Thursday, December 27, 2012

மீசை முறுக்கிய காடு

நூலின் ஆசிரியர்: கவிஞர் வாலிதாசன்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

பொதுவாகவே நான் ஒரு நூலைப் படிக்கும்போது ஒரு வாசகனுடைய மனநிலையிலேயே படிப்பதுண்டு.

‘மீசை முறுக்கிய காடு’ என்ற இந்தக் கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் வாலிதாசன் அவர்கள் பச்சையப்பா கல்லூரியில் முதுகலை தமிழ் படிக்கும் மாணவர். இந்தக் கவிதைநூல் அவருடைய எத்தனையாவது கவிதைநூல் என்ற விபரங்கள் இல்லை. கடந்த 04-11-2012 க்கு முன்னரே இவரும் நானும் முகநூல் கணக்கில் நண்பர்களாக அறிமுகமாகியிருந்தாலும் 04-11-2012 அன்று தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் ஹைக்கூத் திருவிழாவில் நானும் அவரும் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உருவத்தைப் பொறுத்தவரை அவர் கரடுமுரடாகத் தெரிந்தாலும் அவருடைய இந்தக் கவிதைநூலின்வழி மண்ணை நேசிக்கக் கூடிய, இந்த சமூகத்தை நேசிக்கக்கூடிய, ஈழத்தை ஈழவிடுதலையை நேசிக்கக் கூடிய நல்ல மென்மையான மனிதர் தென்படுகிறார்.

இந்தக் கவிதைநூலிலிருந்து முழுக்க முழுக்க மண்வாசனை வீசிக் கொண்டிருக்கிறது. தற்போது என்னுடைய குடும்பம் வசிக்கும் முகவை மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து வந்திருக்கிறார்.

மதுரை, இராமநாதபுர வட்டார வழக்கு வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

தன்னுடைய முதல் கவிதை மூலமாக இலக்கியத்தின் இன்றைய நிலை குறித்து ஆதங்கப்படுகிறார். இன்றைய அவரச உலகில் தாய் தன் குழந்தையை பள்ளிக்கு வழியனுப்பும் அவசரத்தையும் அக்குழந்தையின் மனநிலையையும் ஒரு கவிதையில் படம்பிடித்துக் காட்டுகிறார். விறகு வெட்டி வீடுவீட்டுக்கு சாப்பாடு வாங்கிச் சாப்பிடும் ஒரு பெண்ணின் துன்பத்தை, மழைபெய்து ஒழுகும் ஓட்டைக் குடிசையில் வசிக்கும் ஏழைகளின் துன்பத்தை, குப்பையோடு குப்பையாய்க் கிடக்கும் ஒரு பிச்சைக்காரனின் அவலத்தை, ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ‘என்னை ஏன் பெத்தம்மா?’ என்று கேட்கும் தன் மகனிடம் ‘நீ பிறக்க ஏறாத கோவில் இல்ல, சுத்தாத சாமி இல்ல, போகாத மருத்துவர் இல்ல’ என்று அவனைத் தூக்கிக் கொஞ்சும் அம்மாவின் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்து அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்த அந்த மகனின் பாசப்பிணைப்பை, வெளிநாடு சென்று திரும்பி மீண்டும் தன் தாயகத்திற்கே திரும்பிவிடும் பறவைகளின் மூலம் நாட்டுப்பற்றை, குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் தாய்மார்கள் ஓய்வின்றிச் செய்யும் வேலைகளைப் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் நாய் என முத்தாய்ப்பாய், மறந்துபோன கிராமத்தின் கிராம உறவுகளின் உன்னதங்களை உணர்ந்து ஏங்கும் ஏக்கம், குடிகாரனின் குடும்பத்தில் பிற குடும்ப உறுப்பினர்கள் படும் இன்னல்களை, வறுமையின் காரணமாகவும் குடும்பச் சூழல் காரணமாகவும் பள்ளிக்குச் சென்ற பெண் படிப்பை நிறுத்திவிட்டு பஞ்சாலைக்குச் செல்லும் நிலையை என கவிதைகள் நமக்கு மண்வாசனையை அள்ளித் தெளிக்கின்றன.

மலடிப்பட்டம் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயை மூங்கிலாகவும் பிறந்த குழந்தையை புல்லாங்குழலாகவும் உருவகப் படுத்திய விதம் அருமை. இதுபோன்ற உவமைக் கவிதைகளை அதிகம் எழுதுங்கள் தோழர்.

‘புல்லாங்குழலை ஈன்ற
மூங்கில்க் காடானவள்
மூச்சடக்கிக் கிடந்தாள் மயக்கத்தில்’

அனைவர் மனதிலும் பதியும் வரிகள். இந்த ‘அறைக்குள் அடைபட்ட புல்லாங்குழல்’ தாய்மையின் சிறப்பை மேன்மையை உணர்த்துகிறது.

வறுமையில் வாடும் குடும்பத்தில் அடிக்கடிச் சண்டையிடும் தாய் தந்தைக்கு மத்தியில் பிள்ளைகள் படும் அல்லல்களோடு வீட்டின் மேல் உள்ள பாசப்பிணைப்பைக் கவிதையாக்கியிருக்கின்ற விதம் அருமை.

‘அதட்டி அதட்டியே
அம்மாக்களின் ஆயுட்காலம்
அருகியே போகிறது’

என்ற வரிகள் அப்பாக்களால் அதட்டப்படும் இன்றைய தாய்மார்களின் நிலையைக் காட்டுகிறது.

பெரும் வணிக நிறுவனங்களின் குள்ளநரித் தனத்தையும், பதவி நாற்காலியைப் பிடிக்க ஊழல்வாதிகள் செய்யும் துரோகங்களையும், வணிகமாகிப் போன கல்வியையும், கும்பகோணத் தீவிபத்தைப் பற்றி, மக்களாட்சியின் இழிநிலையைப் பற்றி, அதிகார வர்க்கங்கள் செய்யும் கொடுமைகளை என சமூக அவலங்களை நாடிபிடித்துக் காட்டுகிறார்.

‘மீசை முறுக்கிய காடு’ என்ற கவிதையில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் தாக்கத்தை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

அணில் கடித்துதிர்த்த நாவல் பழங்களைப் பொறுக்கும் போது உள்ள காட்சிகளைக் கவிதைகள் மூலமாக கண்முன் நிறுத்துகிறார் கவிஞர்.

படிப்பறிவே இல்லாத தலைமுறையிலிருந்து பிறந்து தேர்வில் அடிக்கடி தோல்வி அடைந்து இறுதித் தேர்வில் தேர்ச்சியடையத் தூண்டுகோலாகும் படிப்பறிவில்லாத பாசத்தாயின் நெகிழ்ச்சி அருமை.

‘செல்வமில்லாதவனுக்கு
அவிழாத வேசிமகளின்
நூலாடை போல’

என்று அரசு அலுவலகக் கோப்புகளைப் பற்றியும் ஊழல், கையூட்டு ஆகியவற்றைப் பற்றியும் நரம்பு புடைக்கக் கவிதைகளின் ஊடாக உரக்கக் கத்தியிருக்கிறார் கவிஞர்.

ஏழைகளைப் படைக்காதே என இறைவனிடம் ஒரு கவிதையின் மூலம் கோரிக்கை வைக்கிறார் கவிஞர்.

சம்பாதிக்க வெளிநாடு போன ஒருவனின் மனைவி வறுமையின் பிடியில் வாடகை கொடுக்க முடியாமல் அந்த வீட்டு உரிமையாளரிடம் தன் கற்பைப் பறிகொடுத்த பிறகு வெளிநாட்டுப் பணம் வீட்டுக் கதவைத் தட்டுவது அவலத்தின் உச்சம்.

