தொகுப்பும்
ஆக்கமும்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்
எனக்கு
நன்றாக நினைவிலிருக்கிறது. மூன்றரை அல்லது நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டில்
தொலைக்காட்சிப்பெட்டியில் நிகழ்ச்சிகளை பார்க்க ஆரம்பித்து ஒவ்வொரு நிலையமாக
மாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு ஈழதேசத்து தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சியொன்றில் நிகழ்ச்சி
தொகுப்பாளர் ஒருவர் ஒரு பாடலாசிரியருடன் உரையாடிக் கொண்டிருந்தார். தன்னுடைய
பாடல்கள் தொடர்பான விழாவின்போது தன்னுடைய தந்தை ஆனந்தத்தில் கண்ணீர் விட்டதாக
நெகிழ்ச்சியோடு அந்த பாடலாசிரியர் பகிர்ந்துகொண்டார். (நிகழ்ச்சியை பாதியிலிருந்தே
கவனிக்க முடிந்ததால் இதுகுறித்து இன்னும் விளக்கமாக தெரிந்துகொள்ள இயலவில்லை.
ஆனால், இந்த நிகழ்வு நிச்சயமாக கிரீடம் திரைப்படத்தில் இவர் எழுதிய “கனவெல்லாம்
பலிக்குதே” என்ற பாடலை தொடர்புபடுத்தியே இருக்கும்.) அதுமட்டுமின்றி
“வளர்ந்துவரும் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு படத்தின் எல்லா பாடல்களையும் எழுத
வாய்ப்பு தரவேண்டும். அதுவே அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்” எனவும் பதிவுசெய்தார்.
அந்த
பாடலாசிரியரும் கவிஞருமான திரு. நா. முத்துக்குமார், ஆனந்த யாழை மீட்டி ௨௦௧௪ (2014)
ம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியருக்கான இந்திய தேசிய
விருதை (‘தங்க மீன்கள்’ திரைப்படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலை
இயற்றியதன்மூலம்) வாங்க தேர்வாகியிருக்கிறார். அனைத்து தமிழர்களும் அவரை உச்சிமுகர
வேண்டிய தருணமிது.
பாடலாசிரியர்,
கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் இவர். நான்கு
வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாக கொண்டார்.
தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு
ஆண்டுகள் பணி செய்தார்.
தேசியவிருது பெற்றுள்ள நா. முத்துக்குமார் கீழ்க்கண்டவாறு தன்னுடைய அறிக்கையை
வெளியிட்டுள்ளார்.
“அன்புள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி,
வானொலி, இணையதள நண்பர்களுக்கு வணக்கம். உங்களில் ஒருவனாக என் வளர்ச்சியை
நீங்கள் உணர்கிறீர்கள் என்பதை நானறிவேன். உங்கள் அன்பும், ஆதரவும் என் பயணத்தில் கிடைத்த பூங்கொத்துக்கள்.
"தங்கமீன்கள்" திரைப்படத்தில் நான் எழுதிய "ஆனந்த
யாழை"பாடலுக்காக சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய
விருது எனக்கு கிடைத்துள்ளது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து
கொள்கிறேன்.
இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும்
கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது. தாய், மகன் பாசம்
பற்றி நிறைய பாடல்கள் நம்மிடம் உண்டு. தந்தை, மகள் பாசம் குறித்த பாடல்களை விரல்
விட்டு எண்ணி விடலாம். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து நான்
அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர்
யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து
கொள்கிறேன். இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர்
ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக
என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன்.
மீண்டும் உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி.”
ஒரு பிரபலமான வாரஇதழுக்கு அவர் தன்னைப்பற்றி கூறியவை
“1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என்
தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர்
அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த
மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று
நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக்குச் சென்றது. ஒரு சில உயரமான
கட்ட டங்களே சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன் அவர்கள் பார்த்த
காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருப்பதை. இப்படித்தான்
நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித் தீப்பிடித்தது. அந்தத் தீயை
அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன் தன் நாட்குறிப்பில் இப்படி
எழுதினான்... 'இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!' நான் முதல் முறையாக நா.முத்துக்குமார்
ஆனேன்!
எங்கள் வீடு முழுக்கப் புத்தகங்களே
வியாபித்திருந்தன. தமிழாசிரியரான தந்தை தேடித் தேடி புத்தகம் வாங்கினார். வால்கா
முதல் கங்கை வரை என்னை புத்தக உலகில் பயணிக்கவைத்தார். மூன்றாம் வகுப்பு
படிக்கையில் சந்தை என்ற தலைப்பில் சிறுகதை எழுதி அப்பாவிடம் வாசிக்கக் கொடுத்தேன்.
காய்கறிச் சந்தையில் கடை வைத்திருப்பவரைப்பற்றிய கதை. வாசித்துவிட்டு ஒன்றுமே
சொல்லாமல் திருப்பிக் கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கு என்னை
எழுப்பி சைக்கிளில் அமரவைத்து, காஞ்சிபுரம்
ராஜாஜி காய்கறிச் சந்தைக் குக் கூட்டிச் சென்றார். ஒருபுறம் லாரியில் இருந்து கூடை
கூடையாகத் தக்காளிகள் இறங்கிக்கொண்டு இருக்க...
உள்ளூர் விவசாயிகள் கீரைக் கட்டுகளை
அடுக்கிக்கொண்டு இருந்தனர். எங்கிருந்தோ வந்த ஒரு பசு மாடு, வாழை இலை ஒன்றை இழுத்து கடிக்கத் துவங்க, யாரோ ஒருவர் அதை விரட்டிக்கொண்டு இருந்தார்.
'இந்த டீக்கடையில் நான் காத்திருக்கிறேன். நீ
மார்க்கெட் முழுக்கச் சுற்றிப் பார்த்துவிட்டு வா' என்றார்
அப்பா. அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த என்னிடம் 'உன் கதை
நன்றாக இருந்தது. ஆனால்,
அதில் உண்மையான
காய்கறிச் சந்தை இல்லை. எந்த இடத்திலும் காய்கறியின் வாசம் இல்லை. எதையும்
உணர்ந்து அனுபவித்து எழுது,
உன் எழுத்து வலிமையாக
இருக்கும்' என்றார். வீட்டுக்குச் சென்றதும் அந்தக்
கதையைக் கிழித்துப் போட்டேன். அன்று இரண்டாம் முறையாக நான் நா.முத்துக்குமார்
ஆனேன்!
பள்ளியில் படிக்கும்போதே என் கவிதைகளும்
கதைகளும் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. எங்கள் பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள்
தங்களிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பாஸ் மார்க் போட்டார்கள்.
வகுப்பிலும் சொல்லித் தருவதில்லை. இதைக் கண்டித்து தூசிகள் என்று கவிதைத் தொகுதி
வெளியிட்டேன். பிரேயரில் என் கவிதை விவாதிக்கப்பட்டு, என்னை ஒரு
வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். வார்த்தைகள் என்னைக் கைவிட்ட நிலையில், குற்றஉணர்வுடன் அப்பா முன் நின்றேன். அவர்
அமைதியாகச் சொன்னார், 'இப்போதுதான் உன் எழுத்து வலிமையாகிக்கொண்டு
இருக்கிறது. இன்னும் நிறைய எழுது!' மூன்றாம்
முறையாக நான் நா.முத்துக்குமார் ஆனேன்.
காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல்
சேர்ந்தேன். எங்கள் வீடும் கல்லூரியும் அருகருகே இருந்ததால், பத்திரிகைகளில் இருந்து என் கவிதைக்கு வரும்
சன்மானத் தொகையை என் வகுப்புக்கே வந்து தருவார் தபால்காரர். வேதியியல் பேராசிரியர்
ஒருவர் ஒருநாள் இதைக் கவனித்து, 'இப்படியே கதை, கவிதைன்னு சுத்துனா, சத்தியமா நீ
பாஸாக மாட்டே' என்று திட்டினார். எப்போதும் அதிக
மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் ஒருவன் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். அன்று
ஒரு வைராக்கியம் தோன்றியது. அவனைவிட ஒரு மார்க்காவது அதிகம் வாங்க வேண்டும். 85
சதவிகிதம் பெற்று தேர்ச்சியடைந்தேன்.
