Tuesday, December 25, 2012

'உள்ளம் உருக்கிப் போனாயடா' என்ற என்னுடைய நான்காவது கவிதை நூலிற்கு நான் எழுதிய என்னுரையிலிருந்து ஒரு பகுதி

பொதுவாகவே கவிஞர்களும் விஞ்ஞானிகளும் மிகவும் உணர்வுப்பூர்வமாகமானவர்களாக, மென்மையானவர்களாக இருப்பார்கள் என்பது உளவியலாளர்களின் கருத்து. அந்த மென்மையின், அன்பின் ஆழத்தைக் கண்டறிவது என்பது மிகமிகக் கடினம்.  


கடந்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அன்பான சகோதரி எனக்கு அறிமுகமானாள். அந்த அன்பு என்மேல் அக்கறையான சகோதரப் பாசம். ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அந்தப் புகைவண்டி நிலைய நடைமேடைப் படிகளில் அவள் தான் நேசித்த அந்த நடத்துநரைப் பற்றி, அவர் இவளிடம் தன்னுடைய திருமண அழைப்பிதழைத் தந்தது, தன்னுடைய காதலைச் சொல்லமுடியாமலேயே தோற்றுப்போனதை நினைத்து இரவு போர்வைக்குள் அழுதது, தன்னுடைய காதலனின் திருமண நாளைக் கூட மறக்காதது, சொல்லும்போதே அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் அவளின் முகம், அவள் தலைகோதிவிட்டபடி ‘அழாதே அக்கா’ என்று நான் சொன்ன வார்த்தைகள், அந்த சில நிமிடங்களில் எனக்குள்ளும் எழுந்த சகோதரப் பாசத்தையும் தாண்டிய தாய்மை உணர்வு இவை அனைத்தும் பத்திரமாய் என் உயிரின் ஆழத்தில் புதைந்திருக்கின்றன. 


அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல் இருந்த அந்த சகோதரியின் முகம் இன்னும் என் கண்களிலேயே நிழலாடிக் கொண்டிருக்கிறது. அந்த நடத்துநர் அத்தான் எப்படி இருப்பார்? கறுப்பாக இருப்பாரா? சிவப்பாக இருப்பாரா? ஒல்லியாக இருப்பாரா? குண்டாக இருப்பாரா? குள்ளமாக இருப்பாரா? உயரமாக இருப்பாரா? அவரிடம் நான் பேசவேண்டும் எனப் பலவாறு ஒரு குழந்தையைப் போல் அவரைப் பற்றி கற்பனையில் ஒரு உருவகம் கொடுத்துப் பார்த்திருக்கிறேன். 


தன்னுடைய தோழிகள், உறவினர்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத இந்த விடயத்தைப் பற்றி அவள் என்னிடம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், சூழ்நிலையில் சொல்லியதின் பின்னணியில் என்மேல் வைத்த சகோதரப்பாசம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. என்மேல் அக்கறையுடன் இருந்த ஒரு அன்பு தெய்வம் இப்படிப்பட்ட சூழ்நிலையைத் தாங்கிக் கொண்டிருக்கிறாள் என்ற உண்மையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் பல இரவுகள் தவித்திருக்கிறேன். பல இரவுகள் யாருக்கும் தெரியாமல் கதறி அழுதிருக்கிறேன். பல நடுநிசிகளில் திடீரென தூக்கத்திலிருந்து பதறி எழுந்திருக்கிறேன். பல பயண நேரங்களில் ஜன்னலை வெறித்துப் பார்த்தபடியே கண்ணீர்த்துளிகள் கன்னம்வழி வழிந்து நிற்க மௌனமாக மனதிற்குள்ளேயே அழுதிருக்கிறேன்.


ஒவ்வொரு முறையும் அந்த புகைவண்டி நிலையம் வழியே நான் பயணம் செய்யும் புகைவண்டி நிற்கும்போது அந்த புகைவண்டி நிலைய நடைமேடைப் படிகளைப் பார்க்க நேர்ந்தால் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதபடி பழைய நினைவுகளின் வலியும் வேதனையும் பிறக்கும்.

மேற்சொன்ன அந்தச் சகோதரியின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பத்தின் தாக்கமே நான் எழுதிய ‘அவள் உயிர் அழுகிறது’ என்ற கவிதை. இதே சம்பவத்தைச் சுமந்த நினைவின் தாக்கமே ‘உள்ளம் உருக்கிப் போனாயடா’ என்ற இந்தக் கவிதைநூல்.


என்னையும் என்னுடைய குட்டிப்பாப்பாவையும் சேர்த்து வைத்துப் பார்க்க உள்ளூர ஆசைப்பட்டவள் தெய்வீகமானவள் அந்த அக்கா. என்மேல் அன்பாக இருந்த இவளைப் போன்ற சிலரைப் பற்றி அவர்கள் பெயரிலேயே நான் கவிதைகள் எழுதியபோது ‘யாரையும்பற்றி யாருடைய குணாதிசயங்களைப் பற்றி கவிதைகள் எழுதாதப்பா, சுத்தி விட்டுடும்.’ என்று என்மேல்அதீத அக்கறைப்பட்டவள். அந்த அன்பு தெய்வம் ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில் வேலையில் இருப்பதாகவும், சில வருடங்களுக்கு முன் அவளுக்குத் திருமணம் நடந்ததாகவும் கேள்விப்பட்டேன். 


‘சுத்தி விட்டுடும்’ என்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்னும் பத்திரமாய் அப்படியே என் நினைவில் நிற்கிறது. நான் கவிதைகள் எழுதாவிட்டால் மனநோயாளியாக மாறியிருந்திருப்பேன். 


அந்த சகோதரி எங்கிருந்தாலும் நலமுடன் வாழட்டும். நீடூழி வாழட்டும். 

என்னுடைய வாழ்நாளின் ஒவ்வொரு வாழ்வியல் நிகழ்வுகளில் இருந்தும் அனுபவங்களில் இருந்தும் நான் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக உணர்ந்து கொண்ட உண்மை இதுதான் ‘அன்பே கடவுள்’.

No comments: