Sunday, May 20, 2012

என் மருமகன்

அடிமன வெளியினில் ஆடிடும் முகிலே
மடியினில் தவழும் மரகத மணியே
கொடிபோல் கைகள் குறுவாய்ச் சிரிப்பு
விடியலைத் தந்தாய் வெள்ளி நிலாவே

கண்ணுங் காதும் கவிதைகள் பாடும்
கண்ணா உனையென் கண்கள் தேடும்
அன்பே நிறைந்த அன்னையு முனக்கு
உன்னா லெமது உறவுகள் கூடும்

நம்முடைத் தமிழை நாவில் பழக்கு
தெம்புட னெழுவாய் தென்படும் கிழக்கு
கொம்புடைக் காளை குழவியும் நீயே
தும்பியைப் போலே சோம்பலை விலக்கு

விழிகள் திறந்து வெளிச்சம் பார்ப்பாய்
ஒலியும் கேட்டு உளத்தில் ஏற்பாய்
வலியும் தாங்கும் வலிமையும் வேண்டும்
அழியாப் புகழை அதிகம் சேர்ப்பாய்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

 1. பதிவுகள் (இணைய இதழ்) - 31-07-2012

1 comment:

தமிழ்த்தோட்டம் said...

அருமை பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in