Showing posts with label நூல் விமர்சனங்கள் (பாகம் - 1). Show all posts
Showing posts with label நூல் விமர்சனங்கள் (பாகம் - 1). Show all posts

Sunday, February 9, 2014

சுதந்திரன் கவிதைகள் (தமிழீழம் சார்ந்த மரபுக் கவிதைகள்) - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: சுதந்திரன் கவிதைகள்

நூலின் வகை: தமிழீழம் சார்ந்த மரபுக் கவிதைகள்

நூலின் ஆசிரியர்: மரபுப் பாவலர் சுதந்திரன்

பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்



வரலாறு காணாத எத்தனையோ உயிரிழப்புகளையும் சொல்லொணாத் துன்பங்களையும் தொடர்ந்து அனுபவித்து வரும் எமது தாய்நிலமான ஈழம் சார்ந்த மரபுப் பாவகைகள் அடங்கிய கவிதைத் தொகுப்பு இந்த 'சுதந்திரன் கவிதைகள்'.

ஈழத்துக் கவிஞர். முல்லை அமுதன் (இலண்டன்) அவர்களின் வாழ்த்துரையோடு ௨௦௰ ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்திருக்கிறது.

வயதில் மூத்தவரான ஈழத்து மரபுப் பாவலர் திரு. சுதந்திரன் தன்னுடைய என்னுரையை, உரைநடையாய் எழுதாமல் அதனையும் ஒரு மரபுப் பாவாகவே யாத்துள்ளார்.

ஒரு காலத்தில் குமரிக்கண்டம் அல்லது இலெமூரியா கண்டம் தொடங்கி, ஈழத்தமிழர் படும் துன்பங்களை, வேதனைகளை, அரசியல் சூழ்ச்சிகளை, தமிழர்களின் அறியாமையை, பிற இனத்தவரால் தமிழினம் சிதைவுற்றுக் கொண்டிருப்பதை, வாழ்வியல் சார்ந்த உண்மைகளை, மனித நேயத்தை என ஒவ்வொரு மரபுப் பாவையும் ஆழ்ந்து நோக்கும்போது தமிழ் மண் மீதும் சிதைவுற்றுக் கொண்டிருக்கும் தமிழினத்தின் மீதும் கொண்ட அளவு கடந்த அன்பும் மனக்குமுறல்களும் ஓலக்குரலாக ஒலிக்க, உணர்வுப் பூர்வமாக மரபுப் பாக்களாக யாத்துள்ளார் இந்நூலின் வாயிலாக.

'தேய்வே' என்ற பாவில்

'இமையமுதல் குமரிவரை
இருந்த தமிழ் அரசும்போய்
அமைவேங்கடம் குமரி
ஆண்டதமிழ் அரசும்போய்
எமது தமிழர் மூவர்
எமைவிட்டும் நீங்கிப்போய்
நமது மூவேந்தர்களும்
நடத்திவந்த போரால்போய்

குமரி தனை கொடுங் கடலார்
கொண்ட பேரழிவில் போய்
நமது தமிழர் ஆண்ட
நாவலந் தீவதுவும் போய்
அமைத்தாண்ட அழகுநகர்
அரப்பா அதுவும் போய்
எமைவேள்வி-மந்திரத்தால்
இன்றாள்வ தாரியமே

இலங்கை என-ஈழம் என
இயக்கர் என-நாகர் என
துலங்கி நின்ற பழந்தீவும்
தொடர்ந்த வங்காளியரால்
கலங்கிப் பழந்தமிழர்
கரைந்துமே போர்அழிந்து
நலங்காண வழியின்றி
நசிவதுவும் வரலாறே'

என்று முடிக்கும்போது இதயம் கனக்கிறது.

'காண்போம்' என்ற முதல் பாவில்

'மண்ணாகி இழந்தே யாவும் மனம்உடை அகதியாய்
விண் பார்த்த வண்ணம் ஊரை விட்டெலா இடமும்சுற்றி'

'இருபதாண்டான போரில் எண்பதாயிரம்பேர் செத்தும்
பெரும்பொருள்-வீடு-தோட்டம் பேரழிவானபோதும்
ஒருபயன் இல்லை யென்றால... உலகமே என்னசெல்வாய்?'

என்றே தமிழினம் படும் துயரங்களையும் நம் தாய்நிலம் நமக்குக் கிடைக்க இத்தனை உயிர்களை இழந்தும் வீடு, பொருள், நிம்மதி இழந்தும் பயனில்லாமல் நியாயம், நீதி மறுக்கப் படுவதை பாடியுள்ளார்.

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்ற உண்மையைச் சொல்ல, 'அருகினோம்-எதிர்த்தோம்' என்ற அவரின் பாவில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளைப் பாருங்கள்.

'அருகினோம்-எதிர்த்தோம், ஒன்றும் அரங்கினில் ஏறவில்லை'

ஒற்றுமை இல்லாமல் எதனைச் செய்தாலும் தோல்வியில்தான் முடியும் என்ற உண்மையை சொல்லியுள்ளார்.

'அவரவர் உரிமைநாட்டில் அவரவர்க்குண்டு- அஃதை
எவருமே எடுப்பதில்லை எடுத்தவர் கொடுத்ததில்லை'

என்றே தமிழீழ நாட்டில் நடக்கின்ற மனித உரிமை மீறல்களை சாடியுள்ளார்.

'பராசக்தி' மரபுப் பாவில்

'காணிநிலம் போச்சே - பராசக்தி
காணிநிலம் போச்சே'

என்று தொடங்கி...

'சம்பூர் குடும்பிமலை-வாகரை
தமிழர் தாயகங்கள்
வம்பர் செயல் களினால்-பழையநம்
வாழ்வு பறந்ததடி'

என்றே தொடர்ந்து...

'கும்பி கொதிக்குதடி-பராசக்தி
கொஞ்சம் இரங்காயோ
தமிபியர்க் கூட்டமளி-இல்லையேல்
சமதைத் தீர்வினைத்தா

தும்பிலும் உள்ளே நீ- பராசக்தி
தூணிலும் உள்ளாய் நீ
நம்பிக் கிடப்போரை-பராசக்தி
நட்டார்ரிலோ விடுவாய்?'

என்றே பராசக்தியை வேண்டுகிறார்.

'தொடரட்டும்' என்ற பாவின் கீழ்க்கண்ட வரிகளை படித்துமுடிக்கும்போது உடல்முழுதும் ஏதோவொரு உணர்வு உட்புகுந்து முறுக்கேறுகிறது.

'திரையார் தொடரட்டும் தில்லி அசையட்டும்
உரைகள் செயலாகி உலுப்பட்டும் கொடுங்கோலை
இரைதேடும் எட்டப்பர் இலைகளினை நக்கட்டும்
வரையட்டும் கோலாளார் வாழ்தமிழர் ஏடுகளை'

மனித நேயத்தைச் சொல்லும்போது உள்ளத்தை மதிக்காமல் என்புதோல் உடலை வைத்து மதிப்பளிக்கும் உலகத்திற்கு

'என்பை வைத்தே மாந்தர்தம்மை எடைகணிப்பதா?
தம்பி எடை கணிப்பதா?'

என்றே கேள்வி எழுப்பியுள்ளார்.

வால்மீகி போல் கம்பனும் இராவணனை தரக்குறைவாய் பாடியதால் கம்பனின் பாடல்கள் வாயிலாக உண்மையான வரலாற்றை அறிய முடியாமல் இராமகுலத்தை உயர்த்தியே பேசும்படி ஆனதை,

'புலவர் குழந்தை எனும்
புண்ணியவான் காவியத்தை
நல மாகத் தந்தத்தினால்
நாம் வாழ்ந்தோம் இராவணனால்'

என்றே பாடியுள்ளார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு மரபுப் பாவையும் ஆழமாய் வாசிக்கும்போதும் தமிழனின் ஒற்றுமையின்மையையும் தமது வரலாறு குறித்த தெளிவான புரிதல் இல்லை என்பதையும் ஏக்கத்தோடும் வேதனையோடும் பாடி வைத்திருக்கிறார்.

ஈழ விடுதலையை விரும்பும் ஒவ்வொரு தமிழனும் ஆர்வமாய் வாசிக்க வேண்டிய நூல் இது.

