Thursday, June 24, 2010

குயில்!

இயற்கை வானொலியில் 
 இசையின்றி பாடும் பாடகி!!

தமிழர் திருநாள்!

காலையில் முகம்மலர
ஏழையின் அகம்குளிர
ஜாதிமத பேதமின்றி
சங்கமிக்கட்டும் சகலமனங்கள்!
தைவரவால்
தித்திக்கட்டும் தைமாதங்கள்!
எத்திக்கும் பரவட்டும்
தமிழனின் நற்குணங்கள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 14-01-2006

2. நம்மால் முடியும் தம்பி – 01-01-2008

3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

4. இராணி - 15-01-2012

Wednesday, June 23, 2010

குடியரசை போற்றுவோம்!

மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!

விடுதலை இந்தியாவில்
விடியலைத் தந்தது
குடியரசு!

பள்ளத்தில் வாழ்ந்தவர் சிலர்!
வெள்ளத்தில் மிதந்தவர் சிலர்! - அனைவரின்
உள்ளத்தைச் சமப்படுத்தியது
குடியரசு!!

சுதந்திரம் அடைந்தாலும்
தந்திரமாய் நுழைந்தது ஜாதி! - இந்தியாவில்
சுதந்திரமாய் சுற்றித்திரிகிறது ஜாதி!! - மானுடத்தை
மந்திரம் போட்டு மரிக்கவைக்கிறது மதம்! - இந்தியனை
எந்திரமாய் ஓட வைக்கிறது தீவிரவாதம்!!

இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்! - நம்தேசக்
கொடிதனை ஏற்றுவோம்!!

மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. மூன்றாம்கோணம் (இணைய இதழ்) – 26-01-2012

இளைஞர்கள் தினம்!

இலட்சியக் கதவுகளை
இரும்புக்கரம் கொண்டு திறந்தால்
தீப்பொறி விழிகளில்
திருப்பூர்குமரன் குதிப்பான்!
சாந்தமுள்ள மனத்தில்
காந்தி கண்விழிப்பான்!
போராட்ட குணத்தில்
நேதாஜி வாழ்வான்!
நம்பிக்கை பூமியில்
நரேந்திரனும் பிறப்பான்!
விவேகமுள்ள இளைஞனும்
விவேகானந்தனாய் மாறுவான்!

எம்மிளைஞனின் உள்ளம்!
இதில் நாளும் அன்புவெள்ளம்!!
இளைஞர்படை தோற்கின்
எப்படி வெல்லும்??!!
எதிர்கால இந்தியா
இளைஞன்பேர் சொல்லும்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 20-02-2006

2. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

கொடிகாத்த குமரன்!

வந்தே மாதரம்
வளர்க பாரதமென்று
இறுமாப்புடன் கொடியைப் பிடித்து...
இந்தியனுக்கு விடியலைத்தந்து...
அந்நியனால் தடியடிபட்டும்...
விடாமல் பிடித்தும் - கொடியை
விழாமல் பிடித்தும் - மண்ணில்
உதிரம் உதிர உயிர் நீத்தவன்!

திருப்பூர்குமரனின்
திருவுடல் சாய்ந்தாலும்
திருந்திய இந்தியாவில் - நம்
தேசக்கொடி திக்கெட்டும் பறக்கிறது!

கொடிதனை ஏற்றுவோம்! - தேசக்
கொடிதனை ஏற்றுவோம்! - மனித
மதங்களை தூற்றுவோம்! - குமரனின்
கொள்கைகளை போற்றுவோம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தினத்தந்தி (மதுரை பதிப்பகம்) – 13-01-2006

2. தினத்தந்தி (சென்னை பதிப்பகம்) – 22-01-2007

3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

முகவரி!

பெண்ணிற்கு தாய்மை முகவரி! - இம்
மண்ணிற்கு உழவு முகவரி!!
மழைக்கு முகில் முகவரி! - கற்
சிலைக்கு உளி முகவரி!!
பயத்திற்கு மரணம் முகவரி!
வீரத்திற்கு தமிழ் முகவரி!!
மரத்திற்கு ஆணிவேர் முகவரி! - மனிதக்
கரத்திற்கு மனிதநேயம் முகவரி!!
கனவிற்கு தூக்கம் முகவரி! - தினம்தினம்
நனவிற்கு முயற்சி முகவரி!!
வெற்றிக்கு முதல்தோல்வி முகவரி! - புதுச்
சிற்பிக்கு நம்பி(க்)கை முகவரி!!
கடலுக்கு அலை முகவரி! - என்
உடலுக்கு தமிழ்நாடு முகவரி!
பயிருக்கு அறுவடை முகவரி! - என்
உயிருக்கு கண்ணீர்தானா முகவரி?

மகாத்மாவை நினைத்து...

குஜராத்தில் பிறந்து - தமிழ்க்
குமரிவரை சென்று திரும்பியவன்!
சாத்திரங்கள்பல கற்றுவிட்டு - அந்நியனின்
நித்திரையைக் கெடுத்தவன்!
தண்டியாத்திரை சென்று - இந்தியனை
கண்டித்தவனை தண்டித்தவன்!
தவழும் குழந்தைகலால்கூட
தாத்தா என்றழைக்கப்படுபவன்!
தமிழ்க்குடிமகன்காலும்
தேசத்தந்தை என்றழைக்கப்படுபவன்!
கந்தையை உடுத்திக்கொண்டு - நம்
சிந்தையில் என்றென்றும் நிற்பவன்!
பஞ்சுநூல் துணியணிந்து - நம்
நெஞ்சமெங்கும் நிறைந்தவன்!
அகிம்சைகளால் அடிகொடுத்து - அந்நியனுக்கு
இம்சைகளை அள்ளிக்கொடுத்தவன்!
கைத்தறியை கையிலேந்தி - நெஞ்சமெங்கும்
அன்புநெறியை நிறைத்தவன்!
இராட்டையை சுழற்றிக்கொண்டு - அகிம்சையால்
சாட்டையடி கொடுத்தவன்! - அந்நியனை
வேட்டையாடி விரட்டியவன்!!
மிதவாதத்தை ஆதரித்து - அன்றே
மதவாதத்தை எதிர்த்தவன்!
நிறப்பிரிவை எதிர்த்து - தென்னாப்பிரிக்காவில்
குரலுயர்த்தி அமர்ந்தவன்!
சுதந்திரம் அடைந்தபின்
குண்டடிபட்டிறந்தவன்!
காலங்கள் பல ஆனாலும்
காலங்காலமாய் காலமாகாதவன்!
இந்திய நாணயத்தில் வாழ்ந்து
அந்நியனுக்கு நாணயத்தை புகட்டுபவன்!
இறைத்தூதன் இயேசுவை
இன்னுமொருமுறை நினைவுபடுத்தியவன்!

காந்தியைப் பற்றி பாடுவோம்! - மனச்
சாந்தியை நாளும் தேடுவோம்!
அகிம்சையை போற்றுவோம்! - மண்ணுலகில்
அன்புஒளியை ஏற்றுவோம்!
ஆத்மராகம் பாடுவோம்! - என்றென்றும்
மகாத்மாவை போற்றுவோம்!!

Friday, June 18, 2010

உன் அழகு!

மின்னல்போன்ற பார்வை!
கன்னல்மொழிப் பேச்சு!
ஜன்னலோரக் கொஞ்சல்!
பின்னலிட்ட கூந்தல்!
முன்னால் போன நடை! - அவள்
பின்னால் இழுக்கும் இடை! - பேரும்
இன்னலுடன் நான்
உன்னழகை வர்ணித்தபடியே...

என் நிலை!

என்னில்
உன்பிம்பம் விழுந்தது! - என்
கண்ணில் ஊசி பாய்ந்தது! - இம்
மண்ணில் நான்
நடைபிணமாய் வாழ்கிறேன்!!

என் காதலி!

சிரித்த முகம்! - என்மனம்
பறித்த அகம் கொண்டவள்
என் காதலி!!

செண்பகப்பூ மணம்வீசும்
சேலைத்தலைப்பில் புதுவாசம் கொண்டவள்
என் காதலி!!

முல்லைக்கொடி போன்ற இடை!
மெல்ல அடியெடுத்து வைக்கும் நடை கொண்டவள்
என் காதலி!!

செங்காந்தழ் விரல்கள்!
செர்ரிப்பழ இதழ்கள் கொண்டவள்
என் காதலி!!

விடியாத உதயம்! - என்னிடம்
படியாத இதயம் கொண்டவள்
என் காதலி!!

அரும்பாத மொட்டு! - என்னை
விரும்பாத உள்ளம் கொண்டவள்
என் காதலி!!