Friday, May 7, 2010

என் அம்மா!

எனை
பத்துமாதம் சுமந்துபெற்ற
பத்தரைமாற்றுத் தங்கம் நீ!

எனைக்காக்க
சித்திரைமாத வெயிலுந்தாங்கி
நித்திரையை தொலைத்தவள் நீ!

கருவறையில் உதைத்ததையும்
சிறிதும் பதைபதைக்காமல்
செவிவழிக் கதைகதையாய்
இசைகூட்டி கேட்டு மகிழ்ந்தவள் நீ!

பொறுமைக்கும்
பொறுமையைக் கற்றுத்தந்து
உயிரற்ற பழங்காவியங்களுக்கும்
உயிர்கொடுக்கும் ஓவியம் நீ!

கண்பார்வையற்ற உயிர்களுக்கும்
கண்கண்ட கடவுள் நீ!

வாழ்க்கைப் பயணம்
பாதை மாறும்போதெல்லாம் - உள்ளன்பான
வார்த்தைச் செறிவால்
கீதை சொல்பவள் நீ!

அக்கறையோடு அறிவுரை சொல்லி
வாழ்வியல் நெறிமுறைகளை
வாழ்ந்து காட்டுபவள் நீ!

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு போல்
கறுப்பாய்ப் பிறந்த எனனை
மண்ணிலே வெட்டியெடுத்த
வைரமென்றெண்ணி வளர்த்து வருபவள் நீ!

பரிவையும் பாசத்தையும் - குறைவின்றி
வாரிவாரி வழங்கும் வள்ளல் நீ!

ஐந்தறிவு ஆநிரைகளும்
(அம்)மா என்றழைக்கின்றனவே!
அவைகளுக்கும் என்தாய்(த்தமிழ்)மேல் பற்றோ...!

நிறைகுடம் நீர்தளும்பல் இல்! - உன்
பரிவிற்கும் முடிவுண்டோ சொல்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 27-02-2006

No comments: