Tuesday, April 15, 2014

சீமான் அண்ணாவின் நினைவுகளும் அவரிடம் சில கேள்விகளும்

சீமான் அண்ணா,

கடந்த சனிக்கிழமை தங்களின் உரையை தமிழன் தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சியில் கேட்க, பார்க்க நேர்ந்தது. இங்கு என்னுடைய அறையில் என்னைத்தவிர மற்ற அனைவரும் தெலுங்கு பேசும் அன்பர்கள். நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள். அவர்களின் ஒருவன் கேட்டான் (ஆங்கிலத்தில்) 'ஏன் அந்த நபர் கத்துகிறார்? அவர் யார்?' என்று.

நான் சொன்னேன். (ஆங்கிலத்தில்) 'அவர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர். தற்போது தமிழர்களுக்காக இயக்கம் மற்றும் அரசியல் கட்சி நடத்தி வருகிறார். அவர் கத்தவில்லை. அவர் பேசுகிறார்.' என்று. அவர்கள் என்னுடைய அறையில் பெரும்பான்மையாக இருந்தும் அவர்களை வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு மாற்ற விடவில்லை.

அன்று நீங்கள் சொல்லியது 'தம்பிகள் என்ன நினைப்பார்கள் என்று தெரியவில்லை.' என்று

உங்களுடைய நிலைப்பாட்டில் எனக்கு நிறைய கருத்துவேறுபாடுகள் உள்ளன அண்ணா.



அ. தி. மு. க விற்கு இன்று நீங்கள் ஆதரவு அளித்திருக்கலாம். நாளை அ. தி. மு. க செய்யும் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு நீங்கள் பலிகடா ஆகப் போகிறீர்களா? அல்லது நீங்களும் அவர்களைப் போன்று மக்களை ஏமாற்றி அரசியல் சித்து விளையாட்டுகளை நிகழ்த்தப் போகிறீர்களா? தி. மு. க நமக்கு துரோகி என்றால் அதே அளவுக்கு துரோகி அ. தி. மு. க.

நீங்கள் யாரையும் எதிர்க்காமலோ ஆதரிக்காமலோ இருந்திருந்தால்கூட யாரும் எதுவும் நினைத்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் அன்று 'பிரபாகரா, பிராபகரா' என்று தொண்டை கட்டிய பிறகும் சோக இராகத்தில் பாடியதெல்லாம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதெல்லாம் பொய் யென்று மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது அண்ணா.

நான் தங்களின் இயக்கத்திலோ கட்சியிலோ இல்லை. ஆனால், என் மானசீக கட்சியாக 'நாம் தமிழர்' ஐத் தான் கடந்த சனிக்கிழமை வரை நினைத்திருந்தேன்.

நீங்களே பாடலாசிரியராக மாறி, நீங்களே பாடகராகவும் மாறி எழுதி, பாடிய 'பேசாம பேசாமத்தான் இருந்து' என்ற பாடலை என்னுடைய smart phone ல் வைத்திருக்கிறேன்.

நீங்கள் எழுதி, பாடிய 'பேசாம பேசாமத்தான் இருந்து', தங்கச்சி பாமினி எழுதிய 'சூழுகின்ற பகையை வென்று' மற்றும் உணர்ச்சிக்கவிஞர் காசி அனந்தன் எழுதிய 'இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ' என்ற மூன்று பாடல்களும் சமீப காலங்களில் அலைபேசி இயந்திரம் மற்றும் மடிக்கணினி ஊடாக நான் அதிகம் கேட்கும் பாடல்கள்.

நீங்கள் இயக்கிய 'பாஞ்சாலங்குறிச்சி' படம் ஏறத்தாழ ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு பார்த்தது. அந்த படத்தில் ஒரு வசனம் வரும் (நடிகர் இளவரசு என்று தான் நினைக்கிறேன்) 'பரமக்குடியில் போய் புரோட்டா சாப்டுட்டு இரவி தியேட்டர்ல படம் பாத்துட்டு வா.'. இந்த வசனம் தென் மாவட்டங்களில் குறிப்பாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் மிகப்பிரபலம்.

நீங்கள் இயக்கிய 'வாழ்த்துகள்' திரைப்படத்தில் ஆங்கிலம் கலக்காத தமிழில் வசனம் அமைக்கப்பட்டிருந்தது. என்போன்ற தமிழை நேசிக்கக்கூடிய பலர் விரும்பி பார்த்த திரைப்படமிது.

இதுவரை நீங்கள் நடித்த திரைப்படங்கள் அனைத்தையும் விரும்பி பார்ப்பவர்களில் நானும் ஒருவன்.

என் வீட்டிற்கு போகும்போதெல்லாம் உங்களைப் பற்றி வீட்டில் பேசும்போது அம்மா, அப்பா இருவருக்கும் உங்கள்மீது என்னைப்போலவே அதீத அன்பு உண்டு என்பதை ஒவ்வொரு முறையும் உணர்வேன். ஆனால், இனி அந்த அன்பும் மரியாதையும் அவர்கள் மனதில் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

உங்கள் மீது கோபம் நிறைய உள்ளது. ஆனால், உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாகவே தமிழ்நாட்டு நேரப்படி அதிகாலை நான்கு முப்பது மணிக்கு தூக்கம் வராமல் இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் இப்படித்தான். கோபப்படுவேன். பிறகு அன்பு கோபத்தை வென்றுவிடும். ஆனால், உங்கள் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடில்லை.

தமிழனின் வீழ்ச்சிக்கு காரணமே இந்திய தேசியமும் திராவிடமும் தான். இதனை உரக்க நீங்களே சொல்லிவிட்டு அதே திராவிடக் குழிக்குள் விழுகிறீர்களே இது நியாயமா அண்ணா?

உங்கள் நிலைப்பாட்டில் எனக்கு நிறைய கருத்துவேறுபாடுகள் உள்ளன அண்ணா. எனக்கு மட்டுமல்ல. பலருக்கும் உண்டு.

ஆனால், ஒன்று மட்டும் புரிந்துகொள்ளுங்கள் அண்ணா, உங்கள் மீது பலபேர் வைத்திருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் சிதையத் துவங்கிவிட்டது அண்ணா.

அதேபோல் உங்கள்மீது என் மனதிலிருந்த அன்பும் மதிப்பும்கூட கொஞ்சம் கொஞ்சமாய் குறையத்துவங்கிவிட்டது அண்ணா.




No comments: