Monday, September 19, 2011

மனம்!

உன்னை
அடக்க நினைத்து
தோற்றவர்களே அதிகம்!
உன்னை வென்றவர்களே
எம் பாரத தேசத்தில்
ஞானிகள்...
சித்தர்கள்...
மகாத்மாக்கள்...

அன்பு பாசம்
காதல் காமம்
கோபம் வீரம்
கருணை கொலைவெறி
இன்னும்
எத்தனை எத்தனை
உணர்வுகள்...

உன்னை அடக்கிவிட்டால்
எம் உயிர்கட்கு
மறுபிறவி இல்லையாம்!
வேதங்கள் சொல்கின்றன!!

பேயாட்டம் போடுகிறாய்
சிலநேரங்களில்...
நோய்கொண்ட மானுடன்போல்
சிலநேரங்களில்...
தாய்போல அன்பாக
சிலநேரங்களில்...

சின்னஞ்சிறு வயதில்
இது நல்லது
இது கெட்டது
எனச் சொல்லிச் சொல்லி
வளர்த்தார்கள்!
வளர வளர
இடம் பொருள்
சூழ்நிலைகளுக்கேற்ப
நல்லது கெட்டது
எல்லாமே தலைகீழாய்
மாறிக்கொண்டேயிருப்பதை
சகித்துக் கொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது இவ்வுலகில்!

உடலோடும் உயிரோடும்
உறவாடிக் களித்து
இரண்டறக் கலந்திருக்கிறாய்
நீ!

உன்னை
அடக்க நினைத்து
தினம்தினம்
உன்னிடமே அடகுவைக்கிறேன்
என்னை..!!

ஊனுடம்பு கொண்ட – இந்த
மானுடமெல்லாம்
உனக்கு அடிமையான
சூழ்நிலைக் கைதிகளா
என்ன?

உன்னை நான்
வென்று விட்டால்
என்னையே நான்
வென்று விடுவேன்!

எத்தனை முறை
தோற்றாலும்
மீண்டும் மீண்டும்
எழுவேன்!
நீயா? நானா?
பார்த்து விடலாம்
ஒரு கை!!

No comments: