நான் உங்களிடம் ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றி சொல்லப் போகிறேன். சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் தான் காதலித்த ஒருவரைப் பற்றி சொன்னாள். அவள் காதலித்த அந்த ஆண் அவள் தினமும் கல்லூரிக்கு செல்லும் பேருந்தின் நடத்துநர் எனவும் அவரின் குறும்புப் பேச்சும் அவரின் அன்பான கனிவான வார்த்தையும் அவளை மிகவும் கவர்ந்ததாகவும் அவரிடம் தன் காதலை சொல்ல முடியாமல் தவித்ததாகவும் ஒருநாள் அவர் இவளிடம் தன்னுடைய திருமண அழைப்பிதழை தந்துவிட்டு போனதிலிருந்து அவரை மறக்கமுடியாமல் இரவு தூங்கமுடியாமல் போர்வைக்குள் அழுததாகவும் உண்மையாய் காதலிப்பவர்களை தான் ஆதரிப்பதாகவும் தான் இப்போது மிகப் பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனமான CTS ல் வேலைபார்த்து வருவதாகவும் மிகவும் உருக்கமாகவும் சொன்னாள்.
அவளுடைய வாழ்க்கையை நானிங்கு பாடலாக எழுதியிருக்கிறேன்.
அந்த பெண் வேறு யாருமல்ல என் தூரத்து சொந்தமான என் பெரியம்மா மகள். அவள் அவள் கதையை அந்த காரைக்குடி புகைவண்டி நிலையத்தில் என்னிடம் சொல்லிவிட்டு அழுகையை அடக்கிக் கொண்டு என்னை பார்த்தாள். நான் அவள் தலைகோதி விட்டபடி "அழாதே அக்கா" என்று ஆறுதல் சொன்னேன். அவளின் அழுகையை அடக்கிக் கொண்டிருந்த அந்த முகம் இன்னும் என் கண்முன்னே நிற்கிறது. இன்னும் என்னுள்ளே உறைந்து கிடக்கிறது.
பேருந்தில் அவனைக்கண்ட போது – மனதில்
பேருவகை கொண்டாளே மாது! – புது
மாறுதலைத் தந்துவிட மறுதலிப்பும் இல்லாமல்
மனதெல்லாம் அவனின்று ஏது? – அவன்
மனதைச்சொல வார்த்தைகிடை யாது!!
குறும்புகளைச் செய்வதிலே கண்ணன்! – அவன்
குணத்தாலே என்மனதில் மன்னன்! – அந்த
அரும்புமீசைக் காரனவன் அழகுமணி மாறனவன்
அனைத்துலகப் பெண்களுக்கும் அண்ணன்! – அவன்
அள்ளியள்ளிக் கொடுப்பதிலே கர்ணன்!!
நடத்துநராய் அவன்வந்தான் பார்த்தேன்! – அவன்
நினைவாலே போர்வைக்குள் வேர்த்தேன்! – காதல்
தொடங்கியது அன்றேதான் தூங்கவில்லை இன்றுவரை
தேவதைநான் காதலிலே தோற்றேன்! – மனத்
தேறுதலை மாறுதலை ஏற்றேன்!!
அழைப்பிதழை அவன்தந்தான் நேற்று! – என்
அழகான முகந்தனையே பார்த்து! – அங்கு
வாழைமரம் சாய்ந்ததுபோல் வீழ்ந்ததடா என்னுள்ளம்
வாழ்விழந்து நின்றேனே வேர்த்து! – என்
வாழ்வினிலே வீசியது புயல்காற்று!!
இலவுகாத்த கிளிபோலே நின்றேன்! – நான்
இரக்கமின்றி என்மனதைக் கொன்றேன்! – அவன்
அழகான முகம்மட்டும் ஆடுதடா உயிரினிலே
‘அன்பான அத்தானே’ என்றேன்! – அவனை
ஆசையுடன் பார்த்தபடிச் சென்றேன்!!
எப்போதும் காதலில்நான் மூழ்க – இனி
என்றைக்கும் காதல்மட்டும் வாழ்க! – இங்கு
முப்போகம் விளைந்திட்ட முக்கனியைப் போலதினம்
முகந்தெரியாக் காதலர்கள் வெல்க! – இனி
மூவுலகும் காதலரே ஆள்க!!
No comments:
Post a Comment