Showing posts with label கவிதைகள் (பாகம் - 12). Show all posts
Showing posts with label கவிதைகள் (பாகம் - 12). Show all posts

Sunday, September 18, 2011

வெண்ணிலாவிடு தூது!

கங்கையிலே நீராடி
காவிரியில் தலைசீவி
வைகையிலே விளையாடும்
வெண்ணிலாவே...

நீ
யாரையிங்கு தேடுகிறாய்
வெண்ணிலாவே...
யாரோடும் சேராத
வெண்ணிலாவே...

நீ
தரையிறங்கி வாராயோ
வெண்ணிலாவே...
அவள் நினைவால்
வாடுகிறேன்
வெண்ணிலாவே...

அவளைப்
பார்த்து வந்து சொல்வாயா?
வெண்ணிலாவே...

தேய்ந்து தேய்ந்து
வளர்கின்ற
வெண்ணிலாவே...

அவளோ
தேயாத முழுநிலவு
வெண்ணிலாவே...

அவள்
அழகுமுகம் கண்டாலோ
வெண்ணிலாவே...

உன் கர்வந்தான்
அழிந்துபோகும்
வெண்ணிலாவே...

உன் முகத்தில்
கறையுண்டு
வெண்ணிலாவே...

அவள் முகத்தில்
கறையில்லை
வெண்ணிலாவே...

பெண்களிலே
தேவதைதான்
வெண்ணிலாவே...

அவள்
என் கண்களுக்கு
குழந்தை தான்
வெண்ணிலாவே...

அன்பாக பேசும்போது
வெண்ணிலாவே...

அவள்
நாணத்தில்
முகம் சிவப்பாள்
வெண்ணிலாவே...

எனை விட்டு
அவள் பிரிந்தால்
வெண்ணிலாவே...

உயிரில்லா பிணம்
நானே
வெண்ணிலாவே...

உயிரோடு வாழ்வதுவும்
வெண்ணிலாவே...

அவள்
அழகுமுகம் காணத்தான்
வெண்ணிலாவே...

நான் எழுதிய
இப்பாடலை
வெண்ணிலாவே...

அவள் காலடியில்
கொண்டு சேர்
வெண்ணிலாவே...

அவள் நினைவால்
வாடுகிறேன்
வெண்ணிலாவே...

அவளை
பார்த்து வந்து சொல்வாயா?
வெண்ணிலாவே...

வரவேற்போம் தீபாவளியை!

தீய எண்ணங்களை
தொலைத்துவிட...
நல்லெண்ணங்களை
நம் நினைவில் நிறுத்த...
வரவேற்போம் தீபாவளியை!

உணர்வுகளைத் தொலைத்துவிட்ட
தீவுகளாகிப் போன
நம் வாழ்வில்
வசந்தம் வீச...
வரவேற்போம் தீபாவளியை!

மின்னஞ்சல் அனுப்பி அனுப்பியே
உறுதியான நட்பில்
தற்காலிகமாய்
மறந்துபோன முகங்களை
தேடும் முயற்சியாய்...
வரவேற்போம் தீபாவளியை!

நேற்றுவரை காதலர்களாய்...
இன்றுமுதல் கணவன்மனைவியாய்...
இல்லற பந்தத்தில்
இணைந்த பூரிப்பில்
வரவேற்போம் தீபாவளியை!

உண்மையான அன்பு
நம் குடும்பத்தினரிடம் மட்டுமே
கிடைக்கும் என்று
உணரவைக்கும்
திருவிழா ஆதலால்
வரவேற்போம் தீபாவளியை!

புத்தாடை அணிந்து
பட்டாசு வெடித்து
வாழ்வை இரசித்திட...
வரவேற்போம் தீபாவளியை!

தீய எண்ணங்களை
தொலைத்துவிட...
நல்லெண்ணங்களை
நம் நினைவில் நிறுத்த...
வரவேற்போம் தீபாவளியை!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. திண்ணை (இணைய இதழ்) – 23-10-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 01-11-2012

வளர்க முத்தாரம்!

2007 ம் ஆண்டு என்னுடைய ஞாயிறு என்ற கவிதை முத்தாரம் வார இதழில் வெளிவந்திருந்தது. அதற்கு முன்னரே நான் அந்த இதழைப் பாராட்டி ஒரு கவிதை எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய ஞாயிறு என்ற கவிதை வெளிவந்தபிறகு அந்த இதழை பாராட்ட வேண்டும் என்ற ஆர்வம் மேலும் அதிகமானது. அந்த காலகட்டத்தில் வாசகர் கவிதைகள், சிறப்புக் கவிதை, ஐன்ஸ்டீன் பதில்கள், நவீன அறிவியல் வரலாறு, புத்தர்பிரான், நம்பிக்கைத்தொடர், சுரங்கம், தூவானம் என பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கட்டுரைகள், கதைகள், கவிதைகள் வெளிவந்து கொண்டிருந்தன. இப்போது பல தலைப்புக்கள் மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது முத்தாரம். அனைவருமே படிக்க வேண்டிய வார இதழ் முத்தாரம்.


பொதுஅறிவுப் பெட்டகம்!
புதுமைதரும் புத்தகம்!
முதியோரும் படிக்கின்ற
முத்தமிழின் பொக்கிஷம்!!

புத்தரருளும் பொன்மொழிகள்!
புத்தியைச் செதுக்கும் நல்உளிகள்!
யுத்தமில்லா உலகுகாண
யூகிக்கிறது என்னிரு விழிகள்!!

மழையில்லாத் தூவானம்!
மணக்கிறது மண்வாசம்!
ஒளியில்லா இரவினுள்ளும்
ஒளிர்கிறது முத்தாரம்!!

நவீன அறிவியல் வரலாறு!
நான்தரும் மதிப்பெண்கள் நூறு!
நவீன மானுடவுலகிற்கு
நம்பிக்கைதரும் பகலவனாய் நீமாறு!!

முயற்சியை முடுக்கிவிடும் வினையூக்கி!
முயலாமையின் வேரையே நீதாக்கிதாக்கி
அயற்சியின் சிறகை ஒடிக்கிறாய்
அறியாமையிருளை நீபோக்கிபோக்கி!!

தங்கம்போல் ஜொலிக்கிறது சுரங்கம்!
தனிமையில் என்மனமுன்னில் கிறங்கும்!
சங்கத்தமிழ் மூன்றோடு சேர்த்து
சாதனையாய் உன்புகழ் முழங்கும்!!

கவிஞனையும் வளர்த்த இதழ்!
கலாமையும் வளர்க்கும் இதழ்!
புவிதனிலே உனைத்தானே
புகழ்கிறது அனைவரின் இதழ்!!

எத்தனைதான் வாரஇதழ்
எங்கள்கையில் ஒரேஇதழ்!
முத்தாரமெனும் வாரஇதழ்!
மதிவளர வேறெங்கே புகல்??

வாழ்ந்து பார்க்கலாம் வா!

வாழ்க்கையென்பது
கானல்நீர் அல்ல...
இளநீர் போன்றது!

இளநீரைப் பருகப்பருக
இதம் தரும்!

வாழ்க்கையை
அனுபவிக்க அனுபவிக்க
சுகம்தரும்!

விரக்தியின் விளிம்பில்
வாழ்க்கையைத் தொலைக்காதே
நண்பா...

முகத்தில் ஓடும
கவலை ரேகைகளை
முயற்சி அழிப்பான் கொண்டு
அழித்திடலாம் வா!

வாழ்ந்து பார்க்கலாம் வா!!

வாழ்க்கை வெண்பா!

துன்பமும் துயரமும் தீராத உலகினிலே
இன்பம் கிடைத்தால் இனிக்கும்! – மண்மேல்
இருக்கும் எழிலை இரசிக்கத் தெரிந்தால்
இறைவன் இருப்பான் அருகில்!!

அருகினி லிருக்கும் அன்னையை வணங்குதல்
இறையை வணங்குதற் கிணையாம்! – முறையாய்
பண்போடு நடந்து பார்போற்ற வாழ்ந்தால்
அன்பான உலகுனை மறவாது!!

வாழப்போகிறேன்!

நான் தோற்றபோது
மனங்குளிர்ந்தவர்கள் பலர்!

நான் வென்றபோது
பயந்தவர்கள் சிலர்!

நான் விழுந்தபோது
கைகொட்டி சிரித்தவர்கள்
பலர்!

நான் விழுந்த வேகத்தில்
எழுந்தபோது
வியந்தவர்கள் சிலர்!!

விழுவதும் எழுவதும்
வாழ்க்கையின் நியதி!
அழுவதும் தொழுவதும்
மூளையின் மறதி!!

நான் வீழப்போவதில்லை!
சூரியன் எத்தனைமுறை
எரித்துச் சாம்பலாக்கினாலும்
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும்
பீனிக்ஸ் பறவைபோல்
மார்க்கண்டேயன் போல்
யுகம் யுகமாய்
நான் வாழப்போகிறேன்!!

திருநங்கைகள்!

ஆண் தேவதைகள்
நாங்கள்!

ஒருபாதி ஆணாய்
ஒருபாதி பெண்ணாய்
அர்த்தநாரிஸ்வரர்கள் நாங்கள்!

கருப்பை இல்லாத
பெண்கள்
நாங்கள்!

இயற்கையின் படைப்பில்
முரண்பாடுகள்
நாங்கள்!

வண்டுகள் தேன்பருகாத
மலர்கள்
நாங்கள்!

தோகையுள்ள
பெண்மயில்கள்
நாங்கள்!

எங்குபோனாலும்
அங்கீகாரம் பெறமுடியாத
ஆதரவற்றோர்
நாங்கள்!

XX குரோமோசோம்களால்
பிறப்பது ஆண்!
XY குரோமோசோம்களால்
பிறப்பது பெண்!
X,Y குரோமோசோம்களின்
குளறுபடியால்
எங்களுக்குப் பெயர்
திருநங்கைகள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம் கோணம் (இணைய இதழ்) - 25-02-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) - 07-03-2012

உன்முகம் காணத்தான்!

தன்னைப் பிரிந்து பொருள் தேட தூரதேசம் சென்ற தலைவனை நினைத்துத் தலைவி ஏங்குகிறாள். கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு இன்று பிரிவுத்துயரை தாங்கமுடியாமல் தலைவி பாடும் பாடல் இது.


அழகான மன்னவனே!
உம்மேல ஆசவச்சேன்!
பழகித்தான் பார்த்துவிட்டேன்!
பாசமுள்ள மன்னவனே!!

உயிரோடு கலந்துவிட்ட
உன்நினைவில் வாழ்கிறேனே!
பயிர்தேடும் மழையாக
பாசம்தந்த மன்னவனே!!

ஜில்லென்று காற்றுவீச
சிலையாக நின்றுவிட்டேன்!
மழையாக நீவந்தால்
மகிழ்வேனே நானிங்கு!!

உயிரோடும் வாழ்வதும்
உன்முகம் காணத்தான்!
உயிரெனக்குப் போகுமுன்னே
என்கண்முன்னே வாஅத்தான்!!

திரையிசை!

சென்னை ரெயின்போ பண்பலையில் ஒருமுறை திரைப்பட இசையமைப்பாளர் எஸ். எஸ். குமரன் அவர்கள் இந்த இராகம் கொடுத்தார். பிரிந்து போன தலைவியை நினைத்து தலைவன் பாடும் பாடலாக இந்தப் பாடல் இருக்க வேண்டும் என்றார். அவர் கொடுத்த மெட்டு இதுதான்.

பல்லவி:
நானே நானே நானே – நன
நானே நானே நானே

சரணம்:
நன நானானே நனனே
நன நனனானே நனனே
நன நானானே நனனே ஓ ஓ ஓ ஓ...

நான் எழுதிய பாடல் இதுதான்.


பல்லவி:
மானே மானே மானே – என்
தாயே நீயே தானே!

சரணம் - 1
என் உறவும் நீதானே!
என் உயிரும் நீதானே!
என் நிலவும் நீதானே ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

சரணம் - 2
என் இரவும் நீதானே
என் பகலும் நீதானே
என் நினைவும் நீதானே ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

சரணம் - 3
என் கவிதை நீதானே
என் காதலி நீதானே
என் மனதில் நீதானே ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

சரணம் - 4
நீ எங்கே போனாயோ
என் கண்கள் தேடுதடி
என் கவிதையும் பாடுதடி ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

சரணம் - 5
உயிருள்ள மெழுகாக – என்
முன்னே வந்தாயே
நீ எங்கே போனாயோ ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

சரணம் - 6
என் அன்பே பேரழகே
நான் தருவேன் என்னுயிரை
நீ வருவாய் என்முன்னே ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

சரணம் - 7
தினமும் உன்னோடு – நான்
தனியே பேசுகிறேன் – நான்
கவிதை எழுதுகிறேன் ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

சரணம் - 8
கண்ணே உன்னாலே – அடி
உந்தன் பிரிவாலே
நம் காதல் புரியுதடி ஓ ஓ ஓ ஓ...
(மானே...)


சரணம் - 9
என்மேல் உன்மனதில்
கோபம் என்னவென்று
சொன்னால் புரியுமடி! – என்
உயிரும் எரியுதடி ஓ ஓ ஓ ஓ...
(மானே...)

பல்லவி:
மானே மானே மானே – என்
தாயே நீயே தானே!

தவம் செய்வேன்!

பல்லவி:
செய்கதவம் செய்கதவம் செய்கதவம்! – மதியே
செய்கதவம் செய்கதவம் செய்கதவம்!!

சரணம் – 1
எய்துவேன் அமரனாகும் நிலை! – எனை
ஏற்றுவாய் வழிகாட்டுவாய் சக்தி!! – திருப்
பொய்கையிலே நீந்தி நீராடினால் – பாவமெலாம்
போகுமே பரிதிமேற் பனிபோலே!! – என்
செய்கையினாலே உலகு தழைக்கட்டும்! – மனச்
சோம்பல் ஒழிய அருளிடுவாய்! – என்
பொய்மை யிருள்சூழ்ந்த மதியை – மனப்
பேய்களையும் ஓட்டிடு சாமுண்டி!!

சரணம் – 2
ஐயமெலாம் தீர்ந்து ஞானஒளியில் – என்மதி
ஐக்கியமாகிட வழியுரைப்பாய் தேவி!! – இந்த
வையமெல்லாம் தழைத்து அன்புஓங்கிட – எனக்கொரு
வழிகாட்டு காளிசாமுண்டி சக்தி!! – என்
மெய்யை மதியை பொறிகளை – உன்னருளால்
மேம்படுத்தி அருள்புரிவாய் தாயே! – என்
தாயவள் தமிழ்ப் பாடலாலே – என்
தாயுனைப் பாடியே வாழ்த்தினேனே!!


பல்லவி:
செய்கதவம் செய்கதவம் செய்கதவம்! – மதியே
செய்கதவம் செய்கதவம் செய்கதவம்!!

தாயன்பைத் தேடி...

என் மூன்றரை வயதில்
என் நெற்றியில் ஒன்று
என் வலது கன்னத்தில் ஒன்று
என் இடது கன்னத்தில் ஒன்று
என வாஞ்சையோடு
நீ கொடுத்த மூன்று முத்தங்கள்
நினைவுகளாய் இன்னுமும்
என் நியூரான்களில்
கண்ணீரோடு கலந்திருக்கிறது!

நான் சிரித்தபோது
நீ சிரித்தாய்!
நான் அழுதபோது
நீ அழுதாய்!
உன் உணர்வுகளை மறந்து
என் உணர்வுகளை மட்டுமே
உன் உலகமென நினைத்த
என் உலகம் நீ!
நான் வணங்கும் தெய்வம் நீ!!

என் செவிலித்தாயான
தமிழன்னையை
எனக்கு முதல்முதலில்
கற்றுக்கொடுத்த
தமிழாசான்
என் அன்னையே...
நீ தான்!

இலக்கணம் படித்ததில்லை! – உனக்குத்
தலைக்கனமும் பிடித்ததில்லை!! – தமிழ்
இலக்கியம் படித்ததில்லை! – உனக்கென
இலக்குகள் எதுவுமில்லை!!

நீ கற்றுக்கொடுத்த
தமிழ்மொழியால்
உன்மகனான நான் – தமிழ்
இலக்கியத்தில்
மூழ்கிக் கொண்டிருப்பதைப்
பார் அம்மா...!

பல ஆண்டுகளாய்
நம்மிருவரையும் பிரித்துவைத்தே
வேடிக்கை பார்க்கிறது
காலம்!

பிணந்தின்னும் கழுகுகள் போல்
பணம்பண்ணும எந்திரங்களாய்
மாற்றிவிட்டது காலம்!

பசிதூக்கத்தை மறக்கவைத்து
பாசத்தைத் துறக்கவைத்து
உணர்வுகளை இழக்கவைத்து
மனிதநேயத்தை மறக்கவைத்து
மரக்கட்டைகள் போல
மாற்றிவிட்டது காலம்!

