Tuesday, November 19, 2013

உயிர்மை மாத இதழில் மெட்ராஸ் கபே திரை பற்றிய கட்டுரைக்கு என்னுடைய மாற்றுக்கருத்து.

கடந்த அக்டோபர் மாதம் நான்கு, ஐந்து தேதிகளில் சென்னையில் தங்கியிருந்த போது, திருவல்லிக்கேணி நூலகத்தில், உயிர்மை மாத இதழ் என் பார்வைக்குக் கிடைத்தது.

அதில் "மெட்ராஸ் கபே திரைப்படம் பற்றியும் அதனை திரையிட விடாமல் தடுக்கும் தமிழக கட்சிகள், இயக்கங்கள் அதனை எதிர்ப்பதன் மூலம் அதில் என்ன தான் அப்படி இருக்கிறது பார்த்து விடுவோம் என்ற ஆர்வத்தை தூண்டி எப்படியாவது பார்க்க வைத்து விடும். திரையிடக் கூடாது என்று தடுப்பதன் மூலம் அந்தப் படம் அவர்களுக்கு தெரியாமலேயே விளம்பரப்படுத்தப் படுகிறது. இப்படி போராட்டங்களினால் தடுப்பதை விட, நாமும் தரமான படைப்புகளின்மூலம் மெட்ராஸ் கபே போன்ற படங்களை, படைப்புகளை தவிடுபொடியாக்கலாம்." என்று பொருள்பட ஒரு கட்டுரையாளர் எழுதியிருந்தார்.

என்னுடைய மாற்றுக்கருத்து இதுதான்.

"நீங்கள் சொன்னதுபோல், படைப்புகளின் மூலம் பதில்சொல்ல, சமீபத்தில் வெளிவந்த பாலை, உச்சிதனை முகர்ந்தால் போன்ற படைப்புகள் எத்தனை பேரால் பார்க்கப் பட்டன? வெறுமனே தமிழ் படைப்பாளிகளை மட்டுமே குறை சொல்லாமல், நன்றி கெட்ட, தமிழ்நாட்டு ஈனத்தமிழர்களையும் குறை சொல்லுங்கள். 

ஒரு படம், படைப்பு வெற்றியடைய சந்தைப்படுத்துதல் இன்றைய நவீன உலகில் மிகமிக அவசியமானதாகும். ஒரு விநியோகஸ்தர் சொல்கிறார் படம் எடுக்க ஆன செலவை விட மூன்றுமடங்கு அதனை விளம்பரப்படுத்த, சந்தைப்படுத்த ஆனது என்று.

பாலை, உச்சிதனை முகர்ந்தால் போன்ற படங்கள் வெளிவந்த தகவல்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? 

கேட்டால், அப்படியா? இப்படிப்பட்ட பெயர்களில் படங்கள் வந்தனவா? என்று கேட்போர் தான் அதிகம்.

பாலை, உச்சிதனை முகர்ந்தால் போன்ற படங்கள் வெளிவந்த தகவல்களே பெரும்பாலான பிரபஞ்சத் தமிழர்களுக்கு தெரியவில்லையே ஏன்? ஏனெனில் இவர்களிடம் சந்தைப்படுத்த (Marketing) ஆளில்லை. அப்படியே செய்தாலும், தமிழ் உணர்வுள்ள ஈனத்தமிழர்கள் தமிழ்நாட்டில் மிகமிகக் குறைவு.

காங்கிரஸ் துணையோடு, மெட்ராஸ் கபே படம் எடுத்தவனுக்கு, சந்தைப்படுத்துவதற்கு (Marketing) பணபலமும் ஆள்பலமும் அரசியல் செல்வாக்கும், அரசியல் பலமும் நிறைய இருந்ததால், எளிதாக சந்தைப்படுத்தி விட்டான். 
ஏழைசொல் அம்பலம் ஏறாது என்பதைப் போல், தமிழனுக்கு உண்மையாக ஆதரவு தெரிவிக்க முன்வருபவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, போராடியவர்களை முழுக்க முழுக்க குறை சொன்னது தவறு. போராடியவர்கள் என்ன செய்வார்கள் பாவம்? தமிழனை தவறாக சித்தரித்த படம் என்பதால் போராடினார்கள். அவர்களில் அதன்மூலம் தமிழ்நாட்டு அரசியலில் எதிர்காலத்தை தேடிய கட்சிகளும் உண்டு என்ற உண்மையையும் நாம் நடுநிலையோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்."

No comments: