Friday, June 25, 2010

உன்ன நெனச்சு...

அரியர் வச்சு நீ எழுத
உன்ன நெனச்சு நா அழுக - உன்னப்பா
கொரியர்ல பணம் அனுப்பியும்
அரியர் வச்சேதான் நீ எழுத
உன்ன நெனச்செதான் நா அழுக
கடல்நீர்மட்டம் பெருக
கண்ணீரில் நா உருக
சோகராகம் பாடுகிறேன்! - உன்னை
தேகமுருக தேடுகிறேன்!!

முயற்சி(யை) விதை!

உனக்குள் ஒருவன்
இருக்கிறான் என்பதை
உணர்ந்துகொள் நண்பா!

இருக்கும் ஒருவனை
சிறந்தவனாக்க
முடிவெடு நண்பா!

உயிரினில் கலந்த
உறவுகளை நினைத்து
வருந்தாதே நண்பா!

தற்செயல் தோல்விகளை
தூள்தூளாக்கு நண்பா!

முன்னேற்றக் கேள்விகளை
உன்னுள் கேட்டுப்பார் நண்பா!

முயற்சி விதையை
விதைத்துப்பார் நண்பா!

வியர்வைத் தண்ணீர்
பாய்ச்சு நண்பா!

நீ விடும் கண்ணீர்
வேலைக்கு ஆகாது நண்பா!

மிருக குணத்தை
களையெடு நண்பா!

கடவுள் குணத்தை
காப்பாற்று நண்பா!

காலங்கள் கனியும்
காத்திரு நண்பா!
வெற்றி கிட்டும்
மகிழ்ச்சிகொள் நண்பா!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. இலங்கை வானொலி – 17-09-2006

பாவேந்தர்!

செந்தமிழால் புகழ்பெற்ற
பைந்தமிழ்ப் பாவலனே!
புவிதனை மாற்றவந்த - தமிழ்க்
கவித்தேனின் காவலனே!
பாருக்கு அதிபதியாம்
பாரதியின் தாசனே!
தமிழுக்கு அமுதென்று
பேர்படைத்த நாயகனே!
குடும்ப விளக்கேற்றி - தமிழ்க்
குடும்பம் காத்த திராவிடனே!
மூவேந்தனுக்கும் வேந்தனாய்
தமிழ்நாட்டு பாவேந்தனே!
வாழ்க நீபல்லாண்டு! - உன்புகழ்
வளர்க பலநூறாண்டு!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 23-04-2007

2. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

உன் நினைவுகள்!

நித்தமும் நடந்தேன்! - உன்
நிழலாய்த் தொடர்ந்தேன்! - இரவு
நித்திரைக்கு பயந்தேன்! - படுக்கையில்
சத்தமின்றி விழுந்தேன்!! - இரவில்

சத்தமின்றி போர்செய்யும்
வித்தைக்காரி நீதான்! - என்னிடம்
கத்தைகத்தையாய் பணமிருந்தும்
மெத்தைமேல் முள்குத்துகிறது!! - நம்

இமையசைவில் உருவாகிய மோதலால்
இதயத்தில் கருவாகியது காதலே! - எனக்கு
சுமையாய் படர்ந்த நம்காதலை
சுகமாய்த் தொடர வைத்தாயே காதலி!!

சுத்தம் புதுசுகம் தருமாம்! - கனவில்
நித்தமும் உன்முகம் வருமாம்! - இரவு
பத்தரைமணி வருமாம்! - மரணம்
நித்திரைவடிவில் வருமாம்!!

எப்படி நுழைந்தாய்?

தாய்வயிற்றிலே பிறந்து – பெண்ணுனை
பேருந்திலே கண்டு
தமிழ்க் கவிதையால் சிறந்து - மண்ணுலகில்
தன்னிலையும் மறந்து - காதலால்
விண்ணிலே மிதந்து
வெற்றுடலாய் வாழ்கிறேன் நான்!

கரைமீறும் காட்சிக்கு வண்ணமாய்
தமிழ்க் கவிதை கிண்ணமாய்
காவியக் காதலின் சின்னமாய்
அழகுக்கொரு திண்ணமாய்
என்னுயிரில் கலந்த எண்ணமாய்
என்னுள் அமைதியாய் வாழ்கிறாய்!
என்றுமே அளவாய்த்தான் சிரிக்கிறாய்!!

என்னிடம் சொல்லாமலே சென்றாய்!
என்னைக் கொல்லாமலே வென்றாய்!
என்னுயிரைக் கொஞ்சம்கொஞ்சமாய் தின்றாய்!
விழிவழி தள்ளித்தான் நின்றாய்!!

