Sunday, April 25, 2010

அன்பின் தவிப்பில்...

பிரிவின் கொடுமையை
பிரியும் அக்கணத்தில்
உணரமுடிவதில்லை!

நான்கு சுவர்களுக்குள்
நானும் என்தனிமையும்!

ஊருக்குத் திரும்பும் நாளை
நாட்காட்டியில் எண்ணிக்கொண்டிருக்கும்போதே
நினைவுகள் கடந்தகாலத்தை நோக்கி...

அம்மாவின் அரவணைப்பிலும்
அப்பாவின் அதட்டலிலும்
வாழ்ந்தகாலம்!

அம்மாவின் அன்பு
மறுபிறப்பு எடுத்தது!
அக்காவின் வடிவில்...

அப்பாவின் அதட்டல்
அழியவில்லை அன்று!
அண்ணனின் கண்டிப்பில்...

தங்கையின் குறும்புகளில்
வாழ்ந்து கொண்டிருந்தது
என்சிறுவயது சேட்டைகள்!!

அன்னை தந்தையின் இழப்பு
அதிகம் பாதிக்கவில்லை
அன்றென்னை!

கடந்தகாலம் நிகழ்காலமாகி
நிகழ்காலம் நினைவுகளானது!!

உதிரத்தில் கலந்த உறவுகளை
உயிர்தேடி அலையும்போது
உணர்கிறது மனம்!
பிரிவின் கொடுமையை!!

எழுந்திரு தோழா! எழுந்திரு தோழி!!

எழுந்திடு தோழா! எழுந்திடு தோழி!!

எதையும் முடிக்கும் இதயம் உன்னில்
இருப்பதை நானும் என்றோ கண்டேன்!
எழுந்திடு தோழா! எழுந்திடு தோழி!! - மெய்க்
காதல் செய்யும் கலைகளை விடவும்
கடமைக ளுனக்கு கண்முன் இருக்கு!!
கவனித்திடு தோழா! கவனித்திடு தோழி!!

சிற்சில தோல்விகள் சீறிப்பாயும்!
சற்றே முயன்றால் சிதறி மாயும்!!
சிலிர்த்திடு தோழா! சிலிர்த்திடு தோழி!! - உலகில்
வேர்க ளில்லா மரங்க ளுண்டோ!
வேர்வையு மின்றி வெற்றிக ளுண்டோ!!
விழித்திடு தோழா! விழித்திடு தோழி!!

உன்னை உணரும் உன்னத சக்தி
உன்னி லிருக்கும் உண்மையை நீயும்
உணர்ந்திடு தோழா! உணர்ந்திடு தோழி!! - மனக்
கண்முன் விரியும் காட்சிகள் யாவும்
கனவுகள் அல்ல நனவாய் மாறும்!!
நம்பிடு தோழா! நம்பிடு தோழி!!

இன்று புதிதாய் மலர்ந்த மலர்போல்
நன்றாய் அகத்தை நலமுடன் பேண
சிரித்திடு தோழா! சிரித்திடு தோழி!! - பிறர்மேல்
அன்பை வளர்த்து அறவழி நடந்தால்
நன்மையும் உன்னை நாடும் இன்றே!!
நடந்திடு தோழா! நடந்திடு தோழி!!

எழுந்திடு தோழா! எழுந்திடு தோழி!!

எதையும் முடிக்கும் இதயம் உன்னில்
இருப்பதை நானும் என்றோ கண்டேன்!

ஞாயிறு!

எந்திர வாழ்க்கைக்கு
இன்றொருநாள் விடுதலை!

பட்டம் விட்டு
கொட்டமடிக்கும்
சிறுவர்கள்...!

கடலை கொறிக்கும்
விடலைகள்...!

நெடுநாள் பிரிந்த
நண்பர்களின் கூட்டம்...!

கவிதை
எழுதத் தூண்டும்
வனப்பு...!

ஈரக்காற்றில்
மேனியின் சிலிர்ப்பு..!

இவையெல்லாமே
இயற்கையின் சிறப்பு...!!

கிழக்கே உதிக்கும் ஞாயிறால்
உலகிற்கு வெளிச்சம்!
வாரக்கணக்கில் உதிக்கும் ஞாயிறால்
மனதிற்கு வெளிச்சம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. முத்தாரம் - 31-01-2008

 2. மகாகவி - 28-05-2012

Saturday, April 24, 2010

ஞானகவி!

செறுக்குநடை
செந்தமிழ்க்கவிஞன்!
முறுக்குமீசை
முண்டாசுக்கவிஞன்!

அகத்தில் சினம்பிறக்க...
முகத்தில் அனல்பறக்க...
விழிகளில் கனல்தெறிக்க...
ஜாதிகளை சாய்க்கத்துடித்தான்!
மதங்களை மாய்க்கத்துடித்தான்!

மாற்றிவிட்டான் மனிதமனத்தை!
ஏற்றிவிட்டான் உள்ளொளியை! - உயிர்கட்கு
காட்டிவிட்டான் நல்வழியை!!

முண்டாசை இறுக்கிக்கட்டி
மீசையை முறுக்கித்தட்டி
பாடிவிட்டானே பரம்பொருளைப்பற்றி!

பிரபஞ்சத்தில் நீ!
உன்னில் பிரபஞ்சம்!
உணர்த்திவிட்டான் ஞானகவி!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) - 28-01-2008

2. பதிவுகள் (இணைய இதழ்) – 23-12-2011

சாபம்!

முன்னொரு காலத்தில்
தேவதைகள் வரம்கொடுத்ததாய்
கேள்விப்பட்டிருக்கிறேன்!

என் காதல்தேவதையே...
நீமட்டும் ஏனடிஎனக்கு
சாபத்தைக் கொடுத்துவிட்டுப்
போய்விட்டாய்?

ஆதிபராசக்தி!

அன்புவடி வானவளே
ஆதிபரா சக்தி!-உன்
பண்புதனை பாடிடவே
பாரில்நானும் வந்தேன்!! - பல
நன்மைகளை செய்திடவே
உதவிடுநீ தாயே! - மன
வன்மையினை பெருக்கிடவே
வழிவகுப்பாய் நீயே!!

வாழ்க நீ!

மோனநிலைச் சித்திரங்கள்!
முகம்காட்டும் அற்புதங்கள்!
கானமழை பொழிகின்ற
கவியழகே எனதுயிரே!
தேனொழுக நீபேசி
தெள்ளமுதைத் தந்தவளே!
வானழகைக் கண்டுநின்றேன்!
வாழியநீ பல்லாண்டு!!

தெரியுமா உனக்கு?

உனைப் பார்ப்பதற்காகவே
உன் வீட்டிற்கு வந்தேன்!
நுழைந்த உடனேயே
நலம் விசாரித்தாய்!

உன் முகம் பார்த்தேன்!
கலையான முகம்!
கறையிலா முகம்!
கண்ணாடி அணியா முகம்!!

எனக்கு
அன்னமிட்டன
உன்னிரு கைகள்!

அள்ளி அள்ளி வைத்தாய்!
வயிறு நிறைந்தும்
போதுமென்று சொல்ல
மனம் வரவில்லை எனக்கு!

அங்கிருந்த
புகைப்படத்தில்
பள்ளிச்சீருடையணிந்து
நீ..!

திருடலாமென்று
தீர்மானித்தேன்!

உன் இதழோர
நகைப்பை மட்டுமே
திருட முடிந்தது என்னால்!

அங்கு நான்
வருவதற்கு முன்பிருந்தே
நானுனை நேசித்திருக்கிறேனென்று
தெரியுமா உனக்கு?!!

பொய்யான மாறுதல்!

உன் பிரிவைத்
தாங்கமுடியவில்லை
என்னால்!

உன் முகம்பார்த்து
கதறியழத் தோன்றுகிறது
எனக்கு!

நான் அழுவதைப் பார்த்தால்
நீயும் அழுதுவிடுவாயென்பதால்
என்னைச் சுற்றி
நீ இருக்கும்போதெல்லாம்
புன்முறுவல் செய்கிறேன்!!

காதல்!

உள்ளத்தில் தாக்கம்!
உயிரின் ஏக்கம்!
அன்பின் நோக்கம்!!