Wednesday, February 26, 2014

ஆழ்ந்த இரங்கல்

கடந்த வாரம் என் வீட்டிற்கு போயிருந்த போது என் தங்கசசி பாப்பாவின் மீது கோபம். அவள் ஒரு பள்ளி ஆசிரியை. அவளைத் திட்டும்போது, 'நீ பெரிய teacher.' என்று சொல்லித் திட்டினேன். எனக்கு மனம் கேட்கவில்லை. இரவு அவள் தூங்கியபிறகு அவள் தலைகோதி விட்டேன். சட்டென்று கையைத் தட்டி விட்டாள். என்னை அடித்தாள்.

மறுநாள் காலை வழமைபோல் என்னை கிண்டல் கேலி செய்து பேச ஆரம்பித்தாள். 

உண்மையான அன்பிற்கு முன்னால், எனக்கென தன்மானம் அல்லது சுயஅடையாளம் எதுவும் இல்லை.

என் அம்மா என்னிடம் அடிக்கடி சொல்வாள்  'நீ அவசரப் படுகிறாய். கொஞ்சம் நிதானமாய் இரு.' என்று. என் அம்மாவை விட என்னை மிக நன்றாகப் புரிந்துகொண்ட நபர் யாருண்டு இவ்வுலகில். இதே வார்த்தைகளை இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னிடம் பழகிய ஒரு எழுத்தாளர் மின்னஞ்சல் ஊடாக சொன்னார் 'நீங்கள் என் சகோதரன் போல. தங்களுக்கு கொஞ்சம் நிதானம் தேவை.' என்று.

௨௦௦௫ ல் என் தங்கைக்காக நான் எழுதிய ஒரு கவிதையின் இரண்டு வரிகளை 

கொடி அசைந்தாலே 
தாங்க மாட்டாய் நீ - நான் 
அடிகொடுத்ததை 
எப்படித் தாங்கினாய் நீ


என் தங்கை படித்த பிறகே 'என் உருவத்தை வைத்து நான் ஒரு முரடன்' என்ற அவளுடைய எண்ணம் தவறு என்பதை அவள் புரிந்து கொண்டதாக என்னிடம் சொன்னாள்.

என்னிடம் பழகிய ஒரு அக்கா இதே வரிகளை என்னிடம் பேசினாள். ஒருமுறை அவள் தன்னுடைய வாழ்வில் நடந்த ஒரு உண்மையை என்னிடம் சொன்னாள். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால், அவளின் உண்மை நிகழ்வை வைத்து அவளுக்காக நான் எழுதிய ஒரு கவிதை.


இதே கவிதையில் சொல்லப்பட்ட உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்தே ஒரு கவிதைநூலாக எழுதி அணிந்துரை எழுத மூன்று பேரிடம் கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. பொருளாதார நெருக்கடியால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன். அதிலிருந்து ஒரு கவிதை.

உனக்கு
வேறு ஒருத்தியுடன்
மணமாகி விட்டதாகச்
சொன்னார்கள்
என் தோழிகள்!

‘நிச்சயமாய் இருக்காது’
என்றேன்!
என் கண்களில்
எட்டிப் பார்த்தது
கண்ணீர்!!

அந்த அக்கா அன்று அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் பத்தாண்டுகளுக்கு முன் சொன்னாள். நான் நினைக்க வேண்டும் என்று எண்ணாமலேயே நினைவுகளால் எங்காவது ஒரு மூலையில் அழுது கொண்டிருப்பவன் நான். நான் இப்படித்தான். நான் இருக்கிறேனா செத்தேனா என்று கூட அந்த அக்காவுக்கு கவலையில்லை. அதனால் என்ன அவள்மீது நான் கொண்டு அன்பு உண்மையானது தான். இன்னும் எத்தனை வருடங்கள் ஆனபோதும் அந்த நினைவுகள் என்னுள்ளிருந்து மறக்கப் போவதில்லை.

அந்த அக்கா என்னிடம் அப்போது, அந்த நாட்களில் எவ்வளவு அன்போடு இருந்தாள் என்பது எனக்குத் தெரியும். நான் அவளிடமே நேரடியாக 'நீ என்னிடம் பொழுதுபோக்கிற்காகத்தான் தம்பியாக நினைத்து பாசமாக இருந்தாயா? பழகினாயா?' என்று அவளிடமே கோபத்தில் திட்டியிருக்கிறேன். எனக்கு அவள்மீது கோபம்தான். வெறுப்போ அவளை எதிரியாகப் பாவிக்கும் மனநிலையோ எனக்குக் கிடையாது. நான் இப்படித்தான்.

உரிமையோடு கோபப்படுவதிற்கும் வெறுப்பிற்கும் எதிரியாகப் பார்க்கும் மனநிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

முகநூலில் எண்ணங்கள், தகுதிகள், நட்புடன் பழகுதல், எதிரியாகப் பாவிக்கும் மனநிலை, அதனால் கிடைக்கும் பிரதிபலன் என்றெல்லாம் ஒரு சிலர் பதிவதை பார்க்க நேரிட்டது.

எழுத்து என் தொழில் அல்ல. எனக்கான தொழில் வேறு. எழுத்தின் மூலம் சம்பாதித்துக் கொண்டிருப்பவன் நான் அல்ல. அதன்மூலம் சம்பாதிக்கப் போகிறவனுமல்ல. எழுத்து எனக்கான ஆத்மதிருப்தி. அதன்மூலம் கிடைக்கும் பணத்தின்மூலம் உதவி செய்யவேண்டும் என்பது எனக்கான ஆத்மதிருப்தி. இடையில் எதிரியாகப் பாவிக்கும் மனநிலையில் கிடைக்கும் பிரதிபலனால் எனக்கென்ன கிடைக்கப் போகிறது. 

அவள் என் தங்கை. எழுத்தின்மூலம் பிரபலமானவர்கள் இடையில் புகுந்து அவர்களின் சுயநலத்திற்காகவும், சுயபிம்பத்தை நிலைநிறுத்துவதற்காகவும் பதிவுகளை இட்டிருக்கலாம். அல்லது, நான் கோபப்பட்ட தங்கையின் மீது வைத்திருக்கும் மரியாதையினால் பதிவுகளை இட்டிருக்கலாம். அவள்மீது எனக்கிருப்பது அன்பு. மற்றவர்கள் அவள்மீது (அவள் பிரபலமானவள் என்பதால் கூட இருக்கலாம்.) வைத்திருப்பது மரியாதை. ஆனால், எனக்குத் தெரியும் அவள் எப்படி என்று. நான் யார் முன்னிலையிலும் என்மீது அன்பு கொண்டவர்களை கோபத்தில் பேசினாலும், விட்டுக்கொடுப்பதில்லை. என்மீதுள்ள கோபத்தில் அவள் என்னை விட்டுக் கொடுத்திருக்கலாம். நான் எழுதியதை வைத்து அவள் என்னை தவறாகப் புரிந்துகொண்டு மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஏனெனில் அவளுடைய சூழ்நிலையும் அப்படி.

நான்தான் நிதானம் தவறிவிட்டேன்.

நான் கவிதைகள் எழுத ஆரம்பிப்பதற்கு முன் வீட்டை விட்டு வெளியே வந்தால் நானொரு அநாதை. ஆனால், எழுத ஆரம்பித்தபிறகு எனக்கும் என்வீட்டைத் தாண்டி ஒருசில சொந்தங்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை வந்தது. இல்லையென்றாலும், நான் அநாதையாகவே இருந்து விட்டுப் போகிறேனே? இது எனக்கொன்றும் புதிதில்லையே.

நேற்று மாலை என் தங்கை ஒருத்தியிடம் பொதுவான ஒரு இடத்தில் கோபப்பட்டேன். பொதுவான இடத்தில் கோபப்படவேண்டிய கட்டாய சூழல் எனக்கு. ஏனெனில் அவள் comments மட்டுமே பார்க்கக் கூடியவள் என்பதால் comments ல் அனுப்ப வேண்டிய கட்டாயம். இரவு சரியான உறக்கம் இல்லை. இன்று அதிகாலை நான்கரை மணி. அவள் என்னைவிட வயதில் சிறியவள். அவளை நேரில் பார்த்ததில்லை. நேரில் பார்த்துப் பழகியதில்லை. ஒரு வாரத்திற்கு முன்பு தான் பேசினாள். 'அவள் என்னிடம் அவளின் கவிதைநூல் வெளியிடுவது குறித்தும் பதிப்பகத்தார் குறித்தும் பேசியதை நினைவு படுத்திப் பேசினாள். நான் எழுதிய சில பதிவுகளை நினைவு வைத்துப் பேசினாள். நான் அவளிடம் கோபப்பட்டதற்காக அவள் என்னிடம் அலைபேசியில் அழுததற்காக நான் தூங்காமல் அழுததையும் அவள் நன்றாக இன்னமும் நினைவில் வைத்திருக்கிறாள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஆழமாக புரிந்துகொண்டேன். வரும் ஏப்ரல் மாதம் தன்னுடைய முதல் கவிதைநூல் வெளியீட்டிற்கு என்னுடைய வாழ்த்துச்செய்தி வேண்டும். பிழைத்திருத்தமும் நீங்கள் செய்யுங்கள் அண்ணா. விரைவில் அனுப்பி வைக்கிறேன். என்றெல்லாம் அவள் சொன்னபோது என்மீது கொண்ட அன்பின் மிகையினாலேயே இப்படிச் சொன்னாள் என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது. உங்களுக்கு தெரியும் தானே, இயக்கத்தில் இருந்தபடியா என் தாய்நாட்டிற்கு செல்ல இயலாது. என்று அவள் சொன்னபோதுதான், எனக்கு புரிந்தது. சென்னைக்கு நானும் தம்பியும் வருவோம். அம்மாவும் அப்பாவும் சென்னைக்கு வருவார்கள். உங்களைப் பார்க்க நான் வருவேன். நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று சொல்லுங்கள் என்றாள். அதெல்லாம் வேண்டாம். நானே உன்னைப் பார்க்க வந்துவிடுவேன். நீ சென்னை வந்தவுடன் என் அலைபேசிக்கு அழைத்து வந்த தகவலை சொல்லிவிடு போதும். என்றேன். உன்னையும் தம்பியையும் பார்க்க வேண்டும். என்றேன். தம்பி வருவானா? என்றேன். ஆமாம் தம்பி வருவார். என்றாள். தம்பி நடிகர் என்பதால், வருவானா என்று கேட்டதற்காக, நாக்கைக் கடித்துக் கொண்டேன்.' தங்கையிடம் விளக்கமாக பேசிவிடலாம் என்றே நினைத்து வந்தேன். ஏனெனில், அவள்மேல் எனக்கு எவ்வளவு அன்பிருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.

உரிமையோடு கேட்பேன். உரிமையோடு கோபப்படுவேன். நான் இப்படித்தான்.

வந்து பார்த்தேன். 

'பலபேர் பார்க்க என்னை அவமானப்படுத்தும் விதத்தில் எழுதியிருக்கின்றீர்கள்.' என்று சொல்லியிருந்தாள். 

'சித்தப்பா இறந்து விட்டாள்.' என்றாள்.

என்மீது ஒருசிலருக்கு கோபம் இருப்பதெல்லாம் ஒருபுறம் மூட்டையை கட்டி வைத்து விடுங்கள். அவள்மீது உண்மையிலேயே அக்கறையுள்ளவர்கள் அவள் அருகில் இருப்பவர்களிடம் சொல்லி அவளுக்கு ஆறுதல் சொல்லுங்கள். 

என்னைவிட அவள் வயதில் சிறியவள். மிகவும் மென்மையானவள். 

சிலநாட்கள் கழித்தபிறகு, அவள் என்னைப் புரிந்துகொண்டு என்னோடு பேசலாம். அல்லது நிரந்தரமாக பிரிந்தும் போகலாம்.

இடையில் புகுந்து விளையாடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எப்போதும்போலவே தனியே விலகிப் போகிறேன். என்மீது அளவுகடந்த அவள், அந்த உயிர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். 

பிரபல நடிகரும் கவிஞருமான ஒருவர் அவளைப் பற்றி சொன்னதுபோலவே, அவளை பத்திரமாக பார்த்துக் கொள்வது, நம் சமூகக் கடமை.

என்னால் மனம் காயப்பட்டால், அதற்காக அதிகம் மனம் காயப்படுபவன் நான். நான் இப்படித்தான்.

சித்தப்பா மரணத்திற்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்.

இதுவும் கடந்து போகட்டும்.

No comments: