Tuesday, October 19, 2010

உறுதிமொழி!

இந்தியா ஒளிர்கிறது என
மேடைகள் தோறும் முழங்கினர்
நம் அரசியல் மே(பே)தைகள்!

ஆனால்...
நடைமுறை உண்மை என்ன?
நான் சொல்லவா?

நாம் வணங்கும் கடவுளைப் போலவே
எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர்
பிச்சைக்காரர்கள்!

பிரணவ மந்திரத்தைவிட
உச்சஸ்தாயில் கேட்கிறது
பிச்சைக்காரர்களின் அழுகுரல்!

குடிக்க தண்ணீர் இல்லாவிட்டாலும்
குளிக்க தண்ணீர் இல்லாவிட்டாலும்
ஒருவேளை சாப்பிட உணவு இல்லாவிட்டாலும்
கவலையில்லை நம்நாட்டு குடிமகன்களுக்கு!
'மடக் மடக்' என்று
மாட்டு மூத்திரத்தை குடிப்பதுபோல்
குடிப்பதற்கு
சாராயம் மட்டும் கிடைத்துவிட்டால் போதும்!

உலகவங்கிக் கணக்கில்
நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவு
நம் நாட்டின்மீது கடன்!
இப்படி பஞ்சப் பரதேசிகளாய்
வாழ்ந்துங்கூட
கேளிக்கை விருந்துகள்!
குத்தாட்ட நடனங்கள்!!

திருவோட்டோடு தெருவில் அலையும்
பிச்சைக்காரர்களுக்கு இணையாய்
கையில் சான்றிதழ்களுடன்
அலைகின்றனர்
வேலையில்லா பட்டதாரிகள்!!

கட்டிய மனைவியையே - காசுக்காக
கூட்டிக் கொடுக்கும்
கணவனைப் போல் 
பற்றிய கொள்கைகளையே
காற்றில் பறக்கவிடும்
பல அரசியல் கட்சிகள்!

நான்கு சுவர்களுக்குள்
கணவன் மட்டுமே காணவேண்டிய
உடல் வளைவுநெளிவுகளை
நாகரீகம் என்ற பெயரில்
ஊரார்முன்னே காட்டிக்கொண்டும்
ஆடைகளை கிழித்துக்கொண்டும்
குறைத்துக்கொண்டும்...
சிலபெண்கள்!

வேறுவழியில்லாமல்
கிழிந்த ஆடைகளை
அணிகின்றனர்
பிச்சைக்காரர்கள்!
பணத்தை செலவழிக்க
வழிதெரியாமல்
ஆடைகளை கிழித்துக்கொண்டு
அரைநிர்வாணமாய்...
சில பெண்கள்!!

இவர்கள்தான்
நம்நாட்டின் கண்கள்!
பாரதிகண்ட புதுமைப் பெ(பு)ண்கள்!
நாணத்தோடு வாழத்தேவையில்லை!
மானத்தோடுகூடவா வாழத்தேவையில்லை???????????????

வீட்டு வரி, தண்ணீர் வரி,
மின்சார வரி, வருமான வரி
என வரிவிதித்து வரிவிதித்து
நம் இரத்தத்தை உறிஞ்சுவிட்டு
கடமையைச் செய்யாமல்
இலவசங்களை அள்ளிவீசிவிட்டு
நம் மூளையை மழுங்கடித்து
நம்மை முதுகெலும்பு இல்லாதர்வளாய்
மாற்றுகின்றனர்
சில அரசியல் சாணக்கியர்கள்!

காற்று விரட்டித்தான்
கம்பத்தில் பறக்கிறது
நம்நாட்டின் தேசியக்கொடி!

மிட்டாய் வாங்க
மட்டுமே பயன்படுகிறது
நம் நாட்டின் சுதந்திர தினம்!!

நம் தேசத்தலைவர்கள் அனைவருமே
மதிப்புள்ள சிலைகளாய்
மதிப்பில்லாமல்...

காந்திஜெயந்தி அன்றுகூட
கொடிகட்டிப்பறக்கிறது
கள்ளச் சாராய வியாபாரம்!!

தம் இனமக்கள் அழிந்துங்கூட
என்னவென்று கேட்காமல்
ஏகாந்தமாய்
ஐம்புலன்களை அடக்கி
சமாதி நிலையில் தியானித்திருக்கும்
முனிவர்களைப் போலவே
சாந்தமாயிருக்கின்றனர்
நம் தமிழ்நாட்டு மக்கள்!
இன்னும் சிறிதுநாட்களில்
நம் தமிழினமே
சமாதி ஆகுமே என்ற
எதிர்கால கவலையின்றி...

படிக்கச் சொல்கிறது பள்ளிக்கூடம்! - சாராயத்தைக்
குடிக்கச் சொல்கிறது அரசாங்கம்!!

வெளியில் சொன்னால் வெட்கக்கேடு!
வேதனையில் மனமோ வெந்தழல்காடு!!

ஏ இந்திய சமுதாயமே...
கொஞ்சம் நில்!
நான் கூறப்போகும் உறுதிமொழியை
கேட்டுவிட்டு செல்!!

எழிலுக்கு பஞ்சமில்லாத
என் இந்தியத்திருநாட்டில்
மேற்சொன்ன அத்தனை குறைகளும்
களையப்படும் வரை
நம் நாட்டை
பிச்சைக்கார நாடு என அழைப்பதில்
பெருமகிழ்ச்சி அடைகிறேன்!!

1 comment:

ஜோதிஜி said...

உங்கள் ஆதங்கம் கோபமாய் வெளிப்பட்டுள்ளது.