Showing posts with label கவிதைகள் (பாகம் - 13). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 13). Show all posts

Monday, September 19, 2011

காவியம் படைக்கலாம் வா!

வாழப் பிறந்தவனே! – புவிதனை
ஆளப் பிறந்தவனே!!

புன்னகைக்கும் பூக்களிருக்க
புதைகுழியை ஏன் தேடுகிறாய்?

அருந்திமகிழ அமுதமிருக்க
அமிலத்தை ஏன் தேடுகிறாய்?

உன்னைச் சுற்றி இன்பமிருக்க
இருவிழிகளில் கண்ணீர் ஏன் தோழா?

கண்ணீரைத் துடைத்து எழுந்துவா! – புதுக்
காவியம் படைக்கலாம் வா!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 25-12-2006

2. தினத்தந்தி (சென்னை பதிப்பகம்) – 23-04-2007

முடியுமென்று சொல்!

முடியுமென்ற சொல்லுக்குள்ளே
வெற்றி ஒளிந்திருப்பதை
நீ கண்டுகொள் தோழா!

அடக்கமாய் வாழ்வதை – வெற்றியின்
தொடக்கமாக்கிக் கொள் தோழா!!

கடந்த தோல்விகள் எல்லாம்
கனவுகள் தான் தோழா! – இனி
நடப்பவை எல்லாம்
நல்லவைதான் தோழா!!

காதலிப்பதை ஒதுக்கு தோழா! – வெற்றிக்
காவியத்தை ஒதுக்கு தோழா!!

முடியுமென்ற சொல்லுக்குள்ளே
வெற்றி ஒளிந்திருப்பதை
நீ கண்டுகொள் தோழா!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 23-07-2007

சாதனைகள் நம்வசம்!

தோல்வியென்பது
தொடர்கதையல்ல...
சிறுகதைதான்!
முயற்சி வேள்வியால்
தோல்விக்கு வைக்கலாம்
முற்றுப்புள்ளி!!

உள்ளத்தில் நாளும்
நல்லெண்ணத்தை விதைத்து
நம்பிக்கைஉரம் போட்டு
விடாமுயற்சியை வேர்வையாக்கி
பொறுமையோடு போராடு!

சோம்பலால் தேம்பி அழாதே!
உன் விடாமுயற்சிக்கு
வெறிபிடிக்கட்டும்!

கைகள் நீட்டாதவரைதான்
வானமென்பது தூரம்!
போராடத் துவங்கிவிட்டால்
சாதனைகள் நம்வசம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 07-04-2008

நம்வாழ்க்கை நம்கைகளில்...

வாழ்க்கையென்பது
நீரோட்டமல்ல...
விதியின் வழியே நாமும் செல்ல...!
வாழ்க்கையொரு போராட்டம்!!

சாகத்துணிந்த கோழைகளல்ல
நம் தமிழனம்!
வாழத்தெரிந்த வீரர்களல்லவா
தோழா...!!

ஒதுங்கிநின்று
கூச்சல் போடுபவர்களை
ஒதுக்கிவிட்டு – எதிர்
நீச்சல் போடப்பழகு!!

அஞ்சும் நெஞ்சத்திற்குள் – வெற்றி
தஞ்சம் புகுவதில்லை!
கொஞ்சமாய்
கோபத்தைக் குறைத்து
நெஞ்சத்தில்
நம்பிக்கையை நிறுத்து!!

நம்வாழ்க்கை நம்கைகளில்...!!



இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (சென்னை பதிப்பகம்) – 29-01-2007

பூமித்தாயின் கதறல்!

கதிரவனும் சந்திரனும்
இருகண்கள் பூமித்தாய்க்கு!
கதறுகிறாள் பூமித்தாய்...!
‘மதத்தையா படைத்தேன்? – மனித
மனத்தைத்தானே படைத்தேன்! – பூவுலக
மணத்தைத்தானே படைத்தேன்!!
ஜாதியையா படைத்தேன்? – மனிதனை
ஜதிதானே பாடவைத்தேன்!!’
கதறுகிறாளே பூமித்தாய்...!

இப்படிக்கேட்டால் மரணஓலம்...
எப்படிச்சிறக்கும் எம்மனிதகுலம்?
இங்ஙனம் இருந்தால் மனிதகுலம்...
எங்ஙனம் பிழைக்கும் எம்தமிழ்க்குலம்??

யானைக்குப் பிடிக்கிறது
மதம்!
மனிதா...
உனக்குமா பிடிக்கிறது
மதம்??


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பூவரசி (இணைய இதழ்) – 18-10-2007

கறைபடியாக் கைகள்!

தன் சொந்த செலவிற்காக
ஒரு குண்டூசியைக் கூட
உபயோகிப்பது தவறு
என எண்ணிய
மகாத்மா காந்தி
என்றொரு மாபெரும்
தலைவன் வாழ்ந்தான்
என் இந்தியத் திருநாட்டில்...!!

வெளியே நடந்து சென்று
குடிநீர் பிடிக்க சிரமமென்று
வீட்டுக்குள்ளேயே
குடிநீர் குழாய் வைக்கச்சொன்ன
தன் வயதான தாயாரிடம்
பொதுச்சொத்தை
சொந்தமாக உபயோகிப்பது தவறு
என்றானே
படிக்காத மேதை
காமராஜன்!!!!!
படித்தும் பேதையாக
வாழ்கிறோம் நாம்!
இவன் படிக்காமல்
மேதையாக வாழ்ந்தவன்!!

மகாத்மா காந்தி...
கர்ம வீரர் காமராஜர்...
இப்படி பல தலைவர்களின்
வாழ்க்கை வரலாற்றை
நினைக்கும்போது
இவர்களின் கைகள் சுத்தம்!
ஆனால்...
இன்றைய அரசிய தலைவர்கள்
ஜாதிசாங்கத் தலைவர்கள்
பலரின் வாழ்க்கையோ
சாக்கடை நாற்றம்!!

ஆட்டுக்குட்டிகளே...

இந்தக் கணினியுகத்திலும்
மனிதர்களின் இரத்தத்தில்
ஊறியிருக்கிறது
ஜாதி வெறி!

பலநூறு வயதாகிவிட்டது
ஜாதி என்ற சாத்தானுக்கு!

தம்இனமக்களை காக்க
தமிழீழம் வேண்டி
யுத்தம் செய்தான்
ஒரு தலைவன்
இலங்கையில்...!
இங்கும் ஒரு
தலைவன் இருக்கிறான்????!!!
ஜாதிசாங்கத் தலைவன்
என்ற பெயரில்...!
சிறையுனுள்ளே வாழ்ந்தாலும்
சிறைக்கு வெளியே வாழ்ந்தாலும்
இராஜ வாழ்க்கைதான்!!!!!

நீதிக்காக வாழ்ந்தவர்களை
தலைவர்கள் என அழைக்கலாம்!!
ஜாதிகளின் முன்னேற்றத்திற்காக
வாழ்கிறோம் என்ற பெயரில்
நடிப்பவர்களை
தலைவர்கள் என அழைக்கலாமா??????????????

அன்னா ஹசாரே
ஊழலுக்கெதிராய் போராடியபோது
வீதிகளில் ஒன்றுதிரண்டு
ஊர்வலம் போனோம்!
செங்கொடி சாய்ந்தபோது
அரைக்கம்பத்தில் பறந்தன
அனைவரின் மனங்கள்!
அதற்குள்
எங்கேடா போயின
உங்களின் நற்குணங்கள்?????????

செங்கொடி எரித்துக்கொண்டாள்
தமிழர்க்காய்த் தன்னையே!
நீங்கள் எரிக்கப் போனீர்கள்
தமிழ் மண்ணையே.....??!!

செங்கொடி
வாழ்ந்து மறைந்தாள்
வீரத் தமிழச்சியாய்...
மறத்தமிழச்சியாய்...

நீங்களும்தான்
வாழ்கிறீர்கள்
ஈனத் தமிழர்களாய்...
மடத் தமிழர்களாய்...

சமீபத்தில்
ஜாதிப் பிரிவினையால்
என் தமிழகத்தில்
கொல்லப்பட்ட உயிர்கள்
எட்டு

தத்தமது வாக்குவங்கிகளை
பலப்படுத்த வேண்டி
ஜாதிப் பிரிவினைகளை
உருவாக்கிக் கொண்டேதான்
இருக்கின்றன
தமிழக அரசும்
அரசியல் கட்சிகளும்!!

ஜாதிகளுக்கேற்ப சலுகைகள்
என்பதை மாற்றி
திறமைக்கேற்ப சலுகைகள்
வறுமைக்கேற்ப சலுகைகள்
என நடைமுறைப்படுத்துமா
தமிழக அரசும்
இந்திய அரசும்?

எங்கே போய் முட்டிக்கொள்வது?
தமிழக ஆட்சிக் கட்டிலில்
யார் வந்தமர்ந்தாலும்
இலவசம் என்ற பெயரில்
நம்மை முதுகெலும்பில்லாதவர்களாக்கி
மூளையை மழுங்கடிக்கின்றனர்!
நம்மை
மூளைச்சலவை செய்கின்றனர்...!!

நீங்களெல்லாம்
மூடர்களாய் வாழும்வரை
தமிழக அரசும்
இந்திய அரசும்
ஜாதிசங்க குள்ளநரிகளும்
உங்களை
பயன்படுத்திக் கொண்டேதானிருப்பார்கள்!
நீங்கள்
பலியாகிக் கொண்டேதானிருப்பீர்கள்!!

அடுத்த தலைமுறைக்
குழந்தைகளே...
‘ஆடு பகை குட்டி உறவா?’
எனக் கேட்டதெல்லாம்
அந்தக் காலம்!

ஆடுகள் வேண்டுமானால்
ஜாதி என்ற பெயரில்
முட்டிக் கொள்ளட்டும்!
நீங்களெல்லாம் ஆட்டுக்குட்டிகள்...
கட்டிக் கொள்ளுங்கள்!
மனிதநேயம் போற்றுங்கள்!
கருணையோடு வாழுங்கள்!
காதல் செய்யுங்கள்!!!!

தீபமேற்றுவோம்!

தீபாவளித் திருநாளிலே தீபமேற்றுவோம்!
தீயயெண்ண மிருந்தாலதைத் தூரவோட்டுவோம்!
கோபம்கயமை கள்ளமில்லா உள்ளம்பெறவே
கண்கள்மூடிக் கடவுளையே நாமும்போற்றுவோம்!!

புத்தாடைகள் அணிந்தேநாமும் பாதம்பதிப்போம்!
பூமிப்பந்தைப் புரட்டிப்போட்டு நாமும்குதிப்போம்!
தத்துவங்கள் பொய்களல்ல மெய்யேதானென்ற
தாத்தாபாட்டி அறிவுரைகள் நாமும்மதிப்போம்!!

பலகாரங்கள் வகையாய்ச்செய்து நாமும்தின்னலாம்!
பக்கம்அக்கம் உள்ளோரிடம் பகிர்ந்தேஉண்ணலாம்!
சிலகாலங்கள் வாழ்ந்தேநாமும் போகும்முன்னரே
செயல்கள் நல்லசெயல்களையே நாமும்பண்ணலாம்!!

பட்டாசுகள் வாங்கிவாங்கிக் கொளுத்திப்போடுவோம்!
படபடவென்று வெடிக்கும்போது நாமும்ஆடுவோம்!
கடவுள்வேறாய் மதங்கள்வேறாய் நாமேபிரித்தோம்
கருணைஒன்றே அன்பேகடவுள் நாமும்பாடுவோம்!!

தீபாவளித் திருநாளிலே தீபமேற்றுவோம்!
தீயயெண்ண மிருந்தாலதைத் தூரவோட்டுவோம்!
கோபம்கயமை கள்ளமில்லா உள்ளம்பெறவே
கண்கள்மூடி கடவுளையே நாமும்போற்றுவோம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

2. வெற்றிநடை - 01-11-2012

3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012

புத்திசாலித்தனம்!

மனிதநேயத்துடன் கூடிய
குள்ளநரித்தனம்!
புத்திசாலித்தனம்!!

மனிதநேயமில்லாத
புத்திசாலித்தனம்!
குள்ளநரித்தனம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

வாழாவெட்டி!

நீ
வேறு ஒருவனுக்கு
வாழ்க்கைப்பட்டுப்
போனாய்!!
நானும் நம்காதலும்
வாழாவெட்டியாய்ப் போனோம்!!

மனம்!

உன்னை
அடக்க நினைத்து
தோற்றவர்களே அதிகம்!
உன்னை வென்றவர்களே
எம் பாரத தேசத்தில்
ஞானிகள்...
சித்தர்கள்...
மகாத்மாக்கள்...

அன்பு பாசம்
காதல் காமம்
கோபம் வீரம்
கருணை கொலைவெறி
இன்னும்
எத்தனை எத்தனை
உணர்வுகள்...

உன்னை அடக்கிவிட்டால்
எம் உயிர்கட்கு
மறுபிறவி இல்லையாம்!
வேதங்கள் சொல்கின்றன!!

பேயாட்டம் போடுகிறாய்
சிலநேரங்களில்...
நோய்கொண்ட மானுடன்போல்
சிலநேரங்களில்...
தாய்போல அன்பாக
சிலநேரங்களில்...

சின்னஞ்சிறு வயதில்
இது நல்லது
இது கெட்டது
எனச் சொல்லிச் சொல்லி
வளர்த்தார்கள்!
வளர வளர
இடம் பொருள்
சூழ்நிலைகளுக்கேற்ப
நல்லது கெட்டது
எல்லாமே தலைகீழாய்
மாறிக்கொண்டேயிருப்பதை
சகித்துக் கொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது இவ்வுலகில்!

உடலோடும் உயிரோடும்
உறவாடிக் களித்து
இரண்டறக் கலந்திருக்கிறாய்
நீ!

உன்னை
அடக்க நினைத்து
தினம்தினம்
உன்னிடமே அடகுவைக்கிறேன்
என்னை..!!

ஊனுடம்பு கொண்ட – இந்த
மானுடமெல்லாம்
உனக்கு அடிமையான
சூழ்நிலைக் கைதிகளா
என்ன?

உன்னை நான்
வென்று விட்டால்
என்னையே நான்
வென்று விடுவேன்!

எத்தனை முறை
தோற்றாலும்
மீண்டும் மீண்டும்
எழுவேன்!
நீயா? நானா?
பார்த்து விடலாம்
ஒரு கை!!

Sunday, September 18, 2011

இன்று என் தமிழகம்!

அன்று என் தமிழகத்தைப் பார்த்து மாகாகவி பாரதி பாடிவைத்தான்
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே’
என்று.

இன்று என் தமிழகத்தைப் பார்த்து இப்படித்தான் பாடத் தோன்றுகிறது எனக்கு.
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்ப
பீர்வந்து பாயுது வாயினிலே’
மாகாகவி பாரதியே, என்னை மன்னித்து விடு உன் பாடலின் முதலிரண்டு வரிகளை நான் remix செய்ததற்கு.


பட்டிதொட்டி எங்கும்
புட்டிதொடாதவன்
ஆண்மகனில்லை!
இன்று என் தமிழகத்தில்...

பிச்சைக்காரன்கூட
பிச்சை கேட்பது
பசிப்பிணிக்கு
மருந்து வாங்குவதற்கல்ல...
மூன்றுவேளையும் மூச்சுமுட்ட
மதுவருந்தவே...

அரிசி மண்ணெண்ணெய் வாங்க
நியாயவிலைக்கடைகளில்
வரிசையில் நின்ற காலம்போய்
இன்று
டாஸ்மாக் கடைகளில்
டிராபிக் ஜாம்!!

கோடிகளையும்
சம்பாதித்துக் கொடுக்கிறது
கேடிகளையும்
உருவாக்கி விடுகிறது
டாஸ்மாக்!
பணமா?
குணமா?
தமிழக அரசுக்கே
வெளிச்சம்!!

நடைபாதைகளில்
பயணிகள் நடக்கத் தடை(!)
கடைக்காரர்களின்
கண்மூடித்தனமான ஆக்கிரமிப்புகள்!
எப்போதும்
திருவிழாக்கோலம் பூண்டபடியே...
மாநகர சாலைகள்!!

பேருந்துகளின்
ஜன்னலோர இருக்கைகளில்
பான்பராக் எச்சில்கறை!

சாக்கடை நறுமணம்(!) வீசும்
கூவ ஆறுகள்!!

அண்ணாந்து
பார்த்து வியக்கும்
ஏரோப்ளேன் உயரத்தில்
தங்கத்தின் விலை!

இராக்கெட் வேகத்தில்
விலைவாசிஏற்றம்!

கோடிகளில் ஊழல்!
டைம்பாஸ் காதல்!!

தாலாட்டி வளர்த்த
தாத்தாவும் பாட்டியும்
தள்ளாடும் வயதிலும்
தனிமையில் கிராமத்தில்...

எங்கள் ஊர்
பேருந்துகளின் கால்களில்
செருப்புகள் இல்லை!
அப்படியே செருப்புகள் அணிந்து
அனுமதிக்கப்பட்ட எடையை விட
அளவுக்கதிகமாய்
தலையிலும் முதுகிலும்
தோள்களிலும் சுமந்துகொண்டு
பார்வை மங்கிய கண்களுடன்
ஒவ்வொரு அடியையும்
மிகுந்த எச்சரிக்கையுடன்
எடுத்துவைத்தாலும்
செருப்புகளையும் மீறி
பேருந்துகளின் கால்களை
பதம்பார்க்கத் தவறுவதில்லை
எங்கள் ஊர் கூ(தா)ர்ச் சாலைகள்!

குடிநீர் இல்லாக் 
கிராமங்களில்கூட
மூன்றுவேளையும் குடிப்பதற்கு
சாராயம்!
அவசியம் எது?
அனாவசியம் எது?
தமிழக அரசுக்கே
வெளிச்சம்!!

சந்தி சிரிக்கிறது
இவ்வுலகம்
என் தமிழகத்தைப் பார்த்து!
சிந்திக்க வைக்கிறது
இன்று என் தமிழகம்
எனைப் பார்த்து!!

அடைமழை!

அடைமழை பெய்து
அப்போதுதான்
ஓய்ந்திருந்தது!

அலுவலகம் முடிந்து
வீடு திரும்புவதற்காய்
சாலையோரமாய் நடந்தேன்!

என் கைகுலுக்கிவிட்டு
தேநீர் அருந்தச் சொன்னது
தென்றல்!

ஸ்ட்ராங்காய்
ஒரு டீ குடித்தவுடனே
மீண்டும் கிளம்பினேன்
சாலையோரமாய் நிறுத்திவைத்திருந்த
நடராஜா சர்வீசில்...!

பூக்கடைப் பெண்மணி
உரக்கக் கூவினாள்
‘எட்டு முழம்
பத்து ரூபா...
எட்டு முழம்
பத்து ரூபா...’
என்று!

கடந்து போகயிலே
அவள் முகம் பார்த்தேன்
கூவியபடியே
அவள் கண்களிலிருந்து
மீண்டும் வலுத்தது
அடைமழை...!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 17-09-2011

2. திண்ணை (இணைய இதழ்) – 17-09-2011

3. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

4. மௌனம் (மலேசிய தமிழ் இதழ்) - 01-12-2011

வீரவணக்கம்!

தமிழர்களே, தமிழச்சிகளே, சோகம் மறக்க, தேகம் சிலிர்க்க, வேகம் பிறக்க, பாடுங்கள் இப்பாடலை என்னோடு சேர்ந்து.


தீக்குளித்த செங்கொடிக்கு வீரவணக்கம் – இனி
தென்னகமே உன்பெருமை சொல்லிமணக்கும் – இங்கு
தீக்குளித்த வீரர்க்கெல்லாம் எனதுவணக்கம் - நானும்
தீபமேற்றி வழிமொழிந்தேன் நெஞ்சிலெனக்கும்

மூவரையும் தூக்கிலிடத் துடித்தகணத்தில் – நீ
முடிவெடுத்தாய் போராட்டம் என்றேசினத்தில் – இங்கு
பாவையரும் பட்டினியாய் கிடந்தகணத்தில் – நீ
பரிதவிப்பை ஒளித்தாயே உந்தன்மனத்தில்

சீமானும் நெடுமாவும் வருத்தஞ்சொல்லவே – உன்
சிலைமுன்னே நின்றபடி வருந்திச்செல்லவே – இங்கு
ஏமாளி ஆகிவிட்டான் தமிழன்மெல்லவே – இனி
எழுந்திடடா கொடுமைகளைத் துரத்திக்கொல்லவே

தரணிதனில் தென்னாட்டின் வீரமங்கையே – நீ
தமிழர்க்குப் புகழ்சேர்த்த அன்புத்தங்கையே – உன்
கருணையாலே எழுச்சிபெறும் எம்மிலங்கையே – இக்
கவிதையிலே பாடிவிட்டேன் எனதுபங்கையே

தீக்குளித்த செங்கொடிக்கு வீரவணக்கம் – இனி
தென்னகமே உன்பெருமை சொல்லிமணக்கும் – இங்கு
தீக்குளித்த வீரர்க்கெல்லாம் எனதுவணக்கம் - நானும்
தீபமேற்றி வழிமொழிந்தேன் நெஞ்சிலெனக்கும்


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

அழகு தேவதை!

காதலைப் பற்றி எழுதுவதில் எனக்கு அலாதி பிரியந்தான். தன் மேல் ஊடல்(கோபம்) கொள்ளும் பாட்டுடைத் தலைவியை இந்தப் பாடலைப் பாடி சமாதானம் செய்கிறான் பாட்டுடைத் தலைவன். (இந்தக் கதைச்சூழலும் பாடலும் எனக்குத் தோன்றிய கற்பனையே. உண்மை சம்பவமல்ல.) ௨௦௧௧ ல் எழுதிய பாடலிது.


பல்லவி:
அழகு தேவதை கண்ணில் வந்தாள்!
பழகும் போதிலே பாசம் தந்தாள்!
விலகி நின்றேனே விழிகளில் கண்ணீர்!
உலவும் காற்றைப்போல் உயிரினில் காதல்!!

சரணம் - 1
ஓர்நாள் உனையே பார்க்கா விடிலே...
கூர்வாள் எனையே கொய்யும் தினமே!
போர்வாள் இடையே தேர்போல் நடையே
சேர்வேன் உனையே சோர்வேன் மனமே...
(அழகு தேவதை...)

சரணம் - 2
மறந்தேன் உனையே என்றே நினைத்து
சிறப்பாய் நடிப்பாய் செருக்காய் நடப்பாய்!
இறந்தே கிடந்தேன் இருவிழி பட்டுப்
பிறந்தே விட்டேன் பார்மீ தினிலே...
(அழகு தேவதை...)

சரணம் - 3
கொஞ்சம் ஊடல் கொஞ்சம் கூடல்
தஞ்சம் கேட்டேன் தந்தாய் காதல்!
கண்கள் மோதல் கவிதைப் பாடல்
என்னுடைத் தேடல் நீதான் நீதான்!!
(அழகு தேவதை...)

சரணம் - 4
பூவைச் சூடிடும் பூவையும் நீதான்
தேவையும் நீதான் தேவதைத் தேன்தான்!
பாவையின் அழகினை பார்த்தேன் வியந்தேன்
சேவைகள் செய்திடும் சேவகன் நான்தான்!!
(அழகு தேவதை...)

பல்லவி:
அழகு தேவதை கண்ணில் வந்தாள்!
பழகும் போதிலே பாசம் தந்தாள்!
விலகி நின்றேனே விழிகளில் கண்ணீர்!
உலவும் காற்றைப்போல் உயிரினில் காதல்!!

குறிப்பு:
இந்தப் பாடல் முடிந்தவுடன் கதறி அழுதுகொண்டே ஓடிவருகிறாள் பாட்டுடைத் தலைவி, தலைவனைக் கட்டித் தழுகிறாள் ‘உனைப் பிரிந்து வாழமாட்டேன்டா செல்லம்’ என்று. பின் அவனின் கன்னங்களில் மாறி மாறி முத்த மழை பொழிய ஆரம்பித்தாள் அவள்.

யானை பார்!

30-08-2011 செவ்வாய் இரவு 11.30 க்கு எழுதிய கவிதை இது. விநாயகர் சதுர்த்தி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர்கள் விநாயகரும் யானையும்.


யானை பார்! யானை பார்!!

அம்பாரி யானை பார்!
அழகான யானை பார்!

அசைந்துவரும் யானை பார்!
முறம்போன்ற காது பார்!

தலையைக்கொஞ்சம் ஆட்டும் பார்!
தந்தம் கொண்ட யானை பார்!

கோயிலுக்கு போகும் பார்!
ஆசி கூறும் யானை பார்!

தூண்போன்ற காலைப் பார்!
தும்பிக்கையை நம்பிக்கையாய்
துணையாகக் கொள்ளும் பார்!

தேர்போல அசையும் பார்!
ஊர்கோலம் போகும் பார்!

பிளிறுகின்ற யானை பார்!
களிறு என்னும் செல்லப்பேர்!

தம்பிப்பாப்பா தங்கச்சிப்பாப்பா
நீயுந்தான் ஆடிவா!
வேகமாக ஓடிவா!!
யானைமாமா வந்தாச்சு!
கைதட்டி இரசிக்கலாம்!
விசிலடிச்சு குதிக்கலாம்!!

முத்துக்குமார்

29-08-2011 திங்கள் அன்று செங்கொடி என்ற பெண் தீக்கிரையானதாக செய்தி வெளியானது. அன்றிரவு மணி 11.30, படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன். படுக்கையை உதறிவிட்டு எழுந்து அமர்ந்தேன். பேனா எடுத்தேன். இந்த கவிதையை எழுதினேன். ‘கவிதைகள் மட்டுமே எழுத முடிகிறது. வேறு என்ன செய்ய முடியும் என்னால்?’ என்ற குற்ற உணர்வு மட்டுமே என் உடல் முழுவதும் வியாபித்திருந்தது அந்த நிமிடங்களில்.


ஈழத்தமிழருக்காய்
தீக்குளித்து இறந்துபோன
வீரத்தமிழனே...

தமிழகத்தில் வாழும்
ஈனத்தமிழர்களிடம் – தன்
மானவுணர்வை தட்டிஎழுப்பவா
கனல்மூட்டி இறந்துபோனாய்?

உன்
தன்னம்பிக்கை தலைக்கேறியதால்
தீக்குளித்தாயா?

தமிழகத் தமிழர்கள்
மாறிவிடுவார்கள் என நினைத்து
உன்
தன்னம்பிக்கை தலைக்கேறியதால்
தீக்குளித்தாயா?

இந்தத் தமிழ்மண்ணில்தான்
சாராய ஆறு
கரைபுரண்டு ஓடுகிறதாம்!
ஒரு கணக்கெடுப்பு
சொல்கிறது!!

இலவசம் பரவசம்
கைவசம் மதுரசம்
இது எங்கள் தமிழகம்!!!!!!!!!!!

தீபம் ஏற்றிவைக்கிறார்கள்
உனக்கு
கோபம் வரவில்லை
யாருக்கும்
பாவம் நீ...

உனக்கு
தன்னம்பிக்கை அதிகந்தான்!
பாவம் நீ..

மணமேடைப் பூக்களெல்லாம்
பிணமேடுகளில்...
காதல் பேசும் கண்களிலெல்லாம்
மரண பீதி...
எகிப்து பிரமிடுகளாய்
இலங்கை...
என்ன செய்தது
இறைக்கை??????????????????

தோண்டத் தோண்ட
பணம் கிடைத்தால்
மகிழ்ச்சி!
தோண்டத் தோண்ட
பிணம் கிடைத்தால்.....
?????????????????????????????????????????????????

உனக்கு
தன்னம்பிக்கை அதிகந்தான்!
பாவம் நீ..

அன்று நீ...
இன்று செங்கொடி......
இனிவேண்டாம்
போதும்...
இனிவேண்டாம்

போர்ப்படைக்கு வழிகாட்டலாம்!
தீக்குளிக்க வழிகாட்டலாமா????????

பத்திரிகையாளன் நீ
பண்பாளன் நீ
பகுத்தறிவாளன் நீ
சிந்தித்திருக்கலாம்
ஒருநொடி...

உனக்கு
தன்னம்பிக்கை அதிகந்தான்!
பாவம் நீ..

உன் புகைப்படத்தை
பத்திரமாய் வைத்திருக்கிறேன்!
பாரதி பிறந்த இம்மண்ணில்தான்
நீயும் பிறந்திருக்கிறாய்
என என் குழந்தைகளிடம்
எடுத்துச் சொல்ல...

குறிப்பு:
அடுத்த நாள் 30-08-2011 செவ்வாய் அன்று காலை இரு செய்திகள் வெளியாயின ‘ஈழத் தமிழர்கள் மூவருக்கும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. தூக்குதண்டனையை நிறைவேற்ற எட்டு வார தடை.’ என்று. கேள்விப்பட்ட போது மனம் இலேசானது. மனதில் நிம்மதி பிறந்தது.

இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
௧. தமிழர் எழுச்சி – டிசம்பர் ௨௦௧௩

அணில் பாப்பா!

அன்பான அணில்பாப்பா ஆசையுள்ள அணில்பாப்பா
பண்புடனே நானெழுதும் பாசமுள்ள பாடலிது!!

காக்கைக்கு சோறுவைக்க கூரையின் மீதேறி
கைப்பிடி சாதத்தை கவனமாக வைப்பேனே
காக்கையை விரட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில்
கைப்பிடி சாதத்தை கொறித்தேதான் தின்பாயே
பாக்கையே மெல்லுகிற பல்லில்லா பாட்டிபோல
பசியாறும் உனைத்தானே பார்ப்பேனே சிரித்தபடி
மூக்கின்மேல் விரல்வைத்தே மூழ்கித்தான் போவேனே
மூன்றாண்டு குழந்தைபோலே மூன்றாண்டு குழந்தைபோலே
(அன்பான...)

உன்னுருவை காணத்தான் என்னுடனே தங்கையுந்தான்
ஓடிவந்து பார்ப்போமே தேடிவந்து பார்ப்போமே
கண்களிலே பட்டுவிட்டால் காலையென்ன மாலையென்ன
கவலையில்லை எங்களுக்கு களிப்பிற்கு அளவில்லை
அன்னையுடன் தந்தையுந்தான் ஆடியோடி வருவாரே
ஆனந்தப் படுவாரே ஆசையுடன் இரசிப்பாரே
உனைப்போல நானுந்தான் ஓடியாட ஆசையடா
ஆனாலும் நானொன்றும் உனைப்போல குழந்தையில்லை
(அன்பான...)

கள்ளமில்லா உன்னுருவை காணுகிற பொழுதெல்லாம்
கடவுளையே பார்க்கிறேனே கைதட்டி இரசிக்கிறேனே
தொல்லையில்லா வாழ்வுனக்கு துயரமில்லா வாழ்வுனக்கு
தொடுவானம் போலேநீ தொட்டுவிடத் துடித்தேனே
எல்லையில்லா அழகுடனே எழிலாகப் பிறந்துவிட்டாய்
எதற்கிந்த பிறவியென்று ஏங்கத்தான் வைத்துவிட்டாய்
உள்ளத்தை பொருத்தமட்டில் உனைப்போல மாறிடவே
ஒருவாய்ப்பு கிடைத்துவிட்டால் இடர்கள்தான் இல்லையடா
(அன்பான...)

அன்பான அணில்பாப்பா ஆசையுள்ள அணில்பாப்பா
பண்புடனே நானெழுதும் பாசமுள்ள பாடலிது!!