“நான் டா இல்ல. டி. நான் ஆண் இல்ல. பெண்.” என்று சிணுங்கியபடி அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் அகிலா.
“எனக்கு தெரியும். தெரிந்துதான் அழைத்தேன். உன்னை செல்லமாக அழைத்தேன்.” என்று தன் மனதில் உள்ளவற்றை அப்படியே ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படுத்தினான்.
தான் வெட்கத்தில் நாணிச் சிவப்பதை குறிப்பால் அவனுக்கு உணர்த்தினாள்.
சரவணன் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கணினி மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிபவன். அவன் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி. அகிலா இளங்கலை தமிழிலக்கியம் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய சொந்த ஊர் யாழ்ப்பாணத்தில் உள்ள பூநகரி.
சரவணன் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுடையவன். தமிழில், ஆங்கிலத்தில் கவிதைகள், கட்டுரைகள் எழுதக் கூடியவன். இணையத்தில், குறிப்பாக முகநூலில் தான் எழுதும் கவிதைகளை பதிவு செய்பவன். அந்த தருணங்களில் அவன் அதிகமாக தன்னுடைய கவிதைகளை முகநூலில் பதிவு செய்த காலம், ஒரு பெண் தொடர்ந்து அவனுடைய கவிதைகளுக்கு விருப்பம் தெரிவித்துக் கொண்டே வந்தாள். சில வாரங்களில் சரவணனின் கணக்கின் நண்பர்கள் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து வேண்டுகோள் விடுத்திருந்தாள். அவள் பெயர் அகிலா.
இப்படி முகநூலில் தான் சரவணனும் அகிலாவும் பேசி, பழகிக் கொண்டிருந்தனர். பேசியதும் பழகியதும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதும் இருவர் மனங்களையும் மெல்ல மெல்ல இணைய வைத்தன. நெருக்கமான நண்பர்களாக மாறினார்கள். அவளுக்காக இவனும் இவனுக்காக அவளும் முகநூலிலேயே தவம் கிடக்க ஆரம்பித்தனர்.
ஒருநாள் அவன் வழக்கத்திற்கு மாறாக தாமதமாக வந்தான். கோபப்பட்டு பேசாமல் போனாள் அவள். இருவருக்கும் ஊடல் ஆரம்பமானது. இவன் அவளை திட்டுவது அவள் இவனை திட்டுவதுமாக மெல்ல மெல்ல அவர்களுக்கிடையே இருந்த நட்பு காதலாக மாறி அந்த காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது.
அவன் தன் காதலை அவளிடம் எப்போது சொல்லலாம் என்று சரியான தருணத்திற்காக காத்திருந்தான். அதற்குமுன் அவளும் தன்னை காதலிக்கிறாளா என்று தெரிந்துகொள்ள ஓரிரு சோதனைகள் செய்து அவற்றின்மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று முடிவெடுத்தான். அதன்படி “நீ என்னிடம் பேசவில்லை. ஏன் பேசவில்லை? நீ இனிமேல் என்னிடம் பேசாதே. என் முகநூல் கணக்கிலிருந்து உன்னை நீக்கிவிட்டேன்.” என்றபடி ஒரு செய்தி அனுப்பிவிட்டு அவளை தன்னுடைய முகநூல் கணக்கிலிருந்து நீக்கினான்.
சரவணன் அனுப்பிய செய்தியை படித்துவிட்டு “டேய் லூசா நீ? ஏன் என்னை உன் கணக்கிலிருந்து நீக்கினாய்? எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருந்துச்சுடா. அதான், பேச முடியல. மறுபடியும் இப்படி செய்யாதே. எனக்கு பிடிக்காது. என்னை பழையபடி உன் முகநூலில் சேர்த்துக்கொள். உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் டா.” என்று விளக்கினாள்.
சரவணனும் புரிந்துகொண்டான் அவளுக்கும் தன்மேல் காதல் இருக்கிறதென்று. இதனை அவன் உணர்ந்த அந்த சுகமான தருணத்தில் தான் எழுதிய ஒரு சந்தப்பாவகை கவிதையை அவளுக்கு அனுப்பி வைத்தான்.
அகிலா அதனை படித்துவிட்டு
கார்மேகக் கூந்தலோடு வார்த்தமுகப் பொலிவோடு
சேர்த்தெடுத்த அகிலாக மங்கை – அவளை
பார்த்தவுடன் என்னுள்ளே வார்த்தைவழிக் கவிதையாக
பூத்துவிட்டாள் எழிலான மங்கை
என்பதில் “அகிலாக மங்கை” என்பதன் பொருள் என்ன? வெனக் கேட்டாள்.
“அடிப்பாவி. இதுகூட தெரியாமல் தான் இளங்கலை தமிழிலக்கியம் படிக்கிறாயா?” என்று கேட்டான்.
“உன் அளவிற்கெல்லாம் எனக்கு தெரியாது டா. சொல்லு.” என்றாள்.
“அகில் என்றால் சந்தனம். அகிலாக மங்கை என்றால் சந்தனத்தை போன்ற குளிர்ச்சி பொருந்தியவள் என்று பொருள். உன்னை நினைத்து எழுதிய கவிதைதான்.” என்று தன் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்துகொண்டான்.
அவன் சொன்னவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டே தன் காதலை எண்ணி உளப்பூரிப்படைந்தாள். இந்த தாங்கமுடியாத மன மகிழ்வில் தன் மனங்கவர்ந்த கள்வனான அவனை பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டாள்.
“என் புகைப்படத்தை அனுப்பியிருக்கிறேன். உன் புகைப்படத்தையும் நீ அனுப்பு டா.” என்று சொன்னாள்.
தன்னுடைய புகைப்படத்தை அவளுக்கு அனுப்பி வைத்துவிட்டு “நான் அழகா இருக்கேனா டா?” என்றான்.
“இல்ல” என்று சொல்ல்விட்டு தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.
“பின்ன, நான் அழகா இல்லையா?” கேட்டான்.
“அப்படியெல்லாம் இல்ல.” என்று சொல்லிவிட்டு குதூகலமடைந்தாள். அவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருந்தாள்.
“போ. நான் அழுறேன். நான் அழகா இல்லை ன்னு நீ சொல்லிட்ட.” என்றான்.
பதட்டமடைந்தவளாய் “என்ன ஆச்சுடா பாப்பா? ஏன் அழறே? நீ அழகா இல்லை ன்னு நான் எப்போ சொன்னேன். நான் உன்னை காதலிக்கிறேன் டா.” அழுதாள்.
தன்னுடைய காதலை அவனை நேரில் சந்தித்து வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்திருந்தாள். ஆனால், இப்படி அழுதபடி தன்னுடைய காதலை அவனிடம் வெளிப்படுத்தும் வகையில் சூழல் அமையுமென அவள் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.
மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியவளாய், “இன்னும் என்மேல் கோபமா டா?” என்றாள்.
“அதெல்லாம் இல்ல ப்பா. எனக்கும் உன்மேல் காதல் உண்டு.” என்று சொல்லிவிட்டான்.
தன் மனதில் உள்ள சோகமெல்லாம் கணப்பொழுதில் மறைந்ததை உணர்ந்தாள்.
“என் புகைப்படத்தை நீ பார்த்தாயா? நான் அழகா இருக்கேனா?”
“பார்த்தேன்.”
“நான் அழகா இருக்கேனா?”
“இதற்காகத்தானே காத்திருந்தேன். என்னையே நீ பகடி செய்கிறாயா? அழ வைக்கிறாயா? இப்போது பார். உன்னை அழ வைக்கிறேன். உன்னிடம் விளையாடப் போகிறேன்.” என்றபடி “இப்படியெல்லாம் சிரிக்காதே ப்பா. யாராவது மோகினிப் பிசாசென்றே நினைத்து பயந்துவிடப் போகிறார்கள். ஹி ஹி ஹி” என்று அவளை கோபமூட்டினான்.
அவள் உடனே சட்டென்று “உன்னை எனக்கு பிடிக்கவில்லை.” என்றபடி போய்விட்டாள்.
பல நாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள் என இரண்டாண்டுகள் ஓடிப்போயின. அவள் நினைவிலேயே வாழ்ந்த சரவணன் அவளுக்கு ஒரு கவிதையெழுதி அனுப்பி வைத்தான்.
"இப்படி நீ
சிரிக்காதே.
ஐயோ...
மோகினிப்பிசாசென்றே
யாரேனும் பயந்துபோய்
மயங்கி விழுந்துவிடுவார்கள்"
என்றேன்.
"எனக்குன்னை பிடிக்கவில்லை"
என்றபடி
முகத்தை ஒரு வெட்டுவெட்டி
முறைத்தபடியே தூரம்போனாய்.
போடீ போ...
இப்படி கதைத்துக் களிக்க
உன்னைவிட்டால் எனக்கு
வேறு யாருண்டு இவ்வுலகில்...
ஆனால், அகிலாவின் வாழ்க்கை அந்த இரண்டாண்டுகளில் திசைமாறிப் போனதை அவள் வேறு யாருக்கும் சரவணக்கும் கூட சொல்லவில்லை. அவளும் அவன் அனுப்பிய கவிதையை படிக்கத் தவறவில்லை.
இரண்டாண்டுகளுக்கு முன்பு ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக புலம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களில் அகிலாவும் ஒருத்தி. யாழ்ப்பாணம், அதனைச் சுற்றிய பகுதிகள், ஆனையிறவு, முல்லைத்தீவு, வன்னி, அதனைச் சுற்றிய காடுகள் என போரின் தாக்கத்தில் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள சரவணனை மனதில் சுமந்தபடி புலம்பெயர்ந்து கடந்த இரண்டாண்டுகளாய் தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்கிறாள்.
சரவணன் அனுப்பிய கவிதையை படித்தவுடன் தன்னுடைய சோகம் மறந்து அவனும் தன்னை நினைவில் வைத்திருப்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள். பேசலாம் என்று முடிவெடுத்தாள். ஆனால், “என்னை அன்று பகடி செய்து அழ வைத்தாயே டா. உன்னிடம் கொஞ்ச நாளைக்கு பேச மாட்டேன். நீ என்ன செய்கிறாய் என்று நானும் பார்க்கிறேன்” என்று தனக்குள்ளேயே அவனை செல்லமாக திட்டினாள்.
இங்கு சரவணன் அவளின் நிலை அறியாதவனாய் நியூசிலாந்தில் வாழும் தன் அண்ணன் வெங்கடேஷ்வரனிடம் தொடர்பு கொண்டு அவள் குறித்து எல்லாவற்றையும் சொல்லி அவள் எங்கிருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? என்ற விவரங்களை சேகரித்து தருமாறு வேண்டினான்.
அண்ணன் வெங்கடேஷ்வரனும் தனக்கு மிகவும் நெருக்கமான தன் உறவினர்களிடம் “நட்புறவுகள் யாரேனும் யாழ்ப்பாணம் அருகில் இருப்பின் செல்ல இருப்பின் அந்தப் பெண் பற்றி விசாரிக்க இருப்பின் உடனே விசாரியுங்கள். ஒரு சமுதாய அக்கறை உள்ள இளைஞன், எழுத்து மேலும் தமிழின் மேலும் மொத்தத்தில் இன அக்கறையும் மண் சார்ந்தப் பற்றுதலும் உள்ள ஒரு கவிஞன் உடைந்துவிடக் கூடாது என்று எதிர்ப்பார்க்கிறேன்.” என்று தன்னுடைய தம்பியை பற்றியும் அகிலாவை பற்றியும் சொல்லி உதவி கேட்டான்.
சரவணனும் அகிலா தன்னிடம் பேசுவாள் என்றே காத்திருந்து காத்திருந்து கவலைப்படத் துவங்கினான். தன் அண்ணன் வெங்கடேஷ்வரனிடம் அகிலாவின் முகநூல் முகவரியை கொடுத்து “அவளிடம் நீ பேசிபார் அண்ணா. அவள் என்மீது கோபமாக இருக்கிறாள் போல. அதனால் தான் என்னிடம் பேசவில்லை. உன்னிடம் நிச்சயம் அவள் பேசுவாள்.” என்று சொன்னதன் பேரில் வெங்கடேஷ்வரனும் அகிலாவிடம் “என்னடா எப்டி டா இருக்க?” என்று ஆரம்பித்திருக்கிறான்.
அகிலாவும் “என்னடா சரவணன் நம்மிடம் முதன்முதலில் கேட்டது போலவே இவரும் நம்மிடம் கேட்கிறாரே” என்றபடி “நான் ஆண் இல்லை. பெண்.” என்று சரவணனிடம் சொன்ன அதே வார்த்தைகளை சொன்னாள்.
வெங்கடேஷ்வரன் அவளிடம் நடந்த எல்லாவற்றையும் விளக்கி “சரவணன் என் தம்பி தான். அவனை நீ உண்மையாகவே நேசிக்கிறாயா? அவன் உன்னை நினைத்து மிகவும் கவலையாக உள்ளான்.” என்று கேட்டான்.
அகிலாவும் “சரவணன் என்னை மறக்க மாட்டான் என எனக்கு தெரியும். அவனை என் கணவனாக நான் அன்றே தேர்வு செய்தது தவறில்லை என நான் உணர்கிறேன். நான் அவன் மனதை மிகவும் காயப்படுத்தி விட்டேன். அவனிடம் சொல்லுங்கள். அடுத்த வாரம் அவனை சந்திப்பதற்காக நான் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வருவேன். அங்கு வந்தபின் அவன் முகம் பார்த்து அவனிடம் என் காதலை சொல்லுவேன். என்னை அவன் ஏற்கனவே பகடி செய்து என்னை அழ வைத்தான். அதற்கான தண்டனையாக நான் சென்னைக்கு வரும்வரை அவனிடம் பேச மாட்டேன்.” என்று பகிர்ந்து கொண்டாள்.
உண்மையை தன் அண்ணன் மூலம் தெரிந்துகொண்ட சரவணன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.
கிண்டி தாண்டி மீனம்பாக்கம் விமானநிலையம் செல்ல மின்சார இரயிலில் இன்று சரவணன் குதூகலமாய் கற்பனையில் மிதந்தபடி சென்றுகொண்டிருக்கிறான்.
அவளை ஆரத்தழுவியபடி ஆனந்தக் கண்ணீரில் மிதந்துகொண்டிருந்தான்.
சரவணனின் மனநிலை உணர்ந்ததுபோல் அந்த மின்சார இரயிலில் அவன் அருகில் நின்று கொண்டிருந்தவரின் அலைபேசி ஒலித்தது.
யாழ்ப்பாண பொண்ணு
யாழ் மீட்டும் கண்ணு
என்ற திரைப்படப் பாடலை...