Friday, May 21, 2010

என் சமுதாயமே...

நான் மலர்ந்துவிட்டேன்
மனிதனாய்...!

மனிதனாகவே வாழ்ந்து
மடியத் துடிக்கிறேன்!
முடியுமா என்னால்?
என் சமுதாயமே...
நீயே சொல்!!

வாருங்கள் இளைஞர்களே!

நான் அழகப்பா பல்கலைகழகத்தில் முதுநிலை கணினி பயன்பாட்டியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது என்னுடைய முதலாம் ஆண்டு தம்பி தங்கைகளுக்காக இந்த கவிதையை எழுதி அவர்கள் வகுப்பிலேயே வாசித்தேன்.


நாளைய இந்தியாவின்
இன்றைய ஆணிவேர்களே...

நாளை மலரும்
இன்றைய மொட்டுகளே...

கனவுகாணச் சொன்ன
விஞ்ஞானியின் கனவினை
நனவாக்கும் கவிதைகளே...

வேதனைதரும் உலகில்
சோதனைகளை எதிர்த்து
சாதனைக்களம் அமைக்கும்
சகாக்களே...

சொந்தங்கள் தேடி
கானங்கள் பாடிவரும்
வானம்பாடிகளே...

மதங்களை மறந்து - மனித
மனங்களை நினைக்கும்
மகான்களே...

ஜாதிகளை சாகடித்து
ஜதிபாடும் குயில்களே...

பூசல்களை பொசுக்கிவிட்டு - இதய
வாசல்களை திறந்துவைக்கும்
இனியவர்களே...

தரணிதனில் - என்
தாய்த்தமிழ் பேசும்
தங்கங்களே... - என்தமிழ்
சிங்கங்களே...

மறந்துசெய்யும் தவறுகளை
மன்னிக்கத்தெரிந்த
மனிதர்களே...

தடைகளை உடைத்து
நடைபோடும் - இளம்
படைகளே...

வாருங்கள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 07-05-2007

கடவுளும் காதலும்!

மனிதனை
ஜாதிமதம் சொல்லி
பிரிப்பது
கடவுளை வகுத்த
மனிதர்கள்!

மனிதனை ஜாதிமதமின்றி
சேர்ப்பது
காதல்!!

மூன்றெழுத்து கடவுள்!

என்னுள் மனப்போராட்டம்!
இன்னும்... இன்னும்...
என்னுள் மனப்போராட்டம்!
மூன்றெழுத்து கடவுளால்தான்!!

என்னை செதுக்கிய
உளியாய்...
என்னை ஆளும்
அரசியாய்
இருப்பவள் நீதான்!

தமிழ் வார்த்தைக்கோர்
அகராதியாய்...
என்னைக் கவிஞனாக்கிய
கவிதையாய்
இருப்பவள் நீதான்!

என் வாழ்வில் விளக்கேற்றிய
காரிகையாய்...
என் நாட்டில் பறக்கும்
தேசியக்கொடியாய்
இருப்பவள் நீதான்!

என்னுள் பூத்திருக்கும்
வாடாமலராய்...
என்னைக்கூட அழகாக்கிய
அரிதாரமாய்
இருப்பவள் நீதான்!

என் தமிழ்மண்ணின்
தங்கத்தாரகையாய்...
என்வானில் குளிரும்
நிலவாய்
இருப்பவள் நீதான்!

என் இடப்பக்க
இதயமாய்
எனக்கு உயிர்கொடுக்கும்
சுவாசமாய்
இருப்பவள் நீதான்!

இத்தனை மாற்றங்களும்
உனக்கு புரியும்வரை
என்னுள் மனப்போராட்டம்!

என்னுள் மனப்போராட்டம்!
இன்னும்... இன்னும்...
என்னுள் மனப்போராட்டம்!
மூன்றெழுத்து கடவுளால்தான்!!

காதல் படுத்தும் பாடு!

கூடுவிட்டு கூடுபாய்பவன்
மந்திரவாதி மட்டுமல்ல...
நானும்தான்!
என்உடல் இங்கு..
உயிர் உன்னைச்சுற்றி...

புசிக்கும்போதும்
சிரிக்கிறேன் நான்!
உன்னை நினைத்துக்கொண்டே...
என் தாய்கூட என்னை
விநோதமாய்த்தான் பார்க்கிறாள்!!

நீ அரசியல்வாதியாகத்தான்
இருப்பாய்!
எட்டுத்திசைகளிலும்
உன்னை காவல்காப்பவன்
நானல்லவா...!!

காலங்கள் மாறத்தான்
செய்கின்றன!
அன்று...
பெண்ணை சிறைஎடுத்தவன்
ஆண்!
இன்று...
என்னை விழியால் சிறைஎடுத்தவள்
என் அன்பே...
நீதான்!!

தலைகீழ்த்திருப்பந்தான்!
நம்காதலால்
ஜாதியை ஒழித்துவிடாலமென்று
சாதிக்கத் துடித்திருந்தேன்!
ஜாதி நம்காதலை
சாகடிக்கப் பார்க்கிறதே...
தலைகீழ்த்திருப்பந்தான்!!

எப்போதும் நீ
மகிழ்ச்சியாய்த்தான் இருப்பாய்!
உன்னைநான்
பார்க்கிற பொழுதுகளில்
சிரிக்கிறாய்!
உன்னைநான்
பார்க்காத பொழுதுகளில்
உன் நினைவால் வாடி
மனதுக்குள் அழுபவன்
நான்தானே...!
எப்போதும் நீ
மகிழ்ச்சியாய்த்தான் இருப்பாய்!!

எக்காலமும்
உன்னைப் பிரியக்கூடாது
என்பதற்காகத்தான்
நான் உன் வீட்டிற்கு வந்தபோது
படம்பிடித்துக்கொண்டேன்!
உன் முகத்தை
என் மனத்திரையில்...

கோயிலுக்கே
செல்லாதவன் நான்!
ஆனால்...
என்னுள் குடியிருந்துகொண்டு
என் இதயத்தை
கோயிலாக்கி விட்டாய்!
என்னை
தியானம் செய்யச்சொல்லி
என் உள்ளமே
கோயிலென காட்டிவிட்டாய்!!

சிறுதுளி பெருவெள்ளந்தான்!
உன்னிடத்தில் பேச
சிறுசிறு ஆசைகொண்டேன்!
பேச வாய்ப்பில்லாமல்போக
இன்று...
என்மனதில்
பெருவெள்ளந்தான்!!

அடிக்கடி
கோபம் கொள்பவன்
முட்டாள்!
நான்
முட்டாள் இல்லைதான் போலும்!
உன்மேல்
கோபப்படாமல்தானே
இருக்கிறேன்!
நான் முட்டாள் இல்லைதான்
போலும்!!

அன்று
தத்தித்தத்தி
நடைபழகினேன்
என்தாயால்!
இன்று...
தத்தளிக்கிறது என்மனம்
உன்னால்...!!

தவமிருந்து
சாகாவரம் வேண்டுமென்று
கேட்பேன்!
எனக்கு அல்ல...
என்னவளே
உனக்குத்தான்!!

என்வீட்டில்
'அடங்காப்பிள்ளை' என
பெயரெடுத்தவன் நான்!
என்னவளே...
உன்னைப்பார்த்ததும்
அடங்கித்தான் போகிறேன்
பெட்டிப்பாம்பாய்!!

தமிழும் காதலும்
ஒன்றுதான்!
என்தாய்
எனக்குக் கொடுத்தது
தமிழ்!
நீ
எனக்குக் கொடுத்தது
காதல்!
என்னைப் பொறுத்தவரை
இரண்டும் ஒன்றுதான்!!

உன்னைப் பார்த்து பேச
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறேன்!
ஆனால்...
உனக்கு தனியேயும்
எனக்கு தனியேயும்
கிடைக்கின்ற தனிமை
நம்மிருவருக்கும் சேர்த்து
கிடைக்காமலே போனதனால்
உருகிக் கொண்டுதானிருக்கிறது
என்னுள்ளம்!!

என்காதலை சொல்லிவிட்டு
செத்துவிடலாம் என்றுதான்
நினைத்திருந்தேன்!
உன்னிடத்தில்...
என்சாவால்
உன்மீது பழிவிழாமலிருக்கத்தான்
நடமாடுகிறேன் நடைபிணமாய்...!!

நான் செத்தபின்
என்னுடலை எரிக்கவேண்டாம்!
புதைத்துவிடச்சொல்
என்காதலி!
என்னை எரியூட்டும்
வெப்பங்கூட
உன்னை தாக்காதிருக்கட்டும்!!

Thursday, May 20, 2010

என் தங்கையே!

என் தங்கச்சிப் பாப்பா சோபனாவுக்காக எழுதிய கவிதை.

என் தாய் வயிற்றில் பிறந்த
தங்கமங்கை
என்தங்கை!

என்வயிற்றில் பிறவாத்
தங்கத்தாரகை
என்தங்கை!

சிறுவயதில்
சிறுசிறு சண்டைகள்!

துவக்கிவைக்க
தூபம் போடுபவன் நான்!
பத்து நிமிடத்தில்
பணிந்துவிடுபவனும்
நான்தான்!
என்னை மன்னித்துவிடும்
மகாராணியும் நீதான்!
மழலை வயதில்
மன்னிக்கும் மனப்பக்குவம்
எப்படி வந்தது உனக்கு?!!

கொடி அசைந்தாலே
தாங்கமாட்டாய் நீ! - நான்
அடி கொடுத்ததை
எப்படித்தாங்கினாய்?!!

அன்று
உன்னை ஏமாற்றி
உணவு பறித்து
உண்டேன் நான்!
இன்று...
உண்ணமுடியவில்லை
உறங்கமுடியவில்லை
உன்நினைவால்...!!

சிறுபிள்ளை என்றாலும்
என்னைவிட
சிந்திக்கத் தெரிந்தவள்
நீதான்!!

நான் தடுமாறி விழுந்தபோதுகூட
என்னை தாங்கிப்பிடித்தாய்
என்தாயாய்!
பேருந்து பயணத்தில் கூட
உன்னை மடியில் கிடத்தினேன்
என்சேயாய்!!

என்னை
தமிழால் தாலாட்டியவள்
நம் தாயின் தாய்!
மழலையால் தாலாட்டியவள்
என்தங்கையே நீதான்!!

மூன்றெழுத்தில்
உன்பெயர் இருந்தாலும்
எனக்கு
மூச்சுக்கொடுப்பவள் நீதானே...!

இருவரும் சந்தித்த
பொழுதுகளில்கூட
என்னைக்கண்டு
மகிழ்ந்தவள் நீ!
ஆனந்தக்கண்ணீரில்
மிதந்தவன் நான்!

என்முகம் வாடியபோது
அழுதவள் நீதான்!
கோமாளி வேஷம் கட்டினேன்!
அழும் நீ சிரிப்பதற்காய்...!

நீ எத்திசையில் இருக்கிறாயோ
அத்திசை நோக்கித்தான்
என்திசை!!

வேண்டுதல்!

என்னுடன் பழகிய என் தோழி பிரியதர்ஷினி பாப்பாவுக்காக நான் எழுதி என்னிடமே வைத்துக்கொண்ட மூன்றாவது கவிதை.

உன் தொலைபேசிக்குரல்வரம்
எப்போதும் வேண்டும் எனக்கு!
என் சிறுசிறு தவறுகள்
இனிவேண்டாம் உனக்கு!!

உன் மழலைப்பேச்சு
எப்போதும் வேண்டும் எனக்கு!
என் கோமாளிப் பேச்சு
இனிவேண்டாம் உனக்கு!!

உன் சிறுசிறு கோபம்
எப்போதும் வேண்டும் எனக்கு!
என் இதயவலியின் தாக்கம்
இனிவேண்டாம் உனக்கு!!

உன்போல் பிஞ்சுமனம் புரியும்குனம்
எப்போதும் வேண்டும் எனக்கு!
உன்வதனம் வாடிய கொடுமை
இனிவேண்டாம் உனக்கு!!

உயிர் உருக்கும் இந்த நட்பு
எப்போதும் வேண்டும் எனக்கு!
உயிர் எடுக்கும் இந்தப் பிரிவு
இனிவேண்டாம் நமக்கு!!

என் தோழியே...

என்னுடன் பழகிய என் தோழி பிரியதர்ஷினி பாப்பாவுக்காக நான் எழுதிக் கொடுத்த முதல் கவிதை.





உன்
மழலைமொழி கேட்டு
தாய்மொழி மறந்தவன்...

உன்
நட்பின் ஆழம்கண்டு
தலைவணங்கியவன்...

உன்
பாசம்கண்டு
உளப் பூரிப்படைந்தவன்...

உன்
தைரியம் கண்டு
அச்சமடைந்தவன்...

உன்
புன்னகை கண்டு
மனதுக்குள் சிரித்தவன்...

உன்
திறமை கண்டு
பாராட்டியவன்...

உன்
சிறுபிள்ளைத்தனம் கண்டு
சினந்தவன்...

உன்
தொலைபேசிக்குரல் கேட்டு
அகமகிழ்ந்தவன்...

உன்
'நீ யார்?' கேட்டு
மனம் வெதும்பியவன்...
நான்தான்!

என் தோழியே...
ஏனிந்த கோபம்?
நீ கேட்டால் 
நான் என் உயிர்தர மாட்டேனோ...!!

Wednesday, May 19, 2010

உன்னை...

உன்னை 'காற்று' என்றேன்!
என் இதயத்தை
வேரோடு சாய்ப்பவளாகத்தான்
இருக்கிறாய்!

உன்னை 'மழை' என்றேன்!
என்னை
வெள்ளத்தால் அழிப்பவளாய்த்தான்
இருக்கிறாய்!

உன்னை 'கடல்' என்றேன்!
சுனாமியாய் தாக்கிக்கொண்டுதான்
இருக்கிறாய்!

உன்னை 'குயில்' என்றேன்!
முகம் காட்ட மறுப்பவளாய்த்தான்
இருக்கிறாய்!

உன்னை 'வான்மதி' என்றேன்!
தொடமுடியாத தூரத்தில்தான்
இருக்கிறாய்!

உன்னை 'கவிதை' என்றேன்!
வார்த்தைகளை மறைப்பவளாய்த்தான்
இருக்கிறாய்!

உன்னை 'என்காதலி' என்பேன்!
என்ன செய்வதாய்
இருக்கிறாய்?

Sunday, May 16, 2010

பரிசு!

என் கவிதைக்குப் பரிசு
உன் கவனம் போதும்!

முட்களை நீக்கிவிட்டு
என்னுள்
ரோஜா மலராய் மலராய்
மலர்ந்து
என்னைக்கூட
மணமவீசச் செய்பவள் நீ!!

கண்களை பிடுங்கிக் கொண்டு
என்னுடன்
கனவைக் கொடுத்துவிட்டு
என் தூக்கத்தையும்
கெடுப்பவள் நீ!!

பசியைப் பறித்துக்கொண்டு
எனக்கு
உணவைக் கொடுத்துவிட்டு
புசிக்கச் சொல்லி
சிரிப்பவள் நீ!!

சிணுங்கல் சிரிப்பை எடுத்துக்கொண்டு
எனக்கு
சிறைவிலங்கை கொடுத்துவிட்டு
என்னைக்கூட
சிதிலமடையச் செய்தவள் நீ!!

இந்தக் கவிதைக்குப் பரிசு...
உன் விழியில் கசியும்
ஒரு சொட்டுக் கண்ணீர் போதும்!

இந்தக் கவிதைக்குப் பரிசு...
உன் உள்ளத்தில்
என்மீது காதல் போதும்!!