Showing posts with label அணிந்துரைகள். Show all posts
Showing posts with label அணிந்துரைகள். Show all posts

Wednesday, January 8, 2014

குறுங் கவிக் குழந்தைகள்

அன்பெனும் நூலிழையால் பின்னப்பட்டுள்ளது இவ்வுலகம். அன்பெனும் சொல்லுக்கு அழகும், அர்த்தமும் சேர்ப்பவர்கள் குழந்தைகள். குழந்தைகளில்லா இப்பூமியைக் கற்பனை செய்துபார்க்கவே கடினமாக இருக்கிறது.
வாழ்வுச் சுழலுள் சிக்கித் திணறுகிற மனிதர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறவர்களாகவும், துன்பக் கண்ணீரிலிருந்து சற்றே அவர்களை மீட்டு, அவர்களிடம் புன்னகைகளைப் பூக்க வைக்கிறவர்களாகவும் குழந்தைகளே இருக்கிறார்கள். குழந்தைகளை நாம் பத்திரமாக வளர்ப்பதாகச் சொல்லிக் கொள்கின்றோம். அது உண்மையில்லை. குழந்தைகள் தான் நம்மைப் பத்திரமாக வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பூமிப் பந்தின் அழகும், அற்புதமும் குழந்தைகளாலேயே சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் சிரிப்பினில்தான் வானம் மழைநீராய் மண்ணை நனைக்கிறது. மண்ணிலிருந்து விதைகள் முளைத்துத் துளிர்க்கின்றன. மொட்டுகள் பூக்கின்றன. காய்கள் கனியாகின்றன.
உலகத்தின் இயக்கமே குழந்தைகள்தான். இப்பூமிப்பந்தின் அச்சாணியே குழந்தைகள்தான். குழந்தைகளின் குரலிலேதான் பூபாளம் கேட்கிறது. பொழுது புலர்கிறது.
குழந்தைகளின் கைகளில் உள்ள பல்வேறு விளையாட்டுப் பொருட்களில் ஒன்றாய், இப்பூமியும் ஒரு பந்தாய் உள்ளது.
விளையாடும் குழந்தைகளுக்கு எல்லாப் பொம்மைகளும் ஒன்றே. யானை, கரடி, மான், குருவி, பட்டாம்பூச்சி, கிலுகிலுப்பை, பந்து, கூடவே சில கடவுள் பொம்மைகளும்.
குழந்தைகளின் உலகில் கடவுள் பொம்மையாகிறார். பொம்மைகளின் உலகில் கடவுள் குழந்தையாகிறார்.
இவ்வுலகம் பூப்பதும், மணப்பதும், மகிழ்வதும் குழந்தைகளாலேயே சாத்தியமாகிறது.
‘குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்’ என்று தனது ஹைக்கூ கவிதை நூலுக்கு கவிஞர் முனைவென்றி நா. சுரேஷ்குமார் வைத்துள்ள தலைப்பே என்னை வசீகரித்தது. பலப்பல யோசிப்பைக் கிளறிவிட்டது.
தமிழிலக்கிய உலகில் இன்று புதுப்பொலிவும், புதுச்செறிவும் பெற்று மிளிர்கிற ஹைக்கூ கவிதைகளில், தனக்கென ஒரு தனித்த அடையாளத்தோடும், கவனிப்பிற்கான பதிவுகளோடும் முன்னேறி வரும் கவிஞர் நா. சுரேஷ்குமார்.
இவரது சில கவிதைகளை பல்வேறு இதழ்களில் வாசித்து, இரசித்திருக்கின்றேன். புதிய தளிர்ப்பின் பச்சை வாசனையோடு அறிமுகமான முனைவென்றி நா. சுரேஷ்குமார், முகவை மாவட்டம் தந்திருக்கும் புதுவரவு.
வெயில் தின்று அலையும் பூமியிலிருந்து ஒளிமுகம் காட்டி எழுந்துள்ளார் கவிஞர் நா. சுரேஷ்குமார். பரமக்குடி மண் தமிழ்த் திரையுலகிற்கு பத்மஸ்ரீ கமலஹாசனையும் முற்போக்கு இலக்கியத்திற்கு எழுத்தாளர் கந்தர்வனையும் தந்து பெருமைத் தேடிக்கொண்டது.
அவ்வப்போது சில புதிய முகங்களைக் காட்டிவரும் மண்ணிலிருந்து, புதிய தாய்வேரிலிருந்து கிளர்த்தெழுந்து கவிதை உலகிற்கு கால்பாவியுள்ளார் கவிஞர் நா. சுரேஷ்குமார்.
