Tuesday, April 27, 2010

எங்கே நீ?

பச்சிளங்குழந்தை
தாயைத்தேடி அலைவது போல்
என் மனக்குழந்தை
உனை நினைத்து அழுகிறது!

உனைப் பற்றி யாரிடம் பேச...?
என்னருகில் இல்லையே நீ!!

Sunday, April 25, 2010

காதலே சுகம்!

கண்ணீர் வடித்து
வாழ்வதை விட
கவிதைகள் வடித்து
வாழ்வதில்
சுகமெனக்கு!

கடவுளை தொழுது
வாழ்வதை விட
நம் காதலை தொழுது
வாழ்வதில்
சுகமெனக்கு!

காற்றை சுவாசித்து
வாழ்வதை விட
நம் காதலை தொழுது
வாழ்வதில்
சுகமெனக்கு!!

இனியொரு புதுவிதிசெய்வோம்!

கடந்த 2009 ம் ஆண்டு ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலையை அறிந்தபோது எழுதிய கவிதை.



கண்சிமிட்டும்
கருவறை மொட்டுகள்
கண்திறக்கும்முன்னே
கல்லறையில் பூத்ததென்ன?

மொழியறியாக் குழந்தைகள்
மொழியறியும்முன்னே - தமிழ்
மொழிபேசியதாய் காரணங்காட்டி
பலிகொடுக்கப்பட்டதென்ன?

கடலன்னை தாலாட்டும்
எழில்மிகு தீவு!
புத்தனை கடவுளாய்
வழிபடும் நாடு!
இரத்தத்தில் மிதக்கிறது
கண்டீர்!!

ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்படாமலேயே
ஊர் அடங்கியது
உயிர்கள் பிரிந்தன
குட்டித்தீவில்...

அகதியாய் திரிந்த
நம் தாய்த்தமிழ்மொழிக்கு
அடைக்கலம் கொடுத்த
ஈழத் தமிழர்கள்
அகதிகளாய் அடைக்கலம்தேடி!

தமிழ்மொழியின் மானங்காத்த
ஈழ உறவுகள் ஈன உயிர்களாய்...!

போதும்
இனவெறியின் ருத்ரதாண்டவம்!
அந்தோ...
எம்தமிழ்மக்கள் உயிர்பாவம்!!

வீதிகளெங்கும் பிணக்குவியல்!
வறுமையால் அல்ல...
பிணியால் அல்ல...
இயற்கை சீற்றத்தால் அல்ல...
இனவெறியின் சேட்டையால்!!

தமிழகத்தின் மௌனம்!
விளைவு...
தமிழினத்தின் மரணம்!!

இத்தோடு போகட்டும்
இனப்படுகொலை!
அன்பிலே கிடைக்கட்டும்
விடுதலை!!

மனஉறையில் உள்ள
இனவெறிதனை
புதுப்பறை அடித்து
தனிச்சிறையில் வைப்போம்!!

இனியொரு புதுவிதிசெய்வோம்!!

மரங்களை வளர்ப்போம்!

யாருமே தவமிராமல்
இயற்கை நமக்களித்த
வரங்கள்!
மரங்கள்!!

உலக உயிர்களையெல்லாம்
காத்துக்கொண்டிருக்கிற
கடவுள் நீட்டிய
கரங்கள்!
மரங்கள்!!

காற்று வரும் திசையை
நம் கண்களுக்கு உணர்த்தும்
கலங்கரை விளக்கம்!
மரங்கள்!!

உழைத்துக் களைத்த
உழவன்
உறங்கத் துடிக்கும்
தாய்மடி!
மரங்கள்!!

நம் சுவாசக்காற்றை
சுத்திகரித்து அனுப்பும்
சுத்திகரிப்பு ஆலைகள்!
மரங்கள்!!

தாயில்லா குழந்தைகட்கும்
சேயில்லா தாய்தந்தையர்க்கும்
குடிசைகள்கூட இல்லா
ஏழைகட்கும்
தாயாய்... சேயாய்...
குடிசைகளாய்...
மரங்கள்!!

அன்பாலும் கருணையாலும்
பிறரிதயந்தொட்ட
ஞானிகளைப் போல்
இதமான தென்றலால்
வான் மேகங்களை
வருடிக்கொடுத்து
மழைபொழிய வைக்கும்
மகாத்மாக்கள்!
மரங்கள்!!

செடியாய் கொடியாய்
இலையாய் பூவாய்
காயாய் கனியாய்
விதையாய் விறகாய்
சருகாய் மருந்தாய்
தன்னையே அர்ப்பணிக்கும்
தியாகச் செம்மல்கள்!
மரங்கள்!!

ஜாதிமத இனமொழி
வேறுபாடின்றி
பாரினில் உயர்ந்த
நம் பாரத தேசத்தினைப்போல்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை
உயிர்கள் அனைத்திற்கும்
அடைக்கலம் தரும்
ஆலயங்கள்!
மரங்கள்!!

மரங்களைப் பார்த்தாவது
மதங்கொண்ட மனிதர்களின்
மனங்கள் மாறட்டுமே!

மரங்களை வளர்ப்போம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 20-11-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) - 03-12-2011

3. காயல்பட்டினம் (இணைய இதழ்) - 31-01-2012

அன்பெனும் உணர்வு!

உன்னை நான்
'அம்மா' என்று
அழைக்கட்டுமா?

நீ என்
அன்னையாகவே
என்னுள் வாழ்கிறாய்!

உன்னைக் காதலிப்பதற்கான
காரணம் என்னவென்று
கேட்டாய் நீ!

காரணமின்றி
வருவது காதல்
என்றேன்!

உண்மைதான்!
காரணகாரியங்காட்டும்
பகுத்தறிவிற்கு அப்பாற்ப்பட்டது
அன்பெனும் உணர்வு!!

காதல் புயல்!

உன்னைப் பார்த்ததும்
உருவான புயல்சின்னம்
இன்னுங்கடக்கவில்லை
என் இதயககடலைவிட்டு...!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் - 30-07-2006

2. முத்தாரம் - 06-08-2006

3. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

தனிமையில்...

2006 ம் ஆண்டு ஒருநாள் வகுப்புகள் முடிந்து வெளியே வரும்போது அவளிடம் பேச போனேன். அவளுடைய தோழிகள் அவளருகில் அதிகமாய் இருந்தனர். 'நான் தனியே இருக்கும்போது என்னோடு பேசு சுரேஷ்' என்று செல்லமாய் கடிந்துகொண்டாள். அவள் சொன்ன வார்த்தைகளை வைத்தே எழுதிய கவிதைஇது.


என் உத்தரவின்றி
என்னுள்ளே நுழைந்தவள்
நீ!

உத்தரவிடுகிறாய்
'என்னிடம்
தனிமையில் மட்டும்
பேசுடா' என்று!

அடிப் பைத்தியமே...
இத்தனை நாளாய்
தனிமையில் தானடி
பேசுகிறேன் உன்னிடம்!!

காதல்!

சூதும்வாதும் போய்
அன்பெனும் புதுவேதம்
ஓத வைப்பது...!!

காதல் கண்ணாடி!

என் முகம்காட்ட
இருக்கலாம்
ஆயிரம் கண்ணாடிகள்!

என்னை
அழகாய்க் காட்டும்
கண்ணாடி
என்னவள் மட்டுந்தான்!!

மனிதவிலங்கு!

மனிதா...
நீ ஒரு சமூகவிலங்கு!

அதனால்தானோ
உனக்கும் பிடிக்கிறது
'மதம்'!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. குடும்ப நாவல் – 01-10-2005

2. முத்தாரம் – 04-02-2007