மீசை முளைத்தபின்னும் – முகத்தில்
முடி முளைத்தபின்னும்
உருவமது மாறியபின்னும் –என்
பருவமது மாறியபின்னும்
கலப்படமில்லாத தாய்ப்பாலைப்போன்ற
பரிசுத்தமான உன் அன்பைத்தேடும்
மூன்றரை வயதுப் பாலகன் நான்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் - 25-11-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) – 03-12-2011

3. வார்ப்பு (இணைய இதழ்) – 27-11-2011

சொல்லிவிடு பதிலை...

முந்தாநாள் பார்த்தமங்கை! – உன்
முந்தானை நழுவ விட்டாய்!
முந்தானை வாசம்வந்து – என்
மூச்சு முட்டுதடி கிளியே!!

சண்டாளக் காதல்வந்து
சாமத்தில் எழுப்புதடி! – நான்
கொண்டாட வில்லை
காதலர் தினத்தை!
வண்டாடும் பூவே! – காதல்ச்
செண்டாடும் தீவே!! – எனைக்
கண்டாலே வெட்கத்திலுன்
முகம் சிவப்பதும் ஏனடி? – எனைத்
திண்டாட வைப்பதில்
கொண்டாட்டமா உனக்கு?!!

இன்றாவது சொல்லிவிடு
நீதான்டா என் செல்லமென்று...!!

சிரித்துவிடு அக்கா!

டிசம்பர் 24, 2005 சனிக்கிழமை wipro ல் quantitative aptitude exam சம்பந்தமாக நானும் என்னோடு பழகிய இராம்குமார் என்பவரும் டிசம்பர் 23, 2005 வெள்ளிக்கிழமை மாலை பரமக்குடியிலிருந்து கிளம்பி மறுநாள் காலை சனிக்கிழமை சென்னை வந்தோம். அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள ஒரு பள்ளியில் exam முடித்து விட்டு இராம்குமாரின் வீட்டில் வேளச்சேரியில் தங்கினோம். ஞாயிறு காலை என் உறவினர் பையன் கார்த்திக் என்பவர் என்னை வேளச்சேரியில் உள்ள மகேஸ்வரி அக்கா வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மகேஸ்வரி அக்கா என்னை அன்போடு வரவேற்றாள். அந்த வீட்டில் நான் அமர்ந்திருந்த இடம், அப்போது நான் அணிந்திருந்த ஆடைகளின் நிறம் அனைத்தும் இப்போதும் எனக்கு தெளிவாக நினைவில் இருக்கின்றன. ‘எப்படி இருக்கிற க்கா?’ என்று கேட்டேன். ஒன்றுமே சொல்லாமல் இருந்தவள் அழ ஆரம்பித்து விட்டாள். ‘அழாத க்கா’ என அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டேன். அவளின் முகம் மலர்ந்திருந்தது. அவளின் அண்ணன் உடல்நிலை சரியில்லாததால் தான் அவள் அழுதாள் என்பது எனக்குப் புரிந்தது. வெளியே வந்தமர்ந்த நான் அவள் அழுத தாக்கத்தில் நானும் அழ ஆரம்பித்து விட்டேன். நான் அழுததை அவள் பார்த்துவிட்டாள். அன்று மாலை கார்த்திக் தாம்பரத்திலிருந்து இராமேஸ்வரத்திற்கு செல்லும் புகைவண்டியில் பரமக்குடிக்கு அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு வாரம் கழித்தபின் ஒரு நாள் முனைவென்றியில் என் தாத்தா அமரும் சாய்வுநாற்காலியில் அமர்ந்திருந்தேன். அப்போது எழுதிய கவிதை இது.


காலம் நம்மை அழவைத்தாலும்
சிரித்துவிடு அக்கா! – நாளும்
சிலிர்த்தெழு அக்கா!!

நாமெல்லாம்
சிரிக்கப் பிறந்தவர்கள்!
வெற்றியைப்
பறிக்கப் பிறந்தவர்கள்!

உனக்கு
உற்றதுணை அண்ணனிருக்க
கற்றகல்வி கைகொடுக்கும்!
உறுதுணையாய் நானிருக்க - நன்றாய்
உறங்கிவிடு அக்கா!!

பட்டதுன்பம் மாறிவிடும்! – நம்
பரிசுத்த மனம் வென்றுவிடும்!!
கவலைவேண்டாம் அக்கா!!

காலம் கொடுத்த வேதனையை
வேதனை கொடுத்த சோதனையை
நாம் மாற்றுவோம் சாதனையாய்!

காலம் செய்த பாதகத்தை
நாம் மாற்றுவோம் சாதகமாய்!

பசித்துவிட்டால்
புசித்துவிடு அக்கா! – உணவை
புசித்துவிடு அக்கா!!
சிரித்துவிடு அக்கா! – கவலைமறந்து
சிரித்துவிடு அக்கா!!
இரசித்துவிடு அக்கா! – இயற்கையை
இரசித்துவிடு அக்கா!!

இறைத்தன்மை என்றுமே ஒன்று! – நம்
இன்பத்தமிழைப் பேசிக்கொண்டு
நம்பிக்கையோடு நேர்வழி சென்று
காலங்கொடுத்த துன்பத்தை வென்று
பழைய வரலாறு உடைப்போம்!
புதிய சரித்திரம் படைப்போம்!!

இக்கரையில் நாங்கள்!
அக்கரையில் நீங்கள்!
அக்கறையுடன் உன் வேலை செய்!
சிக்கனமாய் பணச்செலவு செய்!
எக்கணமும் மன மகிழ்ச்சிகொள்!
இப்படி நான்
சொல்லவில்லை அறிவுரை!
இவற்றை நீ
இன்றே செய் பரிந்துரை!!

நீ அழுதுவிட்டாய் கண்ணீர்வழி!
நானும் அழுதுவிட்டேன்! – உயிர்நோக
எழுதிவிட்டேன் இன்றே கவிதைவழி!
என்றுமாறும் நம்மிதய வலி?

உன் அழுகை கண்டு
நான் எழுதினேன் இக்கவிதையை!
காலம் மாற்றும் நம் சோகக்கதையை!!

உன் மழலைகொஞ்சும் ஓசை
மனம்மகிழும் ஓசை
என் காதில் விழும்நாள்
வெகுதொலைவில் இல்லை!!

உன் புன்னகை போதுமே அக்கா!
எனக்கு வேறெதுவும் வேண்டாமே அக்கா!!

புத்துலகு செய்குவோமே...!

பல்லவி:
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!

அநுபல்லவி:
யுத்தமில்லா உலகுகாண...
இரத்தமில்லா உலகுகாண...
(புத்துலகு)

சரணங்கள்:
புத்தம்புது காலையிலே புதுவிடியல் கண்டிடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
கத்துங்குயிலின் கீதம்கேட்டு கலைகளையே வளர்த்திடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
(புத்துலகு)

நோய்களில்லா நாளினையே நாமும்எதிர் பார்த்திடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
வாய்மையுள்ள உள்ளத்தினை வரமாய்நாமும் பெற்றிடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
(புத்துலகு)

கல்வியறிவும் கலவியறிவும் கலந்தேநாமும் வாழ்ந்திடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
இல்வாழ்வையே இனிதாக்கவே இனிதேகாதல் செய்திடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
(புத்துலகு)

பாட்டில்நாமும் பாரதியாகி பாரினையே வென்றிடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
ஏட்டிலுள்ள ஒழுக்கமெல்லாம் இயற்கைநியதி ஆகிடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
(புத்துலகு)

பல்லவி:
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011

பிரியும்போது...

சென்னை மாநகரிலே
அன்னைத் தமிழ் பேசும்
தமிழர்கள் நாம்!

உள்ளூரிலேயே வாழ்ந்துங்கூட
ஒருவர் முகம்
ஒருவர் பாராமல்
வாழ்வதும் ஏனென்று
காரணத்தைத் தேடுகிறேன்!

வாழ்க்கையைத் தேடுகிறேன்!
வாழ்க்கையில் தேடுகிறேன்!!
வானத்தைப் பார்க்கிறேன்!
வானவில்லைப் பார்க்கிறேன்!
கவிதைவழி பாடுகிறேன்!
கனவுகளும் காண்கிறேன்!!

சிரிப்பைவிட கண்ணீரைத்தான்
அதிகமாய்த் தந்திருக்கிறது
வாழ்க்கை...

குறும்பாய்ப் பார்த்து
அரும்பாய் மலர்ந்தது
காதல்!

எறும்பாய்ச் சேர்த்துவைத்தேன்
ஆசைகளை!

வார்த்தையைவிட வலிமையானது
கண்ணீர்!
வாழ்க்கையிலே இனிமையானது
காதல்!!

