கார்த்திகை என்பதன் பொருள் மழைக்காலத்தில் (கார் காலத்தில்) கையில் தீயை ஏந்துதல் என்று பொருள்.
அதாவது கார் + தீ + கை = கார்த்தீகை = கார்த்திகை.
ஏன் கையில் தீயை ஏந்த வேண்டும்?
முருகனின் இன்னொரு பெயர் கார்த்தீகையன் என்பதாகும். கார்த்தீகையன் என்ற பெயரே கார்த்திகேயன் என்றானது.
ஏன் முருகன் கார்த்தீகையன் என்று அழைக்கப் பட்டார்?
குமரிக் கண்ட அழிவிற்கு பிறகு சித்தரான முருகன் எஞ்சிய தம் மக்களை அழைத்துக் கொண்டு வந்து குடியேறிய இடம் தமிழீழத்தில் உள்ள (இன்றைய இலங்கையில் உள்ள) கதிர்காமம் என்பதாகும்.
கதிர் என்றால் கேழ்வரகு கதிர், சோளக் கதிர், நெற்கதிர் என்பதாகும்.
காமம் என்றால் கிராமம் என்று பொருள்.
5000 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் வாழ்ந்த காலத்திற்கு முன்பு கிராமம் என்ற வார்த்தை தமிழில் இல்லை. காமம் என்ற வார்த்தையே தமிழில் இருந்தது.
அன்றைய காலகட்டத்தில் காமம் என்பதற்கு கிராமம் என்று பொருள்.
விவசாயத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் முருகனே. முருகன் போர்க்கலைகள் (Martial Arts) தெரிந்த படைத்தளபதி.
விவசாயத் தொழில்நுட்பம் முதன்முதலில் தொடங்கிய இடம் தமிழீழம் தான். தமிழீழத்தில் உள்ள கதிர்காமம் தான். விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டு தமிழீழத்தில் யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குபேரன் என்ற மன்னன் தன் மக்களோடு செல்வச் செழிப்போடு வாழ்ந்தது தமிழர்களாகிய நம்முடைய வரலாறு. குபேரன் போல் நாமும் செல்வ செழிப்போடு நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைக்க வேண்டும் என்பதற்காகத் தான் நாமும் நம்முடைய வீட்டிலோ வியாபாரம் செய்யும் இடத்திலோ குபேர பொம்மையை வைத்திருக்கிறோம்.
10000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசிவன் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாடும் தமிழீழமும் இணைந்த, தமிழீழத்திற்குக் கீழே பரந்து விரிந்த நிலப்பரப்பாய் குமரிக்கண்டத்தில் மக்கள் அனைவரும் குறிஞ்சி நிலமாகிய மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த காலமே கிரித யுகம் (கிருத யுகம்) ஆகும். கிரி என்றால் மலை (உதாரணத்திற்கு சதுரகிரி) என்று பொருள். கிரித யுகம் என்றால் மக்கள் மலைகளில் வாழ்ந்த யுகம் என்று பொருள்.
மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த ஆதிகாலத் தமிழர்கள் மலைக்குறவர்கள் என்றும் வரையர்கள் (பறையர்கள்) என்றும் அழைக்கப் பட்டனர்.
ஆதிசிவனும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மலைக்குறவராகவும் வரையராகவும் (பறையராகவும்) அறியப்பட்டார். தமிழர்கள் அனைவருமே ஆதிகாலத்தில் வரையர் (பறையர்) மற்றும் குறவர் இனத்திலிருந்து தோன்றியவர்கள் தாம்.
வரை என்றால் தமிழில் மலை என்ற பொருளும் உண்டு. வரையர் என்றால் மலையில் வாழ்பவர் என்று பொருள்.
மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக காலப்போக்கில் மனிதர்கள் மலையிலிருந்து இறங்கி முல்லை நிலமாகிய காடுகளில் வாழ்ந்தனர். தரையில் மக்கள் வாழ்ந்ததால் அந்த யுகம் தரைத யுகம் (திரேதா யுகம்) என்று அழைக்கப் பட்டது.
மக்கட்தொகை பெருகப் பெருக, உணவின் தேவை அதிகமானது. அப்போது வாழ்ந்த முருகன் காடுகளில் ஒரு பகுதியை அழித்து தீயிலிட்டுக் கொளுத்தி, பனைமரக் காடுகளைக் கொளுத்தி சமநிலமாக்கி விவசாயம் என்ற உயரிய தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.
முருகன் பனைமரக் காடுகளை கொளுத்தி விவசாயத்தை தொடங்கிய காலம் மழைக்காலம் (கார் காலம்) தொடங்கிய இந்த கார்த்தீகை மாதத்தில் தான். கார்த்தீகை என்பதே மருவி கார்த்திகை என்றானது.
முருகன் பனை மரக் காடுகளை கொளுத்தி விவசாயத் தொழில்நுட்பத்தை கண்டறிந்ததன் நினைவாகத் தான் கிராமங்களில் சொக்கப்பனை கொளுத்தி முருகனையும் விவசாயத்தையும் வழிபடுகின்றனர்.
குமரிக் கண்ட அழிவிற்கு பிறகு தமிழர்களின் மக்கட்தொகை குறைவதைக் கண்ட முருகன் மக்கட்தொகையை உயர்த்த முடிவுசெய்து இரும்புச் சத்து மிகுந்த, இனப்பெருக்கத்திற்கு உதவி செய்யும் ஒரு மரத்தை அனைவரின் வீட்டிலும் நட்டு வளர்க்கச்சொல்லி பரிந்துரைத்தார் முருகன். அந்த மரம் முருகனின் பெயரால் முருகன் மரம் என்றே அழைக்கப்பட்டு நாளைடைவில் இன்று முருங்கை மரம் என்றானது. முருகனின் நினைவாகத் தான் இன்றும் நாம் நம் வீட்டில் முன் பகுதியிலோ அல்லது பின் பகுதியிலோ முருங்கை மரம் வளர்க்கிறோம். முருங்கை மரத்தின் இலை, காய், பூ என அனைத்தும் இரும்புச்சத்து மிகுந்தவை.
நாமும் இந்த கார்த்திகை மாதத்தில் முருகனையம் விவசாயத்தையும் போற்றும் விதமாகத் தான் வீடுகளில் தீபமேற்றுகிறோம்.