அவனுக்குக் கிடைக்காத பி.டெக். வாய்ப்பு
எனக்குக் கிடைத்தது. என் சபதத்தை முடித்துக்கொண்டு, சென்னை
பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். இவ்வளவு மார்க்
எடுத்துட்டு ஏன் தமிழ் படிக்கிறாய் என்று அறிவுரை சொன்னார்கள். மௌனமாகத்
தலையாட்டிவிட்டு, மண்ணில் விழுந்த மழைத் துளிபோல் தமிழின்
வேர் வரை பயணிக்கத் தொடங்கினேன்.
கல்லூரியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி
அடைந்ததும், அமெரிக்காவில் இருந்து ஒரு
பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தது.
மாதம் மூன்று லட்சம் சம்பளம். மீண்டும் அப்பா முன் நின்றேன். நான் திரைப்படத்
துறையில் உதவி இயக்குநராகப் போகிறேன். இந்த வேலை வேண்டாம் என்றேன். என்னை உற்றுப்
பார்த்துவிட்டுச் சொன்னார்,
'உன் முடிவை நீயே எடு.
பின் நாட்களில் அதற்காகச் சந்தோஷப்படவும் வருத்தப்படவும் உனக்கே உரிமை உண்டு!' அன்று நான் சலனப்பட்டு அமெரிக்கா
சென்றுஇருந்தால், முனைவர் நா.முத்துக்குமாராக மட்டுமே
இருந்திருப்பேன். சினிமாவுக்கு வந்ததால் நான்காம் முறையாக நா.முத்துக்குமார்
ஆனேன்.
இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை பிரபாகர், அறிவுமதி என்று பலரிடம் உதவியாளராக
இருந்துவிட்டு, என் ஆசான் பாலுமகேந்திராவிடம் சேர்ந்தேன்.
பெப்சிக்கும் படைப்பாளிகளுக்கும் பிரச்னை நடந்த காலகட்டம் அது. ஒரு வருடமாக வேலை
நிறுத்தம். தன் காரை விற்று எங்களுக்குச் சம்பளம் கொடுத்தார் பாலுமகேந்திரா சார்.
என் தூர் கவிதையை ஒரு விழாவில் எழுத்தாளர் சுஜாதா வாசிக்க, என் மேல்
மஞ்சள் வெளிச்சம் விழுந்தது. நண்பர்கள் பாடல் எழுத அழைத்தார்கள். விளையாட்டாக
எழுதத் தொடங்கி, கடந்த ஆறு வருடங்களாக அதிக பாடல்கள் எழுதும்
பாடலாசிரியர் என்கிற நிலை வரை ஓடிக்கொண்டு இருக்கிறேன்.
'சினிமா உலகம் போட்டியும் பொறாமையும்
நிறைந்தது. இங்கு தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டேதான் தூங்க வேண்டும்; இல்லையென்றால், இறந்துவிட்டான்
என்று எரித்து விடுவார்கள்'
என்றார்
என்.எஸ்.கிருஷ்ணன். சென்ற வருடம் என் திருமண நாளன்று, நான்
விபத்தில் இறந்துவிட்டதாகவும், தற்கொலை
செய்துகொண்டதாகவும் என்னைப்பற்றி வதந்தி கிளம்பியது. இறந்துபோனதை அறிந்த பிறகுதான், 'இறக்க வேண்டும் நான்' என்று எப்போதோ நான் எழுதிய கவிதை ஞாபகம்
வந்தது. முகம் தெரியாத அந்த நண்பருக்காகவாவது இன்னும் கவனமாகவும், கூடுதலாகவும் உழைக்க வேண்டும் என்று
தோன்றியபோது, நான் ஐந்தாம் முறையாக நா.முத்துக்குமார்
ஆனேன்!”
நா.முத்துக்குமார், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்படப்
பாடலாசிரியரும், கவிஞரும்
எழுத்தாளரும் ஆவார். 1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் திகதி அவரது தாயின்
பிறந்தகமான சென்னையில், எழும்பூர்
அரசு மருத்துவ மனையில் பிறந்தார். மனைவி ஜீவலட்சுமி. மகன் ஆதவன் நாகராஜு.
ஆதவன் ‘நெல்லு’ படத்தில் எஸ்.எஸ்.குமரன் இசையில் ஒரு
பாடலும் பாடியுள்ளார். தன் பெயரையே முதல் வார்த்தையாகக் கொண்ட பாடல்மூலம் தன்
வாசல் திறந்து கொண்டவர் நா. முத்துக்குமார்.
திரைப்படப் பாடல்களைக் கொண்டே முனைவர் பட்டமும் பெற்றிருப்பதும்
இவருக்குரிய சிறப்பாகும்.
முதலில் ஒரு இயக்குனராக வரவேண்டும் என்கிற
ஆசையில் இயக்குநர் அருண்மொழி, பட்டுக்கோட்டை
பிரபாகர், அறிவுமதி
என்று பலரிடம் உதவியாளராக இருந்து பின்னர் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் நான்கு
வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து கொண்டிருந்தபின் பாடல்களின் பக்கம் அவர் திரும்பி
இருக்கிறார் என்பதை விட திருப்பப்பட்டார் என்பது பொருந்தும்.
அவரின் எழுத்துக்களை வாசித்த நண்பர்களின்
மூலமாகவே அவருடைய திறமை வெளி கொணரப்பட்டிருக்கிறது. அவரது நண்பரான இயக்குனர்
சீமானின் "வீர நடை" என்கிற திரைப்படத்தில் முதன் முதலில் பாடல் வரிகளை
எழுதத்தொடங்கினார். தொடர்ந்து திரையிசையில் தன் முத்திரையைப் பதித்து வருகிற இவர்
2000 க்கு மேல் பாடல் எழுதியுள்ளார். ஒரு வருடத்தில் அதிக பாடல்களை எழுதும்
வாய்ப்பும் பெருமையும் முத்துக்குமார் பெற்றுள்ளார். 2007 இல் அஜித் நடித்த
கிரீடம் படத்தில் வசனமும் எழுதியுள்ளார்.
இவரது தந்தை ஒரு தமிழாசிரியர் தந்தையின்
லட்சக்கணக்கான சேமிப்பான புத்தகங்களுக்கு இடையே பயணமான சிறுவயது, அவரை ஆறுவயதில் இருக்கையிலேயே கவிதை எழுதத்
தூண்டி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாவல் மற்றும் பல கவிதை தொகுப்புக்களையும்
எழுதி வெளியிட்டிருக்கிறார். தற்போதும் இயக்குனராக கதை தயார்படுத்தலில் தீவிரமாகவே
உள்ளார்.
வீரநடையில் "முத்து முத்தா
பூத்திருக்கும் முல்லைப் பூவை புடிச்சிருக்கு.." என்ற அந்தத் திரைப்படப்
பாடல், இதுவரை வந்த
அவரது மற்ற பாடல்களை விட அதிக உவமைகளை கொண்டிருப்பதாக இலக்கியவாதிகள் கூறுகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு யோசிக்காமல், வரிகளுக்காக தவமிருக்காமல், வேகமாக
வார்த்தைகளை இறக்குமதி செய்து பத்தே நிமிடங்களில் பாடலை எழுதி முடிக்கும்
திறமைகொண்டவர் என முத்துக்குமார் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர் ரகுமானிலிருந்து இளைஞர் ஜி.வி ப்ரகாஷ்
வரை அனைவர் இசையிலும் எழுதி இருக்கும் இவர் பல இசை அமைப்பாளரின் பாராட்டுக்களை
பெற்றவர்.
அவரின் காதல் கவிதைகளும், பாடல்களும் இன்றைய இளைஞர்களின் காதலுக்கு
உதவியாக இருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. காரணம் அவர் கையாளும், அவரின் எளிய வரிகளில் காதலை எல்லோராலும் உணரக்கூடியதாக
இருக்கிறது. பாடல்களில் கவிதை இருக்கும், கவிதைகளில்
எளிமையான வார்த்தைகள், வரிகளில் கதை, பளிச்சென முகம் காட்டும் கருத்துகள். இவரின்
பாடல் வெற்றிக்கு காரணமாகும்.
No comments:
Post a Comment