Wednesday, September 22, 2010

நட்பு!

பேசித்திரிவதல்ல
நட்பு! - உயிரை
வாசிக்கச் சொல்வதுதானே
நட்பு!!

அம்மா!

என்னுயிரின் அகரமே!
பொறுமையின் சிகரமே!!

என்னை
பத்துமாதம் சுமந்தாலும்
உனக்கென
சொத்துசுகம் தேடவில்லையே நீ?!!

உடலில்லா உயிருக்கும்
உயிரில்லா உடலுக்கும்
மதிப்பில்லை இவ்வுலகில்!
என்னுடலில் என்னுயிராய்
என்னுயிரின் என்னுயிராய்
இருப்பவளே...!!

அம்மா என்ற சொல்லுக்கிணையாய்
அகிலத்தில் வேறு சொல்லில்லையே
அம்மா!!

அம்மா!
அந்தப் பெயரிலேயே
அன்பு தெரிகிறது பார்!!

தாலாட்டுப் பாட்டில்கூட
பூபாளங்கள் இசைக்கிறாயே
தாயே!!

இன்னும்பல ஜென்மங்களில்
உன்மகனாகவே பிறக்க
வரம்கொடு தாயே!
உன் காலடிபட்ட மண்ணில்
ஆலயங்கள் பல எழுப்ப...

இயற்கை!

அந்திப் பொழுதில் 
வானம் உடுத்தும் 
நாணத்துகிலோ முகில்! 

 கதிரவன் உடுத்தும் 
நாணத்துகிலோ 
அந்திச்சிவப்பு! 

 மேகங்கள் இசைக்கும் 
இராகங்களோ 
இல்லை 
மேகக்காதலர்களின் ஊடல்தானோ 
இடி! 

 மழையரசி வந்துபோனதன் 
அடையாளம்தானோ 
வானவில்! 

 முகில்சிந்தும் தண்ணீரும் 
மனிதன் சிந்தும் கண்ணீரும் 
இயற்கையின் நியதி! 

 மனிதனை 
இன்பத்தையும் துன்பத்தையும் 
சமமாய்ப் பார்க்கச்சொல்லி 
அமைதியாய் வாழ்கிறது 
இயற்கை!!

Monday, September 20, 2010

உன்னிடம்தான் பேசுகிறேன்!

neural networks external exam க்கு படித்துக் கொண்டிருந்த போது எழுதிய கவிதை. நான் விடுதியில் அமர்ந்தபோது அவளை நினைத்து அழ ஆரம்பித்தேன். என் அழுகையைப் பார்த்து இயற்கையும் அழுதது. அதாவது மழை பெய்தது.


கவிதைவழி உன்பெயரெழுதி
காற்றுவழி என்னுயிரனுப்பி
புவிதனிலே அன்பைத்தேடி
புலம்பித்தள்ளும் புலவன்நான்!
செவியிரண்டால் சுவாசம்செய்து
சேர்த்துவைத்த ஆசைக்காதல்
புவிதனிலே மாண்டபின்னே
பூலோகம் அழுததென்ன!!

மழலையாய் வாழ்ந்துவிட்டு
மங்கையுன்னைக் கண்டபின்னே
உலகைப் புரிந்துகொள்ள
உன்னால்வழி பிறந்ததடி!
வில்லெடுத்து வீரத்தில்
விளைந்தவன் ஏகலைவன்! - தமிழ்ச்
சொல்லெடுத்து கவிஎழுதிச்
செல்கிறான் உன்தலைவன்!!

இளைஞனே போராடு!

இளைஞனே...
பகலில் உன்நிழலும்
உனக்கு உறுதுணையாய்
உன்னுடனேயே
இருப்பதாய்த் தோன்றும்!

பகல் இரவாவதுபோல்
வெற்றி மாறி தோல்வி வந்துவிடடால்
உன் நிழல்கூட
உன்னைவிட்டு விலகிவிடும்!

பிறரின் விமர்சனங்கள்
உன்னை சித்ரவதை செய்யும்!
உற்ற நண்பர்கள்கூட
உன்னைப்பற்றி தவறாய்
விமர்சிப்பார்கள்!
காலனின் பாசக்கயிறுகூட
உன்தோளில் ஏற
முயற்சிக்கும்!

என்றுமே உனக்கு
உறுதுணையாய் நிற்பது
உன்னில் இருக்கும்
மனஉறுதியும்
தன்னம்பிக்கையுந்தான்!

இதைப்புரிந்துகொண்டு போராடு!
வெற்றிக்கடலில் நீ நீராடு!!

வெற்றி உன்வசம்!

கடந்துவந்த பாதை
காவியமாகலாம்!
நட்பில்
களங்கம் இல்லாதவரை...

உதடுகள் பேசாக்
காதல்கூட
உயிரை உருக்கலாம்!
காதலில்
கண்ணியம் குறையாதவரை...

கண்ணீரில் வாழ்ந்த
வாழ்க்கைகூட
கானல்நீராய்ப் போகலாம்! - நாளை
உன்னத நிலையை அடையலாம்!!
காலங்கள் மாறிக்கொண்டிருக்கும்வரை...

