Sunday, May 16, 2010

காதல் குற்றவாளி!

தொலைக்காட்சியில்
தொல்லை செய்தேன்
தொலைந்து போனது
என்னிதயமென்று...!

வானொலியில்
வழக்கு தொடுத்தேன்
வரவில்லை
என்னிதயமென்று...!

நாளிதழில்
நான் எழுதினேன்
நினைவில் இல்லை
என்னிதயமென்று...!

காவலகத்தில்
கர்ஜித்தேன்
காணவில்லை
என்னிதயமென்று...!

எங்கிருந்தோ
ஒரு குரல் வந்தது!
என்னிடத்தில் தான்
என்னவன் இதயமென்று!!

இப்போது
புரிந்துவிட்டது எல்லாம்!
எனக்கும்
ஒருத்தி இருக்கிறாளென்று...!

அனைவரிடத்திலும்
அழுதுவிட்டேன் நான்!

சொல்லிவிட்டேன்
சொர்க்கத்தில்!
இவள்
என்னவள் தானென்று...!

நான்தான் குற்றவாளி
என்னவளே...
உன்னை புரிந்துகொள்ளாத
நான் மட்டுந்தான்
குற்றவாளி!!

சந்தோசம் தானெனக்கு!

அன்பே...
உன்னால்
சந்தோசம் தானெனக்கு!
என்விதியால்
தோஷம் தானெனக்கு!!

இரவான
என் மரணமுடிவில்தான்
பகலான நீ பிறக்கிறாய்!
நீ தினம்தினம் பிறக்க
நான் பலமுறை மடிவேன்!
சந்தோசம் தானெனக்கு!!

சூரியனான
என் ஒளிகொஞ்சம் வாங்கி
வான்மதியான நீ
குளிர்விக்கிறாய் மானுடத்தை!
நீ தினம்தினம் ஒளிகொடுக்க
நான் தவறாமல் உதிப்பேன்!
சந்தோசம் தானெனக்கு!!

இசைக்கருவியான
என் உதவிகொஞ்சம் வாங்கி
கவிதை வரிகளான நீ
வருடுகிறாய் பிறரிதயத்தை!
நீ மென்மேலும் சிறக்க
நான் மெதுமெதுவாய் அதிர்வேன்!
சந்தோசம் தானெனக்கு!!

மரமான
என் அசைவில் துவங்கி
காற்றான நீ
வாழவைக்கிறாய் உயிர்களை!
உன் சேவை துவங்க
நான் சுறுசுறுப்பாய் அசைவேன்!
சந்தோசம் தானெனக்கு!!

அன்பே...
உன்னால்
சந்தோசம் தானெனக்கு!
என்விதியால்
தோஷம் தானெனக்கு!!

பாரதி!

கவி பிறந்தான்! - மகா
கவி பிறந்தான்! - தமிழ்க்
கவி பிறந்தான்!!

அரிதாய்ப் பிறந்தவன் இவன்! - தமிழனின்
அச்சம் சாகப் பிறந்தவன் இவன்!!

பூமியில் உயர்ந்தவன் இவன்! - தமிழனின்
சாமியாய் வந்தவன் இவன்!!

செவி நனைத்தவன் இவன்! - கவித்தேனால்
செவி நனைத்தவன் இவன்!!

சிறுவயதில் சென்றானே பாடசாலை!
சென்றும் எழுதினானே கவிச்சோலை!!

பலமொழிகள் கற்றவன் என்றாலும்
விடவில்லை தொன்மொழி தாய்த்தமிழை!!

'காலத்தை மீறி கனவுகாணாதே...! - புதுக்
கோலக் கனவிலினி மிதக்காதே...!!
சொன்னானே இவன்தந்தை அறிவுரை! - சொல்லியும்
செய்யவில்லையே இவனுக்குள் பரிந்துரை!!

முடிந்தது இவன்தந்தை மரணஓலை! - முடிந்ததும்
தொடங்கியதே இவனுக்குத் திருமணமாலை!!

வந்தாளே மங்கையொருத்தி! - பணிவிடை
செய்தாளே உடல்வருத்தி! - குடும்பத்தைக்
காத்தாளே வழிநடத்தி!!

கவிதையும் பாடினான் இவன்! - தெருவில்
கழுதையும் சுமந்தான் இவன்!
அந்நியனை பயமுறுத்தியன் இவன்! - பாரினில்
இந்தியனை செயல்படுத்தியன் இவன்!!

கழியெடுத்தவன் இவன்! - தமிழுக்கு
ஒளிகொடுத்தவன் இவன்!!

இவனை ஊர்சொன்னதே...
கிறுக்குப் பிடித்தவனென்று!
இவன் இருந்தானே
முறுக்குமீசை கொண்டு!!

பார்வை கொண்டவன் இவன்! - நேர்கொண்ட
பார்வை கொண்டவன் இவன்! - புதிய
பார்வை கொண்டவன் இவன்! - பேரும்
பகைவனையே எரித்தவன் இவன்!
சூரியனையே சுட்டெரித்தவன் இவன்!!

கவிநூல் பலபடைத்தான் இவன்! - புதுப்
பூணூல் அணிவித்தான் இவன்! - தமிழனுக்கு
பூணூல் அணிவித்தான் இவன்!!

மதங்கொண்டான் இவன்! - மனித
மதம் கொன்றான் இவன்!!

களிறு அடித்துச் சாய்ந்தான் இவன்! - எனினும்
பிளிறவில்லையே இவன்!!

பணிசெய்தான் இவன்! - தமிழ்ப்
பணிசெய்தான் இவன்! - வறுமையால்
பிணிகொண்டான் இவன்!!

சாய்ந்துவிட்டான் இவன்! - புவியில்
சாய்ந்துவிட்டான் இவன்!!
சாய்ந்ததா ஜாதி?

மடிந்துவிட்டான் இவன்! - மண்ணுக்குள்
மடிந்துவிட்டான் இவன்!!
மடிந்ததா மதம்?

இவன் மரணம்
விதி செய்த சதியா?
சதி செய்த புதுவிதியா?
தமிழன்
தனிமதி கொண்டு
இவன்போல்
இனியொரு புதுவிதி செய்வானா?

பாருக்கு அதிபதியாய்...
புரட்சிக்கு பாரதியாய்...
பூவுலகில் சாரதியாய்...
ஜாதிகளை சாய்த்தால்...
மதங்களை மாயத்தால்... - மனித
மனங்களை மாற்றினால்... - புனித
குணங்களை ஏற்றினால்...
மனிதனாய் மாறுவான் தமிழன்! - பூவுலகின்
புனிதனாய் மாறுவான் தமிழன்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011

Friday, May 7, 2010

சுதந்திர தாகம்!

நள்ளிரவில் வாங்கினோமே
சுதந்திரம்!
நல்ல இரவில் வாங்கினோமா
சுதந்திரம்?

வணிகம் செய்ய
பணிந்து வந்தான்
பறங்கியன்!
கனிந்து விட்டன
பாரத இதயங்கள்!
துணிந்து விட்டான்! - அடி
பணிய வைத்தான்
இனித்த இதயங்களை!!

கூடிவிட்டான் குள்ளநரியாய்! - மனிதத்தை
கூவிவிற்றான் சிறுபொரியாய்!!

கொடிபிடித்தன
அடிபணிந்த கைகள்!
அடிகொடுத்தன அகிம்சைகள்!
அந்நியனுக்கு அது இம்சைகள்!!

விடாமல் பிடித்தான்! - கொடியை
விழாமல் பிடித்தான்!!
(திருப்பூர் குமரன்)
முடிவெடுத்தான்! - அகிம்சையால்
அடிகொடுத்தான்! - தடியை
தேடிப்பிடித்தான்!!
(மகாத்மா காந்தி)
கவிபிறந்தான்!- மகா
கவிபிறந்தான்! - தமிழ்க்
கவிபிறந்தான்!
செவிநனைத்தான்! - கவித்தேனால்
செவிநனைத்தான்! - பாரதப்
புவியும் உய்யத்தான் - அவன்
கவியும் வளர்த்தான்! - அன்று
புவிக்குள் புதைந்தான்! - புதைந்தும்
தாகம் தீர்த்தான்! - சுதந்திர
தாகம் தீர்த்தான்!!
(மகாகவி பாரதி)

வெள்ளையன் வேடத்தில்
விதி செய்தது சதி! - இந்தியனின்
மதி செய்தது புதுவிதி!!

வேல்கொண்டு
வேரோடு சாய்க்கத்தான் - சுதந்திர
வெறியோடு தொடுத்தான்
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை!!

பதறிவிட்டன பறங்கிப்படை! - குண்டுகளை
சிதறவிட்டன பீரங்கிப்படை!!
சிந்திவிட்டன உதிரமடை! - எனினும்
சிந்தவில்லை உறுதிமடை!!

அடிபணிந்தான் அந்நியன்! - மனிதத்தின்
அடிமைசாசனம் எரித்தான்!!

சுவாசித்தோம் சுதந்திரத்தை! - நாம்
நேசித்தோம் தேசத்தை! - சோர்வில்
வாசிக்க மறந்தோமே மனிதத்தை!!

சாவிஎடுத்தன ஜாதிகள்! - மனித
ஆவிகுடித்தன ஜாதிகள்!!

குருதிகுடித்தன ஜாதிகள்! - மன
உறுதிகெடுத்தன ஜாதிகள்!!

மதங்கொண்டன மதங்கள்! - மனித
மனங்கொன்றன மதங்கள்!!

திருந்திய இந்தியாவில்
விருந்தோம்பல் போய் - இன்று
வீறுகொண்டன தீவிரவாதம்! - கொடுமைகளால்
வீதிகளில் பரவியது தீரதம்! - இதனால்
கோவில்களில் பரவியது தீமிதிவிரதம்!!

காலமே...
ஏனிந்தக் கோலம்?
நீயே எங்களை
காலமாக வைப்பாயோ?
நீயே எங்களின்
காலனாக மாறுவாயோ?

பாரிலினி பிறப்பானா பாரதி?
விண்ணிலிருந்து குதிப்பானா திருப்பூர்குமரன்?
கண்ணிலினி தெரிவானா காந்தி?
மண்ணிலினி ஜனிப்பானா மனிதன்?

காலங்கள் மாறினால்... - மரண
ஓலங்கள் மாறினால்...
ஜாதிகள் செத்தால்...
மதங்கள் மாய்ந்தால்...
தீவிரவாதம் தீர்ந்தால்...
ஊழல் ஒழிந்தால்...
மனிதமனங்கள் மாறினால்...
மனிதநேயம் வளர்ந்தால்...
அன்புமட்டுமே
உலகப்பொதுமொழியானால்...
அன்று கிடைக்கும்
தந்திரமில்லா சுதந்திரம்!!

நள்ளிரவில் வாங்கினோமே
சுதந்திரம்!
நல்ல இரவில் வாங்கினோமா
சுதந்திரம்?

பொய்க்காதல்!

சொல்லத் தெரியவில்லை
எனக்கு!
உன்னைக் காதலிக்கிறேன்
என்று!

காதல்கவிதைகள் பல எழுதி
வாசித்தேன் உன்னிடம்...!
நீ கூறினாய் ஒரே வார்த்தையில்!
'கவிதைக்கு பொய்யழகு' என்று...!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 16-05-2006

கவிதையும் குழந்தையும்!

ஒரு பெண்ணுக்கு
பிரசவவலியைக் கொடுப்பது
ஒரு ஆண்!

ஒரு ஆணுக்கு
இதயவலியைக் கொடுப்பது
ஒரு பெண்!!

ஒரு பெண்ணுக்கு
பிரசவவலி வந்தால்
பிறப்பது குழந்தை!

ஒரு ஆணுக்கு
இதயவலி வந்தாள்
பிறப்பது கவிதை!

சித்திரம் பேசுதடி!

சித்திரம் பேசுதடி! - புதுச்
சித்திரம் பேசுதடி!!
என்நெஞ்சில் உன்நினைவே
நித்தமும் வீசுதடி!!

உன்நெஞ்சம் தஞ்சமென்றே
என் ஆவியும் போனதடி!
என்நெஞ்சில் உன்நினைவே
பத்திரம் ஆனதடி!!

உன்னுருவம் எங்கென்றே
என் கண்களும் தேடுதடி!
என்பருவம் புரியாமலே
என்கவிதையும் பாடுதடி!!

பேருந்து பயணத்தினாலே
என்வாழ்க்கையும் மாறுதடி! - நாம்சேர
ஆருடம் ஒன்றைத்தானே
என்வார்த்தையும் கூறுதடி!!

சித்திரம் பேசுதடி! - புதுச்
சித்திரம் பேசுதடி!!
என்நெஞ்சில் உன்நினைவே
நித்தமும் வீசுதடி!!

மாணவனும் கடவுளும் சந்தித்தால்...

2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னுடைய இலக்கிய நண்பர்கள் சிலர் என்னையும் இன்னுமொரு கவியன்பரையும் அழைத்து 2006 ம் ஆண்டு தமிழர் திருநாளையொட்டி கலைநிகழ்ச்சிக்காக கவிபாட இரண்டு தலைப்புகளைக் கொடுத்தனர். எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ‘மாணவனும் கடவுளும் சந்தித்தால்’. காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கலைநிகழ்ச்சி தொடங்கியது. காலதாமதமாக தொடங்கியதால் கவியரங்கம் நடைபெறவில்லை. கண்ணதாசன் மணிமண்டபத்தில் என்னால் மேடையேறி வாசிக்க முடியாமற்போன கவிதை இதுதான்.


மாணவன்
மண்டியிட்டு வணங்கினான்!
மனத்தைக் கடந்தவனை
மனதால் தவம்செய்தான்!

உள்ளத்தைக் கடந்தவன் - அவன்முன்
உடனே வந்தான்!!

'உள்ளத்தைக்கடந்தவனே!
உருவமில்லாத் தலைவனே!!
உனக்கு
உருவம் கொடுக்க நினைத்து

மதம் பிரித்து - பின்
மதமும் பிடித்து
மண்ணுக்குள் மாய்கிறது
மானுடம்! - இதை
மாற்ற வழியிருந்தால்
நீ சொல் ஆருடம்!!

சமயம் பார்த்து
சமயங்கள் சாய்க்கிறது மானுடத்தை!
ஜாதிகள் சாய்க்கிறது தமிழ்க்குலத்தை!
தீவிரவாதம் பரப்புகிறது தீரதத்தை!!

இவையெல்லாம் ஒருபுறமிருக்க...
இரவு உறக்கம் வரமறுக்க...
வறுமை எனைவருத்தியெடுக்க... - விடிந்ததும்
வெறுமையில் எழுந்திருக்க...
திறமையிருந்தும் உலகமெனை வெறுக்க... - நானும்
பொறுமையுடன் காத்திருக்க...

சாயம் போனது மனிதநேயம்!
என்று சாயும் சாதிமதபேதம்?'

கதறி அழுதான்! - கடவுளின்
காலடி தொழுதான்!!

கடவுள் பார்த்தான்! - மாணவனின்
கண்ணீரைத் துடைத்தான்!!

'உள்ளத்தில் உள்ளதை சொல்லடா!
அகிலத்தில் நல்லதைச் செய்யடா!!
கள்ளம்கபடமில்லை வாடா!
சகலமும் நம்கடமை தானடா!!
வெள்ளமென திரண்டு செல்லடா! - என்வடிவில்
பகலவன் ஒளிகொடுப்பான் நம்படா!!'

சொல்லிவிட்டு மறைந்தான்! - மாணவன்
நம்பிக்கையுடன் விரைந்தான்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. புதிய சிற்பி – 01-03-2006

2. கோவை உலகத் தமிழ்ச்சங்கம் - 09-12-2011

என் அம்மா!

எனை
பத்துமாதம் சுமந்துபெற்ற
பத்தரைமாற்றுத் தங்கம் நீ!

எனைக்காக்க
சித்திரைமாத வெயிலுந்தாங்கி
நித்திரையை தொலைத்தவள் நீ!

கருவறையில் உதைத்ததையும்
சிறிதும் பதைபதைக்காமல்
செவிவழிக் கதைகதையாய்
இசைகூட்டி கேட்டு மகிழ்ந்தவள் நீ!

பொறுமைக்கும்
பொறுமையைக் கற்றுத்தந்து
உயிரற்ற பழங்காவியங்களுக்கும்
உயிர்கொடுக்கும் ஓவியம் நீ!

கண்பார்வையற்ற உயிர்களுக்கும்
கண்கண்ட கடவுள் நீ!

வாழ்க்கைப் பயணம்
பாதை மாறும்போதெல்லாம் - உள்ளன்பான
வார்த்தைச் செறிவால்
கீதை சொல்பவள் நீ!

அக்கறையோடு அறிவுரை சொல்லி
வாழ்வியல் நெறிமுறைகளை
வாழ்ந்து காட்டுபவள் நீ!

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு போல்
கறுப்பாய்ப் பிறந்த எனனை
மண்ணிலே வெட்டியெடுத்த
வைரமென்றெண்ணி வளர்த்து வருபவள் நீ!

பரிவையும் பாசத்தையும் - குறைவின்றி
வாரிவாரி வழங்கும் வள்ளல் நீ!

ஐந்தறிவு ஆநிரைகளும்
(அம்)மா என்றழைக்கின்றனவே!
அவைகளுக்கும் என்தாய்(த்தமிழ்)மேல் பற்றோ...!

நிறைகுடம் நீர்தளும்பல் இல்! - உன்
பரிவிற்கும் முடிவுண்டோ சொல்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 27-02-2006

Sunday, May 2, 2010

கவிதையும் காதலும்!

என்னவளுக்கு
நான் எழுதும்
கடிதம்!
கவிதை!!

என்னவள்
எனக்குக் கொடுக்கும்
கவிதை!
காதல்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் – 03-12-2006