பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/sVpWfUJT8QQ
இப்போது தான் நேரம் கிடைத்திருக்கிறது பாடலை பதிவு செய்து வெளியிட.
கடந்த ஜனவரி 24, அதிகாலை 4.15 மணிக்கு தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி இந்தப் பாடலை எழுத வைத்தது எனக்குள் இருந்த இசை. எனக்கேதோ பைத்தியம் பிடித்து விட்டதென நினைத்துக் கொண்டே இருந்தேன். மெட்டு மட்டும் முதலில் வந்தது. உடனேயே முழுப் பாடலும் வந்தது. தத்தகாரத்தில் மெட்டை மட்டும் குரல் பதிவாக என் மூத்த மகள் ரிதன்யா வின் பள்ளி இசை ஆசிரியரும் இசையமைப்பாளர்/பாடகருமான திரு. குமரன் அவர்களுக்கு அனுப்பிவிட்டு பாடலின் முதல் நான்கு வரிகளையும் அனுப்பி விட்டு எனக்கேதோ பைத்தியம் பிடித்து விட்டதென நினைத்துக் கொண்டே உறங்கிப் போனேன். காலை 7.50 மணியளவில் குமரனிடமிருந்து பதில் குரல் பதிவில் "சார், ட்யூன் அருமையா இருக்கு. நேர்ல வாங்க பேசலாம். இப்படியே திறமையா உங்களுக்குள்ளேயே வச்சுக்கிட்டா என்ன பண்ண முடியும்? வெளிப்படுத்த வேணாமா? நான்கைந்து மாதங்களுக்கு முன்னாடி குழந்தைய கூட்டிட்டு வந்தீங்க. அதுக்கப்பறம் வரவே இல்லையே? நேர்ல வாங்க பேசலாம்" என்று அனுப்பி இருந்தார். அப்போது தான் ஒரு செய்தி புரிந்தது "நான் முறையாகக் கற்றுக் கொள்ளாத இசை, எனக்குத் தெரியாத இசை எனக்குத் தெரியாமலேயே எனக்குள் குடி புகுந்து கொண்டு என்னை இப்படி ஏதோ செய்கிறது" என்று.
இந்தப் பாடலில் என்னுடைய இசையையும் என் இளைய மகளும் என் குட்டி இளவரசியான நிறைமதியையும் ஒப்பிட்டு ஒரு வரியில் என் இசையையும் இன்னொரு வரியில் என் குட்டி இளவரசி நிறைமதியையும் பாடும்படி பாட்டு அருமையான மெட்டோடு கலந்து வந்திருக்கிறது.
இந்த விழியத்தின் ஆரம்பத்தில் இசையமைப்பாளர்/பாடகருமான திரு. குமரன் அவர்கள் இப்பாடல் பற்றி சொன்ன குரல் பதிவை இணைத்திருக்கிறேன். விழியத்தை முழுமையாகக் கேளுங்கள். உங்கள் கருத்துகள், விமர்சனங்களை இந்த விழியத்தின் பின்னூட்டத்தில் (comments) கட்டாயம் தெரியப் படுத்துங்கள்.
என் பாட்டே எந்தன் இசையே
என் கிட்ட கொஞ்சம் நீயும் வா
தாலாட்டு கேட்டிடும் பெண்ணே
தாயாகிக் கொஞ்சிடும் கண்ணே
கன்னத்தில் முத்தம் வைக்க வா
பாராட்டும் உலகம் முன்னே
பார்போற்றும் அழகுப் பெண்ணே
கவிபாடும் இசைகொண்டு வா
என்னுள்ளே இசையாய் வந்தாய்
என் வாழ்வின் அர்த்தம் தந்தாய்
நீ எந்தன் உயிர் தானே வா
விழிதூங்கச் செல்லும்போதும்
விரல்கோதித் தூங்கச் சொல்லும்
அசைந்தாடும் இசைத்தாயே வா
என்னுள்ளே வந்தே என்னை
இசை பாட வைத்த பெண்ணை
என்றென்றும் நினைப்பேனே வா
No comments:
Post a Comment