Saturday, February 1, 2014

எத்தனையோ பொய்கள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: எத்தனையோ பொய்கள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

('ஒரு பொறியியல் மாணவனின் ஆண்டுக் கட்டணத் தொகை பன்னிரெண்டாயிரமும் நிராதரவாக நின்ற பெண்மணிக்கு பணவுதவி செய்து குவைத்திலிருந்து தாயகம் அனுப்பும் பொருட்டு தொகை எட்டாயிரமும் கொடுத்துதவ வாசகர்களாகிய நீங்களன்றி காரணம் வேறு யாருமல்ல என்பதை முழு நன்றியோடு தெரிவிக்கிறேன்.' என்று இக்கவிதைநூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.)



இக்கவிதை நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளுமே குறுங்கவிதைகளாகவே இடம்பெற்றுள்ளன.

முதல் கவிதையே விதவை படும் அவஸ்தையை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது.

நாம் தமிழர்களாக இருந்துகொண்டு தமிழில் பேசவில்லை என்பதை எவ்வளவு எள்ளல் சுவையோடு சிந்திக்க வைக்கிறார் பாருங்கள்.

'சைக்கிள்...
கார்...
பஸ்...
ஏரோப்ளேன்...
எல்லாம் நிறைய போகின்றன
தமிழனை மிதித்துக் கொண்டு...!'

நம் பண்டைய தமிழகத்தில் வயல்வெளிகளுக்கு களையெடுக்கப் போகும்போதோ, ஏர் ஓட்டச் செல்லும்போதோ சோறு வடித்த நீராத்தண்ணீரோடு வத்தல் மிளகாய், ஊறுகாய் போன்றவற்றை எடுத்துக் கொண்டு போய், மரநிழலில் அமர்ந்து அதனை இரசித்து ருசித்துச் சாப்பிடுவது தனிசுகம். இதெல்லாம் காலப்போக்கில் அழிந்துபோனதை இந்தக் குறுங்கவிதையின்மூலம் உணர்த்துகிறார்.

'ஊறுகாயும்
வத்தல் மிளகாயும்
பிரியாணியில் ஒழிந்துபோனது
விலை ஒரு நூறு.'

தன் குழந்தையை அடித்துவிட்டு தவிக்கும் ஒரு சராசரித் தந்தையாக தவிப்பை வெளிப்படுத்துகிறார் இந்தக் கவிதையில்...

'உன்னை அடித்த
ஒரு அடியின் நுனியில்
சிக்கிக் கொண்டு தவிக்கிறது
என் உயிர்.'

இந்தக் கவிதைநூலினை படிக்கும் வாசகர்கள் அனைவர் மனதிலும் நிச்சயமாகப் பதிந்து போகக் கூடிய அற்புதமான ஒரு காதல் சார்ந்த குறுங்கவிதை.

'காதலுக்கு
எந்த இலக்கணமும்
கற்கவில்லையடி
உன்னைப் பார்த்ததைத் தவிர...'

சாதிக்கொடுமைகளுக்கு சாட்டையடி கொடுக்கிறார்

'மழிக்க மழிக்க
முளைக்கிறது
தாடியும் சாதியும்'

என்ற வரிகளில்...

மனிதம் சார்ந்து புத்தியில் பதியும்படி சொல்கிறார்

'கல்லும் கல்லும் உரசினால்
நெருப்பு வரும்
என்றறிந்த மனிதனுக்கு
கத்தியும் கத்தியும் உரசினால்
மரணம் வருமென்பது உணர்ந்தும்
நீள்கிறது போர்.'

மத ஒற்றுமையை ஒரு குறுங்கவிதையில் மிக நேர்த்தியாகவும் எளிமையாவும் சொல்கிறார்.

'எந்த இதழிலாவது தன்னுடைய படைப்பு பிரசுரமாகாதா?' என்று ஏங்கித் தவிக்கும் ஒரு ஆரம்பநிலை படைப்பாளியை, அவனுடைய படைப்பு எந்தவொரு இதழிலும் வரவில்லை என்றறிந்த போது அவனுடைய தவிப்பையும் ஒரு குறுங்கவிதை உணர்த்துகிறது.

நம்பிக்கை சார்ந்து சில கவிதைகளும், சாதிகளை ஒழிக்க புறப்பட்டு கடைசியில் கட்சிகளை ஒழிக்கும் நிலை வருமோ என்று சிந்திக்க வைக்கும் வரிகளோடு ஒரு கவிதையும், அனைத்துமே இரசிக்கும்படி உள்ள பட்டாம்பூச்சி பற்றிய கவிதைகளும் இந்நூலை அலங்கரிக்கின்றன.

'நிறைய அம்மாக்களுக்குத்
தெரிவதேயில்லை
தன் மகன்களின்
வங்கிக் கணக்கிலிருந்து
வலைப்பூ வரை
அவள்பெயர் தான்
கடவுச்சொல்லென்று...'

என்ற கவிதையை படிக்கும்போது பெரும்பாலான வாசகர்கள் தங்களின் பழைய நினைவுகளை பெருமூச்சோடு நிச்சயம் மீட்டிப் பார்ப்பார்கள்.

மாலை போட்டு விரதம் இருந்து சாமியைக் கண்டேனோ இல்லையோ சாமிக்குள் இருக்கும் மனிதத்தை உணர்ந்ததாக அருமையாக கவிதையில் சொல்லியிருக்கிறார்.

'மிக அன்பும்
ஈர்ப்பும் உள்ள
கணவன் மனைவிக்கிடையே
தோற்றுத்தான் போகின்றன
சில விரதங்களும்
கட்டுப்பாடுகளும்'

என கணவன் மனைவிக்கிடையே உள்ள நெருக்கத்தை, காதலை மென்மையாக சொல்லியிருக்கிறார்.

இன்னும் வேறுவேறு பாடுபொருட்களில் பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன இக்கவிதை நூலில்...

உடைந்த கடவுள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: உடைந்த கடவுள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்



ஈழத்து சகோதரி திருமதி. இரா. முத்து லட்சுமி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.

இப்போதெழுல்லாம் கொள்ளையடிப்பதும் கொலைசெய்வதும், அடுத்தவனின் இயலாமையை பயன்படுத்தி தட்டிப் பறிப்பதும் மலிந்துபோன இந்த உலகத்தில் இவற்றையெல்லாம் கேட்க வந்தால் கடவுளும் உடைந்து போவான் என்றே சிந்தித்திருக்கிறார்.

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றே படித்து வளர்ந்தும் தத்தமது சுயநலத்திற்காக ஆங்காங்கே பிரிவினைவாதத்தையும் கொடூரத்தையும் நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன வெட்டி வீழ்த்த முடியாமல் வளர்ந்து நிற்கும் பல அரசியல் கட்சிகள்.

நம் கண்முன்னே நடக்கும் கொடுமைகளை எதிர்த்து தட்டிக் கேட்கவேண்டிய நம்மில் பலர் ஏனோ எழுதக் கூட, பேசக்கூடத் தயங்குகின்றனர் என்பதே வேதனை கலந்த உண்மை.

உண்மையான கட்சித் தொண்டனைப் பற்றி பேசுகிறது. தொண்டன் கடைசிவரை ஏழையாகவே துயரப்பட்டு சாகிறான். மேல்மட்டத்தில் இருப்பவன் குடிமக்கள் பணத்தில் ஏகபோகமாய் வாழ்ந்து அனுபவித்து சாகிறான். தலைவன், தலைவி என்று சொல்ல அருகதையற்றவர்களின் புகைப்படங்கள் எல்லாம் அந்தத் தொண்டன் வீட்டு வழிபாட்டு அறையில் இருப்பதை சாடுகிறார் இந்தக் கவிதைநூலின் முதல் கவிதை வழியே.

மனிதம் சார்ந்தே பல கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழிப்பற்று சார்ந்து சில கவிதைகள் சாட்டையடியாகவே வந்து விழுகின்றன.

'என்றோ
பல ஆண்டுகளாய் பூமியில்
புதைந்து கிடக்கிறது
தங்கம்.
தோண்டியெடுத்தவன்
தானே செய்ததாகச் சொன்னான்.
செம்மொழி!'

என்கிறார்.

'ஒரு கிலோ கத்தரிக்காய்
இரண்டு ரூபாய்.
இரண்டு கிலோ உப்பு
ஒரு ரூபாய்.
ஒரு கிலோ பருப்பு
பத்து ரூபாய்.
பத்து கிலோ அரிசி
நானூறு ரூபா என்று
கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும்
வாங்குவோருக்கும்
கிலோ என்பது
தமிழ் வார்த்தையென்றே
தெரியப்பட்டுள்ளது'

என்ற வரிகளிலும்

'என்ன அருமையாய்
ஆங்கிலம் பேசுகிறாள்
ட்டமில் மட்டும் தகராறாம்

சிறுக்கியை
தமிழச்சியென்று சொல்லிக்கொள்ள
ஒருவேளை
நான் இறந்தபிறகு என் உதடுகள்
அசைந்து கொடுக்கலாம்
அசையாமலும் போகலாம்'

போன்ற வரிகளில் வேதனை கலந்த கோபம் தெரிகிறது.

'உடைந்த கடவுள்', 'விபத்து', 'சில அப்பாக்கள் உறங்குவதில்லை', 'உலகமும் ஒரு சின்ன எச்சரிக்கையும்', 'சிவப்பு இரத்தத்தின் கருப்பு ஜூலை', 'வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?', 'வாழ்க்கையை படி', 'அதென்ன காத்துக்கருப்பு பில்லி சூனியம்', 'யாரை காக்க யாரை கொள்வதோ பராபரமே' என்ற தலைப்புகளில் மட்டுமே இடம்பெற்றுள்ள இந்த நூலில் பெரும்பாலான கவிதைகள் 'உடைந்த கடவுள்' என்ற தலைப்பிலேயே குறுங்கவிதைகளாகவே, சில கவிதைகள் நீள்கவிதைகளாவே இடம்பெற்றுள்ளன.

'ஐந்து ரூபாய் கொடுத்து 
இட்லி சாப்பிட மறுத்து 
ஏழை என்கிறான்.
இட்லி பணக்காரத்தனம் எனில்
ஐம்பது ரூபாய் விஸ்கி??'

என குடிக்கு அடிமையாகி வாங்கும் சொற்ப கூலியையுமே மதுவருந்தி சீரழியும் குடிகாரர்களைப் பார்த்துக் கேட்கிறார்.

ஏழைகளின் பசியைக் கண்டு ஏங்குகிற மனம், குடிகாரனின் நிலை கண்டு வருந்தும் மனம், தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளச் சொல்லும் மனம், இலவச விளம்பரங்களைக் கண்டு ஏமாறும் ஏழைகளைக் கண்டு பதைக்கும் மனம், பிச்சைக்காரர்கள் படும் வேதனைகளை புரிந்துகொள்ளும் மனம், திரைப்படம் மற்றும் சமூகம் என இவையிரண்டிற்குமிடையே உள்ள உறவு, விபத்தில் அடிபட்ட பெரியவருக்காக இரங்கும் மனம், பிள்ளைகளுக்காக உழைக்கும் அப்பாக்களின் பொருளாதார நிலையை புரிந்துகொள்ளும் மனம், தனக்காக வரதட்சணை கொடுக்க அப்பா படும் கஷ்டத்தை எண்ணி அழக்கூட முடியாத நிலையில் உள்ள புகுந்த வீடு சென்ற பெண்ணின் மன உணர்வுகள், தன் காதலியைப் பார்க்கவேண்டி தான் எதிரில் நின்றிருந்தும் தன்னை கவனிக்க மறுக்கும் தன் மகனை நினைத்து வருந்தும் அப்பாவின் மனம், ஏழைக் குழந்தைக்கு உதவி செய்யும் மனம், பிச்சை எடுப்பவர்கள் போல் மற்றவர்களை ஏமாற்றும் சொம்பேறிகளை இனம் கண்டுகொள்ளும் மனம், கணக்கெடுக்கும் நிலையில் தான் சமுதாயப் பற்று உள்ளதென உரைக்கும் மனம், வீடின்றி வாழும் மனிதர்களின் நிலையைப் புரிந்துகொள்ளச் சொல்லும் மனம், கருப்பு ஜூலை தமிழனின் வரலாற்றில் கருமையாகவும் வெறுமையாகவுமே பதிவு செய்யப்பட்டிருப்பதை கவிதையாக பதிவுசெய்யும் மனம், மரங்களை வெட்டுவதை தடுக்க முற்படும் மனம், மூட நம்பிக்கைகளை சாடும் மனம், விதவையென பெண்ணைச் சாடும் சமூகத்தை சுட்டெரிக்கும் மனம், கணிதத்தில் தோல்வியடையும் மாணவனின் நிலையை உணரும் மனம், மகிழுந்து வாங்கிய பிறகு வேறு எதையும் அதைவிட பெரிதாய் எண்ணத்தோன்றாத மனம், போலிச்சாமியார்களைக் கண்டு மனம் கொதித்தெழும் மனம், வரதட்சணை என்ற பெயரில் கடன் வாங்கி வாங்கிய பொருட்கள் யாருக்கும் பயன்படாமல் பரண்மேல் கிடக்கும் நிலையைக் கண்டு கவலைப்படும் மனம், பேரக்குழந்தையை தன்னிடம் விட்டுப் போகச்சொல்லும் அம்மாவிடம் தன் கணவனின் உரையாடலும் அதன்பின் தன் அம்மாவின் மன ஓட்டங்களும் என மனக்கண் கொண்டு கவிதைக்குவியல்களை இந்நூல் வழியே உலவ விட்டிருக்கிறார்.

சில்லறை சப்தங்கள் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: சில்லறை சப்தங்கள் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார் 




(“கவிதைநூல் விற்பனையிலிருந்து கிடைத்த பணத்தில் ஈழத்து மக்களுக்கு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிறைய குடும்பங்களுக்கு அரிசியும் பருப்பும் வாங்கித்தரப் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை இங்கே நன்றியுடன் தெரிவிக்கிறேன்.” என்ற தகவலை உள்ளடக்கிய வரிகளோடு எடுத்த முதல் பக்கத்தில் தாங்கி வந்திருக்கிறது இந்நூல்.)

ஈழ எழுத்தாளர் நிலா (இலண்டன்) அவர்களின் அணிந்துரையைத் தாங்கி வெளிவந்திருக்கிறது இந்நூல்.

படித்து முடித்துவிட்டு குடும்பத்தை விட்டு வெளியே வரும்போது தான், நடைமுறையில் நாம் வேறு ஒரு மனிதனாக வாழ வேண்டியுள்ளது என்ற உண்மையை புரிந்து கொள்கிறோம். எத்தனையோ பிரிவுகள், எத்தனையோ இழப்புகள், எவ்வளவோ கண்ணீர் என அத்தனையும் கடந்தே வாழ வேண்டியுள்ளது. 

நடைமுறையில் பெரும்பாலும் இங்கு யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. பெரும்பாலும் யாரும் யாரையும் தூரத்திலிருந்து நினைத்துக் கொண்டு உருகிக் கொண்டிருப்பதுமில்லை. அவரவர் அவரவர்க்கு அந்த அந்த இடத்தில் நண்பர்களை, உறவினர்களை உருவாக்கிக் கொள்கின்றனர். பலருக்கும் பழைய நினைவுகளை உடனுக்குடனே மறக்கும் வல்லமை அவரவர் பிறப்போடு ஒட்டியே வந்து விடுகிறது. ஆனால், படைப்பாளிகளில் குறிப்பாக கவிஞனின் மனம் கண்ணீரை, பிரிவின் வலியை, தாளமுடியாத் துக்கத்தை, அதன் கனத்தை மரணம் வரை சுமக்கிறது. அவன் உயிர் மரணத்தைத் தாண்டியும் அவைகளை சுமக்கிறது. அந்தக் கண்ணீர், பிரிவின் வலி, தாளமுடியாத் துக்கம், அதன் கனம் என மனக் குமுறல்களை, எதிர்பார்ப்புகளின் சிதைவை, எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி அவைகள் ஏக்கங்களான தவிப்பை, தான் பார்த்த, கேட்ட என அத்தனையையும் வார்த்தைகளாக்கி, கவிதைகளை சமைக்கிறான், சமைக்க முற்படுகிறான் கவிஞன்.

வாழ்வை பற்றிய ஒவ்வொருவருக்கும் உள்ள சரியான புரிதலை வாழ்வில் நிலவும் முரண்பாடுகள் அடிக்கடி சிதைத்துவிட்டு நாம் இன்னும் வாழ்வை மிகச்சரியாக புரிந்துகொள்ளவில்லை என்ற மிகச் சாதாரண உண்மையை அந்த முரண்பாடுகள் அனுதினமும் நமக்குச் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றன. அதனால் தான் மரணத்திற்கு முந்தைய நொடி வரை மனிதர்களின் மனம் அவர்களுக்குத் தெரியாமலேயே உள்ளுக்குள்ளே வாழ்வை முழுமையாகப் புரிந்துகொள்ள தொடர்ந்து தேடிக்கொண்டே, போராடிக் கொண்டே இருக்கிறது.

'வீழும் ஒரு சொட்டுக் கண்ணீர்' என்ற முதல் கவிதையில் 

'அன்பிற்காய் ஏங்கும் மனதின் 
அழிக்க இயலாத ஒன்றோ இரண்டோ 
இழப்புகள் போதுமே - நம்மை நாம் 
சாகும் வரை இழக்க!'

என்ற வரிகளில் கவிஞனின் மென்மை மனம் புரிகிறது. ஒட்டுமொத்த வலிகளையும் இந்த நான்கு வரிகளில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

'விதியை வெல்லும் நம்பிக்கை', 'முதிர்கன்னி' என்று ஆரம்பிக்கும் கவிதைகளோடு 'யார் யார் யாரோ' என்ற கவிதையின் கடைசி வரிகளில் 

'மனிதத்தை மட்டும் முன்வைத்து 
என்னை மனிதனென்று 
மார்தட்டிக் கொள்ள முயல்கிறேன்!!'

என்று உலகின் அனைத்து மனிதர்களுக்கும் தேவையான அடிப்படை குணத்தை எடுத்துக் காட்டுகிறார்.

'ஐயப்ப சாமியும் தீட்டும்' கவிதை முழுமையும் மனம் சார்ந்து, மனம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்ற உளவியல் உண்மையை சொல்லி விட்டுப் போகிறது.

 தனக்கான தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டிய இடங்களில் எல்லாம் தன் குடும்பம் சார்ந்தும், தன் உறவுகள் சார்ந்தும், தத்தமது மண்டலம் அல்லது சமுதாயம் சார்ந்த கட்டுப்பாடுகளை முன்னிறுத்தி மனிதன் காலம் முழுக்க சூழ்நிலைக் கைதியாகவே வாழ வேண்டியுள்ளது.

குழந்தைகள் இளைஞர்களாக வளரும்போது, அவர்கள் மனதில் அவர்கள் கற்ற கல்வியறிவின் மூலம் தங்களின் பெற்றோர்களை அவர்களின் வயதான காலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றே சங்கல்பம் செய்தாலும் சம்பாதிக்க வெளிநாடு சென்று அங்கிருந்தபடியே இங்கொரு சொந்த வீடு கட்டி அந்த வீட்டில் தங்களின் பெற்றோர்களை தங்கவைப்பதும் காலப்போக்கில் அந்த வீடு அந்தப் பெற்றோர்களுக்கு மட்டுமான ஒரு முதியோர் இல்லமாகவே மாறுகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. 

முதியோர் இல்லம் தொடர்பாகவே 'புதிரில்லை சில புரிவதுமில்லை' என்ற கவிதையை படைத்திருக்கிறார் கவிஞர்.

'காலம் விழுங்கி விட்ட வரலாறு'  என்ற கவிதையில் ஒவ்வொரு மரணத்திற்குப் பின்னும் அதற்கான ஒரு வரலாறு இருக்கிறது என்ற கருத்தை வலியிறுத்துகிறது. இருந்தபோதும் வாழ்வில் இறுதிவரை போராடி வீரமரணம் அடைந்தவர்களின் அந்த நொடி, ஒரு புதிய வரலாற்றை உருவாக்கி விடுகிறது. மறுமலர்ச்சிக்கான விதையை பின்வரும் சந்ததிகளின் மனதில் விதைத்து விட்டுப் போகிறது என்ற உண்மையையும் நாம் மறுக்க முடியாது.

'எப்போது கிடைத்துவிடும் அது' என்ற கவிதையில் ஜன்னலோரம் அமரும் நிலை தனக்குக் கனவாகவே உள்ளதாகவே கவிதை வடித்திருக்கிறார்.

'மெல்லக் காதலித்தோம்' என காதல் சார்ந்தும் தன் காதலி சார்ந்தும் எழுதியிருக்கிறார் கவிஞர்.

தான் நேசித்த சொந்தம் பிரிந்ததை 'உன் கல்லறையில் பூத்த புற்கள்' என்ற கவிதையில் 

'வானம் மிக நீண்ட 
தெருக்களாய் - 
அகன்று விரிந்திருக்க'

என்று ஆரம்பித்து 

'தொலைத்த இடத்தில் 
மரணத்திற்குப் பின்னிருந்து 
உன்னைத் தேடுகிறேன்'

என்ற வரிகளில் வாசகர்களின் மனம் அதிர்கிறது.

ஆண்களின் காதலை பெண்கள் புரிந்துகொள்ளாத போது, இந்தப் பெண்களின் உள்ளம் பாலைவானமோ என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் விதமாக 'நீ நின்று கொன்ற இதயம்' என்ற கவிதையில் 

'இதயம் உடைக்கும் 
பார்வை ஏந்தி 
ஈரம் சுரக்காத உன் காதலுக்கு'

என்ற  வரிகளை எழுதியுள்ளார்.

'நவீன பொங்கல்' என்ற கவிதை இரசிக்கும் படியாக உள்ளது.

'உடைந்த முகங்கள்' என்ற கவிதையில் 

' உடைந்த முகங்களை ஒட்டவைக்க 
வேறொன்றும் வேண்டாம் - 
அன்பு செய்; அன்பு செய்!'

என்ற வரிகள் கவிஞரின் மனதை பிரதிபலிக்கிறது.

'ஜன்னலோரக் கம்பி பிடித்து', 'காதலிக்கலாம் வாருங்கள்', 'மரணத்தைக் கேட்டுப்பார்', 'அன்பிற்குள் அடங்கும்', 'மிச்ச நாட்களின் மீதி வாழ்க்கை', 'நாம் - நானும்', 'சிம்னி விளக்கின் வெளிச்சத்தில்', 'வெகுசிறிய காலமே வாழ்க்கை', 'ஆங்காங்கே சற்று சிந்திப்போம்', 'இப்படியா நகர்வது காலம்', 'கந்து வட்டி கிழிந்த வாழ்க்கை (பாடல்)', 'ஏழைகளின் மழைக்காலம்', 'வேண்டாத கவிதை', 'முரடனின் பாசம்', 'என்கவுண்டர்', 'பெண்களின் இதயம் தைக்கும் இரும்பூசிகள்', 'பார்த்தால் அத்தனையும் கவிதை', 'ஏழையின் கட்டைவிரல்', 'வெறும் பாத்திரம் ஏந்தி நிற்கும் ஏழைகள்', 'காதல் வேதமாகிறது', 'அன்பு', 'நல்ல நட்பு', 'இந்த நாள் இனியநாள்', 'சிலருக்குக் கிடைக்காத அப்பாவின் முத்தம்', 'மனிதம் பிறப்பிப்போம்', 'சில்லறை சப்தங்கள்' என மனிதம் சார்ந்தும், மனம் சார்ந்தும், மனித உறவுகள் சார்ந்தும், காதல் சார்ந்தும், நம்பிக்கை சார்ந்தும் பாடுபொருட்களாக  இந்தக் கவிதைநூலில் கவிதைகள் பயணிக்கின்றன.

'கால நிர்வாணத்தின் 
அசிங்களாய் 
நடந்து கொண்டுதான் இருக்கின்றன
அத்தனை அதர்மங்களும்'

என்றே 'நெற்றிக்கண் சாட்சியாகினும்' என்ற கவிதையில் கொதித்தெழுகிறது கவிஞனின் மனம்.