வாழ்வின்பொருட்டு தலைநகர் சென்னைக்குப் பணிநிமித்தம் வந்து, ஆண்டுகள் பல ஆனபோதிலும், இன்னமும் தாய்மண்ணின் நேசத்தையும் மனித உறவுகளையும் மறக்காத மனிதன் என்பதை இவரது எழுத்தும், அருகிலிருந்து பேசிய சிலநிமிடங்களும் எனக்குச் சொல்லின.
பாசாங்கில்லாத, இயல்பாய் இருக்கிற மனித மனசுக்கே ஹைக்கூ சாத்தியப்படும். அச்சு அசலான வாழ்வை ஈரம் சொட்டச் சொட்ட வாழ்ந்துவரும் கவிஞர் நா. சுரேஷ்குமாரின் கைகளுக்கு ஹைக்கூ வசப்பட்டிருப்பதில் பெரிய வியப்பில்லை.
தனது முதல் ஹைக்கூத் தொகுப்பையே ஒரே பாடுபொருளில் கொண்டுவரத் துணிந்த அவரது முயற்சி பாராட்டத்தக்கது.
எழுதி எழுதிப் பழகி, பல இடங்களில் நல்ல தெறிப்பான ஹைக்கூப் பதிவுகளைத் தருவதில் வெற்றி பெற்றுள்ளார்.
எல்லோருமே குழந்தையாக இருந்து வளர்ந்தவர்கள்தான். அன்றாடம் குழந்தைகளோடு வாழ்பவர்கள் தான். ஆனபோதிலும், குழந்தைகளோடு கழிகிற ஒவ்வொரு கணமும் ஏதேனுமொரு கவிதையை நாம் கவனிக்காமல் விட்டு விடுகின்றோம்.
கவிஞர் நா. சுரேஷ்குமார், இவ்வகையில் மிகுந்த அதிர்ஷ்டக்காரக் கவிஞர். ஒரு நொடியும் வீணே கழியாமல், குழந்தைகள் உலகின் வாழ்வியல் பதிவுகளைக் கவிதையாய்க் கொண்டாடியுள்ளார். கூடவே கொஞ்சம் பொம்மைகளையும், சற்றே ஆறுதலுக்காக ஒரு கடவுளையும் கைத்துணையாகச் சேர்த்துக்கொண்டு.
அம்மாக்களிடம் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட, ‘இந்தா, இன்னும் கொஞ்சம் சாப்பிடு...’ என்று பொம்மைகளுக்கு ஊட்டிவிடும் அழகை பலமுறை பார்த்து இரசித்த எனக்கு, கடவுளுக்கே ஊட்டிவிடும் குழந்தைகள் இன்னும் புதுப்பொலிவு பெறுகிறார்கள்.
ஹைக்கூ கவிதைகளில் மீண்டும் மீண்டும் ஒரே பாடுபொருள் வருவதாக முன்பே ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதில், ஒரே பொருள் குறித்த கவிதைகள் எனும்போது, அந்தக் குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்ப்பதாக ஆகிவிடாதா... என்கிற லேசான தயக்கமும் இந்நூலின்வழி எனக்குள் அரும்பின.
குழந்தைகள், பொம்மைகள், கடவுள் எனும் மூன்று வார்த்தைக்களுமின்றி, இவற்றைப் பற்றிய காட்சிபதிவை ஹைக்கூவழி தருவதற்கு கவிஞர் நா. சுரேஷ்குமார் ஒரு கவிதையிலும் ஏனோ முயன்று பார்க்கவில்லை. ஆனாலு, மூன்று வார்த்தைகளை வைத்தே பல புதுப்புதுக் காட்சிகளை நமக்குத் தந்துள்ளார்.
இக்குறுங்கவிதைகள் குழந்தைகள் பற்றிய புதுப்பார்வையை வாசகர்களுக்குள் தருமென நம்புகின்றேன்.
கடவுளும், பொம்மைகளுமே கொண்டாடி மகிழ்கிற குழந்தைகளை, வாருங்கள் நாமும் கொண்டாடி மகிழ்வோம்.
குழந்தைகள் உலகில் புதிய பூச்சொறிதலை இக்கவிதைகள் வழி நிகழ்த்தியுள்ள கவிஞர் முனைவென்றி நா. சுரேஷ்குமருக்கு எனது அன்பின் கனிந்த வாழ்த்துகள்.

நாள்: 10.102012.

மு. முருகேஷ்,
அகநி இல்லம்,
3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு,
வந்தவாசி – 604408, திருவண்ணாமலை மாவட்டம்.
செல்பேசி: 9444360421
மின்னஞ்சல்: haiku.mumu@gmail.com