Thursday, December 27, 2012

அவளின்று நான் இறந்தேனென்று அர்த்தம்கொள் - நூல் விமர்சனம்

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

இன்றைய நடைமுறை உலகில் காதல் என்பது ஒரு பொழுதுபோக்காக, தற்காலிக போதைப்பொருளாக மலிந்து கிடப்பதற்குக் இன்றைய இளைஞர்களின் காதல் குறித்தான புரிதல் குறைபாடேயன்றி வேறொன்றுமில்லை.

ஒரே மேடையில் ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றும் அந்தச் சுவடே தெரியாமல் இன்னும் இன்னும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் கவிஞர் எழுதிய முழுக்க முழுக்க காதல் உணர்வுகளாலேயே வடிக்கப்பட்ட கவிதைகள் இந்நூலில் உள்ளன.

இன்றைய காதல் எப்படி இருக்கிறது, இன்றைய இளைஞர்கள் சமுதாயம் காதலை எப்படிப் பார்க்கிறது? என ஆங்காங்கே சொல்லிக்கொண்டு போகிறார் கவிஞர்.

தெருவில் நடந்து செல்கையில் காதல், மௌனத்தில் காதல், பார்த்துப் பார்த்தே காதல், கைகுலுக்கிய இறுக்கத்தில் காதல், தனித்தனியே திருமணம் ஆகியும் தத்தமது குடும்பத்தினரை விடுத்து பார்வைகளால் காதல் என காதலை அணுஅணுவாய் இரசித்தும் ருசித்தும் நகர்த்திக் கொண்டு போகிறார் கவிஞர்.

‘வெளியிலிருந்து கதவை
உள்ளே திறக்கும்போதும்
உள்ளிருந்து கதவை
வெளியே திறக்கும்போதும்
இடித்துக் கொள்ளும்
யாரோ ஒருவரில்
என்றேனும் ஒருநாள்
நீயாக இருக்கமாட்டாயா?’

என்ற வரிகள் காதலின் வலியை ஏக்கத்தை உணர்த்துகிறது.

‘காலம் காலமாகத்தான்
காதலிக்கிறார்கள்
நீயும் நானும் மட்டும்
எப்படியோ
எதிரியாகிப் போனோம்
ஜாதிமதப் பேய்களுக்கு’

என்ற வரிகளில் ஜாதிக்கொடுமையின் அழுத்தம் தெரிகிறது.

‘பைத்தியமென்று
சொன்னாலும் சொல்வார்கள்
சொல்லட்டுமே,
இல்லாவிட்டாலென்ன
சேர்த்தாவைக்குமிந்த சமூகம்?’

என்ற வரிகளில் எள்ளல் சுவையோடு சமுதாயச் சாடலும் இருக்கிறது. உண்மைதான் கவிஞரே.

தன் காதலி சுவாசிக்கும் காற்றை சபித்துவிட்டு காற்றை தானாக மாறவேண்டும் என்று விரும்புகிறார் கவிஞர்.

ஐம்பெரும் பூதங்களோடு சேர்த்து ஆறாவது பூதமாக காதலைச் சேர்ப்பது புதுமையான உவமையாகத் தெரிகிறது கவிஞரே.

தன் காதலி மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் அழகை, அவள் கண்ணாடியை மேலுயர்த்தும்போதும் நெற்றியில் விழுந்த முடியை தள்ளிவிடும் அழகை என இரசனையோடு எழுதியிருக்கிறார்.

தனக்குத் திருமணமாகியும் திருமணமே செய்துகொள்ளாத தன்னுடைய காதலி தன்னைப்பார்க்க தன் வீட்டிற்கு வந்து தன் மனைவியோடும் குழந்தைகளும் அம்மாவோடும் பேசிவிட்டு வாசற்படி கடந்து போகையில் தன் கையில் திணித்துவிட்டுப் போன காகிதத்தில் மரணம் என்று எழுதி வைத்திருப்பதைப் பார்த்த நிமிடத்தில் தெருவில் மரணித்து வீழ்ந்து கிடக்கும் காதலி தனக்கு மரணத்தின் மீதியைத் தருவதாகச் சொல்வது வேதனையின் உச்சம்.

பூக்கடைக்கு வந்த தன் காதலி தான் விரும்பும் பூ விரும்பும் விலையில் வாங்குவதற்காக ஒவ்வொரு கதையாகக் கேட்டுக் கொண்டே செல்கிறார். கவிஞர் சொல்கிறார் சிறப்பாக.

‘நீ பேசும் விலையும்
கேட்கும் பூவும்
சற்று நேரத்திற்கு
கிடைக்காமல்தான் போகட்டுமே’

மனமொன்றிக் காதலித்தால் வானத்தையும் பூமியையும் ஒன்றாக்கி விடலாம் என்று காதலின் மேன்மையை அழகாக எடுத்துரைக்கிறார் கவிஞர்.

தன் எழுத்துக்களால் இக்கவிதை நூல்வழி காதலுக்கு அழகு சேர்த்த கவிஞர் வித்யாசாகர் அண்ணாவுக்கு என் நன்றியும் இதயங்கனிந்த வாழ்த்துகளும்.

மொத்தத்தில், அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம்கொள் – சமூக அக்கறையுடன் கூடிய காதல் கவிதைகளின் அணிவகுப்பு.

1 comment:

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

காதலின் புரிதல் மனதைத் தொட்டளவைப் போலவே புத்தியையும் எட்டுமிடம் சமூகம் தன்னை மொத்தத்திற்குமாய் திருத்திக் கொள்ளும் என்பது எனது எதிர்பார்ப்பு. அதையொட்டியே எனது இந்த முதல் காதல் படைப்பும், தற்போது வெளியாகவுள்ள "பறக்க ஒரு சிறகு கொடு" கவிதைத் தொகுப்பும் எழுதப் பட்டது. எழுதியதன் நோக்கத்தை புரிந்துப் பகிர்ந்த அன்புத் தம்பிக்கு நன்றியும் வணக்கமும்..

வித்யாசாகர்