Wednesday, April 28, 2010

நான் மட்டுந்தான்!

காதுகளால் சுவாசிக்கும்
ஒரே மனிதன்
இவ்வுலகில் நான்மட்டுந்தான்!

என்னவளே...
உன் காலடியோசையை
என்காதுகள் சுவாசித்துக்கொண்டே
இருப்பதால்....

இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கோடை பண்பலை – 15-07-2006

காதல்!

என்னை தொடாமல்
தொட்டுவிட்டது
என் இதயத்தை!
காற்றல்ல...
காதல்!!

இறைத்தூதன் இயேசு!

மாட்டுத்தொழுவத்தில்
பிறந்து - மரியன்னையின்
மடியில் தவழ்ந்த
மகான்!

அன்பின் மகத்துவத்தை
அன்பினால் உணர்த்த
விண்ணிலிருந்து பிறந்த
வீரத்திருமகன்!

மக்களோடு மக்களாய்
மனிதருள் மாணிக்கமாய்
எக்காலமும் பேர்போற்ற
ஏசுவாய்ப் பிறந்த
மெசியா இவன்!

ஆதவன் உதிப்பது
அகிலம் சிறக்கத்தான்!
பிதாமகன் பிறந்தது
பேருலகம் உய்யத்தான்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

காதல் பிறவி!

ஆசையைத் துறந்தவன்
முற்றுந்துறந்த துறவி! - தாய்
பாசையை மறந்தவன்
காதலில் பிறந்த பிறவி!!

தேடல்!

தடையிலா வாழ்வுதனை
தேடித்தேடி அலையுதடி!
மடைதிறந்த வெள்ளம்போல்
மனக்கதவு திறந்ததடி!
படைகள்பல வந்தபோதும்
பாசம்மட்டும் மிஞ்சுதடி!
விடைகாணா கேள்விகளை
வினவமனம் அஞ்சுதடி!!

என்னுள்ளே கடவுளுமுண்டு!
என்னுள்ளே மிருகமுண்டு!
'நான் யார்?'என்ற கேள்விமட்டும்
நாட்கணக்காய் நீளுதடி!

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுதடி!
உண்மையிலா உலகத்திலே!!
கள்ளமும் கபடமும்
களியாட்டம் போடுதடி! - இதை
கவனிக்க யாருமிலையோ!!

தடையிலா வாழ்வுதனை
தேடித்தேடி அலையுதடி!

காதல் தோல்வி!

என் மனக்குழந்தைக்கு
மீசை வளரும்முன்னே
தாடி வளர்ந்துவிட்டது!!

அன்பின் சின்னமாய்...!

எந்நேரமும்
உன் நினைவுகளிலேயே
உறைந்து கிடக்கிறேன்
நான்!

இன்று
ஒரு கைக்குழந்தையுடன்
எனைக் கடந்து
போகிறாய் நீ!
எனக்கு முன்னே
அதோ...
தூரத்தில்
மூதாட்டி ஒருத்தி
போய்க்கொண்டிருக்கிறாள்!

நீ என்னிடம் பேசிய
தொலைபேசி உரையாடல்கள்
இன்னும்
என் மூளைக்குள்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றன!

காலங்கள் வேகமாய் கடந்தன! - என்
கால்களும் வேகமாய் நடந்தன!!
நடந்த வேகத்தில்
அம்மூதாட்டியை முந்திவிட்டேன்!

ஏதோஓர் உள்ளுணர்வு
அவள்முகம் பார்க்கச் சொன்னது!

திரும்பி நின்று
அவளைப் பார்த்தேன்!

கலையான முகம்!
கறையிலா முகம்!
கண்ணாடி அணியா முகம்!!

அவளும் எனை வெகுநேரமாய்
உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள்!

அவள் கண்களில்
கண்ணீர்மழை!

தள்ளாடிவந்து
என்மார்மீது சாய்ந்தாள்!

அன்று
கைக்குழந்தையுடன் சென்ற நீ
இன்று
என் கைக்குழந்தையாய்
என் மார்மீது!!

Tuesday, April 27, 2010

இன்னும்...

உன்னை நினைத்து நினைத்தே
கீறல் விழுந்துபோன
இசைத்தட்டு நான்!

இன்னும்
சுற்றிக்கொண்டே இருக்கிறேன்!!

எங்கே நீ?

பச்சிளங்குழந்தை
தாயைத்தேடி அலைவது போல்
என் மனக்குழந்தை
உனை நினைத்து அழுகிறது!

உனைப் பற்றி யாரிடம் பேச...?
என்னருகில் இல்லையே நீ!!

Sunday, April 25, 2010

காதலே சுகம்!

கண்ணீர் வடித்து
வாழ்வதை விட
கவிதைகள் வடித்து
வாழ்வதில்
சுகமெனக்கு!

கடவுளை தொழுது
வாழ்வதை விட
நம் காதலை தொழுது
வாழ்வதில்
சுகமெனக்கு!

காற்றை சுவாசித்து
வாழ்வதை விட
நம் காதலை தொழுது
வாழ்வதில்
சுகமெனக்கு!!