நீ விழிவழி நுழைந்தவளா? - இல்லை
நீ விதிவழி நுழைந்தவளா??

மூளையும் உருகி வழிகிறது!
யோசிக்கிறேன் நான்! - என்னுள்
எப்படி நுழைந்தாய் நீ??

நூறுநூறு ஆசை!

நூறுநூறு ஆசை! - எல்லாமே
வேறுவேறு ஆசை!!

எல்லாரிடமும் அன்புடன் வாழ ஆசை!
நல்லார் போல் பண்புடன் வாழ ஆசை!
கல்லாமை இல்லாமையாக்க ஆசை! - காதலியின்
கடைக்கண் பார்வை கிடைக்க ஆசை!!

நண்பனைக்கூட சகோதரனாய் மாற்ற ஆசை!
நட்பில் கற்பை ஏற்ற ஆசை!
ஜாதியொழிய ஆசை! - நானும்
சாதிக்கத்தான் ஆசை!!
மதம்பிடிக்கா மனிதனைப் பார்க்க ஆசை! - காதல்
மதம்பிடித்த மனிதனைப்பார்க்க ஆசை!!

தமிழ்மண்ணில் என்னுடலை
புதைக்கச் சொல்ல ஆசை!
பரந்த விண்ணிலே என்னுயிரை
கண்ணீர் சிந்தச் சொல்ல ஆசை!!

நூறுநூறு ஆசை! - எல்லாமே
வேறுவேறு ஆசை!! - எல்லாமே
நிறைவேறாத ஆசைகள்தான்!!

எது காதல்?

கடலை போடச் சொல்வதல்ல
காதல்! - கண்ணீரில்
கவிதை பாடச்சொல்வதுதானே
காதல்!!

உடலைப் பார்த்து வருவதல்ல
காதல்! - உயிரை
உருக்கி எடுப்பதுதானே
காதல்!!

விடலையில் தோன்றும்
விஷப்பரு அல்ல
காதல்! - சிறு
விதையில் தழைக்கும் முளைக்கருதானே
காதல்!!

வறுமைக்கொரு பாடல்!

நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை!
நாளும் உழைத்தும்
வறுமையால் தொல்லை!!
கிராமங்கள்தானே
இந்தியாவின் செல்லப்பிள்ளை! - தமிழ்
அகராதியிலிருந் தகற்றுவோம்
வறுமையெனும் சொல்லை!
கண்ணீர் மட்டுந்தானா
உழைப்பவனின் எல்லை???
இல்லை இல்லை
தன்னம்பிக்கை நீண்டால்...
தன்னை நம்பி கைநீண்டால்
துயரமினி இல்லை!!

வறுமையின் நிறம் சிவப்பு!

தாய்க்கும் பிள்ளைக்கும்
ஜென்மஜென்ம பந்தம்!
வறுமைக்கும் குருதிக்கும்
ஏதேதோ சொந்தம்!!

பச்சிளங்குழந்தை கதறினால்
பதறுவாள் தாய்! - தன்
குருதியை பாலாய் மாற்றுவாள்! - மன
உறுதியை பால்வடிவில் ஊட்டுவாள்!!

வயிற்றுப் பிழைப்பிற்காய்
கயிற்றில் நடக்கும் வாழ்க்கையை
பயிற்றுவித்தது வறுமை!

ஒருவேளை உணவிற்காய்
குருதியை பணமாக்கவைக்கிறது வறுமை! - மன
உறுதியை விற்கவைக்கிறது வறுமை!!

தாய்க்கும் பிள்ளைக்கும்
ஜென்மஜென்ம பந்தம்! - உறுதியாய்
வறுமைக்கும் குருதிக்கும்
ஏதேதோ சொந்தம்!!

இரத்ததானம்!

கத்தும் குயிலுக்கு - யாரும்
இராகம் கற்றுக்கொடுப்பதில்லை!
நித்தம் தனம் வருமென்று - யாரும்
இரத்ததானம் செய்வதில்லை!!

சிவப்பணு இரத்தத்தின் சுவாசப்படை!
வெள்ளையணு இரத்தத்தின் அதிரடிப்படை!!
நம்நினைவில் என்றுமே குருதிக்கொடை!!

நித்தம் நித்தம் ஊறுதே இரத்தம்! - அதை
சத்தமின்றி கொடுப்பது நம் சித்தம்!!
வாழ்க்கைப்பாடங்கள் கொஞ்சமாய்க் கற்றும்
இரத்தத்தை விற்றால் அதுபெரும் குற்றம்!
இரத்ததானத்தின் புகழ் பரவட்டும் திக்கெட்டும்!
இத்துடன் இக்கவிதை முற்றும்!!