உன் கண்ணீர்த்துளிகள் கூட
நாளை வைரங்களாய் மாறலாம்!
உன்னில்
தன்னம்பிக்கைத்தீ
கொழுந்துவிட்டு எரியும்வரை...

உன் கைகள் அசைந்தால்கூட
வெற்றி உன்வசமாகலாம்!
உன்னில் முயற்சிவேள்வி
அணையாதவரை...

தொடர்கதை!

உன்னை விரும்பினார்கள்
அனைவரும்!
அவர்களில்
நானும் ஒருவன்!

என்னை வெறுத்தார்கள்
அனைவரும்!
அவர்களில்
நீயும் ஒருத்தியாய் இருந்துவிடாதே!

இந்த சமுதாயமே
எனக்குப் பிடிக்காதபோதும்
உன்னை மட்டும்
எனக்குப் பிடித்ததற்கான
காரணம் என்னம்மா?

உன் சிரிப்பால்
சிதறிவிட்டது என்னிதயம்!
உன் நாவில் சுரக்கும்
உமிழ்நீர் போதும்!
சிதறிய துகள்களை
ஒட்டவைக்க...

எப்போதுமே
மண்ணைப் பார்த்துதானே
நடப்பாய்!
பிறகெப்படிடி
என்னைப் பார்க்கவைத்தாய்?

அதிகாலையில்
கூவும் சேவலுக்குமுன்
கண்விழித்தெழுகிறேன்!

அகிலம் ஆளும்
ஆதவன் எழுமுன்
எனை ஆளும்
அரசியுனைக் காண
தினம் தினம்
மரித்து உயிர்க்கிறேன்!

உன் நினைவுகளோடு
என் நினைவின்றி
நடக்கிறேன்!

வகுப்புகள் ஆரம்பிக்குமுன்னே
வகுப்பறைக்குள் நுழைந்துவிடுவேன்!
நீ என்னை
கடந்துபோகும்போது
ஓரக்கண்ணால் பார்ப்பதற்காகவே...

நாணம் உனைக்கண்டு
நாணப்படுமா?
நீ நாணத்தைக்கண்டு
நாணப்படுவாயா?
தெரியவில்லை எனக்கு!

நீ மெதுவாய்த் தான்
நடக்கிறாய்!
என் இதயத்துடிப்பை மட்டும்
ஏனடி வேகமாய்
துடிக்க வைக்கிறாய்?

நீ வரும்வரையில்
உச்சிவெயிலில்
வியர்வை மழையில்
நனைந்துகொண்டிருந்தேன்!

நீ
என்னை காதலிப்பது
மெய்யானாலும்
பொய்யானாலும்
என் காதல் என்றுமே
தொடர்கதைதான்!!

Sunday, September 19, 2010

ஒரு பொய்சொல்!

அன்பே...
உன் கண்கள் என்ன
கண்ணிவெடியா?
பார்த்தவுடன்
சிதறிவிட்டது என்னிதயம்!

உன் இதழ்கள் என்ன
ரோஜா இதழ்களா?
பறிக்கத் தூண்டுகிறது என்னுள்ளம்!

உன் கால்தடம் என்ன
வானவில்லா?
நின்று இரசிக்கத் தோன்றுகிறது உன்னை!

உன் உள்ளம் என்ன
குழந்தையா?
கள்ளம்கபடமில்லாமல் சிரிக்கிறாய்!

உன் சிரிப்பொலி என்ன
சிம்பொனியா?
உன் சிரிப்பொலி கேட்டு
நான் தலையாட்டி இரசிக்கிறேன்!

உன் இத(ழ)யம் திறந்து
ஒரு பொய்சொல் கண்மணி!
'நான் உன்னை
நேசிக்கிறேன்' என்று!!

அன்பே தெய்வம்!

அன்புகொண்ட உள்ளங்களுக்கு
ஆலயம் தேவையில்லை!

உண்மை பேசும்
உதடுகளின்
உன்னத வார்த்தை
மறைவதில்லை!

விழிகள் வழி - கருணை
ஒளி கொடுப்பவர்களுக்கு - சுய
விளக்கம் தேவையில்லை!

என்மேல் உரிமை எடுத்து
பழகுபவர்கள் மேல்
நான் வைக்கும் அன்பிற்கு
எல்லைக்கோடுகள் எதுவுமில்லை!

நான் கண்ணீரில்
கவிதைகள் எழுதினாலும்
கவலைகள் என்றும் மறைவதில்லை!!

எப்போது?

உன்னை
காதலித்த பிறகுதான்
கவிதைகள் எழுத
ஆரம்பித்தேன்!

செய்தித்தாள், பத்திரிக்கை,
வானொலி, தொலைக்காட்சி
என அனைத்தாலும்
நான் கவிஞனென்று
ஏற்றுக்கொள்ளப் பட்டேன்!

அன்பே...
எப்போது ஏற்றுக்கொள்வாய்
என்னையுன் கணவனென்று?


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 15-07-2006