Sunday, May 25, 2014

‘பாசமுள்ள தங்கச்சி’ பாமினி

ஓராண்டிற்கு முன்பு கடந்த மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் “நீங்கள் என் மனதை காயப்படுத்திவிட்டீர்கள்.” என்று ஒரு செய்தியை முகநூலில் என் தங்கச்சி பாமினிக்கு அனுப்பியிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து என்னுடைய அலைபேசிக்கு அழைப்பு வந்திருந்தது.

“நான் ஜெர்மனியில நிக்குறன் அண்ணா. மன்னிச்சுக்கங்க அண்ணா. அடிக்கடி பேசுறேன் அண்ணா.” என்று குரல் தழுதழுக்க சொன்னாள். அன்று என்னால் உறங்க இயலவில்லை. நான் அவள் மனதை காயப்படுத்தி விட்டேன் என்று நான் நிறைய அழுதேன். இன்னொரு பக்கம் எனக்கு என்மேல் அன்புகொண்ட ஒரு தங்கச்சி கிடைத்துவிட்டாள் என்ற மகிழ்ச்சி.

பிள்ளை குரல் தழுதழுக்கச் சொன்ன இந்த நிகழ்வு என்னை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த நிகழ்வு தான் என் தங்கச்சி பாப்பா சோபனாவைப் போல இவளும் என் தங்கச்சி பாப்பா தான் என்று உணர வைத்திருக்கிறது.

கடந்த ௧௬, மார்ச் ௨௦௧௪ (16, மார்ச் 2014) அன்று அவளுக்கு பிறந்தநாளன்று அவள் சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள். அன்று நான் நிறைய மனமுருகி வேண்டினேன். வித்யாசாகர் அண்ணாவிடம் மின்னஞ்சல் ஊடாக தகவலை சொன்னேன்.

அண்ணா குவைத்திலிருந்து பேசினார் “அவள் நம் தங்கச்சி. நம் அன்பு மட்டும் போதும் அவள் நல்லபடியாக குணமாக. நீ வருத்தப்படாதே. அவளை அங்கு நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள்.” என்று ஆறுதல் சொன்னார்.

அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நான் சொன்னேன் "தங்கச்சிக்கு என்மேல் ரொம்ப பாசம்" என்று. சில தினங்கள் கழித்தபிறகு அவள் சொல்லியிருக்கிறாள் "அண்ணாவுக்கு என்மேல் ரொம்ப பாசம்" என்று.

கடந்த ௨௩-௦௫-௨௦௧௪ (23-05-2014) அன்று பெங்களூரிலிருந்து திருச்சி வரவேண்டி இரயிலில் ஓசூர் தாண்டி வந்துகொண்டிருந்தபோது உள்ளுக்குள்ளே நிறைய அழுகை வந்தது. வெளியே கண்ணீர் வரவில்லை. இந்தக் கவிதை வந்தது.




ஆசையோடு தங்கையுந்தன் அன்பைமட்டும் எதிர்பார்த்து
பாசமுள்ள அண்ணனிவன் பேசவந்தேன் கவிதைவழி
தேசங்கள் கடந்துநின்றும் தங்கையுந்தன் பாசந்தான்
வீசுகின்ற தென்றலைப்போல் வீசுதம்மா எப்போதும்

நீசனாகப் பிறந்ததாலே நீங்கவில்லை அன்புமட்டும்
பாசாங்கு இல்லாத பாசந்தான் என்னுள்ளே
காசொன்றே எதிர்பார்க்கும் கயமைமிகு உலகினிலே
நேசமொன்றே போதுமடி நெஞ்சமெல்லாம் நிறையுமடி

சிக்கலிலே சிலமுறைகள் சிக்கித்தான் தவித்தேனே
அக்கறையாய் சிலவார்த்தை ஆதரவாய் சிலவார்த்தை
பக்குவமாய் புரிந்துகொண்ட பாசமுள்ள தங்கச்சி
இக்கரையில் நானிருந்தே இமைமூடி அழுகின்றேன் 

கோபத்தில் சிலவார்த்தை கொட்டித்தான் தீர்த்தேனே
சாபத்தை கொடுத்துவிட்டு சினந்திடும் சிவன்போலே
கோபத்தை பதிலுக்கு கொட்டிவிட்டுப் போனாயோ
கோபத்தில் பேசாமல் கொள்ளாமல் இருக்காதே

ஒன்றையே நினைத்து என்னையே மறந்தால்
அந்நிகழ்வை நாமிங்கு அழைப்போமே தவமென்று
என்னுடைய பாசமிங்கு இப்படித்தான் புரிந்துகொள்
நானுனக்கு அண்ணன்தான் நினைவில்கொள் எப்போதும்

No comments: