Tuesday, October 31, 2017

அன்பு மகளே




என்னன்பு மகளே என்னழகு மலரே
என்கனவின் நிலவே என்னுறவின் அழகே

உன்னழகு மழலையிலே அப்பான்னு அழைக்கயிலே
கண்ணோடு நீர்கொட்டும் காதோரம் தேன் சொட்டும்
கண்ணழகே மூக்கழகே காலழகே வாயழகே
உன்னழகை பார்த்தேதான் உண்மையிலே வியந்தேனே

உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
வான்கொஞ்சும் விண்மீனாய் நான்கொஞ்சும் பொன்மீனாய்
கண்முன்னே முழுநிலவாய் என்முன்னே எழில்மலராய்
கண்ணுள்ளே கருமணியாய் கலந்திட்ட கண்மணியே

மலரொன்று அழகாக மகளென்று பேர்சொல்ல
நிலவொத்த முகத்தோடு நீவந்தாய் தரணிதனில்
விலகாத அன்புடனே விரல்பிடித்து நீநடந்து
பழகுந்தமிழ் அழகுறவே பைந்தமிழ்நீ பேசவந்தாய்

பார்த்தவிழி மூடாமல் பார்க்கத்தான் தோன்றுதடி
சேர்த்தெடுத்த அகிலாக சிரிக்கின்ற உன்னழகு
கோர்த்தெடுத்த முத்துமாலை குழந்தையாக என்வீட்டில்
வார்த்தெடுத்த வதனமதில் வஞ்சியுந்தன் தாய்முகமே

பொம்மைக்குட்டி போலவேதான் பெண்குழந்தை பிறந்துவிட்டாள்
அம்மாடி ஆத்தாடி அழகாகப் பிறந்துவிட்டாள்
அம்மான்னு அப்பான்னு அழைக்கத்தான் பிறந்துவிட்டாள்
பொம்மாயி பெண்குழந்தை புதிபுதிதாய் கற்பனைகள்

நெஞ்சோடு நிறைந்தவளே நேசம்கொண்ட என்மகளே
பிஞ்சுமலர் சிரிப்பினிலே பித்தாச்சு என்மனமே
விஞ்சுகின்ற புகழோடு வாழ்வாயே நீயிங்கே
கொஞ்சுதமிழ் மொழிகொண்டு வாழ்த்துகிறேன் கவிதைவழி

No comments: