Sunday, July 15, 2012

செருப்புத் தைக்கும் தொழிலாளி

ஒரு ஜோடி செருப்பினிலே
ஒரு செருப்பு அறுந்தாலே
உடனேதான் தேடுவீரே
என்னைத்தான் நாடுவீரே

காலடியில் கிடக்கின்றேன்
காலணிகள் தைக்கின்றேன்
ஏளனமாய் யாருமெனை
ஏறஇறங்கப் பார்க்காதீர்

உழைப்பையே மூச்சாக்கி
உழைக்கின்றேன் தெருவோரம்
உருப்படியாய் கிடைப்பதுவே
ஒருரூபாய் இரண்டுரூபாய்

வெயில்தாங்கி மழைதாங்கி
புயல்தாங்கி இடிதாங்கி
புணரமைப்பேன் செருப்பைத்தான்
எனக்கென்று கடையில்லை
நடைபாதை கடையாச்சு

கேட்டபணம் தாருங்கள்
கேட்டதற்கு மேல்வேண்டாம்
முகம்சுளித்துத் தரவேண்டாம்
அகமகிழ்ந்து தாருங்கள்

இலவசங்கள் தந்தென்னை
இழிபிறவி ஆக்காதீர்
இலவசத்தை விரும்பாத
உழைப்பாளி நான்தானே!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

1. நந்தலாலா (இணைய இதழ்) - 11-08-2012

2. அரசியல் டுடே (இணைய இதழ்) - 29-11-2012

Saturday, June 30, 2012

அஞ்சல்பெட்டி

அன்பு குழைத்து
அன்னைக்குத் தந்தைக்குத்
தங்கைக்கு எழுதும் பாசமடல்களை
பாதுகாக்கும் பெட்டகம்

மழை பெய்தாலும்
புயல் அடித்தாலும்
வெயில் கொளுத்தினாலும்
பொறுமையுடன்
போராடிப் பாதுகாக்கிறது
மடல்களை

துணையாக யாரும்
இல்லாவிட்டாலும்
தனிமையாய் நின்று
கடமையிலிருந்து விலகாமல்
கவனமுடன் பாதுகாக்கிறது
கடிதங்களை

அலைபேசி மின்னஞ்சல்
வந்தபிறகும்கூட
இன்னமும் என்மனம்
இலயித்துக் கிடக்கிறது
மடல்கள் வழியே வெளிப்படும்
பாசப்பிணைப்பில்...


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 03-07-2012


2. பதிவுகள் (இணைய இதழ்) – 31-07-2012

3. இராணிமுத்து - 01-08-2012 

4. அரசியல் டுடே (இணைய இதழ்) - 29-11-2012

Monday, June 25, 2012

மரநேயம்

ஓசியில் ஏசி தரும்
உன்னதக் கொடையாளிகள்
மரங்கள்
-------------------------------------------------------

மின்சாரம் இல்லை
தடையில்லா ஏசி
மரங்கள் தலையாட்டுவதால்...
 -------------------------------------------------------

மரங்களின் தாலாட்டு
மனிதனுக்கு தூயகாற்று
என்னே மரநேயம்!!!!!!
-------------------------------------------------------

மனிதநேயம் இல்லா ஊரிலும்
இன்னமும் உயிர்வாழ்கிறது
மரநேயம்
 -------------------------------------------------------

மரக்காதலன் குளிர்காற்றால் வருடிவிட
மேகக்காதலி சிந்தும் ஆனந்தக்கண்ணீர்
மழை
-------------------------------------------------------


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. உலகத் தமிழர் இறையாண்மை - 01-07-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) - 31-07-2012

3. உண்மை - 01-09-2012

4. நீலநிலா - 01-12-2012 

Sunday, May 20, 2012

என் மருமகன்

அடிமன வெளியினில் ஆடிடும் முகிலே
மடியினில் தவழும் மரகத மணியே
கொடிபோல் கைகள் குறுவாய்ச் சிரிப்பு
விடியலைத் தந்தாய் வெள்ளி நிலாவே

கண்ணுங் காதும் கவிதைகள் பாடும்
கண்ணா உனையென் கண்கள் தேடும்
அன்பே நிறைந்த அன்னையு முனக்கு
உன்னா லெமது உறவுகள் கூடும்

நம்முடைத் தமிழை நாவில் பழக்கு
தெம்புட னெழுவாய் தென்படும் கிழக்கு
கொம்புடைக் காளை குழவியும் நீயே
தும்பியைப் போலே சோம்பலை விலக்கு

விழிகள் திறந்து வெளிச்சம் பார்ப்பாய்
ஒலியும் கேட்டு உளத்தில் ஏற்பாய்
வலியும் தாங்கும் வலிமையும் வேண்டும்
அழியாப் புகழை அதிகம் சேர்ப்பாய்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

 1. பதிவுகள் (இணைய இதழ்) - 31-07-2012

Saturday, May 19, 2012

துளிப்பா!

துணிக்கடையில் துணிப்பஞ்சம்
விளம்பரங்களில் நடிகை
அரைநிர்வாணமாய்  


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-09-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) - 22-09-2012

3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 15-10-2012

என் தங்கச்சி

அன்பான என்தாயீ என்னோட தங்கச்சி
அன்பாலே எந்நாளும் அவளிங்கு என்கட்சி
கண்ணுக்கு இமைபோல காத்திட்ட என்மகளே
பண்பான உனைத்தானே பாராட்டும் ஊர்மெச்சி

அறிவுடனே பேசிடுவாய் அறிவுரைகள் கூறிடுவாய்
பரிவென்ற வார்த்தைக்குப் பொருளாக மாறிடுவாய்
பிரிவுவந்த பிறகேதான் பாசத்தின் பொருள்புரியும்
பிரிந்துநின்ற போதினிலும் பரிவிற்கு வேரிடுவாய்

கடந்தகால நினைவினிலே கவிதையிங்கு பாடுகிறேன்
படர்ந்துநின்ற அன்பினையே பரவசமாய்த் தேடுகிறேன்
தொடர்ந்துவரும் நிழல்போல தங்கையுன் மகனோடு
தொடர்ந்துவரத் தானிங்கு தனிமையிலே வாடுகிறேன்


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள் 

 1. பதிவுகள் (இணைய இதழ்) - 31-07-2012

Sunday, May 13, 2012

ஆசராசாவே

ஆண்:
அத்தபெத்த என்னோட ஆசப்புள்ள – நீ
ஒத்துக்கிட்டா வாடிபுள்ள தப்பேஇல்ல

பெண்:
அய்த்தமகன் என்னோட ஆசராசாவே
அதுக்குள்ளே சிக்கமாட்டா இந்தரோசாவே

ஆண்:
வஞ்சி கொஞ்சம் வாடிபுள்ள
கஞ்சி தந்து போடிபுள்ள

பெண்:
கஞ்சிகொண்டு வாரேன்ராசா – என்
நெஞ்சம்நெறஞ்ச ஆசராசா

ஆண்:
அச்சமேதும் வேணாம்புள்ள
மச்சங்காட்டிப் போடிபுள்ள

பெண்:
மச்சங்காட்டச் சொல்வீரோ – பின்னே
மிச்சங்காட்டச் சொல்வீரோ

ஆண்:
சத்தான இளஞ்சிறுக்கி கத்தாழப் பழம்பொறுக்கி
அத்தான நீஉருக்கி செத்தேன்டி உன்னால

பெண்:
சுத்தாதே பின்னாலே பித்தானேன் உன்னாலே
அத்தான்னு சொன்னாலே செத்தேன்டா தன்னால

ஆண்:
பித்தந்தலைக் கேறிடுச்சு முத்தந்தந்தாய் ஆறிடுச்சு
நித்தம்நிலை மாறிடுச்சு சுத்தம்கித்தம் பார்க்காதே

பெண்:
சத்தம்போட்டுக் கேக்காதே பத்திக்கொள்ளப் பாக்காதே
கத்தும்கவி அத்தானே முத்தந்தந்தால் வேர்க்காதே

ஆண்:
தாலிகட்ட வர்றேன்புள்ள
தோழிபோல வாடிபுள்ள

பெண்:
தாலிதந்தா கவலையில்ல
வேலியில்ல வாடாஉள்ள

ஆண்:
அத்தபெத்த என்னோட ஆசப்புள்ள – நீ
பத்துப்புள்ள பெத்துத்தாடி தப்பேஇல்ல

பெண்:
அய்த்தமகன் என்னோட ஆசராசாவே – உன்
அன்பாலே சிக்கிப்புட்டா இந்தரோசாவே

புறாவே!

குண்டுப் புறா தங்கப் புறா
வா வா வா!!
குதித்துக்குதித்து என்னருகே
வா வா வா!!

வெள்ளைப் புறா கொள்ளைப் புறா
வா வா வா!!
வேண்டியதைத் தந்திடுவேன்
வா வா வா!!

நல்ல புறா செல்லப் புறா
வா வா வா!!
நவதானியங்கள் நான்தருவேன்
வா வா வா!!

மாடப் புறா ஜோடிப் புறா
வா வா வா!!
மதியஉணவை நானுந்தர்றேன்
வா வா வா!!

அழகுப் புறா பழகும் புறா
வா வா வா!!
அரிசிகேப்பை எல்லாந்தர்றேன்
வா வா வா!!

வண்ணப் புறா சின்னப் புறா 
வா வா வா!!
வருத்தமில்லை என்னோடு 
வா வா வா!!

Wednesday, May 2, 2012

நாம் தமிழர்

அழிவின் விளிம்பில் தமிழின மில்லை
மொழியின வெறியால் மூண்டது தொல்லை
வழிவழித் தமிழன் வலியின் பிள்ளை
விழிகளில் வழிந்திடும் கண்ணீர் முல்லை

சிங்கள ஓநாய் ஜெயித்தது கானல்
எங்களி னீழம் எமக்கே காணீர்
பொங்கும் புனலும் புகழும் எங்கும்
தங்கும் எங்கள் தமிழரி னீழம்

தமிழர் நாங்கள் தரணியை ஆண்டோம்
அமிழ்தினு மினியது அடியேன் தாய்மொழி
தமிழன மின்று தரணியில் பிணமாய்
அம்மா அப்பா அகதியாய் எங்கோ...

ஓநாய் குடித்த உதிரம் அதிகம்
தேனாய் இனிக்கும் தமிழினச் சொற்கள்
மானாய்த் திரிந்த மங்கையர் கூட்டம்
வீணாய் மண்ணில் வீழ்ந்தது கண்டீர்

துன்பம் மறைந்து தளிர்க்கும் வசந்தம்
அன்பும் ஓர்நாள் அகிலத்தை யாளும்
பண்பா லுயர்ந்த பழந்தமிழ்க் கூட்டம்
ஒன்றாய் நின்றா லுயர்வே வாழ்வில்

Thursday, April 12, 2012

துளிப்பா

வானமங்கை இரவினிலிடும்
வெண்ணிற நெற்றிப்பொட்டு
வெண்ணிலாத் தட்டு


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 12-05-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) – 18-05-2012