இன்னொரு கவிதையில்

‘ஏழைக்கேற்ற வாழ்வும்
வாழ்வுக்கேற்ற ஏழையும்
வெள்ளத்தனைய மலர்நீட்டம்போல்
ஜனித்துக்கொண்டே உலகில்’

என்ற வரிகள் வேதனைமிகுந்த நிதர்சன உவமை.

குழந்தையை அநாதையாய் விட்டுப்போன தாயைப் பற்றி, ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்கள் செய்த கொடுமைகளை, விபச்சாரியின் மனவலியை, வியர்வை சிந்தும் உழவனின் நிலையை தன்னுடைய கவிதைகளின் ஊடாக விளக்குகிறார் கவிஞர்.

ஜாதிக்கொடுமையைப் பற்றிய ஒரு கவிதையில்

‘கோவில்த் திருவிழாவின் பெயரில் கலவரம்’

என்ற வரியிலும்

‘எதையும் மாற்றி
எதிலும் மாறாத் தமிழன்
வாழ்வு என்று ஜீவிக்கப்போகிறது?’

என்ற வரிகளிலும் நம் தமிழ்த்தேசிய உறவுகளின் மீதான ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் கவிஞர்.

வெற்றிலைப்பாக்கு உண்ணும் கிராமத்துப் பாட்டியின் செயல்களை இரசிக்கும் ஒரு குழந்தையாக மாறியிருக்கிறார் கவிஞர்.

வசிக்க இருப்பிடம் இன்றி மரநிழல் தேடியும் உணவு தேடியும் அலையும் கிராமத்துப் பாட்டியின் நிலையை, புயலின் கோரமுகத்தை, பாட்டிக்கும் அம்மாவுக்கும் உள்ள பாசப்பிணைப்பை, தனக்கென செங்கற்களால் வீடு கட்டிக் கொண்டிருக்கும் இயேசு சிங்களக் கழுகுகளுக்குப் பயந்து கட்டி முடிக்கப்படாத வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொள்ளும் நிலையை, தமிழ்நாடு என்ற நாட்டிற்குப் பக்கத்தில் உள்ள நாடான இந்தியாவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுவதை, நாகரிக விவாகரத்துப் பற்றி, ஜாதிக்காரர்கள் அனைவரையும் தன்னுடைய உறவினர்களாக நினைப்பது தன்னுடைய மனவியாதி எனச் சொல்லும் வேதனை என கவிதைகளால் பிறரை இந்த சமூகத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறார்.

‘எவனாக இருப்பினும்’ என்ற தன்னுடைய கடைசிக் கவிதையில் ரௌத்திரம் கொள்ளும் ஒரு இளைஞன் தெரிகின்றான். நாகரிகத்தைச் சீர்குலைக்கும் பெண்களை, பெண்களை போதைப் பொருளாகப் பார்க்கும் ஆண்களை, நாட்டின் நலனைச் சீர்குலைக்கும் சக்திகளை என அனைவரையும் பார்த்துச் சொல்கிறார் இப்படி

‘நொக்காளி
எவனாக இருப்பினும்
கண்டந்துண்டமா
வெட்டுவேண்டா’

மீசை அரும்பிய வயதில் இந்தக் கவிதைநூல் ஊடாக மீசையை முறுக்கிக் கொண்டு கம்பீர நடைபோடுகிறார் கவிஞர் வாலிதாசன்.

இன்னும் நிறைய எழுதுங்கள் தோழர். உங்களுக்குள் அதிகப் படியான கோபம், சமுதாய அக்கறை, ஏதோவொரு நெருப்பு உள்ளது. நிறைய எழுதுங்கள். என்னுடைய அன்பின் கனிந்த வாழ்த்துகள்.

மொத்தத்தில், மீசை முறுக்கிய காடு – மண்வாசனை வீசும் கம்பீரம்.

No comments: