டிருப்பவள் கயல்விழி. இப்போதும் அவளை நினைத்துக்கொண்டே பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறான். சாலையோரம் ஏதோ கூட்டம். பேருந்தை விட்டு இறங்கி ஓடுகிறான். கூட்டத்தை விலக்கிக் கொண்டு என்னவெனப் பார்க்க முனைகிறான். விபத்தொன்று நடந்திருக்கிறது. அங்கு ஒரு இளம்பெண் இரத்தமொழுக மயங்கிக் கிடக்கிறாள். அருகில் சென்று உற்றுப்பார்க்கிறான். அந்தப் பெண் வேறுயாருமல்ல கயல்விழி தான்.

அதிர்ச்சியடைந்தான் முகுந்தன். உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறான் ‘இத்தனை வருடங்கழித்து உன்னை நான் இந்தக் கோலத்திலா பார்ப்பது?’ என மனம் வெதும்பியபடி.

அவளுக்கு இரத்தம் தேவைப்படவே தன்னுடைய இரத்தத்தைக் கொடுத்தான். பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டான். கயல்விழி உடல்தேறினாள். மெல்லக் கண்விழித்துப் பார்த்தாள். எதிரே முகுந்தன். அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது. பழைய நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தாள்.

கல்லூரி நாட்களில் முகுந்தனும் கயல்விழியும் அறிமுகம் ஆனார்கள். ஆண்பெண் வித்தியாசம் பார்க்காமல் பழகிய நட்பு நாளாக நாளாக மிகவும் நெருக்கமானது.

முகுந்தனின் மனதில் அவளைத் தற்காலிகமாய்க் கூட பிரியமுடியா வருத்தம் ஏக்கம். தவித்தான் அவன். காதலை உணர்ந்தான். அவளிடம் தெரியப்படுத்தினான்.

அவளோ எப்போதும்போல இயல்பாய் பதிலுரைத்தாள் ‘எனக்கு அப்படியொரு எண்ணமில்லை’ என்று. அன்று அவன் மௌனமாய் வீடு திரும்பினான். புழுவாய்த் துடித்தான்.

ஆனாலும் கயல்விழி அவனிடம் எப்போதும்போலவே நட்போடு பழகி வந்தாள். அவளின் அருகாமை முகுந்தனுக்கு சற்று ஆறுதலைத் தந்தது.

கல்லூரியின் கடைசிநாள். அனைவரும் விடைபெற்றபடி பிரிந்து சென்றனர். முகுந்தன் அமைதியாய் அமர்ந்திருந்தான். கயல்விழி மிகவும் இயல்பாய் முகுந்தனிடம் விடைபெற்றுச் சென்றாள். அவனின் முகத்தில் படர்ந்திருந்த சோகத்தை அவள் கவனிக்கத் தவறவில்லை.

நான்காண்டுகள் ஓடிவிட்டன. இன்று, கயல்விழி விபத்தில் அடிபட்டு இரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்தாள்.

நினைவுகள் அவளின் உடலுக்குள் புகுந்தது. மருத்துவமனையில் படுக்கையில் கிடந்ததை உணர்ந்தாள். படுக்கையை விட்டு எழ முயற்சித்தாள். வலியை உணர்ந்தாள். முகுந்தன் ஓடிவந்து பார்த்தான். கண்ணீர் வந்தது அவன் கண்களில் இருந்து ஆனந்தத்தில்.

கயல்விழி அப்போதுதான் உணர ஆரம்பித்தாள் ‘படிக்கும்போதே காதலிப்பது தவறு. ஒழுக்கக்கேடானது.’ என்ற இந்த சமுதாயத்தின் போலியான ஒழுக்கமதிப்பிட்டால்தான் தன்மனதின்முன் ஒரு சுவரை எழுப்பிக்கொண்டு நான்காண்டுகளுக்குமுன் முகுந்தனின் காதலை ஏற்கமறுத்ததை.

கயல்விழி வலியையும் பொறுத்துக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தாள். முகுந்தன் அவளைத் தாங்கிப்பிடிக்க ஓடிவந்தான். கயல்விழி அவனை காதலோடு இரசிக்கத் துவங்கினாள். அவளின் தலைகோதி விட்டபடி நெற்றியில் முத்தமொன்று கொடுத்தான் முகுந்தன்.

கயல்விழியின் நினைவுகளில் ஒலித்தது மகாகவியின் பாடல்.

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

இச்சிறுகதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. மகாகவி - 01-10-2012

2. விதை2விருட்சம் (இணைய இதழ்) - 11-09-2012