Sunday, September 18, 2011

மழைவெள்ளம்

சென்னை நகரமே மழை வெள்ளத்தில் மிதந்தபோது எழுதிய கவிதை இது.


உனைக் காணவேண்டி
யாகம் நடத்தினால்
யோகம வருமென்று
நம்பிய மக்களை
சோகத் தீயில்
வேகவைத்த
மழைவெள்ளமே...

நீ வந்தபின் உனைக்கண்டு
வணங்கிய எம்மக்களை
பிணங்களாய் மாற்றிய
மழைவெள்ளமே...

சொந்தங்கள் தேடிச்சென்ற
வானம்பாடிகளை
கானம் பாடவிடாமல்
சோகம் பாடவைத்த
மழைவெள்ளமே...

வசிக்க வீடில்லாமல்
குடிசைகளில் வாழ்ந்தவர்களை
நெரிசல்களில் சிக்கவைத்து
பரிசல்களில் தவிக்கவைத்த
மழைவெள்ளமே...

நிழல்தரும் நல்மரங்களையும்
நினைவில் நிற்கும் இளம்மனங்களையும்
வேரோடும் சாய்த்துவிட்டு
ஊரோடும் சாய்த்துவிட்ட
மழைவெள்ளமே...

ஆற்றுப் பாலங்களையும்
வாசற் கோலங்களையும்
சிதைத்துவிட்டு – உயிர்களை
பதைபதைக்க வைத்த
மழைவெள்ளமே...

வாய்க்கால் நிறைய...
கண்மாய் உடைய...
கழனியெல்லாம் நிறைய...
பயிர்கள் அழுக... – உலக
உயிர்களும் அழுக...

மழைவெள்ளமே...
போதும் உன் ருத்ரதாண்டவம்!
எம் தமிழ்மக்கள் உயிர் பாவம்

நீர்சூழ்ந்த கடலுக்கு
வனப்பு அலையே...
மக்கள் அழைக்கும்போது
வந்துவிடு மழையே...
தேவையின் பெயரில்
பெய்துவிடு வான்மழையே...
தேவையில்லாமல் பெய்தால்
உன்பெயர் பிழையே...

மனசாட்சி!

கண்ணாடி முன்
நின்றேன் நான்!

கண்ணாடியில் என்னுருவம்
எனைப் பார்த்துச் சிரித்தது!

‘நீ யார்?’
என்று கேட்டேன்!

‘உன் மனசாட்சி’
என்றது அக்குரல்!

‘நல்ல எண்ணங்களோடு
வாழ்கிறாயா?
நல்ல குணங்களோடு
வாழ்கிறாயா?’
என்றது அக்குரல்!

‘எப்படி வாழமுடியும்?
நான் வாழ்வது
கலியுகத்தில்!’ என்றேன்!

‘காலங்கள் மாறினாலும்
யுகங்கள் மாறினாலும்
மற்றவர்கள் மாறினாலும்
சமுதாயம் மாறினாலும்
நல்ல எண்ணங்களை விட்டு
நல்ல குணங்களை விட்டு
நீ ஒருபோதும் மாறாதே!

உனக்கு கோபம் வரும்போது
அவள் சொன்னதுபோல்
தியானம் செய்!
என்னைக் கூப்பிடு!
மற்றவைகளை
நான் பார்த்துக் கொள்கிறேன்!’
என்று சொல்லிவிட்டு
மௌனமானது
மனசாட்சி!!

காதல் மலர்ந்தது!

கற்பனையில் நீந்திவரும் உள்ளம்! – காதல்
கரைபுரண்டு ஓடுதடி வெள்ளம்! – மனச்
சொற்பனத்தில் காதல்கொண்டு சீதளமாய் அவள்வந்து
சொக்கிவிட வைப்பாளே செல்லம்! – அவள்
சுவையாகத் தித்திக்கும் வெல்லம்!!

கனவினிலே வாழ்கின்ற தேவி! – நீயென்
கற்பனைக்கும் கவிதைக்கும் சாவி!! – உன்
அன்பான பார்வையாலும் அமைதியான குணத்தாலும்
அன்பான காதலிலே மேவி! – என்னுயிர்
அழைக்குதடி உனைத்தானே கூவி!!

அன்பாகத் தோளில்சாயும் போது – அவள்
அழகான மங்கையாக மாது! – தமிழ்
பண்போடு பார்போற்றும் பெண்பூவே மண்மீது
பறைசாற்ற வார்த்தைகிடை யாது! – உன்னழகை
பறைதட்டிச் சொல்லிடவா தூது!!

அன்றொருநாள் பேருந்தி லேறி – உன்
அழகுமுகம் கண்டவுடன் மாறி – புதுத்
தென்றலென வான்மேலே தேரேறி மிதந்தேனே
தேவதையுன் நினைவுகளில் ஊறி! – கவிதைத்
தேரேறி உன்னழகைக் கூறி!!

உன்னழகைக் கூட்டுதடி சேலை! – உன்
உணர்வோடு விடியுமதி காலை! – என்
கண்முன்னே எப்போதும் காதலிநீ வேண்டுமடி
காத்திருந்து கால்கடுக்கும் வேளை! – நீயென்
கண்களிலே பூத்தபூஞ் சோலை!!

உடலோடு மின்னுகிற தங்கம்! – நீயென்
உளத்தோடு உளமாக அங்கம்! – காதல்
மடலாக இக்கவிதை மலருனக்கு நானெழுதி
மண்மீது வைத்திடவா சங்கம்?! – காதல்
மலர்ந்துமணம் வீசட்டும் எங்கும்!!

கண்ணீர்!

விழிகள் சிந்தும்
வியர்வைத்துளி
கண்ணீர்!

அன்பை உணர்த்தும்
உன்னத வழி
கண்ணீர்!

நெடுநாள் பிரிந்திருந்த
அன்பான உறவுகளைப்
மீண்டும் பார்க்க நேர்ந்தால்
தானாய்க் கண்ணீர் வழியட்டும்!
தடுக்காதீர்கள்
தானாய்க் கண்ணீர் வழியட்டும்!!

அன்பை வெளிப்படுத்த
கண்ணீர் விடுங்கள்!

ஆண்மகன்
கண்ணீர்விட்டு கதறியழுதால்
கௌரவக் குறைச்சலென
யாரோ சொன்னார்கள்!

கண்ணீர் இருபாலருக்கும்
பொதுவானது!
உணர்வுகளும் மனமும்
இருபாலருக்கும்
பொதுவானது!!

துக்கம் தலைக்கேறும்போது
கண்ணீர்விட்டு கதறியழுங்கள்!
தவறில்லை!
கண்ணீர ஒரு
வியர்வை சுரப்பி!
கண்ணீர் விட்டால்
கண்ணுக்கு நல்லது!
உடலுக்கும் நல்லது!
துக்கம் தலைக்கேறும்போது
கண்ணீர்விட்டு கதறியழுங்கள்!
தவறில்லை!

இது நான் சொல்லவில்லை!
அறிவியல் சொல்கிறது!!

காதலனை தேடுகிறாள்!

தலைவனும் தலைவியும் உயிருக்குயிராய் காதலித்தனர். இணைபிரியாத துணையாக வாழ்ந்தனர். திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்த போது தலைவன் சொன்னான் ‘நான் பொருளீட்டி வந்தபிறகு நமக்கு திருமணம் நடைபெறட்டும். நான் இப்போது பொருளீட்ட வெளியூர் செல்கிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் திரும்பி வந்துவிடுவேன்.’ என்று. தலைவியும் நம்பிக்கையோடு மூன்று வருடங்களாய் தலைவனுக்காய்க் காத்திருக்கிறாள். ஒரு சூழ்நிலையில் தலைவனைத் தேடி அவன் சென்ற ஊருக்கே போய் அவனை தேடுகிறாள். அப்போது பாடுகிறாள் இப்படி.


பாலமிட்ட பால்நிலவு பால்வெளியில் பாடுதடா!
கோலமிட்ட காதல்நிலா காதலனை தேடுதடா!!
கன்னத்தின் வீக்கத்தை கண்ணீரின் ஏக்கத்தை
எண்ணங்களை கவிதைகளாய் எழுதுதடா என்பேனா!!
பனிவாடைக் காடுகளில் பகல்நேரம் பாடுகிறேன்!
துணிவோடு நானுனையே துணையாகத் தேடுகிறேன்!!
வெயில்நேரம் வந்தபோதும் குயில்கூவும் சத்தம்!
உயிரோடு பதிந்ததடா உன்நினைவே நித்தம்!!
காற்றோடு பேசுகிறேன் கவிதைவழி பாடுகிறேன்!
நேற்றோடு போனவனே நெஞ்சோடு வாழ்பவனே!!
கொஞ்சிக்கொஞ்சிப் பேசவந்து காதல்தனை வளர்த்தவனே!
வஞ்சியென் மனங்கவர்ந்து வாழ்க்கைத்துணை தந்தவனே!!
மணமேடை ஏறும்முன்னே மணாளனேநீ போனதென்ன!
பிணவாடை வீசுவதுபோல் பிணமாகநான் ஆனதென்ன!!
செத்தாலும் சுகந்தருமே முத்தாக உன்முகம்வருமே
கத்தாத குயில்நானே பித்தாக ஆனேனே!!
மோனநிலை கனவுறக்கம் மங்கையென் உயிரிருக்கும்!
தேனொழுக நீபேச முத்துமுத்தாய் கவிபிறக்கும்!!
எங்கேயோ போனாயே என்னோடு வாநீயே!
மங்காத புகழோடு வாழ்வோம் இங்கேயே!!

கலியுக இந்தியாவே!

உள்ளத்தில் அன்போடு
வாழ்ந்த காலம்போய்
உறைக்குள் ஆயுதத்தோடு
வாழவைத்துவிட்டது
கலியுக வாழ்க்கை!

அயோத்தியில் உள்ளஇடம்
இராமருக்கா?
பாபருக்கா?
ஏனிந்த சர்ச்சை?
பெயர் இரண்டானாலும்
மதம் இரண்டானாலும்
மனிதநேயம் ஒன்றுதானே
நண்பா...

நான் நாத்திகனா?
இல்லை ஆத்திகனா?
ஆராய்ந்து பார்க்காதீர்கள்!

நான் இந்துவா?
இல்லை இஸ்லாமியனா?
எவரையும் கேட்காதீர்கள்!

நல்ல எண்ணங்களோடு
வாழ்ந்து மடியத் துடிக்கும்
நானும் ஒரு சராசரி மனிதனே!!

ஏ கலியுக இந்தியாவே...
இக்கவி பேசும் மொழிகேட்க
உம் செவியிரண்டையும் தீட்டிக்கேளும்!

ஆத்திகர்கள் என்ற பெயரில்
அயோக்கியர்களாய் வாழ்வதைவிட
நாத்திகர்கள் என்ற பெயரில்
நல்லவர்களாய் வாழுங்களேன்!

இது அறிவுரையல்ல...
அடியேனின் பரிந்துரையே...!!

இயேசுபிரான்!

அன்பெனும் உணர்விலே அகிலமே திளைத்திட
ஆதவன் தோன்றிவிட்டான்! – எங்கள்
ஆண்டவன் தோன்றிவிட்டான்!! – எங்கள்
துன்பங்கள் தாங்கிட துயரங்கள் நீங்கிட
தூதுவன் தோன்றிவிட்டான்! – இறைத்
தூதுவன் தோன்றிவிட்டான்!!

மாட்டுக் குடிலிலே மரியன்னை மடியிலே
மனிதனாய்ப் பிறந்துவிட்டான்! – இயேசு
புனிதனாய்ப் பிறந்துவிட்டான்!! – அவன்
தொட்டிலில் துயில்கையில் தேவர்கள் வாழ்த்தினர்
தேவனே பிறந்துவிட்டான்! – எங்கள்
ஜீவனாய்ப் பிறந்துவிட்டான்!!

விண்மீன்கள் வாழ்த்திட விண்ணிலே இரவிலே
வின்மீனாய்ப் பிறந்துவிட்டான்! – புது
விடியலாய்ப் பிறந்துவிட்டான்!! – இந்த
மண்ணிலே அன்பின் மகிமையை உணர்த்திட
மெசியாவே பிறந்துவிட்டான்! – இயேசு
மெசியாவே பிறந்துவிட்டான்!!

தச்சனின் மகனாகத் தத்துவ ஞானியாய்
தெய்வமாய்ப் பிறந்துவிட்டான்! – இயேசு
தெய்வமாய்ப் பிறந்துவிட்டான்!! – அவன்
பச்சிளங் குழந்தையாய்ப் பாவங்கள் நீக்கிட
பாரினில் பிறந்துவிட்டான்! – இயேசு
பாரினில் பிறந்துவிட்டான்!!

கல்வாரி மலையிலே கண்ணீரும் சிந்தினான்
கல்லால் அடித்தனரே! – அவனைக்
கல்லால் அடித்தனரே!! – அவனை
சிலுவையில் அறைந்தனர் சவுக்கால் அடித்தனர்
சித்ரவதை செய்தனரே! – அவனைச்
சித்ரவதை செய்தனரே!!

தட்டினால் திறக்குமே கேட்டாலே பெறுவீரே
தேடினால் கிடைக்குமென்றான்! – இயேசு
தேடினால் கிடைக்குமென்றான்!! – அவன்
பட்ட துயரினைப் பார்த்த கணத்திலே
பாவிகள் வருந்தவில்லை! – அந்தப்
பாவிகள் திருந்தவில்லை!!

மேய்ப்பராய் வளர்ந்தான் மேதினியில் வாழ்ந்தான்
மிருகங்களை நேசித்தானே! – இயேசு
மிருகங்களை நேசித்தானே!! – அவன்
தூய்மையாய் வாய்மையாய் உண்மையாய் நேர்மையாய்
தெய்வமாய் வாழ்ந்திட்டானே! – இயேசு
தெய்வமாய் வாழ்ந்திட்டானே!!

அன்பால் கருணையாய் அகிலத்தை மாற்றியே
ஆண்டவனாய்த் தோன்றினானே! – இயேசு
ஆண்டவனாய்த் தோன்றினானே!! – அவன்
முன்பாக மன்றாடி முகந்தாழ்த்தி வணங்குவோம்
மெசியாவே மன்னிப்பாயே! – இயேசு
மெசியாவே மன்னிப்பாயே!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம்கோணம் (இணைய இதழ்) – 25-12-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

எண்ணங்கள் உயரட்டும்!

கன்னத்தில் கைவைத் தமர்ந்தால் – கவலைகள்
திண்ணமாய் மறைவதில்லை!
எண்ணங்களை உயர்த்தி விட்டால் – வாழ்வில்
வண்ணங்கள் பலபிறக்குமடா!!

துன்பங்கள் துரத்தி வந்தால்
தூரவிலகி ஓடவேண்டாம்!
இன்பங்களைத் தரத்துடிக்கும்
இறைத்தூதர் துன்பங்கள்தாம்!!

முயற்சியை கைவிடாதபோதிலும் – தொட
முடியாமல்போகும் வெற்றி
அயற்சிவேண்டாம் தோழனே!
அமைதிதான் அப்போதையவெற்றி!!

ஜாதிப்பூசலை மறப்போம்!
சமயப்பூசலையும் மறப்போம்!
இதயவாசலைத் திறப்போம்
இப்போதிலிருந்தே உழைப்போம்!!

கன்னத்தில் கைவைத் தமர்ந்தால் – கவலைகள்
திண்ணமாய் மறைவதில்லை!
எண்ணங்களை உயர்த்தி விட்டால் – வாழ்வில்
வண்ணங்கள் பலபிறக்குமடா!!

எண்ணங்களை உயர்த்திவிடு தாயே!

கண்ணில் தெரியுது வானம்! – அதுநம்
கைகளில் கிடைத்திட வேணும்!
உன்னில் துவங்குது அண்டம்! – இதை
உணர்ந்திட வேண்டுமடா தோழா!!
எண்ணி லடங்கா உயிர்கள்! – இவை
எல்லாம் படைத்தவன் இறைவன்!!
திண்ணம் நிறைபெற் றோங்கும் – பெருந்
தோள்களில் இருப்பாள் சக்தி!!

எண்ணங்கள் உயர்ந்திடல் வேண்டும்! – இங்கு
எண்ணுவனயாவும் நிகழ்ந்திடல் வேண்டும்!!
விண்ணுலகில் தேவர்கள் கூட்டம்! – இந்த
மண்ணுலகில் மனிதர்நட மாட்டம்!!
திண்ணமாய் நானும் ஓர்நாள் – சக்தி
தாயருள் பெறத்தான் வேண்டும்!!
எண்ணத்தில் அன்புமட்டும் வேண்டும்! – தினமும்
எண்ணுவேன் சக்தியை மீண்டும்!!

என் செல்லக்குழந்தை!

செய்தித்தாளில் வெளிவந்த
என்னுடைய கவிதைகள்
சிலவற்றை
நீ தற்செயலாய் படித்துவிட்டு
‘நீ பெரிய
கவிஞனாயிட்ட சுரேஷ்’
என்று நீ சொன்னபிறகு தான்
நானும் கவிஞனாகிவிட்டேன்
என்ற ஆத்மதிருப்தி
என்னுள் ஏற்பட்டது!

உன் பெண்குரலை
முதன்முதலில் கேட்டபிறகுதான்
என்வீட்டுக் கண்ணாடிகூட
என்னை அழகனாய்க் காட்டியது!!

தன் குழந்தை
மழலைத்தமிழில் பேசுவதைப் பார்த்து
மகிழ்ச்சியடையும் தாய்போலவே
என் செல்லக்குழந்தையான
நீ செல்லங்கொஞ்சி
பேசுவதைப் பார்த்துப் பார்த்து
நான் மகிழ்ச்சியடைகிறேன்!

பூவோடு சேர்ந்த நாரும்
மணம்பெறுவதைப் போல
உன்னைக் காதலித்த நானும்
இன்று கவிஞனாகிவிட்டேன்!!