Wednesday, August 31, 2011

மழை!

மழையை தலைவியாகவும் காதலியாகவும் பூமியை மழைக்காதலியின் தலைவனாகவும் காதலனாகவும் உருவகப்படுத்தி எழுதிய கவிதை இது.


சிங்கத்தமிழனின்
அங்கமெலாம் நனைக்கவந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

இடியிசை முழங்க
மின்னலெனும் ஒளிவாங்கி
வேகவேகமாய்
தாகம் தீர்க்கவந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

அஞ்சியஞ்சி வந்து
கொஞ்சிக்கொஞ்சி விளையாடும்
பிஞ்சு முல்லைகளின்
நெஞ்சம் நனைக்கவந்த
கொஞ்சு மழையே! – மக்கள்
கெஞ்சும் மழையே!!

மண்ணாய்க் கிடந்த மண்ணை
பொன்னாய் மாற்றவந்த
சின்ன மழையே! – எங்கள்
வண்ண மழையே!!

பயிர்களின் உயிர்காத்து – உலக
உயிர்களின் உயிர்காக்க வந்த
தங்க மழையே! – எங்கள்
தங்க மழையே!!

பஞ்சம் பஞ்சம் என
தஞ்சம் கேட்டவர்கள்
எம் தமிழ்மக்கள்! – அம்
மக்களின் வாழ்க்கையை
வஞ்சம் தீர்க்கும் மாக்களை
கொஞ்சம் கொஞ்சமாய் தாக்கவந்த
கொஞ்சு மழையே! – மக்கள்
கொஞ்சும் மழையே!!

பறவையை பறக்கவைப்பது
இறக்கை!
உன்னை பிறக்கவைப்பது
இயற்கை!!

மாதம் மும்மாரியாய் பொழிந்தவள் நீ
இன்று கருமாரியை வணங்கியும்
பூமியில் ஒருமாரியைக்கூட கொடுக்கவில்லையே...!!
பூமி உன் காதலனோ...
கார்காலத்தில் கூடலோ...
ஏர்காலத்தில் பாடலோ...
தவழ்கிறாயே அவன் மடியில்!!

கோடையில் ஊடலோ...
கோபமோ அவனுடன்...
சேர மறுக்கிறாயே...!!

உன் ஊடலில்
கோபம் கொள்வது
உன்னவன் மட்டுமல்ல...
உலக மக்களுந்தான்!!

மௌனம்!

என்னைச்சுற்றி
அனைவரும்
என்னைப்பற்றி
தவறான புரிதலுணர்வோடு
பழகும்போது – என்
உள்ளம் அழும்!
உதடுகள் சிரிக்கும்!
கண்ணீர் முட்டிக்கொண்டு
வரும்!!

அந்தத் தருணங்களில்
எல்லாம்
மௌனமே
மிகச்சிறந்த மொழியெனப்படுகிறது
எனக்கு!!

காதல்!

உலக மக்களால்
அதிகம் பேசப்படும்
உலகப் பொதுமொழி!

தனிமை!

காலம் எனக்கு
மரணஅடி கொடுக்கும்போதேல்லாம்
தன்மடியில் உறங்கவைத்து
தாலாட்டு பாடும்
என் இன்னொரு அம்மா!
என் தனிமை!!

காரணமே இல்லாமல்
நான் அவமானப்படும்போதெல்லாம்
என் அவமானங்களை
வெகுமானங்களாய்
மாற்றித்தந்த மந்திரவாதி!
என் தனிமை!!

தோல்விமேல்
தோல்வி வரும்போதெல்லாம்
எனக்கு தற்கொலைக்கு பதிலாய்
தன்னம்பிக்கையைக்
கற்றுக்கொடுத்த ஆசான்!
என் தனிமை!!

ஆறுதலுக்காய்
தாய்மடி தேடும்போதெல்லாம்
மன மாறுதலுக்காய் – என்
தாய்மொழி பேசும்
என்னுயிர்த்தோழன்!
என் தனிமை!!

சாப்பிடக்கூட...
தூங்கக்கூட நேரமில்லாமல்
ஓடிக்கொண்டிருக்கும் என்னை
இந்த நொடிகளில்
உங்களோடு கவிதைவடிவில்
பேசச்சொல்லி – எனக்கு
நேரத்தை ஒதுக்கித்தரும்
கடிகாரம்!
என் தனிமை!!

