Thursday, October 13, 2011

சோகம்

நேற்று நீ
என்னுடைய காதலி
இன்று நீ
வேறு ஒருவனுக்கு மனைவி

எப்போதும்
என் நினைவினில் இருக்கும்!
என் பெயரைப் போலவே
உன் நினைவுகளும்...

தயவுசெய்து
இனி என்னை
நேசிக்கவோ...
என் கவிதைகளை
வாசிக்கவோ
செய்யாதே...!

பச்சிளங்குழந்தை
நீ!
உன் பிஞ்சு உள்ளத்தால்
தாங்கிக் கொள்ள முடியாது!!
என் கண்களில் இருந்தும்
என் கவிதைகளில் இருந்தும்
வழிந்திடும் சோகத்தை...


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

2. வார்ப்பு (இணைய இதழ்) – 12-12-2011

3. இராணிமுத்து - 01-01-2012

Wednesday, October 12, 2011

குறிஞ்சி வெண்பா

அரிதாய்ப் பூக்கும் ஆண்டுக்கொரு மலரே
மறவோம் நாங்கள் மலருனையே – பிரிவோம்
உறவாய் மீண்டும் உருவம் பெற்றுக்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு

அழகான மலருனக்கு ஆணவமே இல்லையடி
உழவன் கழனியிலும் உனைக்காணோம் – தலைவன்
அருகினி லிருக்க அரிதாய்ப் பூக்கும்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு

முருகனுக்கு உகந்ததென்று மலருனையே சொல்வாரே
அரிதாகக் கிடைத்திடுவாய் ஆண்டுக்கொருமுறை - இறைவனாம்
முருகன் அருளோடு மலைகளில் காடுகளில்
குறிஞ்சியே பூத்துக் குலுங்கு


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. பதிவுகள் (இணைய இதழ்) – 25-10-2011

Sunday, October 9, 2011

வெல்லுவோம்!

ஜாதிவெறி கொண்டோரை தூக்கிலேற்றுவோம்!
சமுதாய ஆர்வலரை நாமும்போற்றுவோம்!
நீதிநெறி வழுவாமல் வாழ்ந்துகாட்டுவோம்!
நெஞ்சினிலே அன்புதனை தினமுமேற்றுவோம்!!

இலங்கையிலே தமிழர்வாழ வழிசெய்குவோம்!
இங்கிருந்தே அவர்களுக்கு உதவிசெய்குவோம்!
முழுமனதாய் மனிதநேயம் பரப்பச்செய்குவோம்!
மதங்களையே ஒன்றிணைக்க வழியும்செய்குவோம்!!

ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்ந்திடல்வேண்டும்!
இலவசமாய் கல்வியிங்கு கிடைத்திடல்வேண்டும்!
கோழைகளாய் வாழ்வதற்கு வெட்கிடவேண்டும்!
கோபுரமாய் தலைநிமிர்ந்து நின்றிடல்வேண்டும்!!

வீதிகளில் வன்முறையை நிறுத்திக்கொள்ளுவோம்!
வேரோடு ஜாதிதனை எரித்துக்கொல்லுவோம்!
இதயங்களில் காதல்தனைப் பரப்பச்சொல்லுவோம்!
இளைஞர்களைப் படைதிரட்டி நாமும்வெல்லுவோம்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 03-11-2011

Wednesday, October 5, 2011

துளிப்பா!

பல்லாயிரம் பூசணிக்காய்கள்
உடல்சிதறி
பலியான பரிதாபம்!
ஆயுதபூஜை கொண்டாட்டம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ்நலக்கழகம் – 01-12-2011

Monday, October 3, 2011

நீ!

காதல்
தன் மடியில்
தூக்கிவைத்துக் கொஞ்சும்
சிறு குழந்தை!!

Tuesday, September 27, 2011

தாய்மை!

நீண்டதொரு சாலையில்
மிதிவண்டியை இழுத்தபடியே
என்னோடு
பேசிக்கொண்டே நடந்தாய்
நீ!

நாமிருவரும்
தற்காலிகமாய் பிரியவேண்டும்
என்பதை
குறிப்பால் உணர்த்தியது
சாலையின் பிரிவு!

என்னிடம் விடைபெற்றபடியே
சாலையின் வலதுபுறமாய்
அழுத்தினாய் நீ
உன் மிதிவண்டியை!

என் கண்ணைவிட்டு
நீ மறையும்வரை
உன்னை
பதைபதைக்கும் உள்ளத்தோடு
பார்த்துக் கொண்டிருந்தேன்!!
நடைவண்டியை தள்ளிக்கொண்டு
உற்சாகமாய்க் கிளம்பும்
தன் குழந்தை
கீழே விழுந்துவிடக்கூடாது
எனத் தவிக்கும்
தாய் போலவே...

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. திண்ணை (இணைய இதழ்) – 02-10-2011

2. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 13-11-2011

3. வார்ப்பு (இணைய இதழ்) – 12-12-2011

நம்காதல்!

மறுதேர்வெழுத
வந்திருந்தாய் நீ!

தேர்வறைக்கு வெளியே
தேவதை உனைக்காண
தேர்வு முடியும்வரை
காத்திருந்தேன் நான்!

தேர்வெழுதி முடித்தபின்
தேர்வெழுதியதைப் பற்றி
என்னிடம் பேசியபடி
நடந்தாய் நீ!
தேவதையுன் அழகைப்பற்றி
என்னிடம் பேசியபடி
நம்மோடு சேர்ந்து
நடந்தது நம்காதல்!

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 02-10-2011

இறவாக் காதல்!

எனக்கு
நினைவு தெரிந்த
நாட்களுக்கு முன்பிருந்தே
என்தாயை எனக்கு
நன்றாகவே தெரியும்!
கருவறையில் என்னை
பத்துமாதம்
சுமந்து பெற்றவள்
என்பதால்...

என் கண்களுக்கு
நிலவு தெரிந்த
நாட்களுக்கு முன்பிருந்தே
என்தோழி உனை
எனக்கு
நன்றாகவே தெரியும்!
என்மேல்
பலகாலமாய்
காதலுற்றவள்
என்பதால்...

கருவுற்றால் பிறப்பது
குழந்தை!
காதலுற்றால் பிறப்பது
கவிதை!!

கருவில் பிறக்கும்
எல்லோருமே ஓர்நாள்
நிச்சயமாய் இறப்போம்!
நம் காதலில் பிறக்கும்
எந்தக் கவிதையுமே
இறக்கப் போவதில்லை!!
நம் காதலைப் போல...

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. காற்றுவெளி (இலண்டன் இதழ்) – 02-10-2011

Monday, September 26, 2011

நிலவழகி!

எனக்கும்
நம் குழந்தைகளுக்கும்
நிலாச்சோறு
ஊட்டிக்கொண்டிருக்கும்
உன் அழகைப்
பார்த்து இரசிக்க
மேகக் கூட்டங்களை
விலக்கியபடியே
முண்டியடித்துக் கொண்டு
வந்து நிற்கிறது
அந்த நிலா!!

இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 02-10-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011

3. பூவரசி (இணைய இதழ்) – 18-10-2011

மஞ்சள் நிலவு!

மஞ்சள்நிறச் சூரியனை
நீள்வட்டப் பாதையில்
சுற்றிவருகின்றன
கோள்கள்!

மஞ்சள்நிற நிலவான
உன்னை
அழகுவட்டப் பாதையில்
சுற்றிச்சுற்றி வருகிறேன்
நான்!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) – 10-10-2011