'மகனுக்காய் இறந்து பிறந்த இரகசியம்' பாடல் இரசிக்க வைக்கிறது.

'ஒரு மெழுகுவர்த்திக்கு என் காதல் இலவசம்' என்ற கவிதை முழுக்க முழுக்க இரசிக்கும்படியாக உள்ளது. அதிலும், ஆரம்பிக்கும் வரிகள் 

'அரைமணிநேர 
மின்சார அணைப்பில்தான் 
சுடர்விட்டு எரிந்தது
நம் காதல்'

அருமை.

எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தால் எல்லாமே கவிதை என்ற பாடுபொருளைத் தாங்கிய 'அத்தனையும் கவிதை' என்ற கவிதை, நூலை எழுதிய கவிஞரின் தனித்தன்மையை உணர்த்துகிறது.

Tuesday, January 28, 2014

விடுதலையின் சபதம் - நூல் விமர்சனம்

நூலின் பெயர்: விடுதலையின் சபதம் 

நூலின் வகை: கவிதைகள் 

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர்

பதிப்பகம்: முகில் பதிப்பகம் 

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார் 

(ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வித்யாசாகர் அண்ணாவை அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது எனக்குக் கொடுத்த அவருடைய சில நூல்களில் இந்த நூலும் ஒன்று. அவருடைய என்னுரையில் 'இந்தக் கவிதைநூல் அங்கீகாரம் வேண்டி எழுதப் பட்டது அல்ல. என் மக்களின் வேதனை நாட்களை பதிந்து வைக்கும் ஒரு சிறிய நோக்கமிது' என்கிறார்.)




ஈழ விடுதலைக்காகப் போராடிய மாவீரன் திலீபன் அவர்களுக்கு இந்நூலை காணிக்கையாக்கியிருக்கிறார் பாவலர்.

காந்தரூபன், இசாக் என்ற இரண்டு பேர்களின் அணிந்துரைகளைத் தாங்கி வந்திருக்கிறது இந்த நூல்.

'மனிதன் தொலைத்த மனிதம்' என்ற முதற்கவிதையில் 

'எங்கேனும் 
நீ தொலைத்த மனிதம் 
கிடைத்தால் 
கொண்டு சென்று 
ஈழத்தில் கொடுப்பேன்'

என்று முடிக்கும் வரியிலேயே மனிதம் தொலைத்த வாசகனின் மனதைத் தொடுகிறார்.

'சுதந்திரம்' என்ற குறுங்கவிதையில் இறுதியில் 

'ஈழத்து 
இரத்த நெடியில்
எழுச்சி கொள்கிறது 
சுதந்திரமென்னும் ஒற்றைச்சொல்'

என்று எழுதியிருக்கிறார்.

'புறப்பட்டு பெண்ணே; போர் கொள்!!' என்ற கவிதையை வாசிக்கும்போது பாடலாய் ஒலிக்கிறது. இந்தப் பாடல் ஏன் எந்தவொரு இசையமைப்பாளர் கண்களிலும் படவில்லை என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தப் பாடலில் உள்ள எந்த சில வரிகளையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் எல்லா வரிகளும் ஒரு பாடலுக்கான, பெண்ணின் வீரத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

'ஆடிக் காற்றிலே அம்மா கும்மியடி 
ஆயிரம் பேரையும் சொல்லியடி'

என்று தொடங்கி 

'வீடு உறவெல்லாம் வேணுமடி பெண்ணே 
சிங்களவன் தொட்டாலே சீறியடி'

என்று தொடர்ந்து செல்கிறது பாடல்.

'இன்னொரு முறை எரிந்து போயேன் - முத்துக்குமரா...' என்ற கவிதையில் 

'எங்கோ விழும் 
பிணத்தை எடுத்து 
பார் இதுஉன் உறவெனக் 
காட்டிச் சென்றவனே...'

'இன்னொருமுறை பிறந்து வந்து 
மிச்சமுள்ளவர்களுக்காய் 
சற்று எரிந்து காட்டு 
அல்லது எரித்துச் செல் 
முத்துக் குமரா!!'

என்று கோபக் கனல் வீசுகிறார்.

ஈழம், ஏ... மனிதமே நீ மிச்சமிருந்தால்..., மாசிலா மன்னனே (தமிழ் தேசியத் தலைவர் வே. பிராபகரன் அவர்களின் பிறந்த நாளிற்காய் எழுதிய கவிதை) , மாவீரர் நாள், ஈழத்து இரத்தத்தில் கொண்டாடுவோம் தீபாவளி என ஈழ தேசத்துக் கனவுகளோடு இரத்த சகதியை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டுகிறது இந்நூலின் கவிதைகள்.

காதலைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டு அலையும் கவிஞர்களுக்கு மத்தியில் 

'ஏப்பம் வரும் நேரத்துல 
ஈழம் பத்தின 
ஈமச்செய்தி வந்தா 
ஏப்பம் வரும் நேரத்துல 
ஈழம் பத்தின 
ஈமச்செய்தி வந்தா 
சேனல் மாத்தி நமீதா டான்ஸ் பாருங்க'

என்று எழுதிவிட்டுச் செல்கிறார் பாவலர்.

'என் எழுதுகோல் வணங்கிய மாவீரன்' என்று மாவீரன் திலீபன் அவர்களைப் பற்றி பாடல் எழுதியிருக்கிறார்.

'தமிழர் செங்குருதி 
பாயும் இடமெல்லாம் 
தமிழர் செங்குருதி 
பாயும் இடமெல்லாம் 
ஈழம் பிறக்கும் வரைக்கும் 
போராடு'

என்ற வரிகளில் தமிழினம் சிந்திய, சிந்திக் கொண்டிருக்கிற குருதியில் நனைந்த சுதந்திர வேட்கையை பாடலாய் வடித்திருக்கிறார்.

'ஈழக் கண்ணீரோடு பறவைகள்' என்ற தலைப்பில் 'காகம், கொக்கு, சிட்டுக் குருவி, கழுகு' என்ற உட்தலைப்பில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

'என் குழந்தைக்கு 
பால்கொடுக்க 
எவளாவது ஒரு 
தமிழச்சி வருவா

என் நாட்டுக்காக ஓடிக் காப்பாத்த 
நான் ஒரு 
முண்டச்சி தானே இருக்கேன்'

என்ற வரிகளை சிட்டுக்குருவியிடம் ஒரு ஈழத்துத் தாய் சொன்னதாக எழுதியிருக்கிறார்.

தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கு சமர்ப்பணம், பொங்கலோ பொங்கல் எனக் கவிதைகள் தமிழ் சார்ந்தும் தமிழரைச் சார்ந்தும் பயணிக்கின்றன.

'உலகப் படம் வரையும்போது 
தமிழனைத் தான் தேடிடுவோம் '

என்ற வரிகளில் இன்னும் என் ஆழ்மனம் ஒன்றிப் போயிருக்கிறது.

'நில்; கவனி; யாரிந்த முத்துக்குமார்?', 'காற்றில் கலந்த ஈழப்புரட்சி - பொன்னம்மான் (பாடல்), ' போன்ற விடுதலை வேட்கை சார்ந்த கவிதைகள் படிக்கப் படிக்க மனதைத் தைக்கின்றன.

'எவரும் வேண்டாமென 
உயிர்களைத் துறந்த ஒருபிடி மண்ணெடுத்து 
ஓங்கி வெளியே வீசிவிட்டு 
ஜன்னலை மட்டும் இழுத்துச் சாத்திக் கொண்டேன்'

என்கிறார் 'என் ஜன்னலோரத்தில் ஈழம்' என்ற ஒரு கவிதையின் கடைசி வரிகளில்...

'அறுபதாண்டு காலம் ஈழம் சுமந்த 
விடுதலையென்னும் ஒற்றை வார்த்தையை 
இருபத்தைந்தாண்டு காலம் நீ சுமந்து 
திருப்பித் தருகையில் உயிரையும் தந்த தீபன்'

என்ற வரிகள் 'சிவதீபனுக்கொர் சபதம் கேள்' என்ற கவிதையில் இடம்பெற்றுள்ளன.

'போராடுவோம், போராடுவோம்', 'ஒன்றுபடுவோம் உலகிற்கே போதிப்போம்' என்ற கவிதைகளில் 

'ஜாதி மதம் ஏற்றத்தாழ்வு 
பதவி பேராசை யென 
அறுபட்டுக் கிடக்கிறோம் 
நம் அறுபட்ட விரிசல்களில் 
கொடி நாட்டி, சிங்களவன் 
போர்வீரனானான்.
நாம் தீவிரவாதியானோம்.'

என்ற வரிகள் தமிழ் என்றாலே ஒரு மாதிரியாய்ப் பார்க்கும் பல நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் தமிழர்கள் மனதையும் நிச்சயம் பாதிக்கும். அவர்களையும் சிந்திக்கத் தூண்டும்.

'முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்' என்ற நீள் கவிதையில் பல குறுங்கவிதைகள் அடக்கம். அதில் ஒரு கவிதை.

'காட்டிக் கொடுத்தவன் 
திருடித் தின்றவன் 
அண்டிப் பிழைத்தவன் 
இறந்த சகோதரிகளின் 
சவத்தின் மீதேறி ஓடிய 
ஒருசில துரோகிகள் 
சிங்கள இனமானான்.'

என கோழைத்தனத்தைச் சாடியிருக்கிறார் நூலின் ஆசிரியர்.

'முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல ஈழம்' என்ற கவிதையில் 

'தீவிரவாதி பச்சை குத்திய 
நீதிபதிகளுக்கு 
என் சகோதரிகளின் கற்பு 
காற்றில் பறந்தாலென்ன
கடையில் விற்றாலென்ன 
என்றானதோ?'

என்ற வரிகள் ஈழத்தமிழர்களுக்கான நீதி மறுக்கப் பட்டதற்கான வெடிப்பாகவே வெளிவந்துள்ளன கவிஞரிடமிருந்து...

இலக்கியவாதிகளில், எழுத்தாளர்களில் கவிஞனின் மனம் மட்டுந்தான் மற்றவர்களால் ஆழங்காண முடியாதபடி, ஒரு விஞ்ஞானியைப் போலவே மிக மிக மென்மையான மனம் படைத்ததாகும். அந்தக் குழந்தை மனம் 

'கண்ணீரில் மையெடுத்து 
வெறும் கவிதைஎழுதும் 
தருணமில்லை தோழர்களே...
இரத்தத்தில் உணர்வூட்டி 
முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்றடிக்கும் 
பறையிது உடன்பிறப்பே'

என்ற வரிகளில் அழுது தவிக்கிறது.

'முள்ளிவாய்க்காலுக்கு அப்பால்', 'மனிதத்தை மண் தின்ற நாள் - மே ௧௮ (18)' என்ற கவிதைகளில் 

'வெற்றி முழக்கமிட்டு 
நடனமாடுகிறான் சிங்களவன் 
நம் தோல்வி அவன் வெற்றியெனில்
போகட்டும்.
எம் மரணம் 
அவன் இலக்குயெனில் 
சரிதானா உலகத்தீரே??'

என்ற வரிகள் நிச்சயம் மனசாட்சி உள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தையும் உறுத்தும்.

'துர்க்கா என்றொரு தாயுமானவள்', 'எம் வீர காவியம் நின்னு கேளடா (பாடல்)' எனத் தொடரும் இந்தக் கவிதைநூலில் ஒரு குறுங்கவிதையின் சிலவரிகள்.

'இறந்து கொண்டிருப்பவர்கள் 
வெறும் போராளிகள் மட்டுமல்ல 
எங்களின் நம்பிக்கையும் தான்'

இன்னுமொரு குறுங்கவிதையில்

'சுவாசத்தில் சுதந்திரம் கேட்டு 
வாழ்தலுக்கு ஒரு ஈழம் கேட்டுத்தானே 
இத்தனை போராட்டமென 
அறுபது வருடம் தாண்டியும் 
புரிந்துகொள்ளவில்லை 
உலகம்'

என்று உலகத்தின் புரிதலின்மையைச் சாடுகிறார் கவிஞர்.

'மலர்விழி என்றொரு மறைமொழி', 'வெறும் கதைகேட்ட இனமே' மற்றும் இன்னும் சில குறுங்கவிதைகளோடு கவிதைநூலினைப் படித்து முடிக்கும்போது மனம் கனக்கிறது. கண்ணீர் வழிந்தோடுகிறது என் போன்ற வாசகர்களின் கண்களிலிருந்து... 

Friday, December 28, 2012

குழந்தைகளைத் தேடும் கடவுள்

நூலின் ஆசிரியர்: கவிஞர் ச. கோபிநாத்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

இந்நூல் கவிஞரின் இரண்டாவது நூலாகும். இந்நூலில் பல்வேறு கருப்பொருள்களில் ஹைக்கூ கவிதைகளை செறிவுடன் படைத்துள்ளார்.

‘கோடுகள் நெளியும் கோலம்
நிமிர்ந்து நின்றது
அம்மாவின் கலைத்திறன்’

தாய்மார்களின் கலைத்திறனை, அவர்களின் உழைப்பை உணர்த்துகிறது.

தான் ஒரு ஆசிரியர் என்பதால் மனனக் கல்விமுறையைப் பற்றி காட்சிப் படுத்தியுள்ளார்.

தாய் தந்தையர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு மட்டுமே பெற்றோர்களாக இருக்க முடியும். ஆனால் ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் கோடான கோடிக் குழந்தைகளுக்கும் தாயாய்த் தந்தையாய் விளங்கக் கூடியவர்கள். அதனாலேயே பள்ளி ஆசிரியரான கவிஞரும் குழந்தைகளைப் பற்றிய கவிதைகளை யாத்துள்ளார்.

அறிவியல் சாதனங்களால் விளையும் தீமைகள், பூமி வறட்சியின் விளைவு, தனிக்குடித்தன வாழ்க்கையைப் பற்றி, நன்றி மறக்காத நாய்களைப் பற்றி என காட்சிகளை நம் கண்முன்னே தருகிறார் தன்னுடைய ஹைக்கூகளின் வழியே.

‘பசுவின் காம்பில்
இனிதே சுரக்கிறது
தாய்மை’

பசுவின் காம்பில் பால்தான் சுரக்கும் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். கவிஞரின் பார்வையில் தாய்மை புலப்படுகிறது.

காதலைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

‘நம்மை அறிந்தே
நாம் தொலையும் உலகம்
காதல்’

தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கும் வறட்சிக்கும்  இராமநாதபுரம் மாவட்டத்தையே உதாரணமாகச் சொல்லுவார்கள். இன்றும் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில்,

‘வீணாகவில்லை
குழாயில் ஒழுகும் நீர்
தாகம் தணிக்கும் பறவை’

என்ற ஹைக்கூ, பறவையைப் பாடுகிறது. இப்படி வீணாகிறதே தண்ணீர் என்று சொல்ல முற்படுபவர்கள் முன் தாகம் தணிக்கும் பறவையைக் கண்டு அப்படி சொல்லாமலேயே சென்று விடுவார்கள்.

ஜாதிகளைக் கண்டு கொதித்தெழுகிறார் இப்படி.

‘நாகரீக மனிதன்
நாற்றமெடுகிறது
ஜாதிய மணம்’

மூட நம்பிக்கைகளைப் பற்றி, காணாமல் போன தமிழர் விளையாட்டுகள் பற்றி என தன் ஹைக்கூ கவிதைகளால் வாசர்கள் மனம் நிறைக்கிறார்.

மொத்தத்தில், குழந்தைகளைத் தேடும் கடவுள் – சமூக நலனைத் தேடும் மனிதன்.

Thursday, December 27, 2012

அவளின்று நான் இறந்தேனென்று அர்த்தம்கொள் - நூல் விமர்சனம்

நூலின் ஆசிரியர்: பாவலர் வித்யாசாகர்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

இன்றைய நடைமுறை உலகில் காதல் என்பது ஒரு பொழுதுபோக்காக, தற்காலிக போதைப்பொருளாக மலிந்து கிடப்பதற்குக் இன்றைய இளைஞர்களின் காதல் குறித்தான புரிதல் குறைபாடேயன்றி வேறொன்றுமில்லை.

ஒரே மேடையில் ஐந்து விருதுகளைத் தட்டிச் சென்றும் அந்தச் சுவடே தெரியாமல் இன்னும் இன்னும் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் கவிஞர் எழுதிய முழுக்க முழுக்க காதல் உணர்வுகளாலேயே வடிக்கப்பட்ட கவிதைகள் இந்நூலில் உள்ளன.

இன்றைய காதல் எப்படி இருக்கிறது, இன்றைய இளைஞர்கள் சமுதாயம் காதலை எப்படிப் பார்க்கிறது? என ஆங்காங்கே சொல்லிக்கொண்டு போகிறார் கவிஞர்.

தெருவில் நடந்து செல்கையில் காதல், மௌனத்தில் காதல், பார்த்துப் பார்த்தே காதல், கைகுலுக்கிய இறுக்கத்தில் காதல், தனித்தனியே திருமணம் ஆகியும் தத்தமது குடும்பத்தினரை விடுத்து பார்வைகளால் காதல் என காதலை அணுஅணுவாய் இரசித்தும் ருசித்தும் நகர்த்திக் கொண்டு போகிறார் கவிஞர்.

‘வெளியிலிருந்து கதவை
உள்ளே திறக்கும்போதும்
உள்ளிருந்து கதவை
வெளியே திறக்கும்போதும்
இடித்துக் கொள்ளும்
யாரோ ஒருவரில்
என்றேனும் ஒருநாள்
நீயாக இருக்கமாட்டாயா?’

என்ற வரிகள் காதலின் வலியை ஏக்கத்தை உணர்த்துகிறது.

‘காலம் காலமாகத்தான்
காதலிக்கிறார்கள்
நீயும் நானும் மட்டும்
எப்படியோ
எதிரியாகிப் போனோம்
ஜாதிமதப் பேய்களுக்கு’

என்ற வரிகளில் ஜாதிக்கொடுமையின் அழுத்தம் தெரிகிறது.

‘பைத்தியமென்று
சொன்னாலும் சொல்வார்கள்
சொல்லட்டுமே,
இல்லாவிட்டாலென்ன
சேர்த்தாவைக்குமிந்த சமூகம்?’

என்ற வரிகளில் எள்ளல் சுவையோடு சமுதாயச் சாடலும் இருக்கிறது. உண்மைதான் கவிஞரே.

தன் காதலி சுவாசிக்கும் காற்றை சபித்துவிட்டு காற்றை தானாக மாறவேண்டும் என்று விரும்புகிறார் கவிஞர்.

ஐம்பெரும் பூதங்களோடு சேர்த்து ஆறாவது பூதமாக காதலைச் சேர்ப்பது புதுமையான உவமையாகத் தெரிகிறது கவிஞரே.

தன் காதலி மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் அழகை, அவள் கண்ணாடியை மேலுயர்த்தும்போதும் நெற்றியில் விழுந்த முடியை தள்ளிவிடும் அழகை என இரசனையோடு எழுதியிருக்கிறார்.

தனக்குத் திருமணமாகியும் திருமணமே செய்துகொள்ளாத தன்னுடைய காதலி தன்னைப்பார்க்க தன் வீட்டிற்கு வந்து தன் மனைவியோடும் குழந்தைகளும் அம்மாவோடும் பேசிவிட்டு வாசற்படி கடந்து போகையில் தன் கையில் திணித்துவிட்டுப் போன காகிதத்தில் மரணம் என்று எழுதி வைத்திருப்பதைப் பார்த்த நிமிடத்தில் தெருவில் மரணித்து வீழ்ந்து கிடக்கும் காதலி தனக்கு மரணத்தின் மீதியைத் தருவதாகச் சொல்வது வேதனையின் உச்சம்.

பூக்கடைக்கு வந்த தன் காதலி தான் விரும்பும் பூ விரும்பும் விலையில் வாங்குவதற்காக ஒவ்வொரு கதையாகக் கேட்டுக் கொண்டே செல்கிறார். கவிஞர் சொல்கிறார் சிறப்பாக.

‘நீ பேசும் விலையும்
கேட்கும் பூவும்
சற்று நேரத்திற்கு
கிடைக்காமல்தான் போகட்டுமே’

மனமொன்றிக் காதலித்தால் வானத்தையும் பூமியையும் ஒன்றாக்கி விடலாம் என்று காதலின் மேன்மையை அழகாக எடுத்துரைக்கிறார் கவிஞர்.

தன் எழுத்துக்களால் இக்கவிதை நூல்வழி காதலுக்கு அழகு சேர்த்த கவிஞர் வித்யாசாகர் அண்ணாவுக்கு என் நன்றியும் இதயங்கனிந்த வாழ்த்துகளும்.

மொத்தத்தில், அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம்கொள் – சமூக அக்கறையுடன் கூடிய காதல் கவிதைகளின் அணிவகுப்பு.

மீசை முறுக்கிய காடு

நூலின் ஆசிரியர்: கவிஞர் வாலிதாசன்

விமர்சனம் செய்பவர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்

பொதுவாகவே நான் ஒரு நூலைப் படிக்கும்போது ஒரு வாசகனுடைய மனநிலையிலேயே படிப்பதுண்டு.

‘மீசை முறுக்கிய காடு’ என்ற இந்தக் கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் வாலிதாசன் அவர்கள் பச்சையப்பா கல்லூரியில் முதுகலை தமிழ் படிக்கும் மாணவர். இந்தக் கவிதைநூல் அவருடைய எத்தனையாவது கவிதைநூல் என்ற விபரங்கள் இல்லை. கடந்த 04-11-2012 க்கு முன்னரே இவரும் நானும் முகநூல் கணக்கில் நண்பர்களாக அறிமுகமாகியிருந்தாலும் 04-11-2012 அன்று தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் ஹைக்கூத் திருவிழாவில் நானும் அவரும் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உருவத்தைப் பொறுத்தவரை அவர் கரடுமுரடாகத் தெரிந்தாலும் அவருடைய இந்தக் கவிதைநூலின்வழி மண்ணை நேசிக்கக் கூடிய, இந்த சமூகத்தை நேசிக்கக்கூடிய, ஈழத்தை ஈழவிடுதலையை நேசிக்கக் கூடிய நல்ல மென்மையான மனிதர் தென்படுகிறார்.

இந்தக் கவிதைநூலிலிருந்து முழுக்க முழுக்க மண்வாசனை வீசிக் கொண்டிருக்கிறது. தற்போது என்னுடைய குடும்பம் வசிக்கும் முகவை மாவட்டத்தின் ஒரு சிற்றூரிலிருந்து வந்திருக்கிறார்.

மதுரை, இராமநாதபுர வட்டார வழக்கு வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

தன்னுடைய முதல் கவிதை மூலமாக இலக்கியத்தின் இன்றைய நிலை குறித்து ஆதங்கப்படுகிறார். இன்றைய அவரச உலகில் தாய் தன் குழந்தையை பள்ளிக்கு வழியனுப்பும் அவசரத்தையும் அக்குழந்தையின் மனநிலையையும் ஒரு கவிதையில் படம்பிடித்துக் காட்டுகிறார். விறகு வெட்டி வீடுவீட்டுக்கு சாப்பாடு வாங்கிச் சாப்பிடும் ஒரு பெண்ணின் துன்பத்தை, மழைபெய்து ஒழுகும் ஓட்டைக் குடிசையில் வசிக்கும் ஏழைகளின் துன்பத்தை, குப்பையோடு குப்பையாய்க் கிடக்கும் ஒரு பிச்சைக்காரனின் அவலத்தை, ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ‘என்னை ஏன் பெத்தம்மா?’ என்று கேட்கும் தன் மகனிடம் ‘நீ பிறக்க ஏறாத கோவில் இல்ல, சுத்தாத சாமி இல்ல, போகாத மருத்துவர் இல்ல’ என்று அவனைத் தூக்கிக் கொஞ்சும் அம்மாவின் ஆனந்தக் கண்ணீரைப் பார்த்து அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்த அந்த மகனின் பாசப்பிணைப்பை, வெளிநாடு சென்று திரும்பி மீண்டும் தன் தாயகத்திற்கே திரும்பிவிடும் பறவைகளின் மூலம் நாட்டுப்பற்றை, குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் தாய்மார்கள் ஓய்வின்றிச் செய்யும் வேலைகளைப் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் நாய் என முத்தாய்ப்பாய், மறந்துபோன கிராமத்தின் கிராம உறவுகளின் உன்னதங்களை உணர்ந்து ஏங்கும் ஏக்கம், குடிகாரனின் குடும்பத்தில் பிற குடும்ப உறுப்பினர்கள் படும் இன்னல்களை, வறுமையின் காரணமாகவும் குடும்பச் சூழல் காரணமாகவும் பள்ளிக்குச் சென்ற பெண் படிப்பை நிறுத்திவிட்டு பஞ்சாலைக்குச் செல்லும் நிலையை என கவிதைகள் நமக்கு மண்வாசனையை அள்ளித் தெளிக்கின்றன.

மலடிப்பட்டம் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் தாயை மூங்கிலாகவும் பிறந்த குழந்தையை புல்லாங்குழலாகவும் உருவகப் படுத்திய விதம் அருமை. இதுபோன்ற உவமைக் கவிதைகளை அதிகம் எழுதுங்கள் தோழர்.

‘புல்லாங்குழலை ஈன்ற
மூங்கில்க் காடானவள்
மூச்சடக்கிக் கிடந்தாள் மயக்கத்தில்’

அனைவர் மனதிலும் பதியும் வரிகள். இந்த ‘அறைக்குள் அடைபட்ட புல்லாங்குழல்’ தாய்மையின் சிறப்பை மேன்மையை உணர்த்துகிறது.

வறுமையில் வாடும் குடும்பத்தில் அடிக்கடிச் சண்டையிடும் தாய் தந்தைக்கு மத்தியில் பிள்ளைகள் படும் அல்லல்களோடு வீட்டின் மேல் உள்ள பாசப்பிணைப்பைக் கவிதையாக்கியிருக்கின்ற விதம் அருமை.

‘அதட்டி அதட்டியே
அம்மாக்களின் ஆயுட்காலம்
அருகியே போகிறது’

என்ற வரிகள் அப்பாக்களால் அதட்டப்படும் இன்றைய தாய்மார்களின் நிலையைக் காட்டுகிறது.

பெரும் வணிக நிறுவனங்களின் குள்ளநரித் தனத்தையும், பதவி நாற்காலியைப் பிடிக்க ஊழல்வாதிகள் செய்யும் துரோகங்களையும், வணிகமாகிப் போன கல்வியையும், கும்பகோணத் தீவிபத்தைப் பற்றி, மக்களாட்சியின் இழிநிலையைப் பற்றி, அதிகார வர்க்கங்கள் செய்யும் கொடுமைகளை என சமூக அவலங்களை நாடிபிடித்துக் காட்டுகிறார்.

‘மீசை முறுக்கிய காடு’ என்ற கவிதையில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் தாக்கத்தை சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

அணில் கடித்துதிர்த்த நாவல் பழங்களைப் பொறுக்கும் போது உள்ள காட்சிகளைக் கவிதைகள் மூலமாக கண்முன் நிறுத்துகிறார் கவிஞர்.

படிப்பறிவே இல்லாத தலைமுறையிலிருந்து பிறந்து தேர்வில் அடிக்கடி தோல்வி அடைந்து இறுதித் தேர்வில் தேர்ச்சியடையத் தூண்டுகோலாகும் படிப்பறிவில்லாத பாசத்தாயின் நெகிழ்ச்சி அருமை.

‘செல்வமில்லாதவனுக்கு
அவிழாத வேசிமகளின்
நூலாடை போல’

என்று அரசு அலுவலகக் கோப்புகளைப் பற்றியும் ஊழல், கையூட்டு ஆகியவற்றைப் பற்றியும் நரம்பு புடைக்கக் கவிதைகளின் ஊடாக உரக்கக் கத்தியிருக்கிறார் கவிஞர்.

ஏழைகளைப் படைக்காதே என இறைவனிடம் ஒரு கவிதையின் மூலம் கோரிக்கை வைக்கிறார் கவிஞர்.

சம்பாதிக்க வெளிநாடு போன ஒருவனின் மனைவி வறுமையின் பிடியில் வாடகை கொடுக்க முடியாமல் அந்த வீட்டு உரிமையாளரிடம் தன் கற்பைப் பறிகொடுத்த பிறகு வெளிநாட்டுப் பணம் வீட்டுக் கதவைத் தட்டுவது அவலத்தின் உச்சம்.

இன்னொரு கவிதையில்

‘ஏழைக்கேற்ற வாழ்வும்
வாழ்வுக்கேற்ற ஏழையும்
வெள்ளத்தனைய மலர்நீட்டம்போல்
ஜனித்துக்கொண்டே உலகில்’

என்ற வரிகள் வேதனைமிகுந்த நிதர்சன உவமை.

குழந்தையை அநாதையாய் விட்டுப்போன தாயைப் பற்றி, ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்கள் செய்த கொடுமைகளை, விபச்சாரியின் மனவலியை, வியர்வை சிந்தும் உழவனின் நிலையை தன்னுடைய கவிதைகளின் ஊடாக விளக்குகிறார் கவிஞர்.

ஜாதிக்கொடுமையைப் பற்றிய ஒரு கவிதையில்

‘கோவில்த் திருவிழாவின் பெயரில் கலவரம்’

என்ற வரியிலும்

‘எதையும் மாற்றி
எதிலும் மாறாத் தமிழன்
வாழ்வு என்று ஜீவிக்கப்போகிறது?’

என்ற வரிகளிலும் நம் தமிழ்த்தேசிய உறவுகளின் மீதான ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் கவிஞர்.

வெற்றிலைப்பாக்கு உண்ணும் கிராமத்துப் பாட்டியின் செயல்களை இரசிக்கும் ஒரு குழந்தையாக மாறியிருக்கிறார் கவிஞர்.

வசிக்க இருப்பிடம் இன்றி மரநிழல் தேடியும் உணவு தேடியும் அலையும் கிராமத்துப் பாட்டியின் நிலையை, புயலின் கோரமுகத்தை, பாட்டிக்கும் அம்மாவுக்கும் உள்ள பாசப்பிணைப்பை, தனக்கென செங்கற்களால் வீடு கட்டிக் கொண்டிருக்கும் இயேசு சிங்களக் கழுகுகளுக்குப் பயந்து கட்டி முடிக்கப்படாத வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொள்ளும் நிலையை, தமிழ்நாடு என்ற நாட்டிற்குப் பக்கத்தில் உள்ள நாடான இந்தியாவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுவதை, நாகரிக விவாகரத்துப் பற்றி, ஜாதிக்காரர்கள் அனைவரையும் தன்னுடைய உறவினர்களாக நினைப்பது தன்னுடைய மனவியாதி எனச் சொல்லும் வேதனை என கவிதைகளால் பிறரை இந்த சமூகத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறார்.

‘எவனாக இருப்பினும்’ என்ற தன்னுடைய கடைசிக் கவிதையில் ரௌத்திரம் கொள்ளும் ஒரு இளைஞன் தெரிகின்றான். நாகரிகத்தைச் சீர்குலைக்கும் பெண்களை, பெண்களை போதைப் பொருளாகப் பார்க்கும் ஆண்களை, நாட்டின் நலனைச் சீர்குலைக்கும் சக்திகளை என அனைவரையும் பார்த்துச் சொல்கிறார் இப்படி

‘நொக்காளி
எவனாக இருப்பினும்
கண்டந்துண்டமா
வெட்டுவேண்டா’

மீசை அரும்பிய வயதில் இந்தக் கவிதைநூல் ஊடாக மீசையை முறுக்கிக் கொண்டு கம்பீர நடைபோடுகிறார் கவிஞர் வாலிதாசன்.

இன்னும் நிறைய எழுதுங்கள் தோழர். உங்களுக்குள் அதிகப் படியான கோபம், சமுதாய அக்கறை, ஏதோவொரு நெருப்பு உள்ளது. நிறைய எழுதுங்கள். என்னுடைய அன்பின் கனிந்த வாழ்த்துகள்.

மொத்தத்தில், மீசை முறுக்கிய காடு – மண்வாசனை வீசும் கம்பீரம்.