ஒரு வழிசொல்!

என் சிறுவயதில்
என் குலதெய்வத்திற்கு
முடியிறக்க வேண்டுமென்று
முடிவெடுத்து – என் தலையில்
முடிவளர்த்து வந்தாள்
என் அம்மா!!

என் தலைமுடிக்கு
பொட்டுவைத்து
திருஷ்டி பொட்டெல்லாம் வைத்து
என் கறுப்பான முகத்தைக்கூட
கலையாக இரசித்தாள்!

நம் கவிதைக்குழந்தைகளுக்கும்
முடியிறக்கலாமென்று
முடிவெடுத்தேன்!
என் மனைவியான நீ
என்னோடு சேரவேண்டுமென்று
வேண்டிக்கொண்டு...

அவர்களை என்னோடு
கோயிலுக்கு அழைத்தேன்!

அவர்களின் அம்மாவான
நீ இல்லாமல்
எங்கும் வரமறுக்கிறார்கள்!

ஏதேனும்
ஒரு வழிசொல்!

மனமெனும் குரங்கு!

கொட்டும் மழையில்
குடைகள் இன்றி
உனக்கும் எனக்கும்
நனைந்திடப் பிடிக்கும்! – கைக்

கெட்டும் தொலைவில்
வானம் வந்தால்
வளைத்துப் பிடித்து
வானவில் செய்வோம்! – மனக்

கட்டுப் பாட்டை
நாமும் வளர்த்தால் – நம்
கட்டளைப் படியே
மனமும் கேட்கும்! – கொஞ்சம்

விட்டுப் பிடிப்போம்
என்றே நினைத்தால்
கொட்டிக் கவிழ்க்கும்
மனமெனும் குரங்கு!!

திருமணம்!

திருமணம்
ஆயிரங்காலத்து பயிர்!
காதலும் அப்படித்தான்!!

திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறது!
காதல்
நம் பக்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறது!!

நிச்சயமாய்...

நம் கவிதைக்குழந்தைகள்
ஒவ்வொன்றோடும்
என்பெயரை எழுதி
என் புகைப்படத்தையும்
சேர்த்து
பத்திரிகைகளுக்கு
அனுப்பி வைக்கிறேன்!

அவைகளும்
நம் கவிதைக்குழந்தைகளை
என் புகைப்படத்துடன்
வெளியிட்டுக் கொண்டேதான்
இருக்கின்றன!
குழந்தைகளின் அம்மாவான
உன்னைக் காணவில்லை
என்ற தகவலை
உன்னிடம் சொல்வதற்காகவே...

உனக்கு
நம்குழந்தைகளை
வா(நே)சித்துப் பார்க்க
வாய்ப்புகள் கிடைத்துவிட்டால்
போதும்!
நிச்சயமாய் நீ எனை
நேசிக்கத் துவங்கிவிடுவாய்!!

குழந்தைகள்!

நானும் நீயும்
உடலால் இணையவில்லை!
என்னுள்ளம்
உன்னுள்ளத்தை விரும்பியது!

நான் உன்னை
விரும்பத் துவங்கியதிலிருந்தே
நான் கர்ப்பம் தரித்தேன்!
நமக்கு இன்னும்
கவிதைக்குழந்தைகள்
பிறந்து கொண்டேதானிருக்கின்றன!

ஒருநாள்
நம் குழந்தைகளை
அவர்களின் அம்மாவான நீ
உன் இடுப்பில் தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சியதாய்
அவர்களே கூறினார்கள்!

என்மனமும்
ஒரு குழந்தைதான்!

என் மனக்குழந்தையையும்
உன் இடுப்பில் தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சுவாயாடா
என் செல்லம்?

என் அப்பா!

ஒவ்வொருமுறை
நான் சேட்டை செய்யும்போதும்
கோபப்பட்டு அடித்துவிடுவார்!

சிறிதுநேரம் கழித்து
பக்கத்தில் வந்தமர்ந்து
‘வலிக்கிறதா ப்பா?’
என என்னை
தன் மடியில் கிடைத்தும்
தாயுள்ளம் கொண்டவர்!!