கண்ணீருங்கூட அமுதமடா
மகிழும்போது...!
கண்ணீருங்கூட அமிலமடா
பிரியும்போது...!!

பிரியாதேடா செல்லம்...

பொம்மையோடு விளையாடும்
பச்சிளங்குழந்தை போலவே
உன்னோடு பேசிச்சிரித்து
விளையாடிக் கொண்டிருக்கிறேன்
நான்!

குழந்தையிடமிருந்து
பொம்மையைப் பிடுங்குவதுபோல்
என்னிடமிருந்து
உன்னைப் பிரிக்கிறது
நேரமும் காலமும்!

பொம்மையைப் பிரிந்து
குழந்தை அழுவதுபோல்
உன்னைப் பிரிந்து
நான் அழுகிறேன்!
தற்காலிகமாய்க் கூட
என்னைவிட்டு
பிரியாதேடா செல்லமென்று...

பிணம்!

ஒளிவீசும் விழியிரண்டும் ஒளியின்றி ஆனதென்ன!
ஒலிகேட்கும் செவியிரண்டும் ஒலியின்றிப் போனதென்ன!!
செவியிரண்டும் விழியிரண்டும் செயலிழந்து போனதனைக்
கவிவழியே மரபோடு கவிஞனிவன் பாடுகிறேன்!!
உடலென்னும் கூடுவிட்டு உயிர்ப்பறவை பறக்குதடா!
உடலென்ன உறவென்ன எல்லாமே மறக்குதடா!!
காலிரண்டு மூன்றாகி காலங்கள் மொட்டாக!
மேலிருந்து அழைப்புவர மூன்றுகால் எட்டாக!!
மீளாத தூக்கத்தில் மூழ்கிவிட்ட தசைப்பந்து!
காலனாலே காலமாகி கவிபாடும் இசைச்சிந்து!!
ஒருதுளி விந்ததுவே அண்டத்தோடு கலந்துவிட
கருவானாய் தாய்வயிற்றில் கல்லறையில் மலர்ந்துவிட!
பிறந்தபோது பேர்வைத்துப் புகழ்கின்றார் பெற்றோர்!
இறந்தபோது பிணமென்று இகழ்கின்றார் உற்றார்!!
ஏனிந்த மாற்றமென்று எவரேனும் சொல்வீரா?
‘நான்யார்?’ தெரிந்துகொண்டு நமைநாமே வெல்வீரா?


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மகாகவி – 01-03-2011

2. காற்றுவெளி (இலண்டன் இதழ்) - 12-05-2012

3. விதை2விருட்சம் - 25-05-2012

4. அரசியல் டுடே (இணைய இதழ்) - 29-11-2012

பச்சைக்கிளியே...

பச்சைக்கிளியே பச்சைக்கிளியே
பாசமுள்ள பச்சைக்கிளியே
பச்சைப்பசேல் சோலைகளிலே
பறந்துதிரியும் பச்சைக்கிளியே

‘கிரீச் கிரீச்’ சத்தமெழுப்பும்
கிள்ளைமொழிப் பச்சைக்கிளியே
சிரித்துப்பேசி விளையாடிமகிழும்
சிறார்களைப்போன்ற பச்சைக்கிளியே

அம்மா என்றால் அம்மா என்பாய்
அப்பா என்றால் அப்பா என்பாய்
தம்பி என்றால் தம்பி என்பாய்!
தத்தித்தத்தி நடந்துவருவாய்!!

அனைத்துலக மாந்தர்கட்கு
அன்பைநீதான் போதிக்கிறாய்!
உன்னைப்பார்த்து உன்னைப்பார்த்து
உணர்வோம்நாங்கள் அன்பைநாளும்!!

நான் யார்?

என்மூளைக்குள் ஒருகுரல்
என்நினைவுக்கும் எட்டாமல்...
கண்ணுக்கும் தெரியாமல்...
கற்பனைக்கும் எட்டாமல்...!!

‘நீ யார்?’ என
நேராய்க் கேட்டேன்!
‘நீ யார்?’ என்றது
நினைவிலே அக்குரல்!
‘நீ நானா? நான் நீயா?’
அக்குரலிடமே கேட்டுப்பார்த்தேன்!

உரக்கச் சிரித்தது
அக்குரல்!
‘இக்கேள்விக்கான விடையை
நீ கண்டறிந்துவிட்டால்
நீயும் ஒரு ஞானிதான்’
என்றது அக்குரல்!!

முத்தங்கள் பலநூறு தா!

2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நிகழ்ச்சியை நினைத்து 2009 ம் ஆண்டு டிசம்பரில் எழுதிய பாடலிது.

2005 ம் ஆண்டு நவம்பர் மாதம் என்னோடு படித்த பெண்ணின் திருமணத்திற்கு என் காதல் தேவதை சேலை கட்டி வந்திருந்தாள். திருமணம் முடிந்தபிறகு ஒரு தோழியிடம் விடைபெறுவதற்காய் அந்தத் தோழியை நோக்கி நடந்தேன். அந்தத் தோழிக்கு நேரே பின்னால் அவள் நின்று கொண்டிருந்தாள். தன்னிடம்தான் பேச வருகிறான் என அவள் நினைத்து வெட்கப்பட்ட படியே ஓடிப்போய் சுவரின் பின்னால் ஒளிந்து கொண்டாள். அங்கிருந்து விடைபெறும்போது நான் மட்டும் வரவில்லை. வெட்கப்பட்ட என் குட்டிப்பாப்பாவையும் என் மூளைக்குள் சுமந்துகொண்டு விடைபெற்றேன். 2009 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் கற்பனையில் நான் உருவாக்கி வைத்திருந்த சாலையில் நடக்க வைத்தேன். அப்போது தோன்றிய பாடலிது. சேலை கட்டிய என் காதல் தேவதை, குட்டிப்பாப்பா தேவதை எவ்வளவு அழகாக இருப்பாள் தெரியுமா?


சேலைகட்டி வந்தமயில் சோலையிலே கூவும்குயில்
காலையிலே என்முன்னே நடந்தாள்! – நானும்
மாலையிடும் ஆசைகொண்டு வேளைவரும் நாளையெண்ணி
சாலையிலே அவள்பின்னே நடந்தேன்!!

கார்மேகக் கூந்தலோடு வார்த்தமுகப் பொலிவோடு
சேர்த்தெடுத்த அகிலாக மங்கை! – அவளைப்
பார்த்தவுடன் என்னுள்ளே வார்த்தைவழிக் கவிதையாக
பூத்துவிட்டாள் எழிலான மங்கை!!

கச்சணிந்த முன்னழகில் மச்சமுள்ள இடையழகில்
மிச்சமுள்ள பெண்ணழகில் மயங்கி! – நானும்
கச்சணிந்த முன்னழகை மச்சமுள்ள இடையழகை
அச்சமுடன் பின்தொடர்ந்தேன் தயங்கி!!

கொஞ்சதூரம் போனபின்னே வஞ்சியவள் திரும்பிநிற்க
அஞ்சிநின்று வேறுதிசை பார்த்தேன்! – அவள்
நெஞ்சமதை நானறிய வஞ்சியவள் பெயரறிய
கொஞ்சதூரம் நடந்தபடி வேர்த்தேன்!!

தத்தையவள் எனைநோக்கிச் சித்திரமாய்த் திரும்பிவந்து
பத்திரமாய் ஒருசேதி உரைத்தாள்! – ‘நானுன்
அத்தையவள் பெற்றமகள் பைத்தியமா நீ?’என்று
புத்திமதி சொல்லிவிட்டு முறைத்தாள்!!

உண்மையது புரிந்தவுடன் மென்மையான பெண்மையிடம்
உண்மையான காதலென்று சொன்னேன்! – அவளும்
‘நானுமுனைக் காதலித்தேன் நாணமுற்ற நாள்தொடங்கி’
பெண்மையவள் மென்மையாகச் சொன்னாள்!!

முத்துரத வீதியிலே தத்திவிளை யாடுங்கிளி
சித்திரமாய் என்னருகே வந்தாள்! –அவள்
முத்துதிரும் இரத்தினமாய் மோகனமாய்ப் பத்திரமாய்
முத்தங்கள் பலநூறு தந்தாள்!!

‘குழவியாகப் பார்த்தவுன்னை தலைவியாகப் பார்த்தவுடன்
குழம்பியது என்னறிவு’ என்றேன்! – என்
தலைவியான அவளோடு தலைகோதி சாய்ந்தபடி
மழலையாக வீடுநோக்கிச் சென்றேன்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-09-2012

2. பதிவுகள் (இணைய இதழ்) - 22-09-2012

3. முத்துக்கமலம் (இணைய இதழ்) - 15-10-2012