Thursday, April 9, 2026

எங்கள் வீட்டு மல்லிகைக்குப் பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/dgHXUPUdKiw


இன்று (09-04-2026) என் அண்ணி கோகிலாவுக்குப் பிறந்தநாள்.

கடந்த 2024 டிசம்பர் மற்றும் 2025 ஜனவரி 2025 ஆகிய இரண்டு மாதங்களுக்கு இடையில் என் முட்டாள்தனத்தினால் ஏறத்தாழ ஐந்து இலட்சம் ரூபாயை தொலைத்து திரும்பப் பெற இயலாமல் இழந்து விட்டேன். 

மதுரையில் என் வீட்டில் இதனால் நிறைய பிரச்சனை எனக் கேள்விப்பட்டு அண்ணி சென்னையிலிருந்து எங்கள் வீட்டுக்கு கடந்த 2025 ஜனவரி மாதம் தைப்பொங்கல் வாக்கில் வந்தாள்.

என்னிடம் நடந்த விவரங்களை கேட்ட போது நடந்தவற்றைச் சொன்னேன். நிறைய அழுதேன். அண்ணி "நல்ல தம்பி ல்ல. அழக் கூடாது. போகட்டும் விடுங்க. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிங்க" என்றாள்.

தன் தங்கையின் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆழமான எண்ணத்தின் வெளிப்பாடு தான்.

இன்று நான் நல்ல மனநிலையிலும், என் குடும்பத்துடன் நல்ல நிலையிலும் இருப்பதற்கு என் அப்பா, அம்மாவுக்கு அடுத்தபடியாக என் குலதெய்வமாக என் குடும்பத்தை அந்த நேரத்தில் சிதைய விடாமல் காத்து நின்றாள் என் அண்ணி.

கடந்த 2025, ஏப்ரல் எட்டாம் தேதி நானும் என் மனைவியும் குழந்தைகளும் என் மனைவியின் ஊர்த் திருவிழாவிற்குச் சென்றோம். அண்ணியும் சென்னையிலிருந்து திருவிழாவிற்கு வந்திருந்தாள். "நாளை 09-04-2025, என் பிறந்தநாள் என்பது உங்களுக்குத் தெரியும். கடந்த 2024 ஆண்டு போல் இந்த ஆண்டும் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் எழுதிப் பாடுங்க" என்றாள். 

அன்றைய தேதியில் அந்த வேதனையிலிருந்து முழுவதும் வெளியே வர முடியாமல் இருந்த நான், வீட்டில் இருந்து தொடர்ந்து அலுவலக வேலை (Work from home) என்பதால் அன்றிரவு பல்லக்கில் சாமி வருவதைக் கூட பார்க்க முடியாமல் அசதியில் தூங்கி விட்டேன். அடுத்த நாளும் வேலைப்பளு அதிகம் என்பதால் இரவு தூங்கினால் தான் நல்லது என்பதாலும் நள்ளிரவில் எழுந்திருக்கவே இல்லை. அதிகாலை ஐந்தரை மணி. பேச்சுச் சத்தம் கேட்டது. "கொல்லைப் பக்கம் உள்ள மல்லிகைப் பூவை வைத்துக் கட்டிய சரம்" என மல்லிகைப் பூவை தலையில் வைப்பது குறித்து பேச்சுச் சத்தம் கேட்டபடியே கண் விழித்தேன். அதையே முதல் வரியாக வைத்து 09-04-2025 அண்ணியின் கடந்த ஆண்டு பிறந்தநாளன்று 
இந்தப் பாடலும் மெட்டும் என்னிடமிருந்து பிறந்தது.

அன்று 09-04-2025, நான் எழுதிய இந்தப் பாடலை, அவளிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். "நீங்களே பாடுங்க" என்றாள். அப்போதைய என் மனநிலையில் நான் பாடிக் காட்டவில்லை.

இன்றைய அவளின் பிறந்தநாளில் இதனை வெளியிட எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி.





வீட்டுத் தோட்டத்திலே 
மணம் வீசும் மல்லிகையே 
பாட்டுப் படிச்சேனே 
உன் பிறந்த நாளினிலே

நல்ல குணத்துக்கு 
நினைத்ததெல்லாம் நடக்கட்டும்
வெள்ளை உள்ளத்துக்கு
வேண்டியவை கிடைக்கட்டும்

துன்பம் என்றபோது
துயர் துடைக்க நின்ற மனம் 
கண்ணீர் விட்டபோது 
கரம் நீட்டி துடைத்த குணம்

உந்தன் மனம் போலே 
உன் வாழ்வு சிறக்கட்டும்
புத்தாடை அணிந்தே தான்
உன் சிறகு பறக்கட்டும்

என்றென்றும் சந்தோசம்
உன் வாழ்வில் தங்கட்டும் 
பொன்முகத்தில் புன்னகையும்
நாள்தோறும் பொங்கட்டும்

அன்பு கொண்ட உள்ளத்திலே
ஆண்டவனை பார்க்கின்றேன்
எப்போதும் நலமுடனே 
நீ வாழ வேண